Skip to main content

தாமிரபரணி நால்வரின் இலக்கியச் சாதனை

ஷங்கர்ராமசுப்ரமணியன்
மறுகரை தெரியாமல், பிழைப்போமா என்று அறியாமல் கலைநம்பிக்கை என்னும் சமுத்திரத்தில் குதித்துப் பயணத்தைத் தொடங்கியவர்களின் கதை இது. தொலைந்துபோன ஒரு கலாசாரத்தின், ஒரு நிலவெளியின், ஒரு காலத்தின் - நினைவுகளைக் குறியீடுகளாக, மொழியாக, சித்திரங்களாக மாற்றியவர்கள் இவர்கள். பிறந்து, அதிகபட்சமாக முப்பது கிலோமீட்டர் சுற்றளவில் படித்து, எழுத்து, வாசிப்பு என்ற பொதுக்கனவில் சேர்ந்து, இளைஞர்களாக சந்தித்துப் பேசி பரஸ்பரம் ஈர்க்கப்பட்டவர்கள் இவர்கள். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என ஒரு மொழியில் சாதனையாளர்களாக இன்று திகழும் இந்த நால்வரின் வருகை, வேறு எந்த மொழியிலும் சாத்தியமாகாததுஅபூர்வத்தன்மைகொண்டதும்கூட.
தமிழ் மொழியைப் பொறுத்தவரை இலக்கியத்தைத் தங்கள் வாழ்வாதாரமாகத் தேர்ந்தெடுப்பவர்கள் இன்றைக்கும் குடும்பத்திலும் சமூகத்திலும் தனிமையையும் புறக்கணிப்பையும் எதிர்கொள்பவர்களே. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சூழ்நிலை இன்னும் கடுமையானது. புதுமைப்பித்தனின் வழி, தனி இருட்டுதான். இன்றுள்ள அளவுக்கு ஊடகங்களோ, பத்திரிகை, பதிப்பகப் பின்னணிகளோ, குறைந்தபட்ச கௌரவத்துக்கான வேலைவாய்ப்போ இல்லாத அக்காலகட்டத்தில், தமிழ் எழுத்தாளர்கள் தலைமறைவுப் போராளிகள் போலத்தான் செயல்பட்டிருக்கின்றனர். அவர்களின் உதிரம் குடித்துத்தான் தமிழ் நவீன எழுத்து இன்று இத்தனை பரிமாணங்களை எட்டியுள்ளது.
1960-களின் இறுதி. இந்திய சுதந்திரம் கொடுத்த கனவுகள் தொலைந்து புதிய பிராந்திய அரசியலும் அபிலாஷைகளும் அதைத் தொடர்ந்த ஏமாற்றங்களும் உக்கிரமாக இருந்த காலகட்டம். வேளாண்மை கைவிடப்பட்ட நிலையில், நவீன தொழில்களுக்கான புதிய சூழல்களும் உருவாகாமல் வாழ்வுக்காக இடம்பெயர்தலை முதல் தலைமுறையினர் தொடங்கிய காலகட்டத்துத் திருநெல்வேலியைச் சேர்ந்த நான்கு நண்பர்களின் வெற்றிக்கதை இது. வர்த்தகம், சினிமா, அரசியல், தொழில்முனைவு மாதிரியான சுயமுன்னேற்ற வெற்றிக்கதை அல்ல இது.

'தமிழின் மறுமலர்ச்சி' என்று சொல்லப்படும் காலகட்டத்தில் பதிப்பு, அறிவுச்சூழலின் மையமாக திருநெல்வேலி இருந்திருக்கிறது. தமிழ் நவீன இலக்கியத்தில் இன்னும் அணையாப் பெருஞ்சுடராகத் திகழும் புதுமைப்பித்தன் தொடங்கிவைத்த படைப்புமரபு இங்கே சத்துடன் தொடர்வதற்கான காரணம் என்ன?
சரித்திரத்தின் ஏதோவொரு கதியில் கயிற்றரவில் சிக்கிக்கொண்ட இந்த ஊரின் நிறைவேறுதலுக்கான விருப்பமும் கனவுமே தொடர்ந்து படைப்பாளிகளையும் படைப்புகளையும் தந்துகொண்டிருப்பதற்கான காரணமாக இருக்கலாம். வண்ணதாசன், விக்ரமாதித்யன், வண்ணநிலவன், கலாப்ரியா ஆகிய நான்கு பேரின் ஆரம்ப காலப் படைப்புகளை பூர்த்தியடையாத தாபத்தின், ஏக்கத்தின் வெளிப்பாடுகளாக ஒருவர் வாசிக்கலாம். மிக குறுகிய பரப்பளவிலேயே தோன்றி கடலில் சங்கமிக்கும், கோடையிலும் வற்றாது என்று கூறப்படும் தாமிரபரணிக்குதான் ஜீவநதி என்ற போதம் இருக்கக்கூடும்.
1962-ல் கவிதைகளும் கதைகளும் எழுதி இளம்வயதிலேயே கவனிக்கப் பெற்று ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் ஊக்கம் குறையாமல் தமிழ் சிறுகதை மரபுக்கு வளம் சேர்த்துவரும் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம்தான் நால்வரில் மூத்தவர். எழுத்து, வாசிப்பு சார்ந்த குடும்பப் பின்னணி கொண்டவரும் இவர் ஒருவர்தான். மார்க்சிய விமர்சகரும் 'தாமரை' இதழின் ஆசிரியராக இருந்தவருமான தி..சிவசிங்கரன் இவரது தந்தை. '21, சுடலைமாடன் தெரு' என்று இவர் வசித்த முகவரி, மூத்த எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன் தொடங்கி தோப்பில் முகமது மீரான், கழனியூரான்வரை முக்கியமானவர்கள் கூடும் இலக்கிய மையமாக இருந்த இடம் அது. 'தனுமை', 'நிலை', 'குளிப்பதற்கு முந்தைய ஆறு', 'சின்னு முதல் சின்னு வரை' போன்றவை தமிழ் வாசக நினைவில் மறையாத படைப்புகளாக இருப்பவை. இவர் தன் மொழிவழியாக வெளிப்படுத்திய சின்னச் சின்ன நுட்பங்கள், கவனிப்புகள், அழகுகள் வெகுஜன தமிழ் இதழியல் மொழி மீது வெகுவாகத் தாக்கம் செலுத்தியுள்ளன. நேசமும் குழைவும் அந்தரங்கமும் மிக்கவை இவரது கவிதைகள்.
 1970-க்குப் பிறகு எழுதத் தொடங்கி பாரதி நூற்றாண்டில் ஆகாசம் நீல நிறம் கவிதைத் தொகுப்பின் வழியாக தமிழ் புதுக்கவிதையில் தன் தடத்தைப் பதித்தவர் விக்கிரமாதித்யன். இயற்பெயர் நம்பிராஜன். யதார்த்த வாழ்வின் கோலங்களும் சைவப் புராணிகங்களும் சந்திக்கும் இடம் இவருடையது. முழுநேரக் கவியாக, சென்னைக்கும் ஊருக்கும் வீட்டிலும் வெளியிலுமாக இந்த வயதிலும் அலைந்து உழல்பவர். தன் புனைப்பெயரையே சிலுவையாகவும் முத்திரையாகவும் மாற்றிக்கொண்டவர். இவரது கவிதைகள் தமிழ் வாழ்வின் சாரத்தையும் சாரமற்றதையும் பிரதிபலிப்பவை. இவரது 'கவிதை ரசனை', தமிழ் புதுக்கவிதை வரலாற்றையும் உள்ளடக்க வகைமையையும் வளர்ச்சிகளையும் ஒரு இளம் வாசகரும் புரிந்துகொள்வதற்கான ஆத்மார்த்தமான ஆய்வு நூலாகத் திகழ்கிறது. அவரே சொல்வதுபோல சிறுவயதிலிருந்தே இருட்டும் சிறிது வெளிச்சமுமாக அடிப்படை வாழ்வாதாரத்துக்கே இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைதான் வாய்த்துள்ளது. வாழ்வில் தோற்று கவிதையை வெற்றியடையச் செய்தவர் இவர். பள்ளியில் இடையில் நிற்க நேர்ந்து கடைப்பையனாகப் பணியாற்றிய பழைய இரும்பு, காகிதங்கள் விற்பனைக் கடையில் கிடைத்த .பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாராயணன்’ கவிதைதான் இவரைத் தீண்டிய முதல் விஷம். தமிழ் மரபும் கண்ணதாசனும் திராவிட அரசியலின் சமத்காரமும் நவீனமும் இணைந்த வெளிப்பாடு இவர்.
 புதுமைப்பித்தனுக்கு அடுத்து பல்வேறு களங்களின் பின்னணியில் விதவிதமான உள்ளடக்கங்களுடன் லட்சணமான   சிறுகதைகளை இளம்வயதிலேயே சாதித்தவர் வண்ணநிலவன். இவர் எழுதிய 'எஸ்தர்', 'அயோத்தி', 'பாம்பும் பிடாரனும்' கதைகள் தமிழ் சிறுகதை வரலாற்றின் சாதனைகள் என விமர்சகர்களால் குறிப்பிடப்படுபவை. இவர் எழுதிய 'கடல்புரத்தில்', 'கம்பா நதி' நாவல்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை. இவரது இளம் வயது நாட்கள் வறுமையால் தின்னப்பட்டவை. இருப்பதற்கு ஒரு எளிய வீடுகூட இன்றி, நண்பர்களின் வீட்டிலேயே இருந்து, தனது எழுத்து - வாசிப்பு வேட்கையை அணையாமல் பாதுகாத்தவர். இவர் எழுதிய குளத்துப்புழை ஆறு’ கவிதை, தமிழின் 2000 ஆண்டு கவிதைப் பாரம்பரியத்தில் நினைவுகூரப்படும் சிறந்த கவிதையாக என்றும் திகழும். இல்லாமைக்கும் வறுமைக்கும் இடையே மூச்சுவிடும், மூச்சுமுட்டும் நேசத்தையும் நேசமின்மையையும் எழுதியவர் இவர். இயற்பெயர் உ.நா. ராமச்சந்திரன். எழுத்தாளர் வல்லிக்கண்ணனால் பெயர் மாற்றப்பட்டவர்.
 பாரதிக்குக் கண்ணம்மா. நகுலனுக்கு சுசிலா. இவர்களின் தொடர்ச்சியில் சசி என்ற பெயரை என்றும் நினைவிலிருந்து நீங்காத கவிதைநாயகியாக மாற்றியவர் கலாப்ரியா. இயற்பெயர் டி.கே.சோமசுந்தரம். அரசியலும் லட்சிய உத்வேகங்களும் கைவிட்ட ஒரு கோபக்கார இளைஞனின் வன்முறையும் ஏமாற்றமும் கொந்தளிக்கும் கவிதைகள் இவருடையவை. தன் விசாரங்களும் அடங்கிய த்வனியும் புதுக்கவிதைகளாக முனகி எழுதப்பட்ட காலகட்டத்தில், கோடைமழை தடதடக்கும் தகரக்கொட்டகைபோல உக்கிரமும் காமமும் நிறைந்த அன்றாட நிகழ்வுகள் இவரது உள்ளடக்கமாகி புதுக்கவிதையை மறுவரையறை செய்தன. இவரது சுயம்வரம் குறுங்காவியம் தமிழ் புதுக்கவிதை பெற்ற நிரந்தர ஆபரணங்களில் ஒன்று. சுயசரிதைபோல இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய 'நினைவின் தாழ்வாரங்கள்', தமிழ் வாழ்வை தமிழர்களின் அரசியலை நிர்ணயித்த சினிமாவின் நுண்வரலாற்றைச் சொல்லும் நூல். இன்றும் பழைய தமிழ்ப் படங்களின் போஸ்டர்களை வடிவமைத்த கலைஞர்களின் பெயரைக்கூட நினைவுகூரும் கலாப்ரியா, வெகுஜன கலாசார நுண்தகவலாளரும்கூட. தாமிரபரணி நால்வரில் கடைக்குட்டி இவர்தான்.
000

எப்போதும் சரித்திரம் எளிமையான தருணங்களின் மாலையாகவே கோக்கப்படுவதுபோல, திருநெல்வேலியின் ஒரு வெயில்நாளில்தான் தாமிரபரணி நால்வரில் மூவர், ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். அந்த நாள் 1970 மார்ச் 5.
தமிழ் நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை இந்த அறிமுகம் பல கொடைகளைப் பரஸ்பரம் பெற்றது. இந்த அறிமுகங்களின் இணைப்புப்பாலமாக இருந்தவர் விக்ரமாதித்யன். விக்ரமாதித்யனும் அவர் நண்பர் சுப்பு. அரங்கநாதனும் ஒரு காலையில் திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரத்துக்குச் சென்று வல்லிக்கண்ணனைப் பார்த்துள்ளனர். வல்லிக்கண்ணன், வந்தது வண்ணநிலவன் என்று நினைத்து, ராமச்சந்திரனா என்று கேட்டுள்ளார். இல்லை, நம்பிராஜன் என்று கூறி அறிமுகமானார் விக்ரமாதித்யன். 'தீபம்' இதழில் வெளியாகியிருந்த வண்ணதாசன் எழுதிய வேர்கள் கதையை வல்லிக்கண்ணனிடம் இருவரும் சிலாகிக்க, அவரது முகவரியுடன் பின்மதியம் திருநெல்வேலி டவுன் சுடலைமாடன் தெருவுக்குப் பயணம். விக்ரமாதித்யனுக்கு அன்று வண்ணதாசன் வீட்டில் சாப்பிட்ட மிக்சரும் காபியும்கூட ஞாபகத்திலுள்ளது. பேச்சு சுவாரசியத்தில் அன்று மாலையே பாளையங்கோட்டையில் இருந்த வண்ணநிலவனையும் பார்த்த நாள் அது.
அதற்குப் பின்னர் தாமிரபரணி ஆறு எத்தனையோ வெள்ளங்களையும் வறட்சிகளையும் சந்தித்துவிட்டது. இவர்கள் சந்தித்து ஐம்பது வருடங்களைக் கடக்கப்போகும் நிலையிலும் இந்த நால்வரும் சேர்ந்து ஒரு படம்கூட எடுத்துக் கொண்டதில்லை. பார்த்து அறிமுகமாகும் முன்பே செல்ஃபி படம் சாத்தியமாகும் இந்த அவசர யுகத்தில், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நால்வரும் சேர்ந்து படம் எடுத்துக்கொள்ளும் தருணம் முக்கியத்துவம் வாய்ந்தது.
 வண்ணதாசன், விக்ரமாதித்யன், கலாப்ரியா மூவரும் இரண்டு மணி நேரத்தில் பார்த்துவிடக்கூடிய தூரத்தில்தான் வசிக்கிறார்கள். வண்ணநிலவன் சென்னையில் இருக்கிறார். இந்தப் புகைப்படத் தருணத்துக்காக அவரைத் தொடர்புகொண்டபோது, அதுக்கென்னய்யா, ஒங்க இஷ்டம்போலச் செய்ங்க என்றார். விக்ரமாதித்யன் எப்போதும் வீட்டுக் கொடியிலிருந்து துண்டை எடுத்துப் போட்டு ஆற்றுக்குப் போவதுபோல வெளியே செல்லத் தயாராக இருப்பவர். வண்ணதாசனும் கலாப்ரியாவும் உடனடியாக ஒப்புக்கொண்டனர்.


குறுக்குத்துறை ஊற்று
அன்று காலை வெயிலேறும்போது, குறுக்குத்துறையில் தொடங்கியது பயணம். அப்பகுதியின் மருதமர நிழல்களையும் தண்டவாளச் சோகங்களையும் எழுதிய கலாப்ரியாவுடன் வண்ணதாசனுடன் நின்றுகொண்டு முருகன் கோயிலின் முன் சன்னதியில் காலபைரவருக்கு முதுகு காண்பித்து மெலிந்தோடும் தாமிரபரணியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சந்திப்பிள்ளையார் முக்கிலிருந்து கிளம்பி பேசிக் கொண்டிருந்துவிட்டு  அகாலத்தில் முருகன்குறிச்சி வீட்டுக்கு சைக்கிளில் திரும்பும் கதையை வண்ணநிலவன் சொன்னார்.
 குறுக்குத்துறை  மண்டபத்திலேறி அங்கிருந்து பார்க்க இயலக்கூடிய ரயில்பாலத்தைத் தாண்டினால் புதுமைப்பித்தன் பிறந்து வளர்ந்த பேராச்சியம்மன் கோவில் படித்துறை இருக்கிறது. புதுமைப்பித்தனின் சாமியாரும் சீடையும் கதையில் குளிப்பாட்டப்படும் பெண் குழந்தையைப் போல, நால்வரின் பாதங்களை நினைவுகளுடன் நனைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது தாமிரபரணி. அறுபது வயதுகளைக் கடந்த பின்னரும், குளிப்பதற்கு முன்பு ஆற்றைப் பார்க்கும் சிறுவர்களின் சிலிர்ப்பு அவர்களிடம் மிச்சமுள்ளது.
 குறுக்குத்துறைப் பாலத்திலிருந்து இறங்கி வட்டப்பாறையை நோக்கி நடந்தோம். சீக்கிரத்தில் சலிப்பை வெளிப்படுத்துபவராகவும் சுருங்கிக்கொள்பவராகவும் பொதுவாக அறியப்பட்ட வண்ணநிலவன், அன்று மற்ற நண்பர்களை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார். 'இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இந்தத் திட்டத்தைச் சொல்லியிருந்தால் தானும் தாடி வளர்த்திருப்பேன் என்றும் 'தாடி வைத்தால் என்னையும் 'மகாகலைஞன்' என்று சொல்லிடுவாங்க இல்லையா நம்பி?' என்று விக்ரமாதித்யனை வம்புக்கு இழுத்தார். வண்ணதாசன், வண்ணநிலவனைக் கிண்டலடித்தபடிவந்தார். ஊருக்குப் போவோம்யா. போட்டாவெல்லாம் போதும்யா...என்னத்துக்குய்யா இத்தனை போட்டோ...ஒரு போட்டோ போதாதா என்று எப்போது வண்ணநிலவன் சொல்லப் போகிறாரோ என்று அவர் மாதிரியே பேசிக் காண்பித்தார் வண்ணதாசன்.
குறுக்குத்துறை மண்டபத்தின் கூரைத் துளைகளிலிருந்து வரும் ஒளியை எப்படி புகைப்படத்தில் பயன்படுத்தலாம் என்பதை தேர்ந்த ஓவியராக புகைப்படக்காரரிடம் விளக்கினார் வண்ணதாசன். கலாப்ரியாவின் மனம் அனைத்து நுண்ணிய தகவல்களையும் ஓடிஓடிப் பொறுக்கிக்கொள்வது. தனது செல்போனை எங்களிடம் கொடுத்து சிறுவனைப் போல ஆங்காங்கே படம் எடுத்துப் பார்த்துக்கொண்டேயிருந்தார்.
 வட்டப்பாறையை மூழ்கடித்தபடி ஓடும் தாமிரபரணியைப் பற்றியும் இளம் வயது நாட்களின் அங்கமாக அந்த இடம் இருந்ததையும் அவர்கள் பேசிப்பேசி மாய்ந்தனர்.
**

நிறைக்கும் ஞாபகங்கள் 
குறுக்குத்துறையிலிருந்து வரும் வழியில் எல்லாரும் அமைதியாக இருந்தனர். ஏதாவது பேச்சைக் கிளப்பலாம் என்று நினைத்தோம். ஒரு கட்டத்தில் கலாப்ரியா சொன்னார். ஒவ்வொரு முக்கைக் கடக்கும்போதும் என்னென்னவோ ஞாபகம் வந்து நிறைச்சிடுது. என்ன பண்றது என்று பெருமூச்சுவிட்டார். வண்ணநிலவன் எழுதிய 'கம்பா நதி' காமாட்சி அம்மன் கோயிலின் வாசலில், காரை நிறுத்தி இறங்கினோம். கம்பாநேரிதான் கம்பா நதியாக மாறிவிட்டது. இது மறைந்துபோன நதி என்று நம்பப்படுகிறது. மறைந்த கம்பாநேரியின் அடையாளமாக காமாட்சி அம்மன் கோயிலின் மண்டபத்தின் நடுவே என்றும் வற்றாத சிறு நீராளி மண்டபம் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. கம்பா நதி வேறு எதுவும் அல்ல. மறைந்து போன ஒரு வாழ்வுதான் என்று ஏக்கத்துடன் சொல்கிறார் வண்ணநிலவன். ரெய்னீஸ் ஐயர் தெரு குறுநாவலில் வண்ணதாசனைக் கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார் வண்ணநிலவன். வண்ணநிலவனின் பாட்டியின் வீடு கம்பாநேரிக்கு அருகேதான் இருந்திருக்கிறது. பெருவாழ்வு வாழ்ந்து ஒரு காலகட்டத்தில் காணாமல் போன குடும்பங்களின் கதைதான் 'கம்பா நதி'. இன்று எல்லா ஊர்களுக்குமான பொதுக்கதைதான் இது.
 கிழக்கு ரதவீதியில் ஆனித் தேரோட்டத்துக்காக தேர்களின் மூடி அகற்றப்பட்டு, சிறிய மராமத்துப் பணிகளுக்காக பிரம்மாண்டம் காட்டி நின்றுகொண்டிருந்தன. தேரைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது வண்ணதாசனின் அலாதியான உயரம். அவரது நிலை கதையில், பக்கத்துத் தெருவில் இருந்தும் தேரோட்டத்தின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவே முடியாமல் சாயங்காலம் வந்து பார்க்கும்போது நிலைக்குத் தள்ளப்பட்டு, அமானுஷ்யத் தனிமையில் நிற்கும் தேரை தரிசிக்கும் அந்த வேலைக்காரச் சிறுமி ஞாபகத்துக்கு வந்தாள்.
 ரத்னா திரையரங்கைத் தாண்டி வாகனம் வந்துகொண்டிருந்தது. பொருட்காட்சி மைதானத்தைக் காண்பித்து கலாப்ரியா சொன்னார். 'கசடதபற' பத்திரிகையில் பிரசுரமான தன் கவிதைகளை, யோவ், உம்ம கவிதைகள் வந்துருக்குய்யா என்று வண்ணநிலவன் கொண்டுவந்து காண்பித்த இடம் பொருட்காட்சி மைதானம்தான். கலாப்ரியாவும் வண்ணதாசனும் படித்த சாப்டர் பள்ளி வந்தது. கேட்டைக் கடந்து கூடைப்பந்து மைதானத்துக்கு அவர்களது கால்கள் தன்னிச்சையாகச் சென்றன. 'மைதானத்திலிருந்து வகுப்பறைகளைப் பார்க்கும்போது எவ்வளவு விடுதலையாக இருக்கிறது' என்றார் வண்ணதாசன்.

திரை எச்சங்கள் 
மூடிக் கிடந்த சென்ட்ரல் திரையரங்கைப் பார்த்து இங்கே புகைப்படமெடுத்துக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதமாக இறங்கினார் கலாப்ரியா. திருநெல்வேலியில் கட்டப்பட்ட திரையரங்குளிலேயே அதிக ஆட்கள் கொள்ளளவு கொண்ட திரையரங்கு அதுதான். 'எவ்வளவு பெரிய படத்துக்கும் அரங்கம் நிறைவது அபூர்வம்' என்றார். 1960-களில் இந்த தியேட்டர் திறக்கப்பட்டபோது, குழந்தைகளைப் பாதுகாக்கும் தொட்டில் அறை ஒன்றை இந்த திரையரங்கில் பராமரித்துள்ளனர். குழந்தையுடன் வரும் தாய்மார்கள் உறங்கும் குழந்தைகளைத் தொட்டிலில் போட்டுவிட்டு நிம்மதியாகப் படம் பார்ப்பதற்கான ஏற்பாடாம். திரையரங்கு தொடங்கி இரண்டு ஆண்டுகளில் அந்த அமைப்பு தொடரவில்லை என்று குறிப்பிட்டார் கலாப்ரியா. சினிமா பாரடைசோ திரைப்படத்தில் வரும் நாயகனைப் போல சென்ட்ரல் திரையரங்கின் முன் நின்று அதனுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நினைவோட்டங்கள் நாம் மொழிபெயர்க்க முடியாதவை.
 வண்ணதாசனுக்கும், கலாப்ரியாவுக்கும், வண்ணநிலவனுக்கும் கனவுப்பெண்ணாக மலையாள நடிகை சாரதா இருந்திருக்கிறார். வண்ணநிலவன் தனது ரெய்னீஸ் ஐயர் தெரு கைப்பிரதி நோட்டின் அட்டையில் சாரதா படத்தை ஒட்டிவைத்து, என் ஸகி என்றே குறிப்பிட்டிருக்கிறார். வண்ணநிலவனின் கதைகளில் வரும் அக்காக்களின் சாயலில் சாரதா தென்படலாம்.

வண்ணத்துக்குள் ஒரு ஓவியர்
வண்ணதாசன் வாழ்ந்த வளவுக்கு பக்கத்திலிருந்து கலாப்ரியா, வண்ணதாசன் வரைந்த சித்திரங்களைப் பார்த்துத்தான் முதலில் கவரப்பட்டிருக்கிறார். வண்ணதாசனும் அவர் சகோதரர் கணபதி அண்ணனும் அவர்கள் வீட்டிலுள்ள தரை, ஊஞ்சல், சுவர்கள் எதையும் விடாமல் பத்திரிகைகளில் வரும் சித்திரங்களை அப்படியே  வரைந்துவிடுவார்கள். கரியும் சாக்பீஸும்தான். 'பாசமலர்' படத்தில் சிவாஜி துப்பாக்கியை வைத்துக் கண்ணீரைத் துடைக்கும் காட்சியை அச்சு அசலாக வரைந்திருப்பார் வண்ணதாசன். நான் அவரிடம் பார்த்துத்தான் சிவாஜி முகத்தை எளிதாக எப்படி வரையலாம் என்பதைக் கற்றுக்கொண்டேன். ஒரு முறை பாவமன்னிப்பு பேனரில் வரையப்பட்ட, முகத்தில் காயம் பட்ட சிவாஜி படத்தை, கட்டுப்போட்ட அவரது முகத்தில் உள்ள ஊக்கையும் பார்த்து அதிசயித்தபடி நின்றிருந்து கொண்டிருந்தேன். பின்னால் வந்த வண்ணதாசன், இந்த ஊக்கைப் பார்க்கும் கண்கள் உனக்கு வாய்த்ததே என்று என்னை அண்ணன் பாராட்டினார்” என்றார்.
 திண்டுக்கல் பூட்டை வரைந்து அதில் மூன்று ஆணிகளை புள்ளிகளாக வைத்து சற்று இழுத்தால், தாடை அமைப்பு அழகாக வந்துவிடும். அதன்மேல் பப் வைத்தால் அச்சு அசல் சிவாஜி ஆகிவிடுவார் என்று இவனிடம் சொன்னேன். விகடனில் வரும் கோபுலுவின் சித்திரங்கள் மீது அப்போது பெரிய ஈர்ப்பு இருந்தது. சேவற்கொடியோன், மணியனின் கதைகளுக்கு வரையும் சித்திரங்களை நான் அப்படியே வரைந்து பார்த்தேன். என்று பகிர்ந்துகொண்டார் வண்ணதாசன். வண்ணதாசன் வரைந்த சித்திரங்கள் கலாப்ரியா, பூமணி போன்றவர்களின் நூல்களுக்கு அட்டை ஓவியங்களாகவும் மாறியுள்ளன. காசியபனின் அசடு நாவலின் முதல் பதிப்புக்கு அட்டைப்படம் இவரே.

 படைப்பாளிப் பாலம்
இருபதுகளிலேயே சென்னைக்கும் வாசுதேவநல்லூருக்குமாக தன் அலைச்சலை விக்ரமாதித்யன் தொடங்கிவிட்டதால், மற்ற மூன்று பேரைவிட நேர்ச் சந்திப்பு அவருக்கு குறைவாகவே இருந்துள்ளது. கடிதங்கள்தான் அவர்களுக்கிடையில் அன்றாட உணவைப் போல இருந்துள்ளன. ஏழெட்டு கிலோமீட்டர் இடைவெளியில் வசித்தாலும் கல்யாணியின் தினசரிக் கடிதங்களுக்காக காத்துக் கிடப்பது வழக்கம் என்கிறார் வண்ணநிலவன். சில நேரம் காலைத் தபாலில் ஒரு கடிதமும் மாலைத் தபாலில் மற்றொரு கடிதமும் அவரிடமிருந்து வரும்போது, அத்தனை கஷ்டத்துக்கிடையிலும் கொண்டாட்டமாக இருக்கும் என்கிறார். ரசிகமணி, கி.ரா. ஆகியோர் தொடங்கிவைத்த கடித இலக்கிய மரபை, இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர் வண்ணதாசன் ஒருவரே. அவரது ஒட்டுமொத்த படைப்பு வாழ்க்கையின் திரட்சியான கோஷமாகவே எல்லாருக்கும் அன்புடன் திகழ்கிறது. ஒரே தெருவில் ஏழு இலக்கங்களுக்கு இடையில் வசிக்கும் கலாப்ரியாவுக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார் வண்ணதாசன். 
 மற்ற மூவரைவிட பின்னரே படைப்பாளியாக அறியப்பட்டாலும், தொடக்கத்திலேயே இலக்கிய செயல்வீரராக படைப்புகள், படைப்பாளிகளுக்கான பாலமாகவும் பாலத்தைக் கட்டும் வானரப்படையாகவும் விக்ரமாதித்யன் இருந்துள்ளார். இப்போதும் ஒரு மூலையில் ஒரு நல்ல கவிதையை ஒரு இளம்கவிஞன் எழுதிவிட்டால் போதும், அவனையும் அவனது கவிதையையும் தோள் மேல் போட்டுக்கொண்டு சுமந்து செல்பவராக இவர் இருக்கிறார். தனது திருநெல்வேலி நண்பர்களுக்கு மட்டுமின்றி இளைய படைப்பாளிகளுக்கு 'நீலகண்டப் பறவையைத் தேடி', 'ஆரோக்கிய நிகேதனம்', 'பாத்துமாவின் ஆடு' போன்ற சிறந்த இந்திய நாவல்களை அறிமுகம் செய்தவர் இவர். 'பாராட்டுவதாக இருந்தாலும் கண்டனமாக இருந்தாலும் உச்சஸ்தாதியில் செய்துவிடுவார் நம்பி' என்கிறார் வண்ணநிலவன்.
வாழ்வாதாரம் தேடி  திருநெல்வேலியிலிருந்து சென்னை வர வண்ணநிலவன் முடிவுசெய்தபோது, அதற்கு முன்பே நா. காமராசனின் சோதனை பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த விக்ரமாதித்யன்தான், கண்ணதாசன் பத்திரிகையில் வண்ணநிலவன் சேரவும் தங்குவதற்கான ஏற்பாட்டையும் செய்தவர். காலையில் குளித்து தும்பைப்பூபோல மலர்ச்சியுடன் வேலைவாய்ப்பு தேடி பிரமுகர்களிடம் அழைத்துச் செல்லும் இளம்வயது விக்ரமாதித்யன், வண்ணநிலவனின் எழுத்துகளில் சித்திரமாக வருகிறார். இரவு போதையில் லம்பியபடி ரிக்ஷாவில் நண்பருடன் இறங்கும் அன்றாடத்தை விக்ரமாதித்யன் அன்றே தேர்ந்தெடுத்துவிட்டதை அறியவும் முடிகிறது. இடையிடையில் பத்திரிகைகள் நின்றுபோய் விக்ரமாதித்யன் உணவு விடுதி பரிசாரகனாகவும் இருந்திருக்கிறார். எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் நண்பர்களைத் தேடி வந்துவிடுவார்; 'எப்போது பணம் இருந்தாலும் அதை உடனடியாக செலவழித்து விடுவார் நம்பி' என்கிறார் வண்ணநிலவன்.
வண்ணநிலவனின் பேச்சிலும், அவரது பின்னகர்ந்த கால நினைவோடைக் குறிப்புகளிலும் விக்ரமாதித்யனின் பேச்சிலும் உணவும் தங்குமிடமும் முதன்மை இடத்தைப் பெறுகின்றன. வண்ணநிலவனின் நினைவோடையில் ரவை உப்புமாவுக்குப் பெரிய இடம் இருக்கிறது. ராஜவல்லிபுரம் வல்லிக்கண்ணன் வீடு, இடைச்செவல் கி.ரா.வின் இல்லம், பாண்டிச்சேரி பிரபஞ்சன் வீடுவரை அவசரமாக வரும் விருந்தினர்களின் பசியை ஆற்றுவதற்கான அமுதாக உப்புமா இருந்துள்ளது. இப்போது உப்புமா அந்த அந்தஸ்தை இழந்திருப்பதாகத் தோன்றுகிறது. செல்போன் வந்தது காரணமாக இருக்கலாம். எதிர்பாராமை என்ற அம்சம் முற்றிலுமாகவே நம் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொண்டிருப்பதற்கான அடையாளம் இது.

புத்தகம் போடும் மனம்
வண்ணநிலவனின் முதல் சிறுகதைத் தொகுப்பான எஸ்தர் வெளியான விதமே அபூர்வமானதுதான். பதிப்புச்சூழலும், சொந்தமாகப் பதிப்பிக்க முடியாத பொருளாதார நிலையும், விற்பனை சாத்தியமின்மையும் இருந்த காலகட்டத்தில் வண்ணநிலவனின் கதைகளை மட்டுமே படித்திருந்த வாசக நண்பர்கள் பணம்போட்டு விக்ரமாதித்யனை ஒருங்கிணைப்பாளராகக்கொண்டு வெளியிடப்பட்ட புத்தகம் அது. 
 எஸ்தர் தொகுப்பு நண்பர்களின் கூட்டுமுயற்சிதான். தா. மணி, லயனல், சுப்பு. அரங்கநாதன் எல்லாரும் சேர்ந்து நிகழ்த்திய அப்படியான ஒரு முயற்சி மிகவும் அற்புதமான விஷயம். நம்பிராஜன்தான் அதை முன்னெடுத்தார்உமா பிரெஸ்ஸில் அச்சு வேலைகள் நடந்தன. அச்சுக்கோப்பு, பக்கம் கட்டுதல் தொடங்கி புரூப்வரை எல்லா வேலைகளையும் கோபால்தான் (கலாப்ரியா) செய்தான்.  அட்டைப்படத்துக்காக 'சோவியத் லிட்டரேச்சர்' புக்கிலிருந்து ஒரு படத்தை எடுத்து, அதை நானே லேஅவுட் செய்தேன். அதன் முன்னுரையையே ஐந்து நண்பர்களின் கலந்துரையாடலாக விக்ரமாதித்யன் அழகாக மாற்றியிருப்பார்.  ஒரு கலைஞனை முதலில் அடையாளம் கண்டு, அவரது தொகுப்பைப் போடவேண்டும் என்று திட்டமிடுவது எல்லாம் அருமையான விஷயம். 'எஸ்தர்' என்கிற விஷயமே அற்புதம்தான். வண்ணநிலவனுக்கு எல்லாமே இயல்பாகத்தான் நடந்தது. அடுத்தவர் எழுத்தைப் புத்தகமாகப் போடவேண்டுமென்று சக கலைஞனே திட்டமிடும் மனம் அப்போது இருந்ததுஎன்கிறார் வண்ணதாசன் நெகிழ்வுடன். நண்பர்கள் மூவருமே கலாப்ரியாவை கோபால் என்றே கூப்பிடுகின்றனர்.
 முகிழ்ந்த தருணங்கள்
'சங்கரிமணாளன்' என்கிற புனைப்பெயரில்தான் விக்ரமாதித்யன் முதலில் எழுதியிருக்கிறார். 'சங்கரி என்பவர் இவரது காதலி' என்று சொல்லி விக்ரமாதித்யனை வண்ணநிலவன் வெட்கப்பட வைத்தார். சென்னையில் விக்ரமாதித்யனிடம் நேசத்துடன் பழகிய ஒரு பெண்ணைப் பற்றியும் வண்ணநிலவன் சொல்ல, விக்ரமாதித்யன் குனிந்து கூச்சப்பட்டார். இப்போ சொல்லலைன்னாஎப்பச் சொல்றதுவேஅந்தப் பொண்ணு லட்சணமா இருப்பா... அவங்க வீடுகூட…” என்று அனைத்து விவரங்களையும் வண்ணநிலவன் சொல்லிப்போனார். அப்போது குறுக்கிட்ட வண்ணதாசன், நம்பியை விட ராமச்சந்திரனுக்குத்தான் அவரது காதலிகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது...என்று கிண்டலடித்தார்.
 சுப்பு. அரங்கநாதனும் நம்பிராஜனும்தான் வீடு தேடிச் சந்திக்க வந்த முதல் வாசகர்கள். 'தீப'த்தில் வெளியான 'வேர்கள்' கதையைப் படித்துவிட்டு வல்லிக்கண்ணனைப் பார்த்த பிறகு என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் மூலம்தான் ராமச்சந்திரன் எனக்கு அறிமுகமானார். எங்கள் நட்பு ஆரம்பித்தபோது வேலை இல்லாதவனாக இருந்தேன். எனக்கும் கோபாலுக்கும் (கலாப்ரியாவுக்கும்), ராமச்சந்திரனுக்கும் இடையிலான உலகம் ரொம்பவும் அருமையானது. மூன்று பேருமே அப்போது எழுதிக்கொண்டிருந்தோம்.
கலாப்ரியாவின் சிறந்த கவிதைகள் வெளிவரத் தொடங்கியருந்தன. கலாப்ரியாவை அன்றைய நட்சத்திர எழுத்தாளர்களான நா.பா., தி.ஜா., கி.ரா., பாலகுமாரன் என எல்லோரும் பாராட்டினார்கள். கடிதங்கள் வந்துபோய்க் கொண்டிருந்தன. வண்ணநிலவன் 'கடல்புரத்தில்' எழுதிவிட்டார். பிறகு கலாப்ரியாவின் முதல் கவிதைத் தொகுதியான வெள்ளத்தைக் கொண்டுவந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. உள்ளங்கை அளவுதான் புத்தகம். 'கசடதபற' கொண்டு வந்த 'புள்ளி' தொகுதியைப் பார்த்து, அந்த வடிவத்தை முடிவு செய்தோம். விநாயகா பிரஸ்ஸில்தான் வேலை நடந்தது. நான் அட்டைப்படம் வரைந்தேன்.
தினசரி காலையில் முருகன்குறிச்சியில் குளித்த பிறகு கோபாலைப் பார்த்துவிட்டு என்னைப் பார்க்க ராமச்சந்திரன் வருவார். அவர் குமாஸ்தாவாக வேலை பார்த்த சீனிவாசகம் வக்கீல் வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். அவர்கள் அவரை குடும்பத்தில் ஒருவராகவே வைத்திருந்தார்கள். அவரது சொக்கலிங்க சுவாமி கோயில் தெரு வீட்டுக்குப் போவேன். எனக்கு வேலை கிடைத்த தகவல் வந்தவுடன், வக்கீல் வீட்டுக்குப் போனேன். வண்ணநிலவனின் நண்பர் செல்வகுமார், சுகுணா ஆகியோருக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த நாளை மறக்கவே முடியாது. வேலை கிடைத்த பிறகு வங்கியில் கேஷியராக நோட்டுகளை எண்ணிக்கொண்டே நிமிர்ந்து பார்க்கும்போது ராமச்சந்தின் நின்றுகொண்டிருப்பார் என்று ஆத்மார்த்தமாகச் சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார் வண்ணதாசன்.
1980-களில் பாரதி நூற்றாண்டையொட்டி அன்னம் வெளியிட்ட புலரி கவிதைத் தொகுதி வாயிலாகவே கவனம் பெற்றாலும் கல்யாண்ஜியின் (வண்ணதாசன்) கவிதைகளில் உள்ள  த்வனியையும் திருநெல்வேலித் தன்மையையும்தான் கலாப்ரியா, வண்ணநிலவன், விக்ரமாதித்யன் எல்லாருமே தொடக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
விமர்சனத் த்வனி 
தாமிரபரணி நால்வரில் மூத்தவராகவும் மற்ற அனைவருடனும் மரியாதையான விலகலைப் பராமரிப்பவராகவும் வண்ணதாசன் இருக்கிறார். நேராகப் பார்க்கும்போது கூர்மையான விமர்சனத் த்வனியையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தும் ஆளுமையாகத்தான் வண்ணதாசன் இருக்கிறார். பெரிய வீட்டுப் பையனின் அமர்த்தல் அவரிடம் உள்ளது. 
 திருநெல்வேலி எழுத்தாளர்களாக இந்த நான்கு பேரும் சேர்ந்து அறியப்பட்டாலும் பரஸ்பரம் மதிப்பும் அதேநேரத்தில் விமர்சனங்களை தனிப்பட்ட வகையிலும் எழுத்திலும் செய்தே வந்திருக்கிறார்கள். வண்ணநிலவன் திரும்ப உற்சாகமாக எழுத வேண்டுமென்பதை வண்ணதாசன் திரும்பத் திரும்பச் அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். விக்ரமாதித்யனின் கவிதைகள் மற்றும் அவர் தேர்ந்து கொண்ட வாழ்வு சார்ந்து வண்ணநிலவன் தன் விமர்சனத்தை நேரடியாகவே வைகிறார். விக்ரமாதித்யனின் கவிதைகளில் முதலில் இருந்த 'லிரிக்கல் தன்மை' பின்னர் இல்லை என்று குறைபடுகிறார். அவருடைய உரைநடையைச் சிலாகித்து, தொடர்ந்து சிறுகதைகள் எழுதியிருக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.
 ஒரு திருமண வீட்டில் நான்கு சகோதரிகள் சேரும்போது  அவர்களிடையே வெளிப்படும் வாஞ்சையை இந்த நால்வரின் சந்திப்பிலும் பார்க்க முடிந்தது. காலையில் விடுதியறைக்குச் சற்றுத் தாமதமாக வந்த விக்ரமாதித்யன், வண்ணதாசனின் காலைத் தொட்டுக் கும்பிட்டுத்தான் அமர்ந்தார். சற்று நிம்மதியின்மை மற்றும் அமைதியுடன் உட்கார்ந்திருந்த வண்ணநிலவன், விக்ரமாதித்யன் வந்தபிறகுதான், நம்பி வந்த பிறகுதான் கலகலப்பே வருது என்றார். கொஞ்சம் தயக்கத்துடன் கலாப்ரியா, 'வாங்க நம்பி' என்று எழுந்து நிற்கிறார்.
அதேவேளையில் அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள், முரண்பாடுகள், கோபதாபங்கள், புகார்கள் அனைத்தும் மோதும் உறவாகவே அது இருக்கிறது. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல்கூட இருந்த சூழ்நிலைகள் உண்டு என்பதை கலாப்ரியா பகிர்ந்துகொள்கிறார். 
அன்று இரவு விடுதியில் அத்தனையும் கலந்த  மதுவைத்தான் விக்ரமாதித்யன் பருகினார். அன்றைக்கு அவர் தோளில் ஏறியது  புதுமைப்பித்தன். 'புதுமைப்பித்தனை மிஞ்சிய மாஸ்டர் இல்லை' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான்கு சகோதரிகளும் பிரியும் வேளை வந்தது. வண்ணநிலவன் எழுதிய 'குளத்துப்புழை ஆறை' இந்த நான்கு சகோதரிகள் உருவாக்கிய கனவு நதியென்றும் வாசிக்க முடியும். அங்கு பிடிக்கப்படாமல் இருக்கும் மீன்களும் மீன்கள் சாப்பிடும் பொரியும் பொரி விற்கும் சிறுவர்களும் இவர்கள்தான்.  அந்த குளத்துப்புழை ஆறு இவர்களின் படைப்பிலும் நம் கனவிலும் இப்போதும் ஜீவித்துக்கொண்டு இருக்கிறது.Comments

eniasang said…
அதிசய நான்கு மூலவர்கள். ரசனையான பதிவு.