Skip to main content

அருவிக்குப் போகும் பெண்





இன்னும் எத்தனையோ மர்மங்கள் அவிழாத
வயிறான
பொங்குமாங்கடலில்
ஹோவென்று விழுந்து
வெள்ளியாய்ப் பரவி
பின்னிரவில்
தனிமையைக் கூடுதலாகச் சூடியிருந்தது
சில்லிப்பின் பேரருவி

உறவினர் திருமணத்துக்காக முந்தின நாளே
தென்காசி வந்திருந்தவளை
மூன்று மைல் தாண்டியும்
பூந்தூரலின் தோரணமசைத்து
அழைத்தது பேரருவி

மணப்பெண்ணுக்கு தாழம்பூ பின்னலிட்ட
விரல்களை முகர்ந்தபடி
ஊரில் விட்டுவந்த உடையவனை நினைத்து
யானைப் பாலத்தில்
ஒற்றை ஆளாய் பேருந்தேறினாள்

நாகம் போல புட்டம்வரை படர்ந்திருந்த சடையை
தொட்டுப் பிடித்துப் பெருமிதம் கொண்டாள்
சாரல் காற்றில் மூலிகை மணக்க
ஜல் ஜல்லெனும் கொலுசொலி
முதல்முறையாக
தனக்கே எதிரொலிக்க
கையில் பையோடு
தன்னை நோக்கி வருபவளைப் பார்த்துச் சிவந்தது
பேரருவி

காலத்தில் குற்றாலத்தைக் கடந்துபோன சிற்பிகள்
நீர்பட வாய்ப்புள்ள  கால்பட வாய்ப்பில்லாத
கல்சரிவுகளில்
செதுக்கிய லிங்கங்கள்
அவள் ஆகிருதி கண்டு கண்மூடிச் சுருங்கி விரிந்தன
அழுதுவடிந்த குழல்விளக்கொளியோடு
கருங்கற்களைக் குழைத்துப் பூசிய
சிமெண்ட் தரை பிசுபிசுக்கத் தொடங்க

நீரின் காமம் கால்களைப் பின்ன
ஆண் இடம் பெண் இடம் பேதம் தெரியாமல்
சரக்கென்று செருகிக் கொண்டாள்
நீரின் அடிக்குளிர் ஊசியாய் முதலில் குத்த
வெளியே குழந்தை போல ஓடிவந்தாள்
நடுங்கியபடி
பிரமாண்டத்தைத் தாங்கி நிற்கும்
மலையின் கோடுகளைப் பார்த்தாள்
மரங்களின் பச்சையெல்லாம் நீலமாய்த் தெரிந்தன
அருகில் விழுந்துகொண்டிருந்த பேரருவி
காதல் சிறுவனென
குழைந்து அழைக்க
நெருங்கிச் சேர்ந்தாள்
நீரும் உடலும் வெதுவெதுப்பை உணர
அருவியின் காட்டுக்குள் திளைக்கத் தொடங்கினாள்

பிதுர் கண்டம் தீர்த்த புரம்
சிவத்துரோகம் தீர்த்த புரம்
மதுவுண்டான் உயிர் மீட்ட புரம்
பவர்க்க மீட்ட புரம்
வசந்தப் பேரூர்
முதுகங்கை வந்த புரம்
செண்பகாரணிய புரம்
முக்தி வேலி
நதிமுன்றில் மாநகரம்
திருநகரம்
நன்னகரம்
ஞானப்பாக்கம்
வேடன் வலஞ்செய்த புரம்
யானை பூசித்த புரம்
வேத சக்தி பீட புரம்
சிவ முகுந்த பிரம புரம்
முனிக்கு உருகும் பேரூர்
தேவகூட புரம்
திரிகூடபுரம்
புடார்ச்சுனபுரம்
குறும்பலா விசேட புரம்
அல்ல

திருமால் சிவனான திருவிளையாடல்
குறுமுனி குறும்பலா
பகலில் மலையை மறைக்க முயலும்
குரங்குகள் அல்ல
அவ்விடம் அப்போது
தலம் மறந்து தலவிருட்சம் மறந்தது
எல்லாவற்றையும் கழுவி மறந்தழித்து
விழுந்து
தானும் அவளுடன்
குளித்துக் கொண்டிருக்கிறது பேரருவி

அவள் உள்ளே குளிக்கும் போது
மலையெல்லாம் சடைசடையாக முளைக்கத் தொடங்கின
அருவிகள்
அருவி ஒன்றல்ல
கதை ஒன்றல்ல
எதுவுமே ஒன்றல்ல
அவள் அவ்வப்போது
இப்போதும்
அகாலத்தில் பேருந்தில் வந்திறங்குகிறாள்
விளக்குகளின் கண்களை அவிக்கும் இருட்டில்
பேரருவிக்குள் கூந்தல் அவிழ்த்து நுழைகிறாள்
அவள் அருவிக்குள் போகும் கதையை
மட்டுமே
எனக்குச் சொல்லத் தெரியும். 

Comments

/அருகில் விழுந்துகொண்டிருந்த பேரருவி
காதல் சிறுவனென
குழைந்து அழைக்க
நெருங்கிச் சேர்ந்தாள்/
அருவியை ஆண் என்று வர்ணிப்பது உவப்பளிக்கிறது.விரும்பிச் சேர்வதும், சிலிர்த்து விலகுவதும், மீண்டும் கூடுவதும்...