Skip to main content

எல்லாம் கதைகள்தானா யுவன்


கவித்துவமான மொழியும், அறிவார்த்தத்தின் சொடுக்குதலும், வாசிப்பு சுவாரஸ்யமும் அபூர்வமாக இணைந்த கதைசொல்லி யுவன் சந்திரசேகர். கடந்த இருபதாண்டுகளில் கணிசமான எண்ணிக்கையிலும் சிறுகதைகள், நாவல்களை எழுதிவருகிறார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து, கீழ்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் ஸ்டோர் வீடுகள் சார்ந்து ‘விகடன்’, ‘கல்கி’ போன்ற பத்திரிகைகளில் எழுதப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கையும் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு செழுமையான பகுதியும் அதன் சத்தங்களோடும் வாசனைகளோடும் நமக்குக் ‘கடலில் எறிந்தவை’ சிறுகதைத் தொகுப்பின் வழியாகத் திடமாக நினைவுகூரப்படுகின்றன. முடிவற்ற அறிவுகளின் பின்னணியில், இன்னும் முடிவற்றதாக இருக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களை ஆராயும் போர்ஹேவை, கல்கியும் தேவனும் தி.ஜா.வும் லா.ச.ரா.வும் தற்செயலாக யுவன் சந்திரசேகரின் உலகத்தில் சந்திக்கிறார்கள்; வெற்றிலைச் செல்லத்தைப் பகிர்ந்துகொண்டு சுவாரஸ்யத்தோடு அவர்கள் உரையாடுகிறார்கள்.

உச்சிவெயில் அடிக்கும் மத்தியான மயக்கத்தில் ஒருவன் காணும் பகற்கனவுபோல்தான் யுவனின் கதைகள் தொடங்குகின்றன. அந்தக் கனவு பெரும்பாலும் மதுரையில் தொடங்கி வரலாறு, அரசியல், தேசங்கள், நிலப்பரப்புகள், காலங்கள், துயர முனைகளுக்கு வாசகரை இழுத்துச் செல்வதாக உள்ளது. தொகுப்பின் முதல் கதையான ‘சாம்பல் நிற வேளை’யின் உள்ளடக்கம் என்பது, ஒரு சாதி ஆணவக்கொலை நிகழ்வு. மதுரையில் தொடங்கி வடகிழக்கு மாநிலம் வரை பயணிக்கும் கதை இது. தீர்க்க முடியாத மர்மத்தின் இருட்டில் தொலைத்த இணையைத் தேடி அலையும் காதலின் துர்விதியை வேறுவேறு புள்ளிகளிலிருந்து நினைவுகூர்வதுதான் இந்தக் கதையின் வசீகரம். இந்தக் கதை இந்திய நிலப்பரப்புகளுக்குள் ஏன் நீள வேண்டும்? இந்தியா முழுவதும் ருக்மணியக்கா சந்திக்கும் அந்தச் சாம்பல் நிற வேளைகள் இன்றும் தீவிரமாக முளைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதாலா?

தொகுப்பின் கடைசிக் கதைக்கு முந்தைய கதையான ‘அடையாளம்’ கதையிலும் இலங்கை தேவாலயக் குண்டுவெடிப்பில் கதை தொடங்குகிறது. ஆதிவராஹன் கதாபாத்திரம் வழியாக உலகின் வெவ்வேறு மூலைகளில் சனாதனம், வைதிகம், அடிப்படைவாதத்தின் பெயரால் மனிதர்கள் தற்கொலை மூர்க்கத்துடன் சக உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் கதைகளாகத் தொகுக்கப்பட்டு, நம் முன் வைக்கப்படுகின்றன. ஆலய கோபுரத்தின் நிழல் இருட்டிலிருந்து கதை சொல்லும் லா.ச.ரா.வின் கதாபாத்திரங்களில் ஒன்றாகத் தோற்றம் கொடுக்கும் ஒருத்தி, யுவனின் கதைப்பொய்கையிலிருந்து ‘வென்றவள்’ ஆக எழுகிறாள். சமீபத்தில் படித்த மந்திரத்தன்மை வாய்ந்த கதைகளில் ஒன்று இது. ‘புழுதிப்புயல்’, ‘தந்தையொடு’ இரண்டும் திகைப்பைத் தரும் கதைகள். அரசியல் பிரக்ஞையற்ற எழுத்து போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் இந்தக் கதைகளுக்குள் துல்லியமான அரசியல் போதம் இருப்பதை எழுதப்படும் அவதானிப்புகள் வழியாகப் பார்க்க முடிகிறது. 'புழுதிப்புயல்' கதை பாவைக்கூத்து நடத்தும் வடமாநிலக் கலைஞர்களைப் பற்றியது. ஒட்டுமொத்த கதையிலும், திரைபோல விரிந்திருக்கும் துணிக்கு அப்பால் ஆடும் பொம்மைகளைப் பார்க்கும் உணர்வை கதையை வாசிப்பவனுக்கு ஏற்படுத்திவிடமுடிகிறது யுவனால். சரித்திரம் இதே போன்ற திரைக்குப் பின்னால் ஆடும் பொம்மைகளின் கூத்தைப் போலத்தான் துலங்குகிறது. நமக்கும் இறந்தகாலத்துக்கும் நடுவில் உள்ள திரைதான் அந்தப் புழுதிபோலும். 

வெவ்வேறு கதாபாத்திரங்களின் நினைவுகூர்தல்களாக இருக்கும் இந்தக் கதைகளில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் யுவனின் கதைக் கண்ணாடியில் இரு பரிமாணம் கொள்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது; ‘ஒரு நாளும் இன்னொரு நாளும்’ கதையில் தந்தை இறந்ததற்கு மறுநாள் அவர் ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்த மணல்கடிகையைக் கவிழ்த்துப் பார்த்திருந்தால் மந்தகதியில் உதிரும் ஏதோ ஒரு துகளில் அவர் உயிருடன் இருந்திருக்க வாய்ப்பு உண்டோ என்ற மயக்கம் மகனுக்கு ஏற்படுவதைப் போல. வரலாறும் அரசியலும் தத்துவமும் அறிவியலும் கலையும் காதலும் அநீதியும் கொடுங்கோன்மைகளும் தீர்க்கவே இயலாத மானுடத் துயரங்களும் வெறும் கதைகள்தானோ என்று தோன்றும் மரத்த உணர்வை, நினைவுகளைப் பெருக்குவதன் வழியாக ஏற்படுத்துவதுதான் யுவன் சந்திரசேகர் என்னும் கதைசொல்லியின் நோக்கமோ?

ஒரு மத்தியமர் என்று சொல்லத்தக்க இந்திய, தமிழ் சாதாரணன் ஒருவன்தான் இந்தக் கதைகளின் மையம். அசாதாரணம், அற்புதம், அதீதம், அமானுடம், அசாத்தியம் என்று சொல்லத் தகுந்த அனுபவங்களைச் சந்திக்கிறான் அல்லது சாட்சியாகிறான். யுவனின் உலகத்தைப் பொறுத்தவரை கதைதான் விதிபோன்ற சரடாக எல்லாவற்றையும் இணைக்கிறது. யுவனின் கதைகளில் வரும் அந்தச் சாதாரணன்தான், கதையின் விதியால் குறைந்தபட்சமாகப் பாதிக்கப்படுபவனாக அல்லது தப்பித்தவனாக இருக்கிறான்; அதனால்தான், அவன் கதையாகாமல் இத்தனை கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

சென்ற நூற்றாண்டில் தமிழ் வெகுஜன சஞ்சிகைகளில் எழுதப்பட்ட கதை உலகமும், சிறுபத்திரிகை சார்ந்து எழுதப்பட்ட புனைவுகளும் இணக்கமாகச் சந்திக்கும் இடம் யுவன் சந்திரசேகருடையது. அவர் தனது கதைகள் வழியாக நீதியையோ தரிசனத்தையோ உண்மையையோ விமர்சனத்தையோ, குறைந்தபட்சம் நம்பிக்கையையோகூட வைப்பதில்லை. இந்தக் கதைகளெல்லாம் நினைவுகளும் கனவுகளும் மர்மங்களும் கலந்த வெறும் விளையாட்டு; இந்தக் கதைகளெல்லாம் வெறும் ஏமாற்று; துயரபாவத்தில் இருந்தாலும் காவியத்தனத்துடன் தோன்றினாலும் இவையெல்லாம் வெறுமனே கதைகள்; கதைகள் தவிர வேறில்லை. இதை வக்கணையாக வாசகர்களிடம் ஒவ்வொரு முனையிலும் உணர்த்தியும் சொல்லியும் விளையாடுபவர் யுவன். ஒரு நிகழ்ச்சியை விவரித்துவிட்டு, அதற்குச் சாத்தியமுள்ள வேறுவேறு காரணங்களைச் சொல்லிவிடுவதோடு, ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் இருக்கும் வேறுவேறு பார்வைக் கோணங்களையும் நம் முன்னர் வைத்துவிடுகிறார். இப்படி மடிப்பு மடிப்பாகத் தொடரும் இவரின் கதைகளால் பீடிக்கப்பட்ட வாசகர், வெளியிலும் கதைகளின் விதியில் உலகம் இயங்குவதாக, செயலற்று மயங்கக்கூடும்.

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக