Skip to main content

மனிதனின் மூளை கொஞ்சம் வேகமாகத் தனது நலனுக்காக வளர்ந்திருக்கிறது - ரோமுலஸ் விட்டேகர்


சென்னையின் பெருமிதங்களில் ஒருவர் ரோமுலஸ் விட்டேகர். பிறப்பால் அமெரிக்கர்; மனதால் தமிழர். தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட ரோமுலஸ், சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை, ராஜநாகங்களை ஆராயும் ஆகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம், இருளர் கூட்டுறவு அமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளை உருவாக்கியவர். 77 வயதில் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் இருளர் குடியிருப்பு மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்துவருகிறார். இவரது மனைவி ஜானகி லெனின், கானுயிர்கள் பற்றி சுவாரஸ்யமான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியவர்.

மனிதர்கள் ஆதிகாலம் தொட்டு அச்சத்துடனேயே பார்க்கும் பாம்புகளுடனான நட்பு உங்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்கான பின்னணி என்ன?

அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்த அம்மா டோரிஸ் நோர்டன் சட்டோபாத்யாய, எனது ஆர்வத்தை ஊக்குவித்தார். பெரும்பாலான அம்மாக்கள் அப்படிக் கிடையாது. நியூயார்க்கில் நாங்கள் வசித்தபோது, விஷமில்லா அமெரிக்க கார்டன் வகை பாம்பை வீட்டுக்குக் கொண்டுவந்தேன். ‘வாவ், எவ்வளவு அழகு’ என்று எனது அம்மா அதை வரவேற்றார். பாம்புகள் பற்றி நான் வாசித்த முதல் புத்தகத்தை வாங்குவதற்கு ஊக்குவித்தவரும் அவர்தான். பெற்றோர்களின் எதிர்வினை குழந்தைகளுக்கு எப்போதும் முக்கியமாக உள்ளது.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் நீங்கள் கானுயிர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்குகிறீர்கள். அப்போதிருந்த அணுகுமுறை, பார்வைகள் இப்போது மாறியிருக்கிறதா?

1970-களின் தொடக்கத்தில் கானுயிர் பாதுகாப்பானது பெரிய அளவில் இந்தியாவில் தொடங்கியது. தொடக்க கால அரசுசாரா நிறுவனங்களான வேர்ல்டு வைல்ட்லைஃப் பண்ட், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி ஆகியவற்றுடன் சேர்ந்து பணியாற்றிய காலம் அது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிகளைத் தொடங்கியபோது இருந்த மக்களின் அணுகுமுறை பெரியளவில் மாறியுள்ளது. ஆனால், இந்தியாவில் கானுயிர்களும் அவற்றின் வாழ்விடங்களும் வளமாக இருப்பதற்குச் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய உள்ளன.

பசுமை வளம் குன்றாத நிலங்களும் நீர்நிலைகளும் பாம்புகளின், முதலைகளின் வாழ்க்கைக்குத் தேவையாக உள்ளன. இந்த அடிப்படையில்தான் ஆகும்பேயில் மழைக்காடுகள் ஆய்வு மையத்தை சீதா நதியைப் பாதுகாப்பதற்காக ஆரம்பித்தீர்கள். அந்தப் பணிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

ஷிமோகா மாவட்டத்திலுள்ள ஆகும்பேயின் மழைக்காடுகளில் தோன்றும் நதி சீதா. அந்த மழைக்காட்டில்தான் எங்கள் ஆய்வு மையத்தையும் தொடங்கினோம். நீண்ட நாட்களாகவே மழைக்காடுகளில் ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்கும் யோசனை இருந்துவந்தாலும் அதற்கான பொருளாதார ஆதரவுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கனவாகவே இருந்துவந்தது. எனது அம்மா மறைந்த நிலையில் அவர் எனக்காக விட்டுச்சென்ற சேமிப்பில் ஆகும்பேயில் நிலத்தை வாங்கினேன். அம்மாவின் இறப்புக்கு முன்னரே நாங்கள் சேர்ந்து அதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ஆகும்பேயில்தான் ராஜநாகத்தை முதன்முறையாகப் பார்த்தேன். இந்தச் சூழ்நிலையில், விட்லி அவார்டு கிடைத்தது. அந்தப் பணத்தையும் சேர்த்து 2005-ல் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கினேன். சீதா நதியையும் அந்தப் பகுதியில் உள்ள ஊர்வனவற்றையும் பாதுகாப்பதோடு மக்களின் அலட்சியத்தால் காட்டின் வளம் குன்றுவதை அவர்களுக்கு உணர்த்தும் விழிப்புணர்வுக் கல்வியையும் அவர்களுக்குக் கொடுக்கும் இடம் அது. ராஜநாகம் எதிர்ப்பட்டால் அதைக் கொன்றுகொண்டிருந்த மக்கள், இப்போது அதைச் செய்வதில்லை. காட்டின் குன்றாத வளத்தைப் பாதுகாக்கும் உயிர்ச்சங்கிலியில் ஒரு கண்ணியாக ராஜநாகத்தை அவர்கள் பார்க்கின்றனர்.

மெட்ராஸ் பாம்புப் பண்ணை, முதலைப் பண்ணை எனப் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கியவர் நீங்கள். அதற்கு அரசுகள், நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதும் அங்கே செயல்படும் அதிகாரத்துவ சவால்களைத் தாண்டுவதும் அன்றாடப் பணியாக இருந்திருக்கும், இல்லையா?

மெட்ராஸ் பாம்புப் பண்ணை, மெட்ராஸ் முதலைப் பண்ணை, இருளர் கூட்டுறவு அமைப்பு ஆகியவற்றின் தொடக்க நாட்களில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் பலவற்றில் உட்கார்ந்து எனது பகல்கள் எத்தனையையோ செலவிட்டிருக்கிறேன். இதுபோன்ற அலுவலகங்களில் எனது பணியில் ஆர்வம் கொண்ட ஒரு அதிகாரியை அடையாளம் கண்டுவிட்டால் போதும்; அவரை அழுத்தமாகப் பற்றிக்கொண்டுவிடுவேன். அப்படித்தான் புதுமையான திட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. கானுயிர் பாதுகாப்பு நிறுவனங்களை அமைப்பதற்குப் பெருநிறுவனங்கள் பலவும் உதவியுள்ளன. ரோலக்ஸ் நிறுவனம், விட்லி பண்ட் ஃபார் நேச்சர், நேஷனல் ஜியாகிரஃபிக் சொசைட்டி போன்றவை எங்களுக்குப் பெருந்தன்மையாக உதவிவருகிறவர்களில் சிலர்,

இந்தியாவிலும் தமிழகத்திலும் உங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்தவர் நீங்கள். ஒரு அமெரிக்கராக இங்கே ஏதாவது தடங்கல்களைச் சந்தித்திருக்கிறீர்களா?

மொழித் தடை தவிர வேறெந்தத் தடைகளும் இருக்கவில்லை. மக்கள் அற்புதமானவர்கள். ஆதிவாசிகளிலிருந்து நகரவாசிகள் வரை எத்தனையோ தரப்பட்ட மக்களில் நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன்.

வியட்நாம் போரில் ராணுவ சேவை செய்தவர் நீங்கள். ராணுவ சேவையாற்றிவிட்டுத்தானே இந்தியாவுக்கு மீண்டும் திரும்புகிறீர்கள்?

வியட்நாம் மீது அமெரிக்கா நடத்திய போருக்கு நான் ஆதரவளிக்கவில்லை. ஆனால், ராணுவ சேவையில் ஈடுபட மறுத்திருந்தால் எனக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை கிடைத்திருக்கும். மூன்றாண்டு சிறைத் தண்டனையா இரண்டாண்டு ராணுவப் பணியா என்ற நிலை வந்தபோது ராணுவ சேவையைத் தேர்ந்தெடுத்தேன். நேரடியாகப் போர்க்களத்துக்குச் செல்லாமல், மருத்துவத் தொழில்நுட்ப சேவையில் ஈடுபடுத்திக்கொண்டேன்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு நீங்கள் பாம்புகளால் தாக்கப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா?

பாம்புகள் தாக்குவதில்லை. அபாயகரமான மனிதனால் கையாளப்படும்போதோ மோதப்படும் சூழ்நிலையிலோ அவை தங்களைத் தற்காத்துக்கொள்கின்றன. என்னுடைய ஒழுங்கின்மை, முட்டாள்தனத்தாலேயே நிறைய முறை கடிவாங்கியுள்ளேன். அதில் ஒரே ஒரு கடிதான் மிகவும் ஆபத்தானது.

உயிர்களிலேயே ஊர்வன உயிர்கள் மீதுதான் அதிக அச்சமும் அருவருப்பும் நிலவுகின்றன. அதை அகற்ற நீங்கள் கூறும் எளிய வழிமுறைகள் எவை?

பெரும்பாலான காட்டுயிர்களுக்கு மனிதர்கள் மீது இயல்பான மரியாதை உள்ளது. மனிதர்கள் மிகவும் அபாயகரமானவர்கள் என்றும் அவற்றுக்குத் தெரியும். நாம் கூடுதல் விழிப்பும் கவனமும் கொண்டவர்களாக இருந்தால், ஆரோக்கியமான தொலைவிலிருந்து ரசிக்க முடியும். அவை எத்தனை சுவாரஸ்யமானவை என்றும் நம்மால் அறிய முடியும்.

கானுயிர் ஆர்வலர் மற்றும் ஆய்வாளராக ஆவதற்கு ஆசை உள்ளவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

வனப்பகுதிகளில் கானுயிர்கள் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுவதைப் போன்று நாம் வாழும் கிரகத்தைப் பாதுகாப்பதற்கான நல்ல, திருப்திகரமான, சுவாரஸ்யமான பணி வேறு எதுவும் இல்லை என்பதுதான் எனது முக்கியமான அறிவுரை.

காடும் கானுயிர் பாதுகாப்புப் பணியும் உங்களுக்கு அளித்திருக்கும் ஞானம் என்ன?

விலங்குகளைவிட மனிதர்கள் எந்த வகையிலும் மேம்பட்டவர்கள் அல்ல என்பதைத் தொடர்ந்து கற்றுவருகிறேன். மனிதனின் மூளை கொஞ்சம் வேகமாகத் தனது நலனுக்காக வளர்ந்திருக்கிறது. நம்மைவிடத் தாழ்ந்ததாகக் கருதும் உயிரினங்களின் அற்புதமான சில நடத்தைகளைத் தெரிந்துகொள்ளாமல் எனது ஒரு நாள்கூடக் கழிவதில்லை. நகரத்தில் கிடைக்கும் எந்த சந்தோஷத்தையும்விட, காட்டில் இருக்கும்போது கிடைக்கும் அமைதியும் நிறைவும் அதிகம்.

உங்கள் பணியில் உங்களை ஈர்த்த ஆளுமைகள், நண்பர்கள்?

நடேசன், சொக்கலிங்கம், ராஜாமணி, காளி ஆகிய இருளர் பழங்குடி நண்பர்கள் எனக்கு பாம்புகள் பற்றியும் இதர உயிர்கள் பற்றியும் நிறைய கற்றுத்தந்திருக்கின்றனர். அமெரிக்காவில் மியாமி பாம்புகள் காட்சியகத்தில் என்னுடன் பணியாற்றிய பில் ஹாஸ்ட் என் மீது தாக்கம் செலுத்தியவர்.

இருளர் பழங்குடி மக்கள் மரபு வழியில் பெற்ற கல்வி அடுத்த தலைமுறையினருக்குச் சென்று சேர்க்கும் வகையில் ஏதாவது காரியங்கள் நடந்திருக்கின்றனவா?

இருளர் பழங்குடி மக்கள் பாம்புகளை அறிந்தவர்கள். அவற்றின் பழக்கங்களை ஆழமாகப் புரிந்தவர்கள். 1970 வரை அவர்கள் பாம்புத் தோலுக்காகப் பாம்புகளை வேட்டையாடினார்கள். ஆனால், வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தால் வேட்டைக்குத் தடை வந்தது. பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து தயாரிப்புக்காக அவர்கள் இப்போது பாம்புகளைப் பிடித்து விஷத்தைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்படுகிறது. உலகின் தலை சிறந்த பாம்பு பிடிப்பவர்கள் இருளர்கள்தான் என்று எப்போதும் கருதுகிறேன்.

Comments