Skip to main content

தேசியம் காட்டும் கோரமுகங்கள்



மார்டின் பட்லர்

(போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் நேரடி மாணவியான ரீனா ஹேண்ட்சின் உதவியுடன் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu  என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்திய பயன்விளைவை இன்னும் சில வாசகர்களும் அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்க்கிறேன்.)


மந்தையில் ஆதிக்கம் செலுத்துவற்கும், உயிர்த்திருக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கும், குழந்தைகளுக்கு அதிகாரத்தைப் பரிமாறுவதற்கும்,தன்னுணர்வு கொண்ட எல்லா உயிர்களும் அதிகாரத்துக்கும் ஆற்றலுக்கும் ஏங்குகின்றன. இந்நிலையில் ஆற்றல் மழுங்கடிக்கப்படும்போது மக்கள் அபாயகரமானவர்களாக மாறுகின்றனர். மக்களைப் பாதிக்கும் பொருளாதார ரீதியான துயரம் பிறப்பித்த ஒருவர்தான் ஹிட்லர் என்பதை, முதல் உலகப்போர் முடிந்து ஒரு தசாப்தத்துக்குப் பின்னரான ஜெர்மனியைப் பார்த்துதான் நான் மேற்சொன்ன கூற்றைப் பரிசீலிக்க முடியும்.

ஜெர்மனி அனைத்து நிலைகளிலும் குதறப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஹிட்லர் பரிபூர்ணத் தீர்வுடன் வந்தார். பிற இன, மதக் குழுக்கள் தான் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையென்று குற்றம்சாட்டினார். அது வேலை செய்தது. அது எப்போதுமே வேலை செய்யக்கூடியதும் கூட. பொது மக்கள் திரள் எவ்வளவோ சாந்தம் கொண்டதாக இருந்தாலும், ஆற்றல் மழுங்கடிப்பட்டவர்களாக அவர்கள் தங்களை உணரும் பட்சத்தில், பிறரின் மீது குற்றம் சுமத்துபவரை ஆதரிக்கவே செய்யும். அதன் பின்விளைவாக வதைமுகாம்கள் உருவாகவே செய்யும். தங்களை வெல்ல முடியாதவர்கள் என்று பொதுமக்களை உணரவைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபான்மையினரை ஒட்டுமொத்த ஒதுக்குதலுக்கு உள்ளாக்க வைப்பதிலும் பொது உணர்வுகளை மதியூகத்துடன் கையாள்வதிலும் ஹிட்லர் நிபுணர்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அதே விசைகள் தொழில்படுவதைப் பார்க்கிறோம். தேசியவாதம் எழுந்துகொண்டிருக்கும் போதே, கோடிக்கணக்கான மக்களின் வளமும் கௌரவமும் மங்கிக்கொண்டிருக்கிறது. திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியதில்லை; செல்வமும் அதிகாரமும் மிகச் சில மக்களிடம் குவிந்துகொண்டிருக்கும் நிலையில் வெகுமக்கள் திரள் தங்களை ஏதுமற்றவர்களாக உணர்கிறார்கள்.

மக்களின் நாதியற்ற இந்த உணர்வுநிலை, செல்வம், புகழ், அதிகாரபலம் கொண்ட பிரபலங்களின் வாழ்வைப் பார்த்து மேலும் தூண்டப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் ஒரு பிரபலம் வெளிக்காட்டுகிறார். அந்தச் சூழ்நிலையில் அதை அடையும் வசதிகள் இல்லாத மக்களிடம் அது நிராசையை உருவாக்குகிறது. ஆனால், அந்த நிராசையும் கோபமும் பிரபலத்தின் மீது பாயாமல், அவர்களது சீரழிவுக்குக் காரணகர்த்தாக்களாக ஆட்சியதிகாரம் செலுத்துபவர்களால் கைகாட்டப்படுபவர்கள் மீது பாய்கிறது. இப்படித்தான் அகதிகள், வேலையில்லாதவர்கள், நோயாளிகள், மத, இனச் சிறுபான்மையினர் பொதுமக்களுக்கு எதிரிகளாக ஆக்கப்படுகின்றனர்.

நீண்டகாலமாகப் பின்னடைவில் இருந்துவந்த தேசமான இங்கிலாந்தில் இது பட்டவர்த்தனமாகியுள்ளது. 1900-வது ஆண்டில் ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங்கை ஐந்து டாலர்களுக்குப் பரிமாற்ற முடியும். இன்றைக்குப் பரிமாற்ற நிலைமையோ மிகவும் மோசம். தொழில்துறை உற்பத்தியிலும், உள்கட்டுமானத்தை சுயமாக உருவாக்கும் வழிவகைகளிலும் 11-வது இடத்தில் தற்போது உள்ளது. அணு ஆற்றல் உற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு உட்கட்டுமானம் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளைத் தான் நம்பவேண்டியிருக்கிறது. சுருக்கமாகக் கூறப்போனால், வலதுசாரி ஊடகங்களின் 30 ஆண்டுகாலப் பிரசாரத்துக்குப் பின்னர் இங்கிலாந்து மக்கள் தங்கள் அதிகாரத்தை உறுதிசெய்வதற்கு, அந்நாடு ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகத் தீர்மானித்தது. ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று போரிடத் துணிந்த நிலையில் தான் வின்ஸ்டன் சர்ச்சிலால் முன்னெடுக்கப்பட்டு ஐரோப்பா ஒன்றிணைக்கப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.

இங்கிலாந்து சந்திக்கும் சூழ்நிலையைத்தான் அமெரிக்காவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சீனா, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிற நாடுகள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வல்லரசாக உயர்ந்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப புதுமைநாடல் மட்டுமே செல்வத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதை நினைவுகூர்க. ஒரு தேசம் தனது பொறியாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் நிறைய ஊதியமும் அங்கீகாரமும் அளிக்காவிட்டால் சீரழிவு என்பது தவிர்க்க முடியாதது.

இதெல்லாம் சேர்ந்து தேசியவாதமும் மீண்டும் தனது கோர முகத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் உலகம் மேலும் மேலும் நிலையற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது. வெகுமக்கள் ஆற்றலற்றவர்களாக மாறியிருப்பதற்கான உண்மையான காரணம் துலக்கப்படவேயில்லை. மிகச் சில நபர்களால் சுரண்டப்பட்டு கையாளப்படுவதால் ஏற்பட்டிருக்கும் நிலை அது. அதற்கு மாறாக உலகில் வாழும் எண்ணற்ற சிறுபான்மையினர் இந்தச் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சக்கரம் சுற்றித் திரும்ப அதே இடத்துக்கு வந்து நிற்கிறது. தேசியவாதக் கூச்சல் மற்றும் வெறியில் எல்லாம் மறந்துபோகிறது.

Comments