கைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன் யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல இருட்டில் பார்த்த பொருட்கள், இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்குபொருட்களை கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் தரிசியும் கவிஞனுமான கபீரின் கரங்கள் பட்டு கடவுள் ராமன் இப்படித்தான் பொன்னாகிறான்.
“விவேகம் சொல்கிறது நான் ஒன்றுமேயில்லை. நேசமோ நான் எல்லாம் என்கிறது. இந்த இரண்டு உணர்வுக்கும் நடுவில் என் வாழ்க்கை பாய்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார் அத்வைத ஞானியான நிசர்கதத்த மகராஜ். “இரண்டு சட்டைப் பைகளில் ஒரு பையில் நானே அனைத்தும் என்று ஒரு தாளில் எழுதிவைத்துக் கொள். இன்னொரு பையில் நான் தூசியிலும் தூசி என்று எழுதிவைத்துக் கொள்” என்கிறது ஹதீஸ். பக்திக் காலகட்ட கவிதைகளை இணைக்கும் உணர்வுச்சரடை வெளிப்படுத்தவே மேற்சொல்லப்பட்ட இரண்டு கருத்துகளும்.
நனவுக்கும் நனவிலிக்கும் இடையே; தனியன் என்ற பிரிவு உணர்வுக்கும் எல்லா உயிர்களுக்கும் இணைப்பைக் காணும் அபேத உணர்வுக்கும் இடையே; கைவிடப்பட்ட உயிராக உணரும் பதற்றத்துக்கும் நம்பிக்கையின் பரிபூரண சரணாகதிக்கும் இடையே கவிதை என்னும் புராதனக் கைவிளக்கைப் பிடித்தபடி அலையும் கபீரை இந்தக் கவிதைகளில் பார்க்கிறோம். மனிதனுக்கும் இறைமைக்கும் நடுவே நிலையாமைக்கும் நித்தியத்துவத்துக்கும் நடுவே அரற்றியபடி ஓடும் பாடகனைக் காண்கிறோம் கபீரில்.
நெசவாளியென்ற குடியானவனான கைவினைக் கலைஞனின் அடையாளமும் அவைதீகப் பின்னணியும் நாடோடி பக்கிரியின் தன்மையும் சேர்ந்து 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கபீரின் கவிதைகளை இன்றைக்கும் நமது வாசகர்களுக்கு நெருக்கமாக்குகிறது. நிறுவன ரீதியான சமயம், சமய நெறிகளுக்கு வெளியே கடவுளை அழைத்து வந்து, ஆண்டாள் பாடிய அதே நாயகி பாவத்தில் எந்த மனத்தடையும் இன்றி ராமனைச் சேரும் விரகபாவத்திலான கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ‘பேரானந்தமே நோக்கமெனில் உதறி எறியவேண்டும் கூச்சத்தை’ என்று சொல்லும் போது கபீரின் ராமன் கிருஷ்ணனாகிறான். சீதையையும் ஒரு கவிதையில் பன்மையாக்கிவிடுகிறார்.
தொலைத்து தேடி சிறிய இடைவெளிகளில் கண்ணில் பட்டு பின்னர் மறையும் மாயமான் ராமனை, ஆண்டாளும் வள்ளலாரும் தேடிய பரம்பொருள் என்னும் அதே மாயமானை கவிதையின் விளக்கு கொண்டு இவர்கள் தேடியுள்ளார்களே தவிர கவிதை இவர்களது லட்சியம் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது லட்சியம் மெய்ப்பொருள். வெளிச்சம் தான் அவர்களை இருள் பயத்திலிருந்து அகற்றியது; வெளிச்சம் தான் அவர்களை எரித்ததும்.
இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் செங்கதிரின் கணிப்பின்படி ஆழ்வார், நாயன்மார் பாடல்களுக்கும் சித்தர் பாடல்களுக்கும் இடையில் கபீரின் கவிதைகளை வைக்க முடியும். ஆழ்வார், நாயன்மார் பாடல்களின் பல்லுயிர், புழங்குபொருள் வளமும், கவித்துவ உச்சங்களையும் கபீரின் இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்கும் போது குறைவாகவும் அரிதாகவுமே உணரமுடிகிறது. அதேநேரத்தில் சித்தர் பாடல்களின் கைப்பு, எதிர்மறை அம்சங்கள் கபீரிடம் இல்லை. அறியவொண்ணாத இருட்டில் முக்குளிக்கும் மூச்சுமுட்டலோ, ஆழமோ கபீரின் கவிதைகளில் இல்லையென்றே சொல்லி விடலாம். எடுத்து தூய்மைப்படுத்திய முத்துகளின் வெளிச்சத்தில் தான் கபீரின் முகத்தைப் பார்க்கிறோம். கபீரின் கவிதைகளைப் படிக்கும்போது, கவித்துவத்தாலேயே தன் உயரத்தை இன்றும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கும் ஜலாலுதீன் ரூமி ஞாபகத்தில் வருவதைத் தவிர்க்கவே முடியாது.
கபீரின் லட்சியமும் கவிதை அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இசையென்ற நோக்கம் எதுவும் இல்லாமலேயே சும்மாவே வீட்டுக்குள் அலைந்து திரியும் நாய்க்குட்டியின் கழுத்து மணி இசையாகத் தானே இருக்கிறது; ‘சிலதைக் கட்டி எழுப்புவான்./ வேறு பலதை உடைத்து நொறுக்குவான்’ என்று பிரக்ஞைப் பூர்வமாகவே பாடிச் சென்றிருக்கும் கபீரிடம் குழந்தையும் ஞானியும் இருக்கிறார்கள். அதுவே கபீரின் கவித்துவம் குறைந்த கவிதைகளையும் அபங்கமாக்குகிறது.
இந்தியா போன்ற பன்மைத்துவம் கொண்ட தேச உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்த, அதன் விரிந்த விழுமியங்களை இன்னமும் பிரிதிநிதித்துவம் செய்கிற ஆன்மிக, மெய்ஞான ஆகிருதிகளில் ஒருவர் கபீர்தாசர். இவர் போன்றவர்களின் கவிதைகள் தமிழ் போன்ற மொழியில் தற்காலத்தில் மொபெயர்க்கப்படும் போது, கூடுதலான தொகையில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் கபீரின் செய்தி மட்டுமல்ல, அவரது கவித்துவத்தின் அகன்ற தன்மையும் தெரியவரும்.
தமிழ் நவீன கவிதைகள் மொழியில் ஏற்படுத்திய செழுமையை உள்வாங்கி இக்கவிதைகளை மொழிபெயர்ப்பாளர் செங்கதிர் செய்திருப்பதை வாசிப்பின் லயம் உணர்த்துகிறது.
Comments