அந்த மழைக்கால ஓடை இப்போது
நீர் வற்றியிருக்கிறது
சென்ற வருட மழைக்குப் பின்
தினம்தோறும் காலையில்
நான்கு யுவதில் அங்கே
படகு செலுத்த வருவார்கள்
பேருந்தில் பாலம் கடக்கும்
என்னை அவர்களுக்குத் தெரியாது
அவர்கள் சிமெண்ட் நிறக் காரில்
வருவார்கள்
அந்தக் கார்
மரத்தடி நிழலில்
இளைப்பாறும் காட்சி அலாதியானது
மழைக்கால ஓடையில் நீர்குறைய
அவர்கள் அங்கே வருவதில்லை
படகு தனியே நின்று கொண்டிருக்கிறது
கோடை முடிவடையும் அறிகுறிகள்
ஆரம்பமாகிவிட்டன
இன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்
அவர்கள்
சூரியன் வரும்போதே
குதிரைவால் சடையுடன்
ஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்
படகு இப்போது தனியே
நின்று கொண்டிருக்கிறது.
Comments