ஈரானைச் சேர்ந்த தத்துவ ஆசிரியர் ராமின் ஜகன்பெக்லூவுடன்
அசீஸ் நந்தி நடத்திய உரையாடல் நூலான Talking India-வின் சுருக்கமாக
இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அசீஸ் நந்தி 1937 இல்
பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராகப் பயிற்சிபெற்றவர். அரசியல்
உளவியலாளர் என்று தன்னைப் பற்றி அவர் கூறுகிறார். மனித இயல்பிலும், பொதுவாழ்க்கை
தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பை அரசியல் உளவியலாளர் என்ற பெயரே
நியாயம் செய்வதாக கருதுகிறார்.நவீனத்துவத்துக்குப் பின்பான காலகட்டத்தில் காந்தியை மறுநிர்மாணம்
செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி.
வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாச்சாரத் தரப்புகள்
வெறுப்போ, விலக்கமோ இல்லாமல் உரையாடுவதை தொடர்ந்து வலியுறுத்துகிறார்
அசீஸ் நந்தி. இன்று வெவ்வேறு அடையாளத் தரப்புகளும், அதன் அரசியல் தர்க்கங்களும் பரஸ்பரம்
மூர்க்கமாக மறுப்பதும், விலக்குவதாகவும், வெறுப்பதாகவும் மாறியுள்ள தமிழ் சூழலில் அசீஸ் நந்தியின்
உரையாடல் தன்மையை நாம் பரிசீலிப்பது அவசியமானது. வெகுமக்களின் வாழ்க்கைமுறை, விழுமியங்கள்
மற்றும் நம்பிக்கைகள் மேல் கொண்டுள்ள 'உண்மையான' விருப்பை அசீஸ் நந்தி வெளிப்படுத்துகிறார்.
கல்வித்துறை ஆய்வாளர்களின் தொனியை விடுத்து, படைப்பூக்கமும், உள்ளோட்டமும்
கொண்ட உரையாடல் இவருடையது. தன்னை தொழிற்தன்மை விடுத்த அறிவுஜீவி என்று
அறிவிக்கிறார்.
ராமின் ஜகன்பெக்லூ
உங்கள் பெற்றோர்கள்
பற்றி? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? உங்களது கலாசாரப் பின்னணி என்னவாக இருந்தது?
அசீஸ் நந்தி
கல்கத்தாவில் தலைமுறைகளாக வாழ்ந்துவந்த வங்காள பாபுக்கள்
நாங்கள். கிறிஸ்தவர்களாக மாறிய மூன்றாம் தலைமுறை எங்களுடையது. எனது பெற்றோர்கள்
தீவிர இறைப்பற்று மிக்கவர்கள். இங்கே வாழ்ந்த மற்ற மக்களைப் போலவே அவர்களது
வாழ்க்கை முறையில் பல்வேறு நம்பிக்கைகளின் தாக்கங்கள் இருந்தது. உதாரணத்திற்கு
இந்து அம்சங்களும் மெலிதான இஸ்லாமிய நடைமுறைகளும் எனது குடும்பத்தில்
பிரதிபலித்தன. விரதம் மற்றும் பிற சடங்குகளை நாங்கள் பின்பற்றினோம். இந்து மற்றும்
முஸ்லிம் மதத்தவர் கடைபிடிக்கு சில விலக்குகளும் கடைபிடிக்கப்பட்டன. எங்கள்
குடும்பத்தில் யாரும் மாட்டு இறைச்சியோ, பன்றி இறைச்சியோ சாப்பிடாததற்கு இது காரணமாக
இருந்திருக்கக்கூடும். ஒரு வங்காளக் கிறிஸ்தவக் குடும்பம், இவை
இரண்டையும் சாப்பிட முடியாததற்கு காரணம் எதுவும் இல்லை. ஆனால் அதுதான் நடைமுறையில்
இருந்தது. அவர்களது ஆட்சேபத்துக்குக்
காரணம் என்னவென்று நான் கேட்டபோது," குறிப்பாக
ஒன்றும் இல்லை, எங்களுக்குப் பிடிக்காது. அவை பெரிய மிருகங்கள்" என்று
என்னிடம் கூறப்பட்டது. அதில் கொஞ்சம் உண்மையும் உண்டு. ஏனெனில் எனது அப்பாவுக்கு
பெரிய துண்டுகளாக இறைச்சி பரிமாறப்படும் போதெல்லாம் அவர் ஏதாவது காரணத்தைக் கூறி
அதை சாப்பிட மறுத்துவிடுவார். இந்தியாவின் தேசிய உணவுப்பொருளாக தற்போது மாறிவிட்ட
தந்தூரி சிக்கனை அவர் சாப்பிடுவார் என்று என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
உயிருடன் இருக்கும் விலங்கை ஞாபகப்படுத்தும் உணவை அவர் சாப்பிட விரும்பாதவராக
இருந்தார். ஒருமுறை எனது அப்பா டெல்லிக்கு ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காகப்
போயிருந்தார். அங்கே அவரது அலுவலக சகாக்கள் ஆட்டுக்கறி என்று சொல்லி பன்றிக்கறி
சாப்பிட வைத்துவிட்டிருக்கின்றனர். விஷயம் தெரிந்து வீடு திரும்பிய போது அவர்
அவ்வளவு பரிதாபமான மனிதராக இருந்தார்.
எளிமை மற்றும் நன்னடத்தை தொடர்பாக எனது குடும்பத்தினர்
வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்ததும் எனக்கு தெளிவாக ஞாபகத்தில் உள்ளது. பொருட்களை
மறுஉபயோகம் செய்வது பற்றியும், அவற்றை வீணாக்காமல் இருப்பது குறித்தும் அவர்கள் வாழ்க்கை
முறைக்குள்ளேயே ஒரு அம்சம் தகவமைக்கப்பட்டிருந்தது. நமது புத்தகங்கள் அல்லது
உடைகள் முழுமையாக நம்முடையது என்று நினைப்பதே தவறாக எங்கள் குடும்பத்தில்
கருதப்பட்டது. உதாரணத்திற்கு எங்கள் புத்தகங்களுக்கு வீட்டிலேயே அட்டைப்போட்டு
விடுவோம். ஒரு ஆண்டு உபயோகத்துக்குப் பிறகு அவை வசதியில்லாத உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்
கொடுத்துவிட வேண்டும். அவர்களின் குழந்தைகள் அந்தப் புத்தகங்களைப்
பயன்படுத்துவார்கள். இல்லையெனில் அந்தப் புத்தகங்களை வேறு பள்ளிகளுக்குக்
கொடுத்துவிடுவோம். பிறந்தநாள் பரிசுகளாக கிடைக்கும் நாவல்கள் மற்றும்
கதைப்புத்தகங்களையும் நாங்கள் சரியாகப் பாதுகாக்க வேண்டும். அவற்றின் மீது எங்கள்
சுவாரசியம் குறைந்து போனபின் அவை மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவை.
ராமின் ஜகன்பெக்லூ
மதம் மற்றும் அதன் ஒழுக்கவியல் பின்புலத்தில் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள், இல்லையா?
அசீஸ் நந்தி
ஆமாம். மிக, மிக ஒழுக்கமான பின்னணியில் வளர்ந்தேன்.
அத்துடன் அந்த ஒழுங்குமுறை, எனது இளவயதில் மிகுந்த சுமையாகவும் இருந்தது. நான்
சீக்கிரமே எனது மதநம்பிக்கையை இழந்ததற்கும் ஒருவேளை அதுவே காரணமாக
இருந்திருக்கலாம். பிரம்மசமாஜம், ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் காந்தியிடமிருந்து, தூய்மைவாதத்தின்
சாயல் கொண்ட மிகையான அளவு ஒழுக்கவியலை வங்காள கிறிஸ்தவம் பிரதானமாக உள்வாங்கியது.
எனது பெற்றோர்கள் காந்தியின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். சுதந்திரப் போராட்டத்தை
அவர் வழிநடத்தும் பாணியால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தனர். எங்களுக்கு அது ஒருவகை
பழமைவாதமாகவும், பாரம்பரிய ஒழுக்கவாதமாகவும் பட்டது. ஒழுக்கப்பண்பு அல்ல அது, ஒழுக்கவாதம்.
நாங்கள் அதை தொடர்ந்து கேலி செய்தோம். பல ஆண்டுகள் காந்தியைப் புறக்கணிக்கும்
மனநிலை கொண்டவனாகவும் மதச்சாயல் கொண்ட அறம் எல்லாவற்றையும் நிராகரிப்பவனாகவுமே
இருந்தேன். எனது வாழ்வில் மிகவும் பிற்பகுதியில் தான், நான்
காந்தியை மறுகண்டிபிடிப்பு செய்தேன். வெகுஜனங்களின் அன்றாட வாழ்வின் அறவியல்
குறித்தும் நான் தீவிர கவனம் கொள்ளத்
தொடங்கினேன். ஜனநாயக அரசியலின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இதைப்
புரிந்துகொள்வது அவசியம் என்று உணர்ந்தேன். இப்பொழுது எனக்கு அது தடையாகப்
படவில்லை. மாறாக தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வரும் சமூக, கலாச்சார
பாதுகாப்பு அம்சமாகப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்னைகள், அமைதி
இயக்கம், உலகளாவிய, பிராந்திய வன்முறைகளின் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின்
பின்னணியில் தான் எளிமையான அன்றாட வாழ்வின் அறவியல் வலிமையை உணர்ந்தேன்.
அதுவும் எனது குடும்பத்தினர் என்மீது தாக்கம் செலுத்தியதன்
நீட்சியாகவே இருந்தது. ஏனெனில் அவர்களது அறப்பண்பு, கருணையால் உருவானது. எனது அப்பா எதையாவது
வாங்குவதற்காக வெளியே போய்விட்டு, மீண்டும் பணம் எடுப்பதற்கு வீட்டுக்கு வருவதை நான் அடிக்கடி
பார்த்திருக்கிறேன். தெருவில் யாராவது ஒரு ஏழையைப் பார்த்தால் பணத்தைக்
கொடுத்துவிட்டு வந்துவிடுவார். நாங்கள் அதிகம் வசதியாக இல்லாத காலத்திலும் அவர்
இப்படியே செய்தார். மிச்சமின்றி கொடு என்பது தான் அவருக்குப் பிடித்த பைபிள்
வாசகம்.
ராமின் ஜகன்பெக்லூ
நீங்கள் உங்களை மதநம்பிக்கையற்றவராக அறிவித்துக் கொண்டவர்
என்ற நிலையிலும் உங்களது அறம், நம்பிக்கை சார்ந்திருக்கவில்லை என்னும்போது, உங்களது
அறப்பண்பு எதில் வேர்கொண்டுள்ளது?
அசீஸ் நந்தி
எனது அறம் மதநம்பிக்கையின் அடிப்படையற்றதாக இருக்கலாம்.
ஆனால் அதற்கு வேறு சிலநம்பிக்கைத் தளங்கள் உண்டு. அனைத்து மனிதர்களும் தெளிவான
அறத்தத்துவம் பொதிந்த வாழ்வையே வாழ்கின்றனர். தங்கள் அறவியலைத் தத்துவார்த்த
அடிப்படைகளில் விளக்க இயலாத நிலையிலும் நீதியுணர்வின் வட்டச்சுற்றுக்குள் வாழும்
மனிதர்களிடம் உறவை அவர்கள் விழைகிறார்கள். அவர்களில், மதத்தை
சடங்கார்த்த நிகழ்வுகளாகவோ அல்லது தெய்வத்துடனான பேரமாகவோ பார்ப்பவர்களுடனும் இந்த
விழைவு உண்டு . எனது அறவியல் என்பதின் ஒருபகுதி எனது கலாசார, சமூக
மற்றும் மதப்பின்னணியிலிருந்து வந்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன். அத்துடன் அன்றாட
வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண மனிதர்கள் மீது எனக்கு வளர்ந்து கொண்டிருக்கும்
மரியாதையும் எனது அறவியலை வடிவமைத்திருக்கிறது. இப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு
வாழ்க்கையும், அர்த்தப்பூர்வமாக இருக்கும்பட்சத்தில், இயல்கடந்த
இருப்பின் மாயத்தொடுகையை கட்டாயம்
வைத்திருக்கத்தான் செய்யும். அந்த இயல் கடக்கும் நிலை நேரடியாக
ஆன்மீகத்திலிருந்து வரலாம். அல்லது அறத்தூண்டல் சார்ந்த சில சமூக நடவடிக்கை
வடிவங்கள் வழியாக ஒருவருக்கு மறைமுகமாக ஏற்படலாம்.
ராமின் ஜகன்பெக்லூ
உங்களது உலகநோக்கு கருத்தியல் சாராத அறிவார்த்தமாக உள்ளது.
அத்துடன் தேவையற்ற அரசியல் கோஷங்களாகவும் இல்லை... ஆக்கப்பூர்வமான விளைவை
உருவாக்க சுயத்துக்குள்ளேயே போராடும் எதிர்ப்புச் செயல்பாட்டை உருவாக்க முயல்கிறீர்களா?
அசீஸ் நந்தி
அப்படியான முறையில் நான் யோசிக்கவில்லை. ஆனால்
காலங்களினூடாக கருத்தியல்கள் தொடர்பாக எனக்கு பலத்த சந்தேகம் உருவானது உண்மை.
என்னுடைய உளவியலாளர் அவதாரத்தில்
கருத்தியலாளர்கள் எல்லாரும் தங்கள் கருத்தியலுக்குப் ஆதாரமான பொருட்கள்
மீது ஆழ்ந்த வெறுப்பை வைத்துள்ளதைப் பார்க்கிறேன். அவர்களது கருத்தியல் யாரை
முன்வைத்துச் செயல்படுகிறதோ, அவர்களுக்கு எதிராகவும், யாருக்குப் பயன்படுமோ அவர்கள் மீது
அவநம்பிக்கை கொண்டதாகவும் இருக்கிறது. உதாரணத்திற்கு எனது அனுபவத்தில் பல
மார்க்சிஸ்டுகள், பாட்டாளிகளை வெறுப்பவர்கள். அவர்களுக்கு அது தெரியாது.
அவர்களுக்கு ஒரு பாட்டாளி, போதுமான அளவு புரட்சிகரமானவனாக, அறிவுவலு
கொண்டவனாக அல்லது பிரக்ஞை உள்ளவனாகத் தெரியமாட்டான். அவர்கள் போதிய அளவு
செயல்தன்மை அற்றவர்களாக, கருத்தியல் உத்வேகம் அற்றவர்களாக, ஒழுங்கில்லாதவர்களாக, தங்களது
வரலாற்றுப் பாத்திரத்தையோ, வகுப்பு நலன்களையோ உணராதவர்களாகத் தெரிவார்கள்.
பெண்ணியவாதிகளுக்கு, பெண்கள் மீது கடுமையான வெறுப்பின் ரேகைகள் படிந்திருப்பதைப்
பார்த்திருக்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு பெரும்பாலான பெண்கள் போதுமான அளவு
பெண்ணிய உணர்வு கொண்டவர்களாகவோ அல்லது பெண்ணியக் கருத்தியலால் முழுமையாக
உந்தப்படாதவர்களாகவோ தெரிகின்றனர். சமூகத்தில் அவர்கள் தங்களுக்கான இடத்தை
கோரிப்பெறுவதற்கு போதுமான போராட்டக்குணம் இல்லாமல் இருப்பதாக பெண்ணியவாதிகள்
கருதுகின்றனர். பெரும்பாலான பெண்ணியவாதிகள், குடும்பப்பெண்களை ஏளனம் செய்பவர்கள்.
மதரீதியானதும், இனரீதியானதுமான வன்முறையை ஆய்வுசெய்யும் போது, இந்து
தேசியவாதிகளால் எழுதப்பட்ட பெரும்தொகுதி நூல்களை நான் படித்திருக்கிறேன். இவர்கள்
பேரினவாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் அவர்களின் சிறந்த வசைகள்
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதானதல்ல. அவர்கள் முஸ்லிம்களையும்
கிறிஸ்துவர்களையும் திட்டுகிறார்கள் தான்.
ஆனால் அவர்களது கொடூரமான தாக்குதல்கள் இந்துக்கள் மீதானதாகவே இருக்கின்றன.
இந்துக்கள் ஒருங்கிணைப்பில்லாதவர்களாக, கையாலாகாதவர்களாக, எரிச்சலூட்டக்கூடியவர்களாக, தங்களுக்குள்ளேயே
சண்டைகள் போடுபவர்களாக, தங்கள் நலன்களுக்காக போராடுவதற்குத் திரளாதவர்களாகவே
அவர்கள் எண்ணுகின்றனர். அவர்களது எழுத்துகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்
மீது மறைமுக ஆராதனை இருக்கிறது. நவீன தேசிய அரசைக் கையாளவும், நவீன
தேசியத்தை உருவாக்கவும் போதிய திறனையும் தகவமைப்பையும் அவர்களது மதங்கள்
வழங்கியிருப்பதென்ற மரியாதை அது. இந்தப் பின்னணியில் இந்துக்கள், குறிப்பாக
ஊறுபடும் நிலையில் இருப்பதாக இந்துப் பேரினவாதிகள் கருதுகின்றனர். வி.டி.
சாவர்க்காரின் இந்துத்வா தொடங்கி நாதுராம் கோட்சேயின் கடைசி வாக்குமூலம் வரை
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போல இந்துக்கள் இல்லையே என்று கிட்டத்தட்ட
வாய்விட்டுப் புலம்புகின்றனர்.
தங்கள் கருத்தியல்களின் பயனாளிகள் மீது ஆழமான இரட்டை நிலையை பராமரிப்பதை ஒரு விதியாகவே கருத்தியல்வாதிகள் வைத்திருப்பதால் நான்
அவர்களை சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு உளவியல் கட்டமைப்பாகவே, கருத்தியலைச்
சந்தேகப்படுவதை படிப்படியாக உருவாக்கிக் கொண்டேன். ஒரு உளவியல் கட்டமைப்பாக
எந்தவிதமான கருத்தியலும், மனித ஆளுமையிடம் குறிப்பட்ட ஒன்றைக் கேட்டு நிற்கிறது.
இந்தக் கோரிக்கைகள் எப்போதும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஒருவரின் ஏற்கப்படமுடியாத உணர்வுநிலைகளான
சுதந்திரமான கோபம், அதிருப்தி உணர்வுகள், காரணமற்ற அவநம்பிக்கை, கற்பனைகள்
ஆகியவற்றுக்கான கேடயமாகவே கருத்தியல்கள் இருக்கமுடியும் என்பதற்கு அனுபவப்பூர்வமான
சான்றுகள் உள்ளன. நான் கருத்தியல்களிலிருந்து விலக நேர்ந்ததற்கு அதுவே காரணமாக
இருந்திருக்கக் கூடும். சமீப ஆண்டுகளில் அவை குறித்து கூடுதலான சந்தேகங்கள் எனக்கு
எழுந்துள்ளன.
ஆரம்ப காலங்களில் எனக்கு இந்தளவு நிச்சயம் இல்லை. 20 ஆண்டுகளாக
எனது மாணவப்பருவத்திலிருந்து விமர்சனவாதக் கோட்பாட்டின் பொது முறைமைகளுக்குள்
ஆய்வு செய்துவருகிறேன். சமூக மற்றும் அரசியல் நுண்ணுணர்வு கொண்ட உளநோய் தீர்
உளவியல் எழுத்துமுறையாக அது இருப்பதால் என்னை ஈர்த்திருக்கலாம். தியோடர் அடோர்னோ, ஹெர்பர்ட்
மார்க்யூஸ், மேக்ஸ் ஹோர்கிமர், ஹன்னா ஆரண்ட் மற்றும் எரிக் ப்ராம் போன்ற
ஆய்வாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. நான் முதலில் சொன்ன இரண்டு
பேரின் தாக்கம் என்னிடம் வெளிப்படையாகவே 15 முதல் 20 ஆண்டுகள் நீடித்தது. அதைப் பெரும்பாலான பேர்
கண்டுணரவேயில்லை. நான் என்னை ஒரு இடதுசாரியாகவோ, தீவிர நிலைப்பாடு உள்ளவனாகவோ எப்போதும்
சொல்லியதில்லை. ஒரு பிராமணியக் கலாச்சாரத்தில் நீங்கள் உங்களை அப்படி
அடையாளப்படுத்தாத வரை நீங்கள் அந்த அடையாளத்தைப் பெற இயலாது. எப்படி இருப்பினும்
பிராங்க்பர்ட் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் மார்க்சியர்களாக
கருதப்படுவதில்லை. ஏனெனில் இந்தியாவில் லெனினிஸ்டுகளே அதிகம். ட்ராட்ஸ்கிக்கு
ஆங்காங்கே சில ஆதரவாளர்களும் இங்கு உண்டு. அவர்கள் ஸ்டாலினை உதறியவர்களே தவிர
லெனினை அல்ல. அவர்கள் தங்கள் பற்றுதலை பல்வேறு சாயல்கள் கொண்ட உறுதிப்பாட்டுவாத அல்லது தீவிர உறுதிப்பாட்டுவாத மார்க்சியத்துடன்
கொண்டிருப்பவர்கள். சுவாரசியத்துக்குரிய வகையில் அப்படியான மார்க்சிய வடிவம்
இப்போது பலவீனப்பட்டு விட்டது. உலகின் இப்பகுதியில் உள்ள விமர்சனவாதக்
கோட்பாட்டைப் பயன்படுத்தும் இளைஞர்களில் ஒருவர் கூட எனது முறை
விமர்னவாதக்கோட்பாட்டை ஒட்டியது என்று அறிந்துகொண்டதேயில்லை. இங்குள்ள அறிவார்த்த
கலாசாரம் என்பது எப்படியென்று தெரிந்துகொள்ள இதுவொன்றே போதுமானது. உங்கள்
கருத்தியல் அடையாளத்தை மற்றவர்கள் ஏற்பதற்கு அதை நீங்கள் சொந்தம்கொண்டாடி, வெட்டவெளிச்சமாக்க
வேண்டும். ஏனெனில் கருத்தியல் என்பது நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினருக்கு
மதநம்பிக்கைக்கான பதிலியாக இருப்பது காரணமாக இருக்கலாம். மதநம்பிக்கைகளின்
அதிகாரப்பூர்வ வடிவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அது இயங்குகிறது.
காலப்போக்கில் நான் புதிய புரிதலை வந்தடைந்தேன்.
தெற்காசியாவில் கருத்தியல் என்பது மேலோட்டமானதே. ஒருவரது உள்ளார்ந்த வன்முறையைத் தேர்ந்தெடுத்த இலக்குகளை நோக்கிச் செலுத்துவதற்காகவே இந்த கருத்தியல் பிரதான தேவையாக
உள்ளது. தெற்காசியர்கள் மிகவும் ஆக்ரோஷம் கொண்ட கருத்தியலாளர்கள். ஏனெனில் அவர்கள்
தங்கள் கருத்தியல் பிணைப்பு மீது தொடர்ந்த சந்தேகம் கொண்டவர்களாக உள்ளனர். அதனால்
தான் கார்ல் மார்க்சின் ஒரு வார்த்தையைக் கூட வாசிக்காத நிறைய மார்க்சியர்களை
நீங்கள் இங்கே பார்க்கமுடிகிறது. அவரைப் படிப்பது விஷயமே அல்ல. ஆனால் 'நான்
மார்க்சிஸ்ட்' என்று கோரிக்கொள்ளுதல் மிக முக்கியமானது.
ராமின் ஜகன்பெக்லூ
இந்தியா காந்தியை மறந்துவிட்டதா அல்லது காந்தியின் செய்தி
இந்தியர்களுக்கு இன்னும் உயிர்ப்புடன் உள்ளதா?
அசீஸ் நந்தி
இந்தியா காந்தியை மறக்கவில்லை. ஆனால் நமது அரசியல்
தலைவர்களும் அறிவுத்தளத்தில் ஒரு பிரிவினரும் அவரை மறக்க விரும்புகின்றனர்.
அவர்கள் அவரை மறப்பதற்கு மிகவும் கடுமையாக முயற்சிக்கின்றனர். ஏனெனில் காந்தியின்
பல அம்சங்கள் நவீன, தேசிய அரசின் தேவைகளுக்கு பொருந்துபவை அல்ல. நமது
அணுசக்திக் கொள்கை, ராணுவமயமாக்கம், தனிநாடு கேட்பவர்களை நாம் நடத்தும் முறை, வளர்ச்சி
மற்றும் உயர்தொழில்நுட்பங்கள் தொடர்பான சம்பிரதாய, மையநீரோட்ட கருத்தியல்களை நாம் தழுவிக்கொண்ட
முறை ஆகியவை அந்த ஒவ்வாமையை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகின்றன. காந்தி குறித்த
பொது நினைவுகள், இந்திய மேல்தட்டினரை ஸ்தம்பிக்கச் செய்பவையாக உள்ளன.
காந்தியின் மரபு அவர்களது கைகளைக் கட்டியுள்ளதாக உணர்கின்றனர். அதனால் உலகளாவிய
அரசியல் விளையாட்டில் தாங்கள் ஈடுபடமுடியாமல் இருப்பதாகவும் நினைக்கின்றனர். ஆனால்
மிச்சமுள்ள இந்தியாவில் அப்படியில்லை. குறிப்பாக நகர்ப்புற, மத்தியதர
வர்க்க, வெகுஜன ஊடகங்களின் தாக்கத்துக்கு உள்ளான வாழ்வுக்கு வெளியே, காந்தியின்
கீர்த்தி குறையவும் இல்லை. அவரது நினைவு அழியவும் இல்லை. அங்குள்ளவர்கள் அவரது
நம்பிக்கைகளும், கருத்துகளும் அர்த்தமுள்ளவை என்று இன்றும் கருதுகின்றனர்.
இருப்பினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தற்போது வாழும் காந்தியர்களாக
இருக்கும் நெல்சன் மண்டேலாவும் ஆங் சன் சு கியும் இந்தியர் அல்லாதவர் என்பதில்
எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. இன்னுமொரு இடத்தில் நான் கூறியிருப்பது போல, காந்தியை
விட காந்தியம் மகத்தானது. நீங்கள் காந்தியை மறந்தால், அவர்
வலியுறுத்திய கருத்துகள் உலகின் வேறு பாகங்களில் வேறு வடிவங்களில் எழவே செய்யும்.
அவை ஒருபோதும் நம்மை காந்தியை மறக்கவிடாது. ஏனெனில் காந்தி மனித விழிப்புணர்வு
மற்றும் ஆழ்மனவிருப்பின் நீளும் சரடுகளை காந்தி பிரதிநிதித்துவம் செய்பவர். அவரது
போதாமைகள், தவறுகளை கூறி அவரை நாம் கீழிறக்கி விட முடியாது. மனித
குலத்தின் அடிப்படையான அகத்தேவைகள் சிலவற்றோடு பிணைக்கப்பட்ட மதிப்பீடுகளால்
உருவானவை அவரது எண்ணங்கள். இந்த விழுமியங்களை அவர் போற்றுவதால் நமக்குப்
பிடிக்காமல் போனால், அதனால் அவரை மறந்தால் அந்த எண்ணங்களும் மதிப்பீடுகளும்
பொதுவெளிக்குள் வேறு வழிகளில் வேறு நபர்கள் வழியாக நுழையவே செய்யும்.
ராமின் ஜகன்பெக்லூ
உங்களது சிந்தனைகளில் காந்தியின் ஆழ்ந்த தாக்கம் எப்படி
ஏற்பட்டது? வரலாற்றையும் கலாசாரத்தையும் நவீனத்துவப் பார்வையை விடுத்து வாசிக்கும் உங்கள் வழிமுறையை காந்தியின் பார்வை வழியாகத்தான் அடைந்தீர்களா?
அசீஸ் நந்தி
அது அச்சு அசலான காந்திய வழிமுறை அல்ல. ஆனால் என் பார்வை
அதிகமும் காந்தியிடமிருந்து பெற்றது. காந்தியல்லாத வழியில் காந்தியைப்
பயன்படுத்தும் என் முறைப்பாடு அது. அதுதான் 1970களிலிருந்து
எனது அறிவார்த்த வாழ்க்கையை வடிவமைத்தது. காந்தியைப் பற்றிச் சொல்லும்போது கோபிநாத்
கவிராஜ் மற்றும் சினுவா ஆச்சிபியிலருந்து யு.ஆர்.அனந்தமூர்த்தியையும், கஸ்தவா
எஸ்தவா போன்ற கலாசார பிரக்ஞையின் குறிப்பிட்ட சரடைப் பிரதிபலித்த ஆளுமைகளையும்
சேர்த்துதான் அர்த்தப்படுத்துகிறேன். பிற பலரையும் போலவே, நெருக்கடி
நிலைக் காலகட்டத்தில் தான் நான் காந்தி நோக்கித் திரும்பினேன். ஏனெனில் ஜனநாயகத்தை
ரத்துசெய்வதென்பது இந்தியாவில் சாத்தியம் என்பதை என்னைப் போன்றவர்கள்
எண்ணிப்பார்த்ததேயில்லை. பொதுவான தாராளவாத, சோசலிச கருத்தியலில் எந்தப் பதில்களும்
எங்களுக்குக் கிடைக்கவில்லை. இந்திய தேசிய காங்கிரசால் இந்த ஜனநாயக ரத்து என்பது
அங்கீகரிக்கப்படும் என்றோ, அக்கட்சி படிபடியாக இந்திராகாந்தியின் ஆதரவாளர்களின் மடமாக
சுருங்கும் என்று நாங்கள் கருதவில்லை. நேரு கொண்டிருந்த உலகியல்பார்வையின் சில
அம்சங்கள் மீது எங்களுக்கு சில சந்தேகங்கள் இருப்பினும் அவரது
உலகநோக்கிற்குள்ளிருந்து அரசியல் சுதந்திரம் மற்றும் குடிமை உரிமைகள் மீது
இப்படியான தாக்குதல் வருமென்று நாங்கள் நம்பியதில்லை.. அந்த தருணத்தில் தான் வேறு
பலரையும் போலவே நான் காந்தியை நோக்கி நகர்ந்தேன்.
இருப்பினும் காந்தியை நோக்கிய இயக்கம் ஏற்கனவே
தொடங்கியிருந்தது. இந்திய அறிவுஜீவி வட்டங்களில்- குறைந்தபட்சம் சில
வட்டங்களிலாவது- இந்தியாவில் வசிக்கும் மக்களில் நான்கில் மூன்று பகுதியினர்
கிராமத்தினர் என்பதை அங்கீகரிக்கத் தொடங்கியிருந்தனர். அந்த மக்களுக்கு
வாக்குரிமையும், சொந்தமான கருத்துகளும், தேர்வுகளும், விருப்பங்களும், உலகப்பார்வைகளும்
பொதுச் சொல்லாடலில் பிரதிபலிக்கப்படவேயில்லை என்பதும் உணரப்பட்டது. இந்த
விலக்கப்பட்ட குடிமக்கள் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தில் அங்கீகாரத்தை
அனுபவித்ததேயில்லை.
பிரதிநிதித்துவப்படுத்தப்படாத இந்த மாய மக்கள்திரளின் பெயரைச் சொல்லி நீங்கள் எதையும் செய்துவிட்டது தப்பிவிட முடியும். இந்தியாவின் பிரதமர் பொறுப்பை காமராஜ் நாடார் உதறியது விபத்து அல்ல. ஏனெனில் அவருக்கு இந்தியோ, ஆங்கிலமோ தெரியாது. இந்த விலக்கப்பட்ட குடிமக்களின் பிரதிநிதிகள் பொதுவாழ்வில் நுழைந்தனர் என்றாலும் அடையாளச் சிதைவின் வழியாகவே அவர்களின் நுழைவு இருந்தது. அரசியலில் நுழைந்த இந்த புதியவர்கள் தங்களது மூடநம்பிக்கைகள், விருப்பு வெறுப்புகள் மற்றும் தங்களின் பழைய கருத்துகளைக் கொண்டுவருகின்றனர் என்ற புகார்களை நாம் அனைவரும் கேட்டோம்.
பிரதிநிதித்துவப்படுத்தப்படாத இந்த மாய மக்கள்திரளின் பெயரைச் சொல்லி நீங்கள் எதையும் செய்துவிட்டது தப்பிவிட முடியும். இந்தியாவின் பிரதமர் பொறுப்பை காமராஜ் நாடார் உதறியது விபத்து அல்ல. ஏனெனில் அவருக்கு இந்தியோ, ஆங்கிலமோ தெரியாது. இந்த விலக்கப்பட்ட குடிமக்களின் பிரதிநிதிகள் பொதுவாழ்வில் நுழைந்தனர் என்றாலும் அடையாளச் சிதைவின் வழியாகவே அவர்களின் நுழைவு இருந்தது. அரசியலில் நுழைந்த இந்த புதியவர்கள் தங்களது மூடநம்பிக்கைகள், விருப்பு வெறுப்புகள் மற்றும் தங்களின் பழைய கருத்துகளைக் கொண்டுவருகின்றனர் என்ற புகார்களை நாம் அனைவரும் கேட்டோம்.
இதனால்தான் இந்தியாவில் உள்ள அரசியல் கலாச்சாரம், ஒருபோதும்
தனது உலகத்தில் இருக்கும் சாதாரண மக்களின் விருப்புவெறுப்புகள், முன்தீர்மானங்கள், நம்பிக்கைகள், உணர்வுகளுடன் உரையாடக்கூட ஒருவரை
அனுமதிக்கவில்லை. இதனால் இந்த உணர்வுகளைப் பெரும்பாலானவர்கள் மறைக்கவும், பொதுவான
தாராளவாதக் கருத்துகளையும் முன்பு மோஸ்தராக இருந்த ஜனநாயக சோசலிச சுலோகங்களையும்
இந்திய அரசியல் பற்றிப் பேசும்போது சொல்லத்தொடங்கினார்கள். இதற்கு நேர்மாறாக
அவர்கள் மற்றொரு சுயத்தை உள்ளே போஷித்துக் கொண்டிருந்தனர். அந்த சுயத்தை
ரகசியமாகவோ, மறைத்தோ பொதுவாழ்வில் கொண்டுவந்தனர். இது பெரிய அளவில்
நடந்துவந்த நிலையில், சில இந்திய அறிவுஜீவிகளுக்கு, இப்பிரச்னையை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்
என்ற விழிப்புணர்வு படிப்படியாக தொடங்கியது. பெருந்திரள், மக்கள், ஒடுக்குமுறை, வன்முறை
என்று பேசுகையில் மக்கள்திரளுடன் தொடர்ந்த பரிச்சயம் இருக்க வேண்டும். அவர்கள்
இந்த உலகைப் பார்க்கும் விதம், அது தொடர்பாக அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கருத்து, அவர்கள்
அரசியலைப்பற்றி நினைக்கும் வழிமுறை, பொதுவாழ்விலிருந்து அவர்களது
எதிர்பார்ப்புகள் இவை குறித்தெல்லாம் அறிவுஜீவிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
நெருக்கடி நிலைதான், பொதுவான, பழகிய கோஷங்கள் வேலை செய்யாது என்பதை இங்கே எல்லாருக்கும்
பாடம் புகட்டியது. கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளின் உள்ளார்ந்த வலிமைகள் மற்றும்
வளங்களைப் பரிசீலித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் ஒரு
நோக்கத்துக்காக மக்களைத் திரட்டும் நம்பிக்கையையாவது ஒருவர் வைக்கமுடியும்.
சுதந்திரத்தின் மீது விடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்த்து அவர்களுடன் இணைந்து வேலை
செய்யமுடியும்.
ராமின் ஜகன்பெக்லூ
மரபு என்னும் கருத்து குறித்து உங்களிடம் நான்
பேசவிரும்புகிறேன். அது மிகவும் முக்கியமானது. இன்றைய மரபை எப்படி
வரையறுப்பீர்கள். அதை எப்படி விவரிப்பீர்கள்? நவீனம் என்ற கருத்தியலுக்கு உங்கள் வரையில்
அது எப்படி எதிராகத் திகழ்கிறது?
அசீஸ் நந்தி
நான் எப்போதும் வரையறைகளைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.
ஆனால் உங்களுக்காக அதை முயற்சிக்கிறேன். காலத்தின்மீது கூட்டு வாழ்வாகவும், தனிப்பட்ட
வகையிலுமான இருத்தலுணர்வின் தொடர்ச்சியை உத்தரவாதம் செய்யும் கலாசாரத்தின்
ஒருபகுதிதான் மரபு என்று நினைக்கிறேன். அதனால்தான் மரபுகளைப் பற்றி பேசும்போது, பகுத்துணரும்
தர்க்க அறிவையும் தாண்டிய ஒரு அமைப்பாக நமது மனதில் இருக்கிறது. சுயத்தைப் பற்றிய
கருத்தொன்றும் நம்மிடையே உள்ளது. அது
தொடர்ந்து வரும் ஒன்று எனவும் -அது இறந்தகாலத்தோடு தொடர்ச்சியை வைத்திருப்பது
போலவே எதிர்காலத்தோடும் தொடர்ந்து பராமரிக்கும் என்பதே. அதே தொடர்ச்சியைத்தான்
நாம் பேசிய கூட்டுநினைவு பகிர்கிறது. இந்த ரீதியில்தான் நான் மரபுகளைப் பற்றிப்
பேசுகிறேன். பொதுவான, ஒத்த பண்புகளுடைய, நினைவு கொள்ளப்படும் நம்பிக்கைகள், விழுமியங்கள், பண்புக்கூறுகள்
என எல்லாவற்றையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். இதற்கெல்லாம் மேலாக முரண்களைக்
களையும் புராணிகங்கள் வழியாக அவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம்.
காலம்காலமாக கலாசாரரீதியாக உருவான அறிவு அமைப்பின்
தொகுதியாக மரபை பார்ப்பதன் மூலம் என்னுடைய ஆய்வில் அதற்கு இரண்டாவது அர்த்தம்
ஒன்று இருக்கிறது. பகுத்துணரும் தர்க்க அறிவைத் தாண்டிய அமைப்பாக மரபு உள்ளது என்ற
உண்மையை நான் அங்கீகரித்தாலும் நான் மேற்சொன்னதன் அடிப்படையில் மரபு என்ற
கருத்துக்கு தெளிவான அடிப்படை இருக்கிறது. இந்த அர்த்தம் நவீனத்துவர்களிடம்
சிந்தனைகளைத் தூண்டக்கூடியது. அறிவொளிக்காலப் பார்வையும், மதச்சார்பற்ற
கருத்தியல்களும் ஆன்மீகம் மற்றும் மதத்தின் வடிவக்கூறுகளை பன்மைப்படுத்த
அனுமதிப்பவை. ஏனெனில் இந்த வடிவக்கூறுகள் முக்கியத்துவம் அற்றதாகவோ, குறைந்த
முக்கியத்துவம் கொண்டவையாகவோ, தனிமனித தேவை கருதியதாகவோ பார்க்கப்பட்டன. குறிப்பாக
அறிவியலைப் பொருத்தவரை, அறிவின் பன்மைத்துவம் அபாயமாகவும், கவிழ்க்கும்
தன்மையுடயதாகவும் நம்முடைய காலத்தில் ஆழமாக வேரோடிப் போயிருக்கும் படித்த
மேட்டுக்குடி மக்களின் அறிவார்த்த, தார்மீக அந்தஸ்துக்கு சவாலாகவும்
பார்க்கப்படுகிறது.
நான் உரிமைகொள்ள ஆசைப்படும் மூன்றாவது அர்த்தமும் உண்டு.
மரபு குறித்த இந்த அர்த்தம் சில சமயங்களில் கலாசாரத்தின் அர்த்தத்துடன்
குவிந்துவிடக்கூடியது. அந்த அர்த்தப்படி நவீனத்துவத்தை மறுப்பதாக மரபு
இருக்கிறது..நவீனத்துவத்துக்கு எதிர்சொல்லாக மரபை மறுகண்டுபிடிப்பு செய்யவும், ஒரு
விரும்பத்தக்க சமூகத்துக்கான மாற்று நோக்கங்களுக்காகவும், எதிர்ப்புக்கான
மூலவளமாகவும் மரபைப் பயன்படுத்த விரும்பினேன்.
ராமின் ஜகன்பெக்லூ
ஒருவிதத்தில் நவீன பகுத்தறிவின் சடங்குகள், மரபை
அழித்துவிட்டன. இருப்பினும் மரபு, நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களிலும்
அறிவுஜீவிகளின் சொல்லாடல்களிலும் நுண்மையாக மறுவருகை புரிவதைப் பார்க்கிறோம்.
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?
அசீஸ் நந்தி
நானும் அப்படியே நினைக்கிறேன். ஆனால் கிராமங்களில்
அல்ல. மதச்சார்பின்மை, நகரங்களில்
தான் அதிகம் புலப்படுகிறது. இதை இரண்டு அல்லது மூன்று மட்டங்களில் பரிசீலிக்கலாம்.
பகுத்தறிவு, மனித வாழ்வு முழுமையையும் பகுத்தறிவு, பொறுப்பில்
எடுக்கமுடியாது என்பதால் மரபு மீண்டும் மேலெழுகிறது. பகுத்தறிவு மீண்டும், மீண்டும்
முயற்சி செய்து தோற்கிறது. காரண,காரிய அறிவால் மட்டும் வாழ நினைக்கும் குறிக்கோள் என்பது
போலியானது. 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவால் ஊக்குவிக்கப்பட்ட நோய்க்கூறு
என்று அதை வகைப்படுத்தலாம். மக்கள் தங்கள் உணர்வுகள், ஆசாபாசங்கள்
மற்றும் உள்ளுணர்வுகளால் வாழ்கிறார்கள். பகுத்தறிவுரீதியாக கிறிஸ்துமஸ் ஒரு
பண்டிகை மட்டுமே என்றும் அதற்கு மதரீதியான முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும்
அவர்கள் உணரலாம். ஆனாலும் அவர்களது மனதின் ஒரு மூலையில், கிறிஸ்துமஸ்
குறித்த பழைய ஞாபகங்கள் உறுதியாக இருக்கும். இதனாலேயே, மதப்பிடிப்பு
இல்லாத கிறிஸ்தவர்கள் கூட தற்போது அந்தப் பண்டிகை, வெறுமனே நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு
பகுதியாக மாறிவிட்டதற்கு வருத்தப்படுகின்றனர். அந்தப் பண்டிகை வெறுமனே சந்தை
நிகழ்வாகப் போய்விடக்கூடாது என்று கருதுகின்றனர். முழுமனதோடு இல்லாவிடினும்
அவர்கள் கிறிஸ்துமசின் ஆதி உத்வேகத்துக்கு புத்துயிர் கொடுக்க முயற்சிக்கின்றனர்.
அப்படியான முறையில் மரபு மீண்டும் வருகிறது.
இரண்டாவது வகையில் பார்க்கப்போனால் மரபுகள், இளங்கலை
மாணவர்களுக்கான எளிய பாடப்புத்தகங்கள் போல வாழ்க்கைக்கான குறுக்கு வழிகாட்டியாக
உள்ளன. அத்துடன் எல்லாரும் வாழ்க்கையின் அனைத்து தளங்களையும் கற்றறிந்து, முழுமையான
தர்க்க அறிவுடன், பகுத்தறிவுரீதியாக இருத்தல் சாத்தியம் அல்ல. அவர்கள் சில
பிராந்தியங்களில் வேரோடிய எதிர்வினைகளுக்கும், உள்ளுணர்வுகளுக்கும், உடனடித்
தீர்மானங்களுக்கும் அவர்கள் ஆட்பட வேண்டும். மரபு, வார்படக்கருத்துருவங்கள்(ஸ்டீரியோடைப்ஸ்)
வழியாகவே நுழையும். உதாரணத்திற்கு நமக்குத் தெரியவே தெரியாத சமூகக்குழுவிலிருந்து
வரும் அந்நியரைச் சந்திக்கும் போது வார்ப்படக் கருத்துருவங்கள் கொண்டே சந்திப்பதை
உதாரணமாகச் சொல்லலாம்.
வார்படக் கருத்துருவங்கள், சில சமயங்களில் கையடக்கமான நாட்டார்
சமூகவியலாகவோ, தொழில்ரீதியான தன்மையை துறந்த கலாசார மானுடவியலாகவோ
பயன்படலாம். அதுபோலவே மரபுகள் அன்றாட வாழ்வில் எளிமையான குடியானவனின் வாழ்க்கைத்
தத்துவமாக நுழைகிறது. நீங்கள் அறிவுப்பூர்வமாக எங்கே முழுமையாக
ஒருங்கிணைக்கப்படவில்லையோ அங்கே அது எட்டிப்பார்க்கிறது. நீங்கள் இயற்பியல்
வல்லுனராக இருந்தால் நீங்கள் இயற்பியல் மரபுகளின் படி நடப்பீர்கள். வாழ்க்கையின்
பிற பகுதிகளில் சமூக மரபுகளுக்குக் கட்டுப்படுவீர்கள். அது முரண்பட்டதல்ல.
குவாண்டம் விசையியல் ஐன்ஸ்டீனுக்கு அசௌகரியம் தந்தது. அதனால், பகடைக்காய்களை
கடவுள் உருட்டவில்லை என்று அவர் சொல்வதற்கு செவ்வியல் இயற்பியலை நாடினார். ஏனெனில்
அது அவருக்குப் புதிய பிராந்தியமாக இருந்தது. அவரால் உணர்வுப்பூர்வமாக அதைப்
பற்றிப்பிடிக்க முடியவில்லை. காரண காரிய அறிவை திருப்திப்படுத்தக்கூடிய
வழிகாட்டியாகவும் அவர் கருதவில்லை. அதனால் அவர் மீண்டும் மரபில் விழுந்தார்.
பலசமயங்களில் இதுதான் மரபுகளின் பலமான ஆதாரமாக உள்ளது. ஆயத்தமான, முழுமையாகப்
புரிந்துகொள்ளப்பட்ட, முழுமையாக சிந்திக்கப்பட்ட, பட்டறிவு சார்ந்த எதிர்வினைகளைச்
செய்யமுடியாத பரந்தபகுதிகள் வாழ்க்கையில் உள்ளன. அங்கே நீங்கள் மரபுகளில்
விழுந்துதான் ஆகவேண்டும். அப்படியான நிலையில், மரபு உங்கள் முன் உள்ள விருப்பத்
தேர்வுகளுக்கு ஒரு வரம்பைக் கட்டுகிறது. மரபை ஒரு எதிர்ப்பு வடிவமாகவோ அல்லது
மறுப்பின் அடிப்படையாகப் பார்க்கும் எனது தனிப்பட்ட புரிதலை நான் ஏற்கனவே
சொல்லியிருப்பதற்கு நான் மேற்சொன்னது கூடுதலாக வலுசேர்ப்பதாகும்.
ராமின் ஜகன்பெக்லூ
ஏ.கே.குமாரசாமி அல்லது செயத் ஹோசீன் நாசர் போன்றவர்களின்
மரபு தொடர்பான ஆன்மீகவாதத்துக்கும் உங்களது எழுத்துகள் மற்றும் சமூகச்
செயல்பாடுகளுக்கும் மரபுவாதம் தொடர்பாக நீங்கள் எங்கே வித்தியாசப்படுகிறீர்கள்?
அசீஸ் நந்தி
உண்மையில் அந்த சிந்தனைப் பள்ளி மேல் நிறைய மரியாதை உள்ளது.
ஆனால் மரபைப் பார்க்கும் அந்த குறிப்பிட்ட வழியிலிருந்து வேண்டுமென்றே என்னைத்
தொடர்ந்து தொலைவுபடுத்திக் கொள்ள முயன்றும் வருகிறேன். மரபு தொடர்பான எனது கருத்து
என்பது அன்றாட வாழ்க்கையையும், சாதாரண மனிதனையும் கொண்டாடுவதுதான். ஏனெனில் வெகு மக்களின் வாழ்வாதார தொகுதி
மற்றும் வாழ்க்கை முறையின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நவீனத்துவக்
கருத்தாக்கத்தையும் விமர்சிக்கிறேன். இந்த ரீதியில் மரபு சார்ந்த கருத்துக்கு
துல்லியமான அரசியல் வாய்ப்பு உள்ளது. அந்த அரசியல் வாய்ப்பு எனக்கு மிகவும்
முக்கியமானது.
சாதாரண மக்கள் தங்கள் விருப்பத் தேர்வுகளை
உருவாக்குகிறார்கள் எனில் அவர்கள் போதிய அறிவற்றவர்களாக இருக்கிறார்கள் என்றோ, மூடநம்பிக்கை
கொண்டு, பகுத்தறிவற்று இருக்கிறார்கள் என்றோ அர்த்தம் அல்ல என்பதே
மரபுவாதமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பல நூற்றாண்டுகளாகவும், தலைமுறைகளாகவும்
சேகரமான ஞானம் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் தேர்வுகளை
உருவாக்குகிறார்கள். இந்திய மரபு பற்றி நான் பேசும்போது, இந்திய
நேற்றின் 3000 ஆண்டுகள் என் மனதில் உள்ளது. அது சாதாரண இந்தியர்களின்
ஆளுமையாகவும் ஆசாபாசங்களாகவும் உள்ளது. சாதாரண இந்தியர்களின் ஆசாபாசங்கள் மற்றும்
ஆளுமையையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவற்றுக்கு மரியாதை
அளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த அனுபவங்கள், நூற்றாண்டுகளாகச்
சேகரமான, வாழ்வின் மீது பரிசோதிக்கப்பட்ட கூட்டு அனுபவங்கள்.
மரபு தொடர்பான எனது அணுகுமுறையின் மற்றொரு அம்சத்தை நான்
இந்த உரையாடலில் இதுவரை தொடவேயில்லை. இந்த மரபுகள் எல்லா இடங்களிலும் பின்னடைவில்
இருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன். வாழ்க்கை என்பது மேலதிகமாக தொழில்முறைத் தன்மை
வாய்ந்ததாக உருமாறி வருகிறது. அதன் களங்கள் மேலும் மேலும் நிபுணர்களின்
மேலாண்மைக்குள் வந்துகொண்டிருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில்
அதிகாரமற்றதிலிருந்து தனது சக்தியைப் பெற்றுக்கொள்ளும் எந்த எதிர்ப்பும், மரபுகளுடன்
உரையாடக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். மகத்தான படைப்பெழுத்தாளர்கள் இதை
புரிந்துகொண்டே இருக்கின்றனர். அப்படியான ஒரு எதிர்ப்பு வடிவத்தைப் பார்த்து
அச்சம் கொள்வது கல்வித்துறை அதிகாரத்துவமாகும். தீவிர எதிர்ப்பின் வடிவத்தை
வரையறுக்கும் தங்கள் உரிமை சுருக்கப்பட்டு விடுமோ என்று அவர்கள் பயப்படுகின்றனர்.
மறுப்பின் புதிய மொழியை அவர்களால் புரிந்துகொள்ளவோ கட்டுப்படுத்தவோ இயலாது.
இதுதான் பிராமணிய அச்சம்.
ராமின் ஜகன்பெக்லூ
தொடர்ச்சி என்பது இருப்பதாலேயே தான் நாம் மரபுக்கு மரியாதை
அளிக்கிறோமா?
அசீஸ் நந்தி
அதற்கு தொடர்ச்சி இருப்பதால் மரியாதை அளிக்க வேண்டியதில்லை.
ஆனால் தலைமுறை, தலைமுறையாக வந்த ஞானத்துடன் தோய்ந்திருக்கும் மொழியைப்
போன்றது மரபு. அப்படி இருப்பதாலேயே எப்போதும் சரியானதாக இருக்கும் என்றும்
அர்த்தம் அல்ல. அதை நாம் மறுக்கும் நிலையில் கூட, தீவிரமாக அதனுடன் உரையாட
வேண்டியிருக்கிறது. நீங்கள் தலையீடு
செய்யவோ, மாற்றத்தை விழையவோ, ஜனநாயகப்பூர்வமாக புதிய ஒன்றை
அறிமுகப்படுத்தவோ நினைத்தால், மக்கள் மீது போலீஸ் முறைகளைப் பயன்படுத்தி உங்கள்
கருத்துகளைத் திணிக்கக் கூடாது என்று எண்ணினால் அவர்களது வாழ்வியல் பரப்புக்குள்
நீங்கள் நுழைந்தே ஆகவேண்டும்.
ராமின் ஜகன்பெக்லூ
மரபே ஒடுக்குமுறை இயல்புள்ளதாக மாறும்போது என்ன நடக்கிறது? மரபே புதிய
ஒடுக்குமுறை அமைப்புகளைப் பேணத்தொடங்கும் போது என்ன செய்வது?
அசீஸ் நந்தி
மரபான வடிவத்தில் இருப்பினும் சரி, அப்படி
இல்லாமல் இருப்பினும், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவே செய்யவேண்டும். ஆனால்
அப்படியான போராட்டத்துக்கு நீங்கள் மக்களைத் திரட்ட வேண்டுமெனில் அது வேறுவகையான
ஆட்டநெறிகளைக் கோருகிறது. நாடாளுமன்றம், பாலங்கள், ரயில்
தண்டவாளங்கள் போன்றவற்றின் அடியில் வெடிகுண்டுகள் வைத்து நவீன அரசமைப்பையும், முதலாளித்துவத்தையும்
நசுக்கிவிடலாம் என்று எண்ணுபவராக நீங்கள் இருப்பின், உங்களுக்கு மரபுகள் தேவையே இல்லை. மக்களின்
ஒத்துழைப்பு மற்றும் ஊக்கமான பங்களிப்புடன் ஒரு ஒடுக்குமுறை அமைப்பை அகற்றுவதைப்
பற்றி நீங்கள் நினைத்தால், அவர்களது மனதைப் புரிந்துகொள்ளவும், அவர்கள்
சிந்திக்கும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளவும், அவர்களது நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும்
பெறுவதற்கும் அவர்களது மரபுகளுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். தங்கள் சொந்த நலன்களைக்
காரணகாரியப்பூர்வமாக கணக்கிட்டு மக்கள் கலகத்தில் இறங்குவதில்லை. அதனால் தான்
நீங்கள் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் அவர்களது மரபுக்குள் நுழைய நீங்கள்
கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் பேசும் மொழியைப் பேச நீங்கள் அந்த
மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மீண்டும் நான் கூறுகிறேன். மரபு மொழி
போன்றது. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள இன்னமும் நீங்கள் தீர்மானிக்கவில்லையெனில்
உங்களது இலக்குகளை நவீன ஆயுதங்கள் கொண்டோ, அரசின் கொடும் அடக்குமுறை கொண்டோ
அடைந்துவிடலாம் என்றோ உங்களது நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அவர்களது கலாசார மொழிபை
நீங்கள் பேசாதவரை அவர்களது ஒத்துழைப்பை நீங்கள் ஒருபோதும் பெறவே போவதில்லை.
ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான்.
ராமின் ஜகன்பெக்லூ
படைப்பூக்கத்தின் அனைத்து வடிவங்களும் ஏதோ ஒரு மரபில்
கால்கொண்டிருக்கிறது என்கிறீர்களா?
அசீஸ் நந்தி
இல்லை, படைப்பூக்கம் என்பது மரபுகளோடு தொடர்புடையதாகவோ இல்லாமலோ
இருக்கலாம். சில படைப்பு வடிவங்களில் நீங்கள் மரபுகளை உடைக்க வேண்டும். ஆனால்
அந்தப் படைப்பை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்வதற்கு கொஞ்சம் மரபை நீங்கள் கொண்டிருக்க
வேண்டும். நவீன ஓவியம் போன்றவை ஒரு காலகட்டத்தில் மரபென்ற ஒன்றைக்
கொண்டிருந்ததில்லை. ஆனால் அதற்கு தற்போது மரபு உள்ளது. ஒரு மரபைக்
கையகப்படுத்துவது என்பது அதிகம் மாறாத தன்மையுடையது என்று நிரூபிப்பதற்கும்தான்.
செவ்வியல் பாதைக்குள் தடைகளை உடைத்து நுழைவதற்கான தெரிவிப்பாகவும் அது இருக்கலாம்.
ராமின் ஜகன்பெக்லூ
அப்படியெனில் நவீனத்துவம் என்பதும் ஒரு மரபாக மாறிவிட்டதாக
நம்புகிறீர்கள் இல்லையா?
அசீஸ் நந்தி
ஆம், நவீனத்துவத்துவ மரபும் உண்டு. நவீனத்துவம் என்பது
தற்காலத்தன்மையுடையதல்ல. அது இன்றில் உருவாகவும் இல்லை. அதற்கென காலம் மற்றும்
வெளியும், பிரத்யேக அர்த்தமும், கலாசாரச் சுமையும் உண்டு. 17 மற்றும் 18 ஆம்
நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த மாற்றங்களுடன் தொடர்புடையது அது. ஒரு
வதைமுகாமிற்கென கலாசாரம் ஒன்று இருக்கலாம். மாபியாக்களுக்கும் அது பொருந்தும்.
அதனாலேயே அவர்கள் ஒப்புக்கொள்ளத்தக்கவர்களாக ஆகிவிட முடியாது. ஒரு சமூகக்குழு
பிரதிபலிக்கும் கலாசாரத்தை அவை பிரதிபலிக்க வேண்டியதில்லை. ஆனால் சில
தசாப்தங்களுக்குப் பிறகு, கால-வெளிக்குட்பட்ட மரபுகளாக நவீன ஓவியமோ நவீன கவிதையோ
ஆகமுடியும். க்யூபிசமும், மாயவாத எதார்த்தமும் தற்போது ஒப்புநோக்கத்தக்க அளவில்
கௌரவமான மரபுகளாக மாறியுள்ளன. தற்கால அடிப்படைவாதம் கூட ஒரு மரபைக்
கையகப்படுத்தியுள்ளது. அத்துடன் ஒரு மரபெனவும் அது உணரப்படுகிறது. ஆனால் அந்தவகை
மரபு மிகவும் சன்னமானது. நான் பேசும் மரபுகளின் ஒரு பகுதியாக வைக்கும் அளவுக்கு
தகுதியில்லாத மிக சமீபத்தியது.
உங்களது கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டுமெனில்
நவீனத்துவம் எனது சம்மதத்தைக் கேட்டு நிற்கவில்லை. அது ஏற்கனவே வெற்றியாளர்களின்
கருத்தியலாகி விட்டது. நான் இந்த உலகிலுள்ள வெற்றியாளர்களுக்காக வேலை செய்வதில்லை.
தோல்விக்குள்ளாக்கப்பட்ட அறிவு மற்றும் சுயவெளிப்பாட்டு முறைமைகள் பற்றி நான்
அக்கறை கொள்கிறேன். சக்திவாய்ந்தவர்கள்
மற்றும் பணக்காரர்களால் தேசப்பற்றுமிக்கதாக, விஞ்ஞானப்பூர்வமானதாக, முற்போக்கானதாக
முன்னிறுத்தப்படும் உயர்நிலை அறிவுத்தொகுதிகள் அவற்றை இடம்பெயர்த்துவிடக் கூடாது
என்பதால் மேம்படுத்த முயற்சிக்கிறேன்.
ஒரு அறிவுத் தொகுதியின் மதிப்பு என்பது அதன்
பொருளடக்கத்தில் மட்டும் இல்லை. அதன் சமூக மற்றும் அரசியல் சூழலியலில் உள்ளது.
அந்தச் சூழல் பற்றிய அரைவேக்காடான புரிதலின் அடிப்படையில் கலாசாரங்கள் மற்றும், பாரம்பரிய
அறிவு முறைமைகளை கருணைக்கொலை செய்வதை நாம் பரிந்துரைக்க இயலாது.
அறிவு தொடர்பாக ஒரு தட்டையான, இருபரிமாணத்தன்மையுடைய கருத்து மட்டுமே
நம்மிடம் எஞ்சியிருக்கிறது. அது முழுமையாக தன்னிறைவு கொண்டதான, சர்வவியாபியாக, சர்வரோக
நிவாரணியாக தன்னை பாவனையும் செய்துகொள்கிறது. தன் உந்துதலிலேயே அது வளரும் என்ற
தோற்றத்தையும் தருகிறது. மதத்தைப் போன்றே பிற அறிவுத்தொகுதிகளுடன் அதனால் உரையாட
முடியும். ஆனால் தன்னைப் போன்றே இருக்கும் அறிவியல் என்றழைக்கப்படும் தொகுதியுடன்
உரையாடவே முடியாது. வெப்பமண்டல நாடுகளில்
இந்நிலை இன்னமும் மோசம். புதிதாக மதம் மாறியவர்கள் எப்போதும் கூடுதல் வெறியர்களாக
இருப்பார்கள். எழுச்சி பெற்று வரும் புதிய ஆளும் வர்க்கத்தினருக்கு இந்த நிலை சாதகமானது
. நவீன அறிவியலின் வரம்புக்கு வெளியே உள்ள பாரம்பரியமாக சேகரிக்கப்பட்ட ஞானத்தின்
மீது நம்பிக்கை வைக்காததால் நவீனத்துவம் இங்கே மரபுகளை உடைக்கப் பார்க்கிறது.
அறிவு பற்றிய அதன் கருத்தியல் வேறு. உண்மை பற்றிய அதன் கருத்துருவம் வேறு.
பகுத்தறிவு, காரண காரிய அறிவு மற்றும் அனுபவவாதம் வழி உண்மையை நிரூபித்து
விட முடியும் என்று சாதாரணமாகக் கோருகிறது.
மரபுகளும் தங்களுக்கேயுரிய பகுத்தறியும் அமைப்புகளை
வைத்திருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். அவற்றுக்கும் அனுபவவாத தளம் உள்ளது.
அந்த தளம் ஆய்வகச் சோதனைகளில் இன்றி நூற்றாண்டுகளாக உருவானது. நீங்கள் அந்த வழிமுறையைக்
குறுக்குவழியில் கடக்க நினைத்தால் கூட அதன் நுட்பங்களை நீங்கள் கற்றுக்கொண்டாக
வேண்டும். உதாரணமாக நவீன வேளாண்மையின் கோட்பாடு, ஒரு விவசாயியின் கோட்பாட்டிலிருந்து
வேறுபட்டது. அந்த விவசாயியின் கோட்பாடு மரபை அடிப்படையாகக் கொண்டது. இந்த மரபு
நூற்றாண்டுகளாக விவசாயிகள் கைமாற்றிய அனுபவங்களைப் பிரதிபலிப்பவை. தலைமுறை
தலைமுறையாக வாய்மொழியாக, நடைமுறைகளாக வந்து சேர்ந்தவை.
ஒரு நவீன வேளாண் விஞ்ஞானி, “பாருங்கள், நான்
ஆய்வகத்தில் இதை பரிசோதித்து விட்டேன்" என்று சொல்கிறார். ஒரு நீண்ட, நிதானமான
பரிசோதனை முறையையையும், தவறுகளைச் சரிசெய்து கொள்ளும் நடைமுறையையும் அந்த வேளாண்
விஞ்ஞானி சுருக்கி விடுகிறார். விளைச்சலை அதிகப்படுத்துவதற்காகவோ, பூச்சிகளைக்
கொல்வதற்காகவோ அவர் ஆய்வக சோதனைத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரு முறையைக்
கண்டுபிடிக்கிறார்.
ஒரு விவசாயி என்பவர் இந்த முறையை இயற்கையாகவே
சந்தேகிப்பவராகவே இருப்பார். புதுமை நாடும் நடைமுறையைச் சுருக்குவதும், மாறும்
சூழ்நிலைகளை அதிகம் கணக்கிலெடுக்காததும் தான் இதற்கு காரணம். விவசாயி ஒருவர், பாரம்பரியமாகத்
தான் சேகரித்து வைத்திருக்கும் அறிவை அத்தனை சீக்கிரம் விட்டுவிட விரும்ப மாட்டார்.
தமிழில்: ஷங்கர்
(சிலேட் இதழில் வெளியானது)
(சிலேட் இதழில் வெளியானது)
Comments