Skip to main content

நிலம் பூத்து மலர்ந்த நாள்
சங்கக் கவிதைகளை மிகச் சமீபத்தில்தான் ஈடுபாட்டுடன் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஒரு தமிழ்க் கவிஞனாக, தமிழனாக அந்தக் கவிதைகளின் உள்ளடக்கமும் உயிரும் சாரமும் என் வழியாகவும் கடந்துகொண்டிருப்பதை உணர்கிறேன். அந்நிலையிலிருந்து, சங்க காலக் கவிதைகளில் வரும் நிலத்தை வாழ்வை பிராணிகளை பறவைகளை ஒரு அன்றாட எதார்த்தமாக கிடைமட்டத்தில் ஒரு பாயைப் போல உரைநடை கதையில் விரிக்க முடியாது என்பதே எனது இதுவரையிலான எண்ணமாக இருந்து வந்துள்ளது. மலையாளக் கவிஞர், எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதி, கே. வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலை வாசித்த போது அது ஒரு கற்பிதம் என்று புரிந்தது. வள்ளல் வேள்பாரி, மூவேந்தர்கள் சதியால் கொல்லப்படும் சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு சுவாரசியமான திரில்லர் நாவல் வடிவத்தை மனோஜ் குரூர் தேர்ந்துள்ளார் எனினும் அது நாவலின் மேல் ஓடு மட்டுமே.

ஆயிரம் ஆண்டுகளாக மாறியும் மாறாமலும் இருக்கும் தமிழ் மனநிலப் பரப்பின் வரைகோடுகளை நோக்கி மனோஜ் குரூர் நெருங்கியிருப்பது தான் நாவலின் ஆச்சரியம். பாணர் சிறுமியான சீரை, தங்கியிருக்கும் இடத்திலிருந்து காணாமல் போய் வெள்ளை ஆம்பல்கள் பூத்திருக்கும் குளத்தின் சேற்றில், வெளிப்பட்டும் வெளிப்படாத உருவிலும் நண்டுகள் வரைந்திருக்கும் படங்களைப் பார்ப்பது போன்ற மர்ம உணர்வை நாவல் தருகிறது.

“நண்டுகளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன் அப்பா. அவை வள்ளிக்கொடிகளின் சினைப்பைகளை இறுக்குகின்றன. அவற்றினுள்ளே இருந்த நெல்மணிகளைக் கொத்தியெடுத்து சேறான குளிர்ந்த புற்றுகளுக்குள் கொண்டுபோய் வைப்பதைப் பார்க்கப் பார்க்க ஆசை தீராது. பயம் தோன்றினாலும் கண்களை அசைக்க முடியாது.”

சிறுமி சீரை விவரிக்கும் இந்தக் காட்சியைத்தான் தமிழ்க் காட்சி என்று சொல்கிறேன். இந்தக் காட்சியில் வரும் வள்ளிக்கொடிகள், அதன் சினைப்பைகள், நெல்மணிகள், புற்று, ஆசை, பயம் எல்லாம் அதுமட்டும்தானா? இந்தக் காட்சி வழியாக நம் மனத்தில் தோன்றும் நிலம், ஒளி, இருள், வண்ணங்கள், உணர்வு...

ஆற்றில் செல்லும் மரத்துண்டுகளையொப்ப ஏதோ ஒன்றால் இழுத்துச் செல்லப்படும் உயிர் வாழ்க்கையின் தன்மையைக் கூறும் பாணன் கொழும்பனில் இருபதாம் நூற்றாண்டின் கவிஞன் பிரமிள் தோன்றுகிறார்.
“பறவைகளைப் போலக் காற்றுவெளிகளில் பறப்பதற்கிடையில் இறகுகள் கொண்டு நாம் உயிரினை எழுதிச் செல்கிறோம்" என்று கொழும்பன் சொல்ல அவனது மகள் பின்வரும் கேள்வியைக் கேட்கிறாள்.

“இல்லாமையில் வரும் எழுத்தல்லவா? அதை யாரும் வாசிப்பதில்லையே அப்பா?”

உதிரும் இறகு காற்றில் எழுதிச் செல்லும் காவியத்தை எழுதிச் சென்ற பிரமிளின் வாழ்வுக்கும் பாணர்களின் வாழ்வுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

மனோஜ் குரூரின் இந்த நாவலில் கபிலரும் பரணரும் ஔவையும் கதாபாத்திரங்களாகவே வருகின்றனர். ஔவையார் திரைப்படத்துக்காக புதுமைப்பித்தன் எழுதிய திரைக்கதையில் முதல் காட்சியிலேயே ஔவையார், தான் ஒரு பாழ் மண்டபத்தில் குடியிருப்பதைப் பற்றிச் சொல்லும்போது, பாழிலிருந்துதானே எல்லாம் தோன்றுகிறது என்று பேசுவார். நள்ளிரவில் உறக்கத்தைத் தொந்தரவு செய்யவந்த பேயை விரட்டிக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த சோழ மன்னன், ஔவையைத் தெரிந்துகொண்டு தன் அரண்மனைக்குக் கூப்பிடும்போது பேசும் வசனம் இது. புதுமைப்பித்தன் தனது திரைக்கதையின் முதல் காட்சியையே பாழிலிருந்து தான் தொடங்கினாரென்றால் தமிழின் ஊழ் என்னவென்பதை நாம் தெரிந்துதான் இயங்க வேண்டும்.

இன்மையிலிருந்து வந்து இன்மைக்குப் போவதாக இருக்கும்  உயிர்வாழ்க்கையின் தன்மையை கையகப்படுத்தியிருக்கும் படைப்பு இது. தமிழ் ஆழ்மனத்தில் படிந்திருக்கும் ஒரு நிலைமையை மனோஜ் குரூர் நெருங்கியுள்ளார்.

ஐந்திணைகளின் மலர்கள், விலங்குகள், பறவைகள், அகப்பாடல்கள், புறப்பாடல்கள், திருக்குறள் வழியாகவும் பிளினி, தாலமி என்ற பயண எழுத்தாளர்கள் வழியாகவும் தனது நாவலுக்கு வரலாற்று ரீதியான வலுவான பின்னணியைத் தந்திருக்கிறார்.

சித்திரைக்கும் மகீரனுக்கும் இடையிலான காதல் உறவில் அகப்பாடல்கள் அடைந்திருக்கும் சாத்தியங்களைப் பிரதிபலிக்க விட்டுள்ளார் மனோஜ். இயற்கை, கால உணர்வு சார்ந்து மனம் கொள்ளும் நெருக்கமும் அன்னியமும் உரைநடையில் மகத்துவம் கொள்கின்றன. பெரும்பொழுது சிறுபொழுதாக மாறும் இறகுத்தன்மை விவரணையில் கிடைக்கிறது.

“ காத்திருப்பு வீணாகவில்லை. ஒரு விடியலில் மகீரன் வந்தான். புல்மேட்டின் பசுமையின்மீது காற்றின் குறும்பு. காஞ்சி மரங்களில் கிளிகளின் சலசலப்பு. உலகம் முழுதும் உயிரின் விளையாட்டு. வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலிருந்த ஊசலாட்டத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டது. பலமுறை பெருமூச்சு விட்டேன். மகீரனைக் கட்டியணைத்து அழுதேன்.”

ஔவை, ஒரு கவிதாயினியாக கனிந்த கலைஞராக அலட்சியம் கொண்டால் சினம் கொள்பவளாக அன்பு செலுத்தினால் தன் மதிப்பையே பொம்மை போலக் கீழே எறிந்துவிடும் குழந்தையாக வெளிப்படுகிறாள். அவளை, அந்தத் தமிழ் ஔவையை எனக்குத் தெரியும்.   

‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலைப் படித்து முடிக்கும்போது, நாம் இன்று வாழும் தமிழ் நிலத்துக்குள் ஒரு சங்க காலம் நிலம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணரமுடியும்.   

அழல் என்ற சொல்லின் விதவிதமான நிறபேதங்களை இந்த நாவலில் தான் நான் முதல்முறையாக உணர்ந்தேன். காக்கா முள்ளும் அரளி விதையும்  சீனிக்கல்லும் எப்படி என் அனுபவத்தின் கூர்சாயல்களைக் கொண்டது போல 'அழல்' என்ற வார்த்தை எனது அனுபவத்துக்குள் உருண்டுகொண்டிருக்கும் கூழாங்கல்லைப் போல இனி எப்போதும் இருக்கும். தமிழ் என்ற மனிதனின் தேகத்தைக் கற்பனை செய்தால் அதைக் கீறும்போது வரும் ரத்தத்தில் அழல் என்ற அம்சம் இருக்கும் என்று தோன்றுகிறது. நெருப்பு, தீக்கொழுந்து, வெப்பம், எரிவு, கோபம், நரகம், நஞ்சு, கொடுவேலி, கள்ளி, எருக்கு என்று எத்தனையோ அர்த்தங்களைக் கொடுக்கும் வார்த்தை அழல். ஆனால், அழல் என்பதற்கு ஒப்பானதாக இல்லை. பற்றி அரித்து எரிகிறது அழல் என்ற வார்த்தைதான்.  இந்த நாவல் வழியாகப் பெற்ற முதன்மையான பரிசு இந்த வார்த்தைதான்.

இந்த நாவல் ஏன் மலையாள தூரத்திலிருந்து எழுதப்பட வேண்டுமென்ற கேள்வி எனக்கு எழுந்தது. இதை எழுதுவதற்கு அந்த இடைவெளி தேவை என்று தோன்றுகிறது. சித்தார்த்தனை எழுதுவதற்கு ஹெர்மன் ஹெஸ்சேக்கு அந்தத் தூரம்தான் உதவியிருக்கிறது.   

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக