Skip to main content

ஜோக்கரின் சிரிப்பில் எரியும் நகரம்
ஜோக்கர்க்ளைமாக்சில் நாயகன் ஆர்தர் ப்ளெக்கின் தாக்கம் பெற்று, நகரமே ஜோக்கர்களால் தாக்கப்படத் தொடங்க, காவல்துறையினரால் கைது செய்யப்படும் ஜோக்கரை, கோமாளி முகமூடி அணிந்த மக்கள் விடுவிக்கிறார்கள். எரியும் நகரத் தெருவின் பின்னணியில் ஜோக்கரை  காரின் பானெட்டை மேடையாக்கி நடனமாடச் சொல்கின்றனர்.
  
ஜோக்கர், கைகளை விரித்து நடனத்தைப் பாவிக்கத் தொடங்கும்போது அங்கே கிறிஸ்து உருப்பெறுகிறார். இங்கே ஒரேயொரு கேள்விதான் எழுகிறது. தனது இருப்பையே பொருட்டாக பிறர் ஒருவரும் நினைக்காத  நிலையில், துப்பாக்கியைத் தூக்கிய ஜோக்கரின் துயரமும் அவனது ரசிகர்களின் துயரமும் ஒன்றா?

 ஒருவருடைய எதார்த்தமும் இருப்பும்  இன்னொருவருக்கு புரியாமல் போவது மட்டுமல்லதெரியாமலும் போகும் நிலையில் அவர் தோன்றாமல் ஆகிவிடுகிறார். ஒருவரின் எதார்த்தம் இன்னொருவருக்குத் தெரியாமல் போகும் நிலையில், ஒருவரின் பொழுதுபோக்கு இன்னொருவருக்கு பொழுதுபோக்காக இல்லாமல் ஆகிவிடும் குரூரமும் சேர்ந்து நிகழ்ந்துவிடுகிறது. அப்படிப் பரிவற்றுப் போன ஒரு உலகத்தில் மனிதர்களை வேட்டையாடக் கிளம்புபவன் தான்ஜோக்கர்திரைப்படத்தில் வரும் ஆர்தர் ப்ளக். இந்தப் படைப்பில் காட்டப்படும் கற்பனை நகரமான காத்தம், நாம் வாழும் எல்லா நகரங்களிலும் உள்ளது என்று நினைவூட்டும் திகில்தான்ஜோக்கர்’- சினிமா தாண்டியும் பேசவைத்திருக்கிறது.

என்னுடைய பரிதாபகரமான இருப்பு கூட உங்களுக்குத் தெரியவில்லையேஎன்ற ஆதங்கத்தைத் தான் நாயகன் ஆர்தர் ப்ளக் பல்வேறு இடங்களில் எழுப்புபவனாக இருக்கிறான்.   

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைகள் அதிகரித்திருப்பதன் பின்னணியில், ஜோக்கராக அராஜகங்களில் ஈடுபடும் ஆர்தர் ப்ளெக்கின் கொலைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்தலாமா என்ற கேள்விகளை இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிய அமெரிக்க விமர்சகர்கள் கேட்டுள்ளனர்.

சிறிய திருட்டுகள் செய்பவனாகவும், கொள்ளைக்காரனாகவும், பேட்மேன் காமிக் கதாபாரத்திரத்தின் பெற்றோர்களைக் கொன்றவனாகவும் கடந்த சில தசாப்தங்களில் தெரியவந்த ஜோக்கர் அவதாரத்தின் சமூக, உளவியல் பின்னணியை விசாரிக்கும் படைப்பு இது. ஒரு வில்லன் கதாபாத்திரம் 2019-ம் ஆண்டில், சினிமாவின் மையக் கதாபாத்திரமாக மாறுவதும் அதற்கான நெடிய பின்னணிக் கதையும் சினிமாவுக்கு வெளியேயும் பல காரணிகளைக் கொண்டது. அவன் மனநோயாளி, கோமாளி என்பதையும் தாண்டி அவன் தீமையைத் தேர்ந்தெடுப்பதற்கான சமூகக் காரணி தான் சினிமாவுக்கு வெளியேயும் அடையாளம் காண வைக்கக் கூடியது. அதனால்தான் டோட் ப்ளிப் இயக்கி, ஹாக்கின் பீனிக்ஸ் நடித்து வெளியாகியிருக்கும் சமீபத்தியஜோக்கர்படத்தின் ஜோக்கருக்கு வயதையும், வரலாறையும் நெடியதாக மாற்றுகிறது.

 ‘நான் வெளிக்குச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். எனது சிரிப்பு மேலோட்டமானது. உள்ளே பார்த்தால் நான் நிஜத்தில் அழுதுகொண்டிருக்கிறேன். அந்த அழுகையில் நீயும் சேரலாம் என்னோடு.’ என்று 1989-ம் ஆண்டில் வெளிவந்த பேட்மேனில், ஜோக்கராக நடித்த ஜேக் நிக்கல்சனின் வசனம் ஜோக்கரின் நிலையைப் புரிந்துகொள்வதற்கான தொடக்கமாகவும் இப்படித்தான் மாறுகிறது.  


நியூயார்க்கை ஞாபகப்படுத்தும் காத்தம் நகரத்தில் கீழ் மத்திய தர வர்க்கத்தினர் வாழும் சிதிலமான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆர்தர் ப்ளெக் தனது நோயுற்ற அம்மாவுடன் வசித்து வருகிறான். தொலைக்காட்சி நகைச்சுவை நடிகனாக ஆகும் லட்சியம் கொண்ட ஆர்தர் ப்ளெக், கடைகள், குழந்தைகள் மருத்துவமனையில் கோமாளி வேடமிட்டு சம்பாதிப்பவராக தன் வாழ்க்கையை நடத்துகிறார். பிறந்ததிலிருந்து முப்பது வயது வரை துயரங்கள், புறக்கணிப்பு ஆகியவற்றையே அனுபவித்து வந்த ஆர்தர் தீவிர மன அழுத்தத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறான். அதேவேளையில் காத்தம் நகரம், பொருளாதார மந்தநிலை, பிரமாண்ட எலிகளால் பெருகும் சுகாதாரமற்ற நிலையால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அரசு அளித்துவரும் இலவச மன நல ஆலோசனையும் இலவச மருந்துகளும் ஆர்தர் ப்ளெக்குக்கு திடீரென்று நிறுத்தப்படுகிறது. தான் இதுவரை அம்மாவென்று ஒருத்தியை நம்பிய எளிய அடிப்படையும் சிதறடிக்கப்படுகிறது. இந்தப் பூமிக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் தர நினைத்த அந்தக் கோமாளி, இரவலாகக் கிடைக்கும் ஒரு துப்பாக்கியால் நகர நிர்வாகத்தையே பீதியடைய வைக்கிறான்.    

 ஒருவரது சிரிப்பு, இன்னொருவருக்குச் சிரிப்பாக இல்லாதுபோகும் நிலை வலியை உருவாக்குவது. ஒருவரின் சிரிப்பை இன்னொருவர் பகிர இயலாத ஏற்றத்தாழ்வுகள் பெருகத் தொடரங்கும்போது, சிரிப்பு ஒரு நோய்க்கூறாக மாற்றம் அடைகிறது. எல்லாவிதமான அழுத்தங்கள், பிறழ்வுகள், பாகுபாடுகளுக்கு மத்தியிலும் மக்களைச் சிரிக்க வைக்க வேண்டிய பொறுப்புள்ள கோமாளி இந்தச் சூழலில் குழப்பமடைகிறான். அவனது சிரிக்கும் முகமூடிக்குப் பின்னால் உள்ள கோமாளியின் துயர உடல் புழுங்கிக் கனக்கத் தொடங்குகிறது; அப்போது அவன் சிரிப்பு கொடூரமாகிறது.

 இத்திரைப்படத்தின் இயக்குனர் டோட் பிலிப்ஸ்சும் ஒளிப்பதிவாளர் லாரன்ஸ் ஷெர்-ம் ஒரு கைவிடப்பட்ட நம்பிக்கையே வற்றிப்போன ஒரு உலகத்தை காத்தம் நகரமாக இருள்நீலத்தில் சித்திரித்து விடுகின்றனர். அவமதிப்பு, எதிர்பாராத தாக்குதல்கள், அத்தனை வகையான புறக்கணிப்புகளையும் அனுபவிக்கும் ஆர்தர் இப்படிச் சொல்கிறான். “இனியும் நான் பரிதாபமாக என்னைப் பற்றி நினைப்பதற்கு விரும்பவில்லை”.
  
இங்கிருந்து கோமாளியின் பிரத்யேகத் திருவிழா தொடங்குகிறது. பாதாள ரயிலில் தன்னைத் துன்புறுத்தும் குடிகார வர்த்தகர்கள் மூன்று பேரைக் கொன்ற பிறகு வீடு திரும்பும்போது, தினசரி ஒரு மலையை ஏறிக் கடப்பது போல சோர்வுடனும் சுமையுடனும் ஏறும் மேம்பாலப் படிகளை உற்சாகமாக ஆர்தர் ப்ளக் கடக்கிறான். நகைச்சுவை டாக் ஷோ நடத்தும் முர்ரே பிராங்க்ளினைக் கொன்று திரும்பும்போது முழுமையான கோமாளியாக ஆடிப் பாடியபடி அந்தப் படிகளில் இறங்கிவருகிறான். அவனுக்கு விதிக்கப்பட்ட பொழுதுபோக்கு என்னும் இலக்கணத்தை அவன் மாற்றி எழுதுகிறான். “நகைச்சுவை என்பது தற்சார்பானது, முர்ரே. அவர்களெல்லாம் சொல்வது போன்றது அல்ல? உங்கள் எல்லாருக்கும் இந்த அமைப்புக்கும் எல்லாம் தெரியும், எது நல்லது எது தவறென்று. நீங்கள் தான் எது வேடிக்கை, எது வேடிக்கையானதல்ல என்பதையும் முடிவுசெய்கிறீர்கள்என்று துப்பாக்கியை எடுப்பதற்கு முன்னால் சொல்கிறான்.

தனது வாழ்க்கையை விட தனது மரணம் கூடுதல் சென்ட் நாணயங்கள் மதிப்புள்ளது என்று தனது டைரிக் குறிப்புகளில் எழுதும்ஜோக்கர்’, முர்ரே பிராங்க்ளினிடம், தனக்கென்று ஒரு அரசியலும் இல்லை, மக்களை மகிழ்விப்பதுதான் தன்னுடைய இலக்கு என்று இறுதியிலும் சொல்கிறான். அத்துடன் திரைப்படம் ஆரம்பித்ததிலிருந்து காவல்துறையினர் கைது செய்து கொண்டுபோகும் போதும், கடைசியில் சிறையில் மனநோய் மருத்துவரைக் கொன்றுவிட்டு ரத்தக் கால்களுடன் நடந்து தப்பிக்கும்போதும் அவன் தனியனாகவே தெரிகிறான்.

ஜோக்கர்’-ன் செயலால் தூண்டப்பட்டு அவனுக்குப் பக்தர்களான கோத்தம் நகரின் பெருங்கூட்டத்தில் ஒரு பெண் கோமாளியைக் கூட நான் அடையாளம் காணவில்லை. ஏன்? 

அடர் நீலம், அடர் சிவப்பு, அடர் மஞ்சளில் துயரமும் மூட்டமும் கொண்ட காத்தம் நகரத்தில் ‘ஜோக்கர்’-ன் முகமும் உடைகளும் மட்டுமே எடுப்பாக ஒளிமிக்கதாக, வண்ணங்கள் பூத்துச் சிரிப்பதான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அவன் ஈடுபடும் கொலைகள், கொடூரங்களில் ஒரு குழந்தையின், ஒரு விலங்கின், ஒரு திருநங்கையின் பாவம் உள்ளது. அங்கே வீரார்த்தம் அல்ல; கையறுநிலையும் பலவீனமும் படைப்பூக்கமுமாகவே அவன் வெளிப்படுவதால் எனக்குக் களிப்பூட்டும் கடவுளாக 'ஜோக்கர்' மாறுகிறான். அங்குதான் ஒட்டுமொத்தத் திரைப்படமும் பண்டிகையாக எனக்கு மாறிவிட்டது. அந்தப் பண்டிகையின் ஆற்றல் இரண்டு வாரம் கழித்தும் இன்னும் உடலில் நீடிக்கும் நிலையில் தான் எழுதுகிறேன்.   

தனக்குத் துப்பாக்கியைத் தந்த சக கோமாளியைக் கொன்றபிறகு, கொல்லப்பட்டவனுடன் வந்த பிரியமான குள்ளனை வீட்டைத் திறந்து வெளியேவிடும் காட்சி ஒரு உதாரணம். அத்தனை களேபரத்துக்கும் மரணத்துக்கிடையிலும் அந்தக் குள்ளன் கதவு திறந்தவுடன் வெளியே தப்பினோமென்று ஓடும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது. அப்போது அயர்ந்து போய் கேமராவைப் பார்க்கும் ‘ஜோக்கர்’-ன் கன்னத்தில் உள்ள கோமாளிச் சிவப்பு, ரத்தப்புள்ளிகளால் ஆனது. 

Comments

Popular posts from this blog

க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு

தமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப

பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்?

ஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர்? உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா? இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும்.  அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர்? நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்