Skip to main content

எல்லாருடைய வாழ்வின் விதியாக இருக்க விரும்புகிறேன்




கோணங்கி, தமிழ் சொல்கதை மரபின் லட்சணங்கள் அனைத்தையும் சூடிக்கொண்ட நவீன கதை சொல்லி. ‘மதினிமார்கள் கதை’ மூலம் கரிசலின் உணர்வு மூட்டங்களை மந்திர மொழியில் சொன்ன சிறுகதைக் கலைஞர். பாழி, பிதிரா, த என்ற மூன்று நாவல்களைத் தொடர்ந்து ‘நீர் வளரி’ என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்த இந்த நேர்காணலின் விரிவான வடிவம் இது...

ஒரு கதைசொல்லியை உங்களிடம் கண்டுகொண்ட பின்னணி, காலத்தைச் சொல்லுங்கள்...


விளாத்திகுளத்திலிருந்து வந்த ச. ஜோதிவிநாயகத்தின் தேடல் சிற்றிதழில் ‘கருப்பு ரயில்’ சிறுகதை பிரசுரமானது. அப்போது என் வயது இருபது. அதைப் படித்து உற்சாகமான எழுத்தாளர் வண்ணநிலவன், ஜோதிக்கு எழுதிய கடிதத்திலிருந்து சிறுகதைக்கான தீவிரமான சுழற்சியை உள்ளுணர்வாகப் பெற்றேன். மெல்ல நாடோடியாய்ச் சுற்ற ஆரம்பித்த என்னை வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ கதை கட்டிப்போட்டது. அதிலுள்ள இருட்டைத் தொட்டு ‘இருட்டு’ கதையை எழுதினேன். இப்படி இழுத்துச் சென்றதில் எல்லாம் பெரும் சுழற்சியாய் கதைகள் பல்வேறாக உள்ளே சுழலத் தொடங்கிவிட்டன. எல்லாமும் என்னவாகும் என்ற இருட்டின் உரையாடல் என் கதைகளில் கேட்கத் துவங்கி இருந்தது. சிம்னி விளக்கு சுவரில் கரித்தடத்தோடு என் சிறுகதைகளுக்குள் துக்கத்தைப் பூசி கலையை ஊடுருவி ஒளிரும் புதிரான இந்த வாழ்வு, மேலும் கதைகளை எனக்குத் தந்தபடி இருக்கிறது. ‘மதினிமார்கள் கதை’யை விளாத்திக்குளம் பனங்காட்டுக் குலவையோடு படித்து விமர்சித்த விக்ரமாதித்யன் தான் பிரம்மராஜனின் மீட்சி இதழுக்குத் தபாலில் அனுப்பியும் வைத்தார். சமயவேல் தான் ‘மதினிமார்கள் கதை’ பெயரை வைத்தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, தோழர் எஸ். எஸ். தியாகராஜனின் கோவில்பட்டி மேன்சன் அறையில், நான் திருடிய அஃ சிற்றிதழில் திருடியதில் ந. முத்துசாமியின் ‘வண்டி’ சிறுகதை பிரசுரமாகியிருந்தது. என்னை வெகுவாகப் பாதித்த என் பால்ய மனத்தில் வண்டிப்பாதை என்ற நெடுங்கதையை ஐம்பது பக்கங்களுக்கு மேல் எழுதினேன். ‘இருட்டு’ சிறுகதையும் ‘பாழ்’ சிறுகதையும் என் கலைக்கு ஆதாரம். ‘நென்மேனி மேட்டுப்பட்டியின் இருட்டும் அழிந்துபோன பெரிய நந்தவனமும் மண்மூடிய பாழ்கிணற்றை எட்டிப் பார்த்தபடி நின்றிருக்கும் வெற்றுத் தெலாக்கல்’ என்ற இந்த வரி பாழ் சிறுகதையின் கடைவரி. அதிலிருந்து பண்டாரம் மகளின் எளிய நேசத்தை மீரா பஜன் மாதிரி இசைக்க விரும்பினேன். எல்லார் வாழ்வின் விதியாகவும் இருக்க விரும்பிய என் விருப்பம்தான் என்னுடைய கதைகள்.

தமிழில் சாதனை படைத்த வடிவம் சிறுகதைகள். நீங்கள் அதில் யாருடைய மரபில் வருகிறீர்கள்..

. முத்துசாமியின் வண்டி, நீர்மை சிறுகதைகளிலிருந்தும் கு. அழகிரிசாமியின் அழகம்மாள், திரிபுரம், காற்று கதைகளிலிருந்தும் பூமணியின் ரீதி, வயிறுகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும் பா. செயப்பிரகாசத்தின் தாலியில் பூச்சூடியவர்கள் கதையிலிருந்தும் ஆர். ராசேந்திர சோழனின் இச்சை, புற்றிலுறையும் பாம்புகள் கதைகளிலிருந்தும் நான் வருகிறேன். மூதாதைகளைச் சொன்னால் புதுமைப்பித்தனின் கபாடபுரத்தில் சிசுவாகப் பிறந்தேன். மௌனியின் மனக்கோட்டை-யில் தேவாசுர யுத்தத்தில் சிதறிக்கிடக்கும் துகள்களைத் தேடித்தேடி அலைந்தேன். பிரமிளின் காடன் கண்டது கதையின் புனைவு வனத்தில் வேடனாக ஓடிக்கொண்டிருந்தேன். முக்கியமாக கம்பனின் அதீதமும் ந. முத்துசாமியின் அதீதமும் என்னைத் தீவிரமாக ஆட்கொண்டு வருகின்றன இன்றும்.

தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் புகழ்பெற்ற நாடகக் கலைஞர். அப்பா எழுத்தாளர். தம்பி முருகபூபதியும் அண்ணன் ச. தமிழ்செல்வனும் நாடக, சிறுகதை கலைஞர்கள்…இந்த கலைப்பின்னணியின் நினைவுகள் உங்களிடம் அழுத்தமாக உள்ளதல்லவா…

ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் நிறுவனத்தின் மேலாளராகவும் முன்னூறு கருப்பு இசைத்தட்டுகளின் பாடலாசிரியராகவும் இருந்த என் தாத்தா பாஸ்கரதாஸ், தமிழின் முதல் பேசும்படமான காளிதாசுக்கு திரைக்கதை எழுதினார். தேடிவந்தேனே வள்ளிமானே எனது தாத்தாவின் பாடல் தான். மதுரகவி பாஸ்கரதாஸ் நாட்குறிப்புகள், ஆயிரக்கணக்கான நாடகக் கலைஞர்களின் கடிகைகளில் ஆன்மாவும் கலையும் அதிலிருந்து இலைகளாக உதிர்ந்துகொண்டே இருக்கிறது. மதுரை, நாகலாபுரம் வீடுகளில் பழைய அலமாரியில் பெண்பிள்ளைகள் திறந்து மூடும்போதெல்லாம் தைல சீசாக்களின் மாய உருவம், ஆளுயரக் கருப்பு மர பீரோவில் பாக்கியம், ஊமச்சி பெரியம்மா, அம்மா சராஃவதி, இந்திரா, சானகி, முத்துலட்சுமி, காந்திமதி, கமலவேணி எட்டு குமாரத்திகளின் ஆன்மாதான் பாஸ்கரதாஸ் தாத்தாவின் ஏற்றப்பாட்டில் ஒலிக்கிறது. பிராட்காஸ்டிங் கீதத்தட்டில் பாடுவதற்கு ஊர் ஊராய் மோட்டாரில் தஞ்சாவூர் தேவதாசியிடம் போனார். எச்எம்வி கீதத்தட்டு, கேட்லாக் புத்தகம், நாட்குறிப்பு, செய்தி நறுக்கு, டி.எம். கமலவேணி கடிதக் கோர்ப்பு, மதுரை மேலமாசி வீதி உடுப்பியில் 14-ம் எண் அறையின் வாடகைப் பற்று எல்லாம் நாகலாபுரம் பூர்விக வீட்டில் விசாலமடைந்த நூலகமாக மாறியது. காங்கிரஸ் பேச்சிலிருந்து சித்தர் பாடல்களில் மூழ்கினார். ரயில் பிச்சைக்காரன் பாட்டெல்லாம் இடமற்று ஓடிய ரயில்களில் ஆன்மாவைப் பிழியும் சோகக் காற்றாய் வீசியது. பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்று பெயரும் பெற்றுவிட்டார். நாடகப் பாடல்கள் எல்லாம் ரயில் பிச்சைக் காரர்களோடு சேர்ந்து அலைந்தது. பட்டுச்சீலையை சதா கிழித்துக் கொண்டேயிருக்கும் நாகப்பட்டிணம் சீனக் கனகத்துக்கு எழுதிக் கொடுத்த தாத்தாவின் பாடலை ரங்கூனில் ஒப்பனையிட்டு நடித்தார்கள். நாச்சிமுத்து அண்ணே அவிங்கள்லாம் கப்பல் ஏறிட்டாங்க, மறுகாதீங்க அண்ணே, இவங்களையும் கூட்டிப் போங்க அண்ணே என்று சரித்திரத்தின் முன் நிரல்கள் பதிந்த பிரதேச எல்லையில் ஜப்பான் விமானம் குண்டுமழை வீசி ரங்கூன் தெருவில் தீப்பிடித்தது. தினகரன் பத்திரிகை ஆபிஸ் எரிந்துகொண்டிருந்த அச்சு எந்திரத்துடன் ஈய தமிழ் அச்சு எழுத்துகள் உருகியோடிய படிக்கட்டுகளில் கீழிறங்கிச் சென்ற தினகரனும் பாஸ்கரதாசும் தினகரனின் தங்கை அமிர்தத்துடன் கருப்பு நாவாயில் அகதிகளாய் கரைந்தனர். தாத்தாவுடன் கரையும் பர்மா நிழல்கள்.
கோயில்பட்டியில் என் வீட்டுக்கு அருகே மணல் மகுடி நாடக நிலத்துக்குள் நூறு நூறு நாடக ஒத்திகைகள் பார்த்ததும் என் நரம்பில் சுருதிகளாக ஏறியிருக்கும் தாத்தாவின் தொன்மம். என் தம்பி ச. முருகபூபதி நாடகக்காரனாகப் பிறக்கவும் காத்திருந்த பாஸ்கரதாசின் ஆவி பேரனைப் பிடித்துக் கொண்டது.
அப்பா எம். எஸ். சண்முகம் எழுதிய பூட்டு பாம்படம், நிலம் மருகும் நாடோடி நாவலும், பெரிய வயல் நாவலும் எங்களுக்கு கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் போன்றது. . தமிழ் செல்வனின் வெயிலோடு போய், வாளின் தனிமை புத்தகங்களிலிருந்து எழுதத் தூண்டும் சூலகம் பிரியாத அண்ணனின் நூலகத்திலிருந்தும் நான் பிறந்தேன்.


சிறுகதைகளிலிருந்து நாவலை நோக்கி ஏன் நகர்ந்தீர்கள்….

நாவல் எழுதுவதற்கு சிறுகதையில் நான் பயிற்சி எடுத்துக் கொண்டேன். 95-லிருந்து 2000 வரை எழுதப்பட்டதுதான் பாழி நாவல். இந்த நாவல் சொல்கதையிலிருந்து மொழிகதையாக உருமாற்றம் அடைந்துள்ளது. நாவலுக்கு வரும் பாதையாக அமைந்தது, எனது ஐந்தாம் தொகுதியான உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை சிறுகதைத் தொகுதியிலேயே நாவலுக்கு நான் தயாராகிவிட்டேன். எனது நாவல் வடிவம், எனது ஏழு சிறுகதை புத்தகங்களின் மடிப்பில் பொருளுடைய குணத்தை, கடினமான கலைக்கு அதிகபட்சமாக நெருங்கி புறத்தோற்றங்களை உதறி எறிகிறது மொழி. மூன்றும் ஏழுமாகி இருவரியில் அடங்கிய திருவள்ளுவரின் ஏழு வார்த்தைகள் எழு விதமான துகள்களாக உள்ளன. மொழியின் ஆழத்துக்கு குடைந்து பொருட்களை வெளியேற்றிப் படிக உடலாக பாழி நாவலை அடைந்தேன். இந்த நாவலில் சிறுகதைகளிலிருந்து பெற்ற ஐந்து நிலங்களாகப் பிரிந்து ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு கன்னியின் உருவை வரைந்து உருவெடுத்திருக்கிறது முதல் நாவல்.

சமகால சிறுகதையாளர்களில் உங்களுக்கு நெருக்கமானவர்களைச் சொல்லுங்கள்…

சமகால சிறுகதையாளர்களில் என்னுடைய போட்டியாளர்களாக நான் எடுத்துக் கொள்வது அசதா எழுதிய வார்த்தைப்பாடு கதைத் தொகுப்பும், கல்குதிரையில் எழுதிய இசைக்காத மீன்களின் அக்கார்டியன் சிறுகதையுமாகும். குமார் அம்பாயிரம், பாலசுப்ரமணியன் பொன்ராஜ், குணா கந்தசாமி, சித்ரன், சுனீல் கிருஷ்ணன், கருத்தடையான், நரன், தூயன், பாலை நிலவன், ஜே. பி. சாணக்யா, லக்ஷ்மி சரவணகுமார் போன்றவர்களை விரும்பி வாசிக்கிறேன்.

நீங்கள் தொடர்ந்து நடத்திவரும் கல்குதிரை இதழை எந்தப் பின்னணியில் கொண்டுவந்தீர்கள்..

லத்தீன் அமெரிக்க இலக்கியம் என் மீது தாக்கம் செலுத்திய காலத்தில், எதார்த்தம் மீறிய கதைகளை, பரிசோதனைப் படைப்புகளை, அற்புத எதார்த்தக் கதைகளை தமிழில் எழுதிப் பார்ப்பதற்கான தேவையை உணர்ந்தேன். தாஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழ், 33 தேசங்களைச் சேர்ந்த சமகாலப் படைப்புகள் ஒரு இயக்கமாக மொழிபெயர்க்கப்பட்டு உலகச் சிறுகதைத் தொகுப்பாக வெளியானது. காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் சிறப்பிதழ் வெளியிட்டோம். சூழலைப் புரட்டிப் போட நினைப்பவன் சிறுபத்திரிகையின் தொன்மமாக மாறுகிறான். எழுத்து, கசடதபற, பிரக்ஞை, கொல்லிப்பாவை, இலக்கிய வட்டம் போன்ற சிற்றிதழ்களின் நீட்சியாக கல்குதிரை வெளிவந்து கொண்டேயிருக்கிறது. ஒரு விவசாயி போல ஒரு ஆண்டு காத்திருந்து கல்குதிரையை இன்னமும் எழுத்தாளர்களோடு சேர்ந்து நடத்திக் கொண்டுவருகிறேன். நகுலனுக்கு நாங்கள் வெளியிட்ட சிறப்பிதழ் நகுலனை புதிய தலைமுறை வாசகர்களிடம் புதிதாகக் கொண்டுபோய் சேர்த்தது.

உங்களது புதிய நாவல் ‘நீர் வளரி’ பற்றி…

இந்த நாவலுக்கு ‘மந்திர இழைகள் விடும் பொய்யாக் கொடி வையை’ என்றும் பெயரை யோசித்திருந்தேன். என் அம்மா பிறந்தது மதுரை. என் நாவலைத் துவங்கியதும் கடைசியாக நாவலை மெய்ப்பு நோக்கித் திரும்பியதும் மதுரையிலிருந்துதான். இந்த நாவலில் டிசம்பர் 21 ஐக் குறியீடாகக் கொண்டு 21 கதைச் சுருள்களாக வைகை படர்கிறாள். தசாவாள சக்கராகாரம் என்ற வார்த்தையை போர்ஹேயின் ‘வட்டச்சிதைவுகள்’ கதையின் எதிர்விதியாக எடுத்துக் கொள்கிறேன். வாளம் என்பது வளரி. கரிசல் வாளம், சுண்ணாம்பு வாளம், ஏழ்பனை ஓலைக்குடா வாளம், பிறை முளரி வாளம், உப்பு வாளம். நாவல் இரண்டு பாகங்களாகப் பிரிந்திருக்கிறது. மகரத் திருப்பம்…மேகலா ரேகை, கடகத் திருப்பம்…அவந்திகா ரேகை என்று பிரிந்திருக்கிறது. வளரி என்கிற பூமராங்கை வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் இது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளிடமிருந்து வந்ததாகச் சொல்லப்படும் வளரி மதுரையைச் சுற்றி பல்வேறு இடங்களில் புதைந்திருக்கிறது. எகிப்திய பாரோ மன்னர்களின் பிரமிடுகளுக்குள் யானைத் தந்தத்தில் வளரிகள் பெட்டிகளில் இருக்கின்றன.

உங்களின் பயணங்களில் தொடர்ந்து இடைப்படும் தனுஷ்கோடி ஹம்பி உங்களின் படைப்புணர்வில் செய்திருக்கும் ரசவாதம் என்ன?

தனுஷ்கோடி, இரண்டாம் நூற்றாண்டில் தொன்முது கோடியாக இருந்திருக்கிறது. அது ஏழாவது நூற்றாண்டில் கோடி நாடு என்று வருகிறது. பத்தாம் நூற்றாண்டில் ராமாயணம் வந்தபிறகு தனுஷ்கோடி ஆக மாறுகிறது. நான் பார்த்த தனுஷ்கோடி, கடல் ஊழியால் ஏற்பட்ட வையை மணல் மேடுகளாலான ஊரைத்தான். மணல் எக்கர்கள் என்பார்கள். தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை இந்த மேடுகள் உள்ளன. பாலாடை மாதிரி மணல் மேலே தெரியும். ஆனால் கால் வைத்தால் காலை இழுத்து மூழ்கடித்து விடும். பறவைகள் மட்டுமே தப்பிக்க முடியும். மனிதகுலம் வந்த முடிவற்ற பாதையாக அது இருக்கிறது. அது ராமாயணத்தையும் கடந்து மனித எலும்புகளும் விலங்குகளின் எலும்புமாக நீண்ட பாதையாகப் பார்க்கிறேன். அதனால் தான் தனுஷ்கோடியில் உள்ள ஆவிகளைத் தேடி போய்க் கொண்டேயிருக்கிறேன். தனுஷ்கோடி மணல் வளரியாக வளைந்து கிடக்கிறது. வளரி என்பது போர் ஆயுதம் கிடையாது. தனுஷ்கோடி என்னை விடாது. தனுஷ்கோடி தொன்முது கோடி கால்களுடன் நடந்துகொண்டிருக்கிறது.
ஹம்பிக்கு நான் முதல்முறை போனபோது, அந்தக் கோயிலுக்குள் உள்ள குளத்துக்குள் ஹம்பியின் மொத்த கட்டிடமும் நிழல் மாதிரி விழும். அங்கே சீனிக்கல்லில் ஒரு மலையை வாலி கோச்தா என்கிறார்கள். வாலியின் எலும்பு போல அந்தப் பாறைகள் இருக்கின்றன. ஆனை கண்டி என்ற ஊர் மன்னர்கள் ஆண்டது. அங்கு இப்போதிருக்கும் சைக்கிள்கடைக்காரரும் மன்னரைப் போலத் தான் முழிக்கிறார்கள். அம்பிக்குப் ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் போவேன். அங்கேயிருக்க சிதிலங்கள் தான் எனது கலையாக மாறுகின்றன. அம்பி பாதித்த அளவுக்கு ஹலபேடும் பேளூர் சிற்பங்களும் என்னை ஈர்த்தவை. என்னைக் கவர்ந்த சிற்பமொன்று ஹம்பியில் முலையறுந்து மூக்கறுந்து கிடக்கிறது. பேளூர், நரசிம்மர் ஸ்தம்பத்தில் அங்குள்ள அத்தனை சிற்பங்களும் மீனியேச்சராக அமைந்துள்ளது. அதுதான் நமது நாவல் என்று நினைக்கிறேன்.
சிதிலங்களின் துகள்களை எடுத்துதான் நான் என் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் நான்கு நாவல்களின் பயணத்தைச் சொல்லுங்கள்…

பாழி – நிகண்டு வடிவத்தைப் பின்பற்றி பொருளில் ஒளித்துவைக்கப்பட்ட கூடுதல், பிரிவு என்பதின் மயக்க வெளியை நீட்சியாக்கும் நிலத்தோற்றங்கள் தான் பாழி.
பிதிரா – நூலே ஒரு பிதிரா. கலைகளின் கால்வழி மரபை எடுத்துக் கொண்டு கதையின் அந்தமாக மாறுவதுதான் பிதிரா. கிளிமுகப் பயணி, உப்புநூல் யாத்ரீகன் என்ற இருவர் எழுதிய கதை இது. முதல்வன் கவிஞன், பின்னவன் கதைசொல்லி. இரண்டுபேரின் கதை இது. உப்புநூல் யாத்ரீகன், ஸ்ரீநேசனை முன்னிறுத்தி எழுதப்பட்டது. அவனுடைய சலனங்கள் அனைத்துக்குள்ளும் தமிழ் நிலப்பரப்பின் ரகசியங்கள் இருக்கின்றன. நேசனின் எளிமையை அடைவது எளிதல்ல. பிதிராவுக்குள் அவனும் இருக்கிறான். பிதிரா என்ற பெயரை ஒரு தாளில் எழுதி ராணிதிலக்கும் ஸ்ரீநேசனும் தான் ஒரு குகைக்குள் வைத்தார்கள்.
த – தீநீரிலிருந்து த-வுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். தாவோவிலிருந்து த வருகிறதா. தனுச்கோடியிலிருந்து வருகிறதா. த – கடலில் இருக்கிறதா. நெய்தல் பெரும்பண் தோடி ராகத்தில் த மறைந்து இருக்கலாம். தாவொலி மூங்கில் என்று இந்த நாவலுக்குப் பெயர் வைத்திருந்தேன். தேவதச்சன் வந்து த என்று பெயர் வைத்தார். இரண்டு நாவல்களுக்கிடையே அவர்தான் வந்து முறிச்சுடு என்பார். நீர் வளரி நாவலில் நான் இருக்கும்போதும் தேவதச்சன் தான் வந்து போதும் நிறுத்திவிடு என்றார். நிறுத்திவிட்டேன்.

Comments