Skip to main content

உழைப்பாளர் சிலை மீது சலனத்தின் காகம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்





சென்னையின் பொது அடையாளங்களில் ஒன்று உழைப்பாளர் சிலை. அதை வடித்த சிற்பி, தமிழகத்தின் நவீன கலை முன்னோடிகளில் ஒருவரான ராய் சௌத்ரி. அந்தச் சிலையை எனக்குத் 'தெரியும்' என்று நினைத்திருந்ததால் அதன் மேல் எனக்கு கூடுதல் கவனம் இருந்ததில்லை. மனதின் மழுங்கலான  நினைவுகளில் ஒன்றாக அச்சிலை சில நாட்களுக்கு முன்பு வரை இருந்துவந்தது.

வளர்ந்தபிறகு உழைப்பு, உழைப்பு தொடர்பாக பொதுப்புத்தி வைத்திருக்கும் புனிதம், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற பதம் இன்று கொண்டிருக்கும் பொருள், அந்தப் பதத்தின் மீதான எரிச்சல், தொழில்மயமான உலகில் மனிதன், நவீன எந்திரத்தின் இன்னொரு உறுப்பாக சுருங்குதல் போன்றவற்றால் உழைப்பு என்ற விஷயத்தின் மீது மிகுந்த வெறுப்பே இன்னமும் எனக்கு இருக்கிறது. அந்த வெறுப்பு எனக்கு உழைப்பாளர் சிலை மீதான அலட்சியமாகவும் மாறியிருக்கலாம்.

நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் சி.மோகன் போன்றோர், ராய் சௌத்ரி பற்றி எழுதிய கட்டுரையில் உழைப்பாளர் சிலை பற்றியும் எழுதியிருந்தும் ஏனோ நான் உழைப்பாளர் சிலையை விலக்கியே வைத்திருந்தேன்.

சில மாதங்களுக்கு முன்பு, எனது புகைப்படக்கார நண்பர் கார்க்கி, உழைப்பாளர் சிலையை போட்டோ எடுக்கப் போவதாக கூறினார். நண்பர் என்ற உரிமையில் "புடுக்கு தெரியாமல் எடுங்க...கவனமா" என்று கூறினேன். அவர் சிரித்தபடி கிளம்பிப் போனார்.

சென்ற வாரம் புதன்கிழமை நான் பணியாற்றும் பத்திரிக்கையில் எனக்கு இரவு வேலை. காலை போய் அடுத்தநாள் காலை வரைக்கும் வேலை இருக்கும். இப்போதெல்லாம் வியாழக்கிழமை காலை 11,12 ஆகிவிடுகிறது. பைக்கில் வீடு திரும்பும் வழி பீச் ரோடு. சென்னை பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள சிக்னலில் நின்றேன். எதிர்த்தாற் போல உழைப்பாளர் சிலை. உடல் சோர்ந்திருக்க, மனம் ஒருவிதமான களைப்பு நிலையில் சிற்ப உடல்களின் மேல் குவிந்தது.

ஒரு கடினமான பாறையை நான்கு தொழிலாளர்கள் கழிகளால் உந்தித்தள்ளுகிறார்கள். வெவ்வேறு திசையில் உடலும் தலையும் திரும்பி நெம்புகிறார்கள். அந்தக் கழிகளின் உறுதியும் முறுக்கும் அந்த உடல்களிலும் இருக்கிறது.

ஒரு பார்வையில் அவர்கள் நெம்பும் களியும் அவர்களின் உடலும் வேறு வேறல்ல. ஒரு துளி சதை அந்த உடல்களில் உபரியாக இல்லை. அங்கே ஈடுபடுவதற்கும் ஈடுபாட்டுக்கு உள்ளாகும் வஸ்துவுக்கும் பேதம் இல்லை.

அவர்கள் ஒருவகையில் உழைப்பை பொருள் மதிப்பிலிருந்து  விடுவிப்பவர்கள். சென்னையில் வெட்டவெளியில் எல்லாருக்கும் பொதுவாக நிற்கும் சிற்பம் அன்று மதியம் தான் என் கண்ணுக்குத் திறந்தது. நானும் பாறையை நெம்பும் மனிதர்களும் ஒன்றாக உணர்ந்த கணம் அது.

அப்போது உழைப்பாளர் சிலையில் ஒரு காகம் ஒன்று வந்தமர்ந்தது. அந்த கருப்பு உலோக மனிதர்களுக்கு அருகில் சலனித்தபடி இருந்தது, என் மனதைப் போல. அடுத்து அது கடலை நோக்கிப் பறந்தது


Comments