Skip to main content

இன்மையில் இருப்பின் நடனம்



ஞானி ஜலாலுதீன் ரூமிக்கும் அவரது ஆன்மிக ஆசிரியனும் நண்பருமாக இருந்த சம்ஸ் இ தப்ரீசிக்கும் இடையிலான உறவையும் விவரிக்கும் துருக்கிய நாவலாசிரியை எலிஃப் சஃபக்கின் நேசத்தின் நாற்பது விதிகள் (‘தி ஃபார்ட்டி ரூல்ஸ் ஆப் லவ்’) படைப்பைச் சமீபத்தில் படித்தேன். ஜலாலுதின் ரூமியைவிட, சம்ஸ் இ தப்ரீஸ் என்ற ரௌடி ஞானி அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் பருவுருவமாக அறிமுகமாகிறார். அவர் வாழ்ந்தபோதிருந்த சமூக நெறிகள், மத நெறிகள் இரண்டையுமே கேள்விக்குள்ளாக்குபவர். ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிகப்பு' நாவலில் வரும் நிலப்பரப்பு, கலாசாரத்தை ஞாபகப்படுத்தும் நாவல் இது. கொன்யா நகரத்தில் மத அறிஞராகவும் பிரமுகராகவும் குடும்பம் குழந்தைகளோடு சௌகரியமாக வாழ்ந்து வரும் ரூமிக்கு அகத்தில் நிரப்ப முடியாத வெறுமை உள்ளது. அதை நிரப்ப வருபவர் தான் சம்ஸ் இ தப்ரீஸ். தளைகளற்ற சுதந்திரத்தோடு கூடிய மெய்ஞானப் பயணத்துக்கு ரூமியைத் தயார் செய்யும் சம்ஸ், ரூமிக்கு நகர மக்களிடமிருந்த நற்பெயரையும் பல்வேறு செயல்கள் வழியாக இல்லாமல் ஆக்குகிறார். சமூகம் கருதும் 'நல்லது'களிலிருந்தும் ஒருவன் உண்மையான  விடுதலை அடையவேண்டியிருக்கிறது. இந்த அனுபவத்தின் பின்னணியில் தான் ரூமி கீழ்க்கண்ட வாசகங்களைச் சொல்லியிருக்க முடியும்.

சௌகரியமானதிலிருந்து விலகி ஓடு
பாதுகாப்பை மற
எங்கே வாழ அஞ்சுகிறாயோ அங்கே வாழ்
உனது நற்பெயரை அழி
கெட்டபெயர் எடு
சாமர்த்தியமாகத் திட்டமிடுவதை வெகுகாலம் முயற்சித்துவிட்டேன்
தற்போதிலிருந்து நான் பைத்தியமாக உலவப்போகிறேன்.


‘லவ்’ என்ற சொல்லும் அதுதொடர்பிலான முடிவில்லாத தேடலும் உடலும் உடலற்றதுமாய் உலகியலாகவும் மெய்ஞானமாகவும் சமமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு உயிர் இன்னொரு இணை உயிரைத் தேடும், ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவை விழையும் தீராத பயணத்தையும் அந்தப் பயணத்துக்குக் குறைவில்லாத எரிபொருளாக இருக்க வேண்டிய காதலின், நேசத்தின் அவசியத்தையும் தான் ஜலாலுதீன் ரூமி போன்ற ஞானிகள் லவ், லவ், லவ் என்கின்றனர்.

நேசம் குறைவற்று நம்மில் பெருகும்போது நல்லதோ மோசமானதோ எந்தவொரு நிகழ்ச்சியும் நம்மை வருத்தாத அளவு ஏற்பு வந்துவிடும்; நிச்சயமின்மைகளின் சந்திப்பு முனையில் திடமாக நிற்கும் நம்பிக்கையும் கைகூடி விடும் என்பதுதான் இவர்கள் விடுக்கும் செய்தி.

நேசம், நேசம் என்று ஜலாலுதீன் ரூமி சொல்லும் இடத்தில் வெறுமை, வெறுமை என்றெழுதி நிரப்பிப் பார்த்தேன். வெறுமையைச் சந்திக்கத் தான் நேசம் நேசம் என்கிறாரா ரூமி? வெறுமையென்னும் பாழுங்கிணற்றில் தான் நேசம் என்னும் வண்ணப்பந்தை எறிந்து விளையாடச் சொல்கிறார் ரூமி. அவர் நேசம், நேசம் என்று சொல்லும் இடத்தில் வெறுமை, வெறுமை என்று சொல்லியிருந்தால் இத்தனை பிரபலமான கவிஞராக இன்றைய இணையத்திலும் படிக்கப்பட்டிருப்பாரா?

துறவியின் சுழல் நடனம் தொடர்கிறது. இலைகள் போல் ஒரு கையை பூமிக்குச் சிந்தி, இன்னொரு கையை வானத்துக்கு ஏந்தி, நடனத்தில் சுழலும் ஒரு சூபித் துறவி சுழன்று சுழன்று குவிய முயலும் காலிவட்டத்துக்குள் நேசம் தூசியாகக் கூடக் குந்தமுடியுமா? சேரமுடியுமா?

வெறுமையை, காலித்தன்மையை எதிர்கொள்ளுங்கள் என்று நேரடியாகப் பரிந்துரைக்க முடியாததாக இருக்கலாம். ரூமியிலிருந்து கபீர் வரை நேசம் நேசம் காதல் காதல் என்று வண்ணமடித்து, இனிப்பூட்டிப் வெறுமையைத் தான் பரிந்துரைக்கிறார்கள் போல.

கவிஞராக ஜலாலுதீன் ரூமியை விட, அவருக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பாரசீகத்தில் பிறந்த ஹபீஸ் சற்று மேம்பட்டவராக எனக்குத் தெரிகிறார். கவிஞரும் நண்பருமான வே. நி. சூர்யா அனுப்பி வைத்த மின்னூலை வாசிக்கத் தொடங்கிய போது ஏற்பட்ட முதல்கட்ட அபிப்ராயம் இது. வே. நி. சூர்யா பரிந்துரைக்கும் மொழிபெயர்க்கும் புத்தகங்கள் அவரைப் பற்றியும் கொஞ்சம் எனக்குச் சொல்கின்றன. அவர் எத்தைத் தின்று எந்தப் பித்தத்தைத் தணிக்க முயல்கிறார்? ஹபீஸின் கவிதைகளில் பூனை, நாய், மீன்கள் தென்படுவது அவரைக் கொஞ்சம் கவிஞனென்று என்னைச் சொல்ல வைக்கிறது.

                                     யார் எனது பூனைக்கு உணவிடுவார்?


நான் இந்த உலகைவிட்டுப் போனபின்னர்
என் பூனைக்கு உணவிட 
ஒருவர் எனக்கு வேண்டும். 
என் பூனை சாமானியமான பூனை அல்ல என்றாலும்.
அதற்கு மூன்று நகங்கள்.
தீ, காற்று
நீர்.

(ஹபீஸ்)     

தீ, காற்று, நீர் என மூன்று அம்சங்களை நகங்களாகக் கொண்ட அசாதாரணப் பூனை அது.

தீயும் காற்றும் நீரும் எரித்து அடித்து கரைத்துக் கடப்பது, வஸ்துக்களை அதன் இன்னொரு தன்மைக்குக் கடக்கச் செய்வது? பூனைக்கு ஏன் ஐந்து நகங்கள் இல்லை?

இன்மையில் இருப்பின் நடனத்தை மகிழ்ச்சியுடன் நிகழ்த்திக் கொண்டே இருப்பதுதான் இவர்களின் விழைவென்று தோன்றுகிறது. ஒரு கையை பூமிக்குச் சிந்தி, இன்னொரு கையை வானத்துக்கு ஏந்தி. எந்தக் காரணமும் இன்றி.



அத்துடன்
எந்தக் காரணமும் இல்லாமல்
ஓர் ஆயிரம் பறவைகள்
எனது தலையை ஒரு மாநாட்டு மேஜையாகத் தேர்ந்து
ஒயின் கோப்பைகளை கைமாற்றத் தொடங்கின
அத்துடன் தங்கள் வனப்பாடல் புத்தகங்களைச் சுழற்சிக்கு விட்டன. 

அத்துடன்
இருப்பின் அனைத்துக் காரணங்களுக்காகவும்
நித்தியத்திலிருந்து நித்தியத்துக்குச்
சிரிக்கவும் நேசிக்கவும்
தொடங்கினேன். 

(ஹபீஸ்)     

Comments