அப்படியென்றால்
சந்தர்ப்பம் தான்
எனது
பூனையை உருவாக்குகிறது
என்கிறீர்கள்.
பூனையை
ரோமம்
மீசை
நகங்கள்
எலும்புகள்
கண்கள்
நாக்கு
கோடிக்கணக்கான அணுக்கள்
வால்
அதன் ரசகியம்
அதன் கம்பீரம்
உருவாக்கவில்லையா
ஒரு எலிக்கு
ஒரு நாய்க்கு
ஒரு எக்ஸ்ரே எந்திரத்துக்கு
அனுபவம் தருவது
வேறு என்று நீங்கள் சொல்வது
கவலையைத் தருகிறது.
பரிவு கொண்டது
நேசமானதெல்லாம்
கண்களை மூடிவிட்டால் போதும்
இல்லை எனும்போது
எனக்குத் தலைசுற்றத் தொடங்குகிறது.
அந்தப் பூனையை ஸ்பரிசித்தது
கனவுகள் கண்டது
தொலைந்து போனபோது அழுதது
அதன் கொட்டாவி வெளியிட்ட வீச்சம்
எல்லாம் எங்கே ஐயா நிகழ்ந்தது?
நான் தான் காதல் என்றும்
நான் தான் எனது பூனை என்றும்
சொல்லவருகிறீர்களா?
Comments