‘நீல குண்டு பல்பு’ கவிதையை நீங்கள் எழுதும் போது நானும் உடனிருந்தேன். அன்று காலை இருவரும்தான் அதைக் கண்டோம். எனக்கு அது நீலக்கடலின் கண்ணாக, பிக்காஸோவின் குவெர்னிக்காவில் வரும் நம்பிக்கை தரும் கண்ணின் மணியாக (கரு விழியை அவர் குண்டு பல்பாகதான் உருவகித்திருக்கிறார், அறிவியலின்/நவீனத்துவத்தின் மீதான நம்பிக்கையாக) தோன்றியது. நீங்கள் அந்த அருவச் சித்திரத்திலிருந்து முன்னகர்ந்து ஒரு முழு வாழ்க்கையைக் கண்டிருக்கிறீர்கள். அது உங்கள் கவிதைகளின் உச்சங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது. அக்கணத்தில் குண்டு பல்பின் காட்சியிலிருந்து எப்படி இரவில் விழித்திருந்து தாலாட்டும் அன்னையை சென்றடைந்தீர்கள்? நான் உருவத்திலிருந்து அருவத்திற்கு சென்றேன். நீங்கள் அருவத்திலிருந்து வாழ்க்கையின் ஒரு கணச் சித்திரத்திற்கு சென்று அங்கிருந்து வாழ்க்கை முழுவதையும் கண்டிருக்கிறீர்கள்? பெசண்ட் நகர் உடைந்த பாலம் கழிமுகப் பகுதியில் கடலுக்குள் செல்லாமல் கரையில் மிஞ்சும் கைவிடப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் நாம் அன்று கண்ட நீல குண்டு பல்பு. கடல் மணலில் பாதி புதைந்து முட்டை போல ஒளிர்ந்தபடி இருந்த படம் எனக்கு என்றைக்கும் மறக்க...