எண்ணங்கள் மற்றும் உணர்வுகளிலிருந்து
பரிபூர்ணமாக விடுதலையான ஆன்மாவுக்குள்
புலிக்குக் கூட இடமில்லை
அதன் உக்கிரமான நகங்களுக்கும்.
மலைகள் மேலிருக்கும் பைன்
மரங்கள்
பள்ளத்தாக்கின் ஓக் மரங்களை
அதே தென்றல் தான்
கடக்கிறது
ஆனால் அவை ஏன்
வேறு வேறு ஸ்வரங்களைத்
தருகின்றன
எண்ணம் இல்லை, பிரதிபலித்தல்
இல்லை
முழுமையான வெறுமை
ஆனாலும் அங்கே
எதுவோ
அதன்கதியில் நகர்கிறது.
கண்கள் அதைப் பார்க்கின்றன
ஆனால் கைகளால் அள்ள
முடியாது-
ஏரியில் நிலவு.
மேகங்களும் பனிப்புகையும்
நடுவானில் நிகழும் உருமாற்றங்கள்
அவற்றுக்கு மேலே சூரியனும்
நிலவும் நித்தியத்தில்
சுடர்கின்றன.
தன்னைப் பற்றி சிந்தை
இல்லாதவர் எவரோ
மனமின்மையின் பெரும் பாரம்பரியத்தில்
உறைபவர் எவரோ
அவர்தான்
மோதலுக்கு முன்னரே வெற்றி
பெறுபவர்.
(சண்டைக் கலை
நிபுணர் ப்ரூஸ் லீ எழுதிய ‘தாவோ டூ ஜீத் குனே டூ’ நூலில் இடம்பெறும் பெயர் தெரியாத
குருவின் கவிதை இது)
Comments