Skip to main content

உடம்புதான் தீராத ஈர்ப்பாக உள்ளது



இலக்கியம் உள்ளிட்ட அனைத்து கலைவெளிப்பாடுகள் மட்டுமல்ல; எல்லா செயல்பாடுகளுக்கும் உடம்புக்கும் இடையிலான தொடர்பை, இன்றியமையாத இணைப்பை, அது குறித்த ஓர்மையை என்னிடம் உருவாக்கியவர் சந்திரலேகா. எந்தக் காரணத்துக்காக அவருடன் அறிமுகமானேன் என்று எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. 

2004-ம் ஆண்டு மத்தியில் ஆரம்பித்து அவரது மரணம் வரை, பெசண்ட் நகரில் அவரது வீட்டில் நடந்த சில சந்திப்புகளும் குறைந்த அவகாசத்தில் நடந்த உரையாடல்களும் அதை எனக்கு உணர்த்தின. அவர் வீடும் தோட்டமும் அதில் அவர் அமைத்திருந்த அரங்கும் இன்றும் என்னை ஈர்ப்பவையாக உள்ளன. அப்போது எனக்கு வயது 30. 2006-ம் ஆண்டு இறுதியில் அவர் காலமானார். 

உடம்பு தொடர்பான கவனம், உடம்பின் ஆற்றல், ஆரோக்கியத்துக்கும் மனத்தின் ஆரோக்கியம், ஆற்றலுக்கும் உள்ள உறவு அப்போதுதான் எனக்குத் தெரியத் தொடங்கியது. உடம்பு தான் வெளியாக இயற்கையாக பிரபஞ்சமாக விரிந்திருக்கிறது என்பதை அறியும் கல்வியை என்னிடம் தொடங்கி வைத்தவர் சந்திரலேகா. கால்பந்தாட்டத்தைப் பார்ப்பதில் மிகவும் ஈடுபாடுடையவர் சந்திரலேகா. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் நூலுக்கு அவர் வடிவமைத்த அட்டையில் கால்பந்து உண்டு. அந்த அட்டையின் வடிவமைப்பு சார்ந்து அது அச்சான பின்னர், சந்திலேகா எழுப்பிய ஆட்சேபத்தை அடுத்து ஜே. ஜே. சில குறிப்புகள் புத்தகத்தின் அட்டை மாறியது. அந்த அட்டையை நான் க்ரியா ராமகிருஷ்ணன் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன். 

முதுமையின் தள்ளாமையிலும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை அவர் தனியாகத் தொலைக்காட்சியில் உற்சாகத்தோடு தன் அறையில் பார்ப்பார்.   
இந்தியா உலகுக்குப் பரிசளித்த கலைப் பொக்கிஷங்களில் ஒருவர் சந்திரலேகா, நடனத் தாரகை, நடன வடிவமைப்பாளர், பெண் போராளி, ஓவியர், கவிஞர், போஸ்டர் வடிவமைப்பாளர்.... என பன்முகம் கொண்டது அவரது ஆளுமை. வெற்றிகரமான பரத நாட்டியக் கலைஞராய் இருந்த சந்திரலேகா, அன்றைய பரத நாட்டியத்தில் இருந்த போலித்தனத்தையும் வணிக கட்டமைப்பையும் எதிர்த்து, மரபுக் கலையான பரத நாட்டியத்தைத் தனது ஆளுமையின் மூலம் நவீனமாக்கியவர். ஆனால் அவரை மரபுவாதி என்று சொல்வதையும் அவர் வரவேற்கிறார். தமிழ் இலக்கிய உலகத்துடனும் மிக நெருக்கமான உறவு சந்திரலேகாவுக்கு உண்டு. தி.ஜானகிராமன் உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள் அவருக்கு மிக நெருங்கிய நண்பர்கள்.
சென்னையில் பெசண்ட் நகரில் கடலைப் பார்த்த்து போல் சாலையையொட்டி இருக்கிறது சந்திரலேகாவின் வீடு. வரவேற்பறையை பழமையான பொருட்கள் அலங்கரிக்கின்றன. ஒன்றையொன்று பார்த்தாற்போல் மூன்று ஊஞ்சல்கள். இரண்டு தினங்களுக்கு முன்புதான் பரோடாவிலிருந்து சிகிச்சையை முடித்துக் கொண்டு திரும்பியிருந்ததால் சுருக்கமாக நேர்காணலை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் சதானந்த மேனன். மாலையில் எங்களுக்கு அவர் நேரம் ஒரு ஊஞ்சலில் சந்திரலேகாவும் ந.முத்துசாமியும் உட்கார்ந்துகொள்ள மற்றவர்கள் கீழே விரிக்கப்பட்டிருந்த பாயில் அமர்ந்து கொண்டோம். நேரம் செல்லச் செல்ல சந்திரலேகாவிடம் உற்சாகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. சில சமயங்களில் ஊஞ்சலை நிறுத்திவிட்டு எழுந்து, நடன அசைவுகளைச் செய்து காட்டினார். தளவாய் சுந்தரம், அஜயன் பாலா ஆகியோர் உடனிருக்க இந்த நேர்காணல் செய்யப்பட்டது...
தீராநதி இதழுக்காக 2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட நேர்காணல் இது..

சிறுவயதிலேயே நடனத்துக்காக இத்தனை தூரம் உங்களை வரச் செய்த உத்வேகம் எப்போது, எப்படி ஏற்பட்டது?

சந்திரலேகா: நான் எதைச் சரியென்று நம்புகிறேனோ, அதைச் செய்வதற்கான தைரியத்தைச் சிறு வயதிலேயே என் தந்தை எனக்குக் கொடுத்தார். அப்போதிலிருந்தே நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வயதில் நடனத்தை நோக்கி நான் ஈர்க்கப்பட்டதுக்கான முதல் காரணம், அதிலுள்ள அசைவுகளின் மந்திரத் தன்மைதான். அதோடு விரல்கள், கைகள், கண்கள் மற்றும் பாதங்களின் பாவ, நடன அசைவுகளுடன் முற்றிலும் பரவச நிலைக்க்கு அருகிலுள்ள உடம்பு குறித்தும் தொடக்கத்திலிருந்தே ஒரு ஈடுபாடு இருந்து கொண்டிருந்த்து. பின்னாடி செல்லச் செல்ல, மெதுவாக அது என்னுடைய கவனத்தை முழுவதுமாக ஈர்க்கத் தொடங்கியது. நமது காலத்தில், நமது உடம்பில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் என்னுடைய முக்கியமான தேடலாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. பெண்கள் நடக்கும்போதும், அமரும் போதும், ஒரு குழந்தையை இடுப்பில் தாங்கியிருக்கும்போதும் உடம்பை ஒரு ஆற்றல் வடிவமாய் நான் பார்க்கிறேன். பெண்கள் தண்ணீர் குடத்தை அல்லது குழந்தையை இடுப்பில் தாங்கியிருக்கும் நிலை அழகான் ஒரு நிலை. நம்முடைய உபயோகத்துக்கும் உடம்பின் வடிவத்துக்குமான பொருத்தம். இதில் ஆச்சரியப்படும்படி நன்றாகப் பொருந்துகிறது. என்னுடைய சிறு வயதில் நான் பார்த்த ஒரு கழைக்கூத்தாட்டக் காட்சி என் ஞாபகத்தில் இருக்கிறது. ஒரு சிறுமி லாரியின் சக்கரத்துக்குக் கீழே படுத்துக்கொண்டு, அதன் மொத்த எடையையும் தாங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய அம்மா லாரியை ஒற்றை ஆளாய் தூக்குகிறாள். இந்தச் சக்தி அவர்கள் உடலுக்கு எப்படி, எங்கிருந்து கிடைத்தது. நம் உடம்பில் எவ்வளவு ஆற்றல் பொதிந்திருக்கிறது என்று நம்மால் அறிய முடிவதில்லை. அதனால் தான் நான் நடனத்தில் எது செய்தாலும் அதை உடம்பு தொடர்பான அறிதலுக்காகவே செய்கிறேன்.

ஒரு நடனக் கலைஞராக உங்களைப் பாதித்தவர்கள் என்று யார், யாரைக் குறிப்பிட விரும்புவீர்கள்?

சந்திரலேகா: ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய. ஆனால் அவரைப் பாதிப்புஎன்று சொல்ல முடியாது. அவர் எனக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறார். என்னைச் சுற்றிலும் உள்ள இந்த உலகத்தைப் பார்க்கும் ஒரு உத்வேகமான் வழிமுறையையும் சற்றுப் பரந்த உலகப் பார்வையையும் சமூக அமைப்புகள் குறித்த நேர்மறையான புரிதல்களையும் எனக்கு அவர் தந்தார். அவருடன் இருக்கும் போது படைப்பு ரீதியான உயரத்தில் சஞ்சரிக்க முடியும்.

பாலசரஸ்வதி உங்களைப் பாதிக்கவில்லையா?

சந்திரலேகா: என்னுடைய சிறுவயதில் ருக்மணி தேவி மற்றும் பாலசரஸ்வதியின் படங்களை பத்திரிகைகள், இதழ்களிலிருந்து வெட்டி பாடப் புத்தகத்தில் ஒட்டிச் சேகரித்தேன். மிக நீண்ட நாட்களாக இந்தப் பழக்கம் என்னிடம் இருந்தது. ருக்மணி தேவி, அன்பும் ஈர்ப்புமுடைய ஒரு ஆளுமையாகவே, எனக்கு மிஞ்சினார். நேரடியான பழக்கம் ஏற்பட்டபோது அவருடைய அழகியல் குறித்த துல்லிய உணர்வு எனக்கு சந்தோசத்தைத் தந்தது. ஆனால் பால சரஸ்வதியின் கலை, என்னை கற்பனையின் மாய உலகத்துக்கே இழுத்துச் சென்றது. ஒவ்வொரு முறை பாலசரஸ்வதியின் நடனத்தைப் பார்க்கும் போதும் அது ஒரு மறக்க முடியாத அனுபவமாய் எனக்கு இருந்திருக்கிறது. அவர்தான் பரத நாட்டியத்தைப் பயில்வதற்கான ஆழமான விழைவை என்னுள் ஏற்படுத்தினார். பாலாவின் நட்டுவனாரான காஞ்சிபுரம் எல்லப்ப பிள்ளையிடம் சிஷ்யையாய்ச் சேர்ந்ததும் அதனாலேயே. இது எங்களை நெருக்கமாய் உணர வைக்கிறது.

உங்கள் குரு காஞ்சிபுரம் எல்லப்ப பிள்ளையின் தாக்கம்......

சந்திரலேகா: இப்போதுள்ள என் கலையின் கரைகள் எல்லாமே அவரிடம் பயின்றபோது ஒழுங்கமைக்கப் பட்டவைகள்தான். லயம் குறித்த அவரது மேதமையும் ஆழமான நிகழ்த்துதல் பண்புகளும் அவருடைய வெளிப்படைத் தன்மையும் மிகவும் மதிக்கத்தக்கது. தொடக்கத்தில் நான் முயற்சித் சில மீறல்களை எந்த முன்முடிவுகளும் அதன் கலை மதிப்பை உணர்ந்து எந்த மனத்தடையும் இல்லாமல் கலந்து கொள்ளவும் செய்தார். இது மிகவும் அபூர்வமானது.

மும்பையைச் சேர்ந்த நீங்கள் 20ஆவது வயதிலேயே சென்னையை உங்கள் வாழிடமாகத் தேர்வு செய்திருக்கிறீர்கள். இதற்கான துணிச்சல் எப்படி வந்தது?

சந்திரலேகா: நடனத்தில் முழு கவனத்தை செலுத்துவதற்காகவும் பெற்றோர்களிடமிருந்து தொப்புள் கொடி உறவை அறுப்பதுக்காகவும் அது தேவையாக இருந்தது.

அப்போதிலிருந்து சென்னை உங்களை வசீகர்க்கும் ஒரு நகரமாக இருக்கிறதல்லவா? 

சந்திரலேகா: ஆமாம். நான் சென்னையை மிகவும் விரும்புகிறேன். 1950-ல் நான் இந்நகரத்துக்கு வந்தேன், ஆனால் அப்போது, சென்னையை வளர்ந்த ஒரு கிராமமாகவே நான் உணர்ந்தேன். அண்ணா சாலையும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் புள்ளியில் அப்போது வயல்களும் வெற்று வெளிகளும் சுமைதாங்கிகளும் நிறைய இருந்தன. இப்போது மிகுந்த பரபரப்பு மிக்க வியாபாரப் பகுதியாக அது ஆகிவிட்டது. சென்னையின் எந்தப் பகுதியிலும் வயல்களே குடிசைகளோ, சுமைதாங்கிகளோ இன்று இல்லை. எல்லாமே கான்கிரீட் மயம். காற்று, நீர், சத்தம், மணம் எல்லாம் மாறிவிட்ட்து. ஆனால் இப்போதும் கடலோர சென்னை, மின்சாரம் நிற்கும் சமயங்களில் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கடலோரக் கிராமத்தின் காட்சி நினைவுகளைத் தக்க வைத்திருக்கிறதைப் பார்க்க முடியும்.
நாங்கள் எளிமையான திறந்த வெளி அரங்கம் ஒன்றை கடற்கரை ஓரத்தில் கட்டியுள்ளோம். முதலில் அதனை நாங்கள் கட்டும்போது ஒரு சிறு புல்கூட அங்கு கிடையாது. மரங்கள் சுற்றுச்சூழ இல்லாமல் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை அப்போதுதான் என் வாழ்வில் முதல் முறையாக உண்ர்ந்தேன். அது என்னை மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்கியது. மரங்கள் இல்லாமல் வாழ்வது மிகவும் சிரமம். அங்கே நிழல்கள் இல்லை. இலைகளில் ஊடுறுவும் சூரிய ஒளியும் இல்லை. நான் வேம்பு மரங்களை நட விரும்பினேன். செடிகள் வளர்ப்பதில் பைத்தியமாக இருந்தேன். இப்போது எங்களிடம் வளர்ந்த 75 வேப்ப மரங்களும் இரண்டு ஆலமரங்களும் இருக்கின்றன.

1960களில் ஒரு வெற்றிகரமான பரத நாட்டியக் கலைஞராய் இருந்தும் திடீரென்று அதிலிருந்து விலகி புதிய வடிவங்களை முயற்சித்தீர்கள். வழக்கத்தில் இருந்த நாட்டியத்தின் மீதான் உங்களது எதிர்வினையாக இதைக்கொள்ள முடியுமெனில், இதற்கான எண்ணம் எப்போது, ஏன் ஏற்பட்டது?

சந்திரலேகா:- தர்மசங்கடமான அனுப்வங்களில் ஒன்றுதான் என் நடனத்துக்கான குணத்தை, எதிர்வினையை உருவாக்கியது. அது என்னுடைய முதல் அரங்கேற்றத்தின் போது நடந்தது. வறட்சி நிவாரண நிதிக்காக நட்த்தப்பட்ட நிகழ்ச்சி அது. “மதுரா நகரிலோபாடலுக்கு யமுனை நதியில் நடக்கும் நீர் விளையாட்டு மற்றும் நீர் செழுமையை நான் பாவம் காட்டி நடனமாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று எனக்கு அந்தப் பொறி தட்டியது. ஒரு வறட்சியான சந்தர்ப்பத்தில், பஞ்ச நிலையில், நான் எதை என் நடனத்தில் சித்திரித்துக் கொண்டிருக்கிறேன்? அப்போது வெப்பத்தில் பிளந்த நிலங்களும் கைகளில் டின்களையும் குடங்களையும் பிடித்துக் கொண்டு நீள வரிசையில் காத்திருக்கும் மனிதர்களும் புகைப்படங்களாக எனக்கு ஞாபகத்தில் வந்தனர். அன்றைய செய்தித்தாளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் சுமார் 40,000 மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை பற்றி எழுதியிருந்தார்கள். எனது குரு காஞ்சிபுரம் எல்லப்பாவோ, “மதுரா நகரிலோபாடிக் கொண்டிருக்கிறார். கலையும் வாழ்க்கையும் எவ்வளவு முரண்பட்டதாக இருக்கிறது. இந்த முரண் என்னைத் திகைக்கச் செய்த்து. ஒரு நொடியில் நான் பிளவுண்டு, பகுக்கப்பட்டு இரு மனிதர்களாய் உடைந்துப் போனேன். ஏன் இந்த முரண் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. என்னால் இந்த முரணைத் தீர்க்க முடியவில்லை. ஒரு பக்கத்தில் செழுமையுடன் போஷிக்கப்பட வேண்டிய கலாச்சாரம் பற்றிய பிரமாண்ட ஆசை; மறுபுறம் கடுமையான, யதார்த்தங்களை மாற்றுவதுக்கான, நேர்மறையான சக்தியை வழங்குவதற்கான தேவை... நான் ஒத்திசைவு கொள்ளாமல் போராடுகிறேன், இந்த இரண்டு திசைகளும் கவனிக்க வேண்டியவைகள்; முழுமையானவை என்பதால்.
நடனம் என்பது சொர்க்கத்தில் இருந்து தோற்றம் கொண்டதல்ல. அதற்குப் பொருள் சார்ந்த அடிப்படை உண்டு. அது மண்ணிலிருந்து பிராந்தியத்திலிருந்து, பழக்க வழக்கம், உணவு முறைகள், சமூக உறவுகளிலிருந்து வேர்பிடித்தது. இனங்களின் பண்புகள் தொடங்கி மூக்கு, கண், கேசம், தோல்... என எல்லா அங்கங்களின் செயல்களோடும் நெருங்கிய உறவுடையது. மிக நேர்த்தியான நடன வடிவமும் ஒரு குறிப்பிட்ட பொதுத்தன்மையின் மொழியைத் தக்கவைத்துள்ளது. அதன் வரலாறும் சமூக வரலாற்றின் படிநிலைகளும் வேறுவேறானவை அல்ல. நடன வடிவத்தில் உள்ள மாற்றங்கள் மண், சீதோஷ்ணநிலை, மரங்கள், பயிர்கள் மாறுவதைப் போன்றதே. கால ஓட்டத்தில், மற்ற கலைகள் போல, சமூக நிகழ்ச்சிகள் போல, சமுகத்தில் உயர்வு தாழ்வு அடுக்குகள் உருவான பிறகு, சமூகப் பங்கேற்பிலிருந்து விலகி, சமூக நுகர்வு வடிவமாய் நடனமும் உருவெடுத்து விட்டது. செவ்வியல் நடனங்களில் இருந்த பார்வையாளனுக்கும் பங்கேற்பாளனுக்கும் இடையேயான இடைவெளி இறுகி உறைந்த வடிவமாய் ஆகிவிட்ட்து. வரலற்றின் இடைப்பட்ட காலத்தில்கூட தேகம் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தையும் உணர்வு பாவத்தையும் வைத்திருந்தது. ஆனால் நமது காலத்திலோ தொழில் சார்ந்த நகர சமூக இயல்பில் அதற்கு கடுமையான தடை ஏற்பட்டுவிட்டது. உடம்புக்கும் இயற்கைக்கும் உள்ள உயிரோட்டமான தொடர்பு, உடம்புக்கும் பணிக்குமுள்ள உறவு, உடம்புக்கும் சடங்குகளுக்கும் உள்ள உறவுகள் எல்லாம் போய் நடனம் ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டது.
இந்நிலையில், செவ்வியல் நடனமான பரத நாட்டியம் போன்ற வடிவத்தில் என் வேரும் பயிற்சியும் இருந்தாலும் அதன் பழமைவாதமும் சம்பிரதாயத் தூய்மையும், தற்காலத்தில் அதில் வேலை செய்யும் போது பல முரண்களைத் தோற்றுவிக்கிறது. அதே போல் மேற்கத்திய விமர்சன அமைப்பும் என்னில் தொந்திரவுகளை அதிகரித்து வருகிறது. அவர்கள் கிழக்கத்திய மரபுகளை விமர்சனம் எதுவுமின்றி கவர்ச்சிப் படுத்துகிறார்கள். நமக்கு மரபுவாதம், நவீனத்துவம் இரண்டுமே சிக்கலும் பிரச்சினையும் கொண்ட பிராந்தியங்கள் ஆகும். மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் சண்டை உருவாக்குவது என் நோக்கமல்ல. நான் இரண்டையும் வித்தியாசமானவைகளாகவும் பார்க்கவில்லை. ஒரு கலைஞனுக்கான வேலை என்பது மரபை படைப்பார்ந்த வினையின் மூலம் நவீனப்படுத்த வேண்டும் என்பதே. அதைத்தான் நான் செய்தேன்.

பரத நாட்டியத்திலிருந்த எது உங்களை அதிக தொந்தரவுக்குள்ளாக்கியது?

சந்திரலேகா: முதலில் அதன் உள்ளடக்கம். அதே புராணக் கதை; அதே கிருஷ்ணர், அதே ராமர். இவைகள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பல வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல், இதை மட்டும்தான் செய்து வருகிறார்கள். சமூகப் பிரச்னைகளும் பரத்த்தின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இரண்டாவதாக வடிவம். அதன் அதிகப்படியான அலங்காரம் மற்றும் நகைகள், வீன கலை வடிவங்கள் அனைத்துமே மரபிலிருந்த இந்த அலங்காரத்தைத் துறந்து எளிமையானவைதான். உதாரனமாக புதுக்கவிதை, மரபுக்கவிதையிலிருந்த அலங்காரத்தைத் துறந்து உருவானதைக் குறிப்பிடலாம்.

நன்கு அறியப்பட்ட ஒரு நாட்டியக் கலைஞராக ஆனபிறகு, எல்லோரும் ஆச்சரியப்படும் படியாக திடீரென்று 12 வருடங்கள் நடன வாழ்க்கையிலிருந்து காணாமல் போனீர்கள். அந்த காலகட்ட்த்தில்தான் உங்களது கவிதைகள், ஓவியங்கள், போஸ்டர் வடிவங்கள் வெளிவந்தன. இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன?

சந்திரலேகா: எவ்வளவு அதிகமாக நடனத்தைப் புரிந்து கொள்ளவும் விரும்பவும் தொடங்கினேனோ, அவ்வளவு அதிகமாக அப்போதிருந்த நிகழ்த்து வரைமுறைகள் குறித்து நம்பிக்கையின்மையும் சிதறலும் என்னிடம் ஏற்படத் தொடங்கின. நான் என்னிடமே கேட்கத் தொடங்கினேன்: ‘நான் நடனமாடுவதைத் தொடர விரும்பாவிட்டால் என்ன செய்வேன்?’ உடனே உள்ளிருந்து எழும்பதிலாக ‘எழுத்து’’’என்று வந்த்து. எனக்கு பரிச்சயமான சாதாரண மனிதர்கள், வீட்டு வேலையாளகள், வியாபாரிகள் என் கவிதையின் முக்கிய கண்ணியாக இருந்தார்கள். குறிப்பாக என் வீட்டு வேலைக்காரி கமலா. என்னைப் பொறுத்தவரை கமலா போன்றவர்களைத்தான் நம் காலத்தின் சிறந்த வெற்றியாளர்கள் என்று சொல்வேன். வெற்றி என்று நான் குறிப்பிடுவது அவர்கள் வாழ்வது. அப்புறம் நான் எழுதவும், ஓவியங்கள் வரையவும் தொடங்கினேன். 1960களில் பிற்பகுதியில் ‘தி இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாபத்திரிகையில்ல என் வசனக் கவிதைத் தொடர் வெளியானது. அது வாசகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. பல இளம் நண்பர்களையும் உபாசகர்களையும் என் வீட்டுக்குக் கொண்டு வந்தது.

திரும்பவும், நடன முயற்சிகளில் ஈடுபட்ட பிறகு, உங்களது முதல் தயாரிப்பான ‘அங்கீகாவை நிகழ்த்திய போது ஏற்பட்ட அனுபவங்கள்?

சந்திரலேகா: பரத நாட்டியத்தில் வேலை செய்துகொண்டே அதன் பிரத்யேக செவ்வியல் தன்மைக்கு விடை கொடுப்பது, ந்த வடிவத்தை எப்படி ஆராய்ந்து, விரிவுபடுத்தி பொது அனுபவமாக மாற்றுவது அதனை இந்திய உடலியல் தத்துவங்களான யோகா, பாரம்பரிய தற்காப்புக் கலைகள் மற்றும் பணிகளோடு சேர்த்து எப்படி புரிந்துகொள்வது என்பதுதான் அப்போது என்னுடைய அக்கறையாக இருந்த்து. ‘அங்கீகாவில் முல் ஐந்து நிமிடம் முழுக்க மெளனம். ஆறு பேர் மேடையில் இருந்தார்கள். குறைவான வெளிச்சம். மிக மிக மெதுவான, கொஞ்சம் சிரம்மான அசைவுகள். பொதுவாக குறைவான வெளிச்சத்தில் சக்தி அதிகம் விரயம் ஆகும். அசோக்குமார் எதுவும் செய்யாமல் சும்மா நின்று கொண்டிருந்தான். அவனுடைய நின்று கொண்டிருந்த அந்தச் செயலிலேயே ஒரு மாயம், மந்திரத்தன்மை இருந்தது. மெதுவாக நடனமாடிக் கொண்டிருந்த மற்றவர்களை விட்டுவிட்டு மொத்த அரங்கமும் அசோக்குமாரையே பார்த்துக் கொண்டிருந்தது. அது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. அசோக்குமாரிடம் என்ன நடந்தது? நிகழ்ச்சி முடிந்த பிறகு அது பற்றி நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம்.

1972-ல் நீங்கள் செய்த ‘நவகிரகாவின் பின்னணி என்ன?

சந்திரலேகா: கோவிலிலுள்ள நவக்கிரகங்களின் இருப்பைத் தூண்டுதலாக கொண்டது அது. ஒவ்வொரு கிரகமும் அமர்ந்திருக்கும் பீடங்கள், ஒன்பது உருவங்களில் ஒன்றுகூட, ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாமல் இருக்கும். அதனாலேயே நாம் நவக்கிரகங்களைச் சுற்றும் போது, ஒரு வட்டச் சுற்றில் நகர்கின்ற உணர்வைப் பெறுகிறோம். அந்த அனுபவத்திலதான் முத்துசாமி தீட்சிதரின் ‘சூர்யமூர்த்தேவை, யோகாவில் உள்ள சூரிய நமஸ்கார வடிவத்தில், வித்தியாசமான தாளகதியில் வைத்தேன். நான் நடன வடிவத்திலிருக்கும், அதன் இயந்திர ரீதியான, திருப்பி செய்வதிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு முன் அதை நான் உணர்ந்த்தில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் அற்புதமான நூறு பருப்பொருள் வடிவங்களிலிருந்து நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்று உணர்ந்தேன்.

ஆதிசங்கரரின் செளந்தர்ய லகரியின் பாதிப்பிலிருந்து உருவானதுதானே உங்களது ‘யந்த்ராநடனம். ஆண், பெண் அதிர்வுகளை மையமாக்கிய ‘யந்த்ராவை இந்திய சமூக சகித்துக் கொள்ளுமா என்பது பற்றி உங்களுக்கு முன் எண்ணங்கள் இருந்ததா?


சந்திரலேகா: எந்த இந்திய சமூகத்தை நீங்கள் சொல்கிறீர்கள். தெருவோரமுள்ள கோயில்களைப் போயப் பாருங்கள். சில புத்தகக் கடைகளையும் கூட. எல்லா இடங்களிலும் ஸ்ரீ சக்கரம் வரைபடம் இருக்கிறது. ஸ்ரீ சக்கரம் என்பதே ஆண், பெண் புணர்ச்சியை வெற்று வெளியில் குறிக்கும் அரூபம்தானே. அது சதுரமாகவும் வட்டமாகவும் முக்கோணமாகவும் புள்ளியாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இது எல்லா இந்திய மனங்களின் ஆழ்ந்த இடைவெளிகளிலும் இருக்கிறது அதுவே கெளரவமான அடையாளமாய் வீடுகளிலும் இருக்கிறது. என்னுடைய தேடல், ஏன் ஆதிசங்கரர் செளந்தர்யஎன்னும் வார்த்தையைக் கொண்டாடினார், பயன்படுத்தினார் என்பதாக இருந்த்து. வேறு, வேறு காலத்தில் அதற்கு வேறுபட்ட அர்த்தங்கள் இருந்த்தென்று பிறகு உணர்ந்தேன். உணர்வு, நிலை, பாவம், பாலியல் மற்றும் ஆன்மிகம் எல்லாவற்றின் சேர்ந்திருப்பு உடலில் நிகழ்வதைக் குறிப்பதே ஸ்ரீ சக்கரம். இதனாலேயே, மேல் கீழ் அதிகாரப் படிநிலைகள் இல்லாமல், பிரிக்கும் ஆற்றல்கள் இல்லாமல், மனித உடலை திரும்ப அதன் சிறப்பு நிலையில் பார்க்க வேண்டியுள்ளது.

நீங்கள், ஒரு நடன வடிவத்தின் கருத்தை வளர்த்தெடுக்கும் முறையை இப்போது எங்களுக்கு விளக்க முடியுமா?

சந்திரலேகா: ஒரு நடன வடிவம் என்பது இந்திய நடனத்துக்கு கட்டாயம் ஒன்றும் இல்லை. கால, வெளி சட்டகத்துக்குள் அசைவை ஒருங்கிணைக்கும் ஒன்றாகவே அதனை நான் பார்க்கிறேன். நடன வடிவாக்கம் நிகழும் போது, உங்கள் உடலில் பல்வேறு வகையான சலனங்களை உங்களால் பார்க்க முடியும். உடலின் சிற்பவியல் நுணுக்கங்கள் வெளியில் சாத்தியமாகிறது. மேடையில் தேகங்கள் நெருங்கத் தொடங்குகின்றன. காலம் மற்றும் வெளியில் நடக்கும் தீராத விளையாட்டு உங்களுக்கு பரவசத்தைத் தருகிறது. வெளி நிறைகிறது. வெளி வெற்றாகிறது நேர்மறையான வெளி, எதிர்மறையான வெளி... புது வடிவங்களும் புது அர்த்தங்களும் இவற்றிலிருந்து உருவாகின்றன.

பொதுவாக காதலையும் மெல்லியல்பையும் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் இரு பெண்களைப் பயன்படுத்துகிறீர்கள். ஏன் இரு ஆண்களோ அல்லது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்தோ அதைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாதா? இதனை ஒரு பெண்ணிய செயல்பாடு என்று கொள்ளலாமா?

சந்திரலேகா: நான் ஒரு போதும் பால் வித்தியாசம் பார்ப்பதில்லை. அப்போதைக்கு யார் கிடைக்கிறார்களோ அவர்களைப் பயன்படுத்துகிறேன். ஒரு ஆண் உடம்பு செய்வதை ஒரு பெண் உடம்பும் செய்ய முடியும். மகாகாளி போன்ற கருவை நான் கையாளும் போதெல்லாம் பெண்ணிய, முற்போக்குக் குழுக்களைச் சேர்ந்த நண்பர்கள், “சந்திரா, நீயும் ஏன் இதையெல்லாம் கையாள்கிறாய்?” என்று கேட்கிறார்கள். அவர்கள் அனைவரும் சி சார்புகளில் அழுத்தப்பட்டிருக்கிறார்கள். கலாசாரமும் மதமும் எல்லாக் காலங்களிலும் ஒன்றுக்குள் ஒன்று பின்னி, ஊடுபாய்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் கலாசார வேலையை ஒரு வாழ்க்கை முறையாகவே செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் அதன் யோசனைகள் அடிப்படைவாதத்துக்குப் போகாமல் கவனமாகச் செயல்பட வேண்டும். ஒரு பக்கம் நாம் பொருளாதார வறுமையில் இருக்கிறோம். மறுபுறம் கலாசார வறுமையில் இருக்கிறோம். நமக்கு நம் கலாசாரத்தில் உள்ள கருத்தியல்கள் தேவை. ஏனெனில் அதுவே நம்மை வளப்படுத்தக் கூடியது.

இப்போது உங்கள் தினப்படி காரியங்களும் அக்கறைகளும் என்னவாக இருக்கின்றன?

சந்திரலேகா: நான் அதிகாலையில் எழுந்திருப்பவள். எழுந்ததும் கடற்கரையில் நடக்கப் போவேன். ஒரு செம்பருத்திப் பூவைப் பறித்து, உதித்து எழும் சூரியன் எதிரே வைத்துப் பாருங்கள். கண் கொள்ளாத அழகு அது. அப்புறம் என் வழக்கமான காரியங்களுக்குத் திரும்புகிறேன். இப்போதும் உடம்புதான் எனக்கு தீராத ஈர்ப்பாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. னித ஆற்றலையும் உடலுக்கான கெளரவத்தையும், தற்போதைய நசுக்கும் சூழலிலிருந்து திரும்பப் பெறுவதாகவே நடனத்தைப் பார்க்கிறேன்.

புதிய தலைமுறை கலைஞர்களுக்கு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

சந்திரலேகா: நிறைய இளம்வயதினர், தீவிர செயல்பாட்டாளர்களிடம் பயங்கர ஆற்றலையும் ஈடுபாட்டையும் பார்க்கிறேன். அதற்குப் பிறகு அவர்கள் காணாமலேயே போய்விடுகின்றனர். எங்கே எதில் தவறு நடக்கிறது? அவர்களது உடலின் ஆற்றலைப் புத்துருவாக்கம் செய்வது பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை. உடலைப் புரிந்து கொள்ளத் தொடங்கும் முதல் பத்து நிமிட நடனம் உங்களைக் களைப்படையச் செய்யலாம். அப்புறம் ஒரு மணி நேரம் கழித்துப் பாருங்கள், உடம்பு ஆற்றலை உற்பத்தி செய்யத் தொடங்கி, அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்கள் உடம்பு பறக்கத் தொடங்கிவிடும். நீங்கள் பறக்கிறீர்கள் தண்ணீரும் உணவும் மிகச் சுவையாகத் தெரியும். காற்றை அற்புதமாக உணர்வீர்கள்.

சுயசரிதை எழுதும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

சந்திரலேகா: என் சுயசரிதையை எழுத வேண்டுமெனில் எனக்கு இன்னொரு வாழ்க்கைத் தேவை. ஏனெனில் சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை அவ்வளவு நிகழ்வுகள் நிறைந்தது அல்ல.

Comments