Skip to main content

அனுபவம் அனுபவிப்பது அனுபவிப்பவர் - ஜே. கிருஷ்ணமூர்த்தி


அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் தீண்டின; மலைகளைப் பூசியிருக்கும் சாயங்காலத்தின் மினுமினுப்பு அவற்றின் உள்ளிருந்து வருவதுபோலத் தோற்றம் தருகிறது. நீண்ட சாலையின் வடக்கில், மலைகள் தீக்குள்ளாகி மொட்டைத் தரிசாய்க் காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும் மலைகளோ பசுமையாகவும் புதர்கள், மரங்கள் அடர்ந்தும் உள்ளனநெடிதாகப் போகும் சாலை, பிரமாண்டமும் எழிலும் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கை இரண்டாகப் பிரிக்கிறது. குறிப்பாக, இந்த மாலையில் மலைகள் மிகவும் நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும் மிருதுத்தன்மையுடனும் தெரிகின்றன். பெரிய பறவைகள் உயர சொர்க்கங்களில் சாவதானமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தரையில் அணில்கள் மந்தமாக சாலையைக் கடக்கின்றன. அத்துடன் எங்கோ தூரத்தில் விமானத்தின் ரீங்காரம் கேட்கிறது. சாலையின் இரண்டு பக்கங்களும் ஆரஞ்சு தோட்டங்கள், சீரான ஒழுங்கில் வரிசையாக உள்ளன. உஷ்ணமான ஒரு நாளென்பதால் பர்ப்பிள் சேஜ் மலர்களிலிருந்து வரும் வீச்சம் கடுமையாக உள்ளது. அத்துடன் சூரியனால் சுடப்பட்ட பூமி மற்றும் புல்லின் நெடியும் சேர்ந்தடிக்கிறது. ஆரஞ்சு மரங்கள் பளபளக்கும் பழங்களுடன் கருமையாக நிற்கின்றன. குயில் அழைத்துக் கொண்டிருந்தது. ரோட் ரன்னர் (அமெரிக்கக் கண்டத்தில் சாலையில் ஓடும் பறவை) புதர்களுக்குள் ஓடி மறைகிறது. நீளமான அரணை ஒன்று நாயால் தொந்தரவுக்குள்ளாகி உலர்ந்த களைச்செடிக்குள் சரசரவென்று போய் மறைகிறது. சாயங்கால நிச்சலனம் நிலத்தின் மேல் ஊர்ந்து படர்கிறது.
அனுபவம் என்பது ஒன்று. அனுபவிப்பது என்பது இன்னொன்று. அனுபவிக்கும் நிலைக்குத் தடையாக இருப்பது அனுபவமாகும். ரம்மியமானதோ அசிங்கமானதோ எதுவாக இருந்தாலும் அனுபவம் என்பது அனுபவிப்பதின் மலர்ச்சியைத் தடுக்கிறது. அனுபவம் இறந்த காலத்தில் ஏற்கெனவே இருப்பதால் காலத்தின் வலைக்குள் சிக்கிக்கொண்டு விடுவதால், நினைவாக மாறிவிடுவதால் நிகழுக்கு எதிர்வினையாகவே வாழ்க்கைக்குள் வருகிறது.
வாழ்க்கை நிகழில் இருப்பதால் அது அனுபவமாகாது. அனுபவத்தின் கனமும் வலுவும் நிகழின் மேல் நிழலைப் படர்த்திவிடுவதால், அனுபவிப்பதென்பது அனுபவமாகி விடுகிறது. மனம் தான் அனுபவம், மனம் தான் அறிந்தது என்பதால் மனத்தால் அனுபவிக்கும் நிலையில் எப்போதும் இருக்க முடியாது. அதனால் தான் அது அனுபவிக்கும் எல்லாவற்றையும் அனுபவத்தின் தொடர்ச்சியாக உணர்கிறது.
தொடர்ச்சியை மட்டுமே மனம் அறியுமென்பதோடு, அந்தத் தொடர்ச்சி இருக்கும்வரை அதனால் புதிய ஒன்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எது தொடர்ச்சியாக உணரப்படுகிறதோ அங்கே அனுபவிப்பதின் நிலை இருக்கவே சாத்தியமில்லை. ஒன்றைச் சரியாக அனுபவிக்க வேண்டுமெனில் ஏற்கெனவேயான அனுபவத்தின் ஞாபகம் துடைத்தழிக்கப்பட வேண்டும். மனத்தால் தனது சுயத்தின் காட்சியை, தனக்குத் தெரிந்ததை மட்டுமே காணவும் உணரவும் முடியும். எண்ணம் என்பதும் அனுபவத்தின் வெளிப்பாடுதான்.
எண்ணம் என்பது தலையீடு செய்துகொண்டேயிருக்கும்வரை, அனுபவிப்பதென்பது இருக்காது. அனுபவம் நம்மைத் தொடர்வதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வேறு வழிமுறைகளோ முறைகளோ கிடையாது. வழிமுறையைத் தேடுவதென்பதே அனுபவிப்பதற்குத் தடங்கல் தான். முடிவை அறிவது என்பது தொடர்ச்சியை அறிவதுதான். முடிவுக்கான வழி தெரியுமென்றால் அறிந்ததைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கான வழியும்தான். முதலில் அடைவதற்கான ஆசை வெளிர வேண்டும்.
அனுபவிப்பதற்கு, அடக்கம் அவசியமானது. ஆனால் மனமோ அனுபவிப்பதை அனுபவமாக்கக் குதியாட்டம் போடவே செய்யும். புதியதைப் பற்றி எண்ணமிட்டு அதைப் பழையதாக்குவதற்குப் பாயும். அந்த நிலையில், அனுபவிப்பவர் அனுபவிப்பதை இரண்டாக்கி பேதத்துக்கு வழிவகுத்து விடுகிறது.
அனுபவிக்கும் நிலையில் அனுபவிப்பவர், அனுபவிப்பது இரண்டும் வேறு வேறல்ல. மரம், நாய், மாலை நட்சத்திரம் ஆகியவையெல்லாம் அனுபவிப்பவரால் அனுபவிக்கப்பட வேண்டியவை அல்ல; அனுபவிக்கும் தருணமும் அவையும் வேறு வேறல்ல. அங்கே அனுபவிப்பவர், அனுபவிப்பது இரண்டுக்கும் இடைவெளி இல்லை; அங்கே காலம் இல்லை, எண்ணமிட்டு அதனோடு தன்னை அடையாளம் காண்பதற்கான இடம்சார்ந்த இடைவெளியும் அங்கே இல்லை. எண்ணம் முழுமையாக அற்றுப்போகிறது, ஆனால் அங்கே உயிர்த்தல் இருக்கிறது. இந்த உயிர்த்தல் நிலையின் மீது எண்ணமிடுதலோ தியானமோ செய்ய முடியாது. ஏனெனில் அது அடைவதற்கான பொருளும் அல்ல.
மெய்யான அனுபவித்தலுக்கு அனுபவிப்பவர் அற்றுப் போக வேண்டும். அப்போதுதான் உயிர்த்தல் அங்கே இருக்கும். அதன் அசைவின் மோனமோ அகாலத்தில் நிகழ்கிறது.
(ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ‘Commentaries On Living’ நூலிலிருந்து)

Comments