Skip to main content

இம்சை அகிம்சை





ஓங்கியடர்ந்த ஒரு காடு
அதில் உயர்ந்த ஒரு மரம்
சிங்கத்தைப் பார்த்தவுடனேயே
அண்டசராசரமும் குலுங்கின.

சிங்கம்
பெரிய மான் ஒன்றைக் கவ்வியபடி
சரசரவென்று ஏறி கிளைகளுக்குள்
மறைந்தது

அதைப் பார்த்த திரைக்கு வெளியேயும்
வேட்டையின் தினவு படர்ந்தது.
ஒரு நள்ளிரவில்
அப்பா இப்படித்தான்
அம்மாவை மரத்துக்கு மேலே இழுத்துச் சென்றார்
அன்றிலிருந்து
கடவுள் நிர்வகிக்காத காடாகத் தான்
வீடுகள் இருக்கின்றன
அவர்மீது தொடங்கிய கொலைவன்மம் தான்
இத்தனை ஆண்டுகளில்
வேறு வேறு உடல்களுக்கு
வேறு வேறு நபர்களுக்கு மாறியிருக்கிறது
அவனுக்கு அன்று உறக்கம் வரவில்லை
மானின் தலையும் உடலும்
ஆடி நடுங்கியபடி
ஒரு நள்ளிரவுக்குள் எரியும் பகலில்
சிங்கமும் மானும் நிகழ்த்தியது இம்சைதான்
மானின் தலையும் உடலும் ஆட
ஒரு நள்ளிரவுக்குள் எரியும் பட்டப்பகலில்
சிங்கமும் மானும் நிகழ்த்தியது அகிம்சையும்தான்
என்றும்
உலகம் சொல்லித் தருகிறது.

Comments