நாங்கள் குடியிருந்த வளவில்
எல்லாருக்கும்
முதியவளாகவே
அறிமுகமான அருணாசலத்தாச்சியின்
வீட்டு நடு அறைச் சுவரில்
கஜேந்திர மோட்சம்
காலண்டர் ஓவியத்தைப் பார்த்தேன்
அந்தப் பழுப்புச் சித்திரத்தின் மேல்
வைத்த கண்ணை
இன்னமும் எடுக்கவே இல்லை
அந்தப் படத்தைப் பார்த்தபோது
நான் முதலையாக இல்லை
கஜேந்திரனை சக்கராயுதம் கொண்டு
மேலேயிருந்து காப்பாற்றிய
ஆதிநாராயணனை
நான் சரியாகப் பார்க்கவில்லை
யானையின் தீனக்குரல் கேட்கிறது இன்னமும்
அது மீளும்
நிம்மதியும் அந்தச்
சித்திரத்தில்
இருக்கிறது
சிறுவனின் கதை
முதலையில் தொடங்கி
யானை வழியாக
ஆதிமூலத்தில்
முடிகிறது
பச்சையாய் நீரோடை
முதலை பற்றியிருக்கும்
யானையின் காலும்
தெரியும் ஸ்படிகத் தன்மை
காலில் ரத்தம்
கண்ணில் கண்ணீர்
கசிய
தும்பிக்கையை உயர்த்தியபடி அபயக்குரலிடும்
யானை
சாட்சியாகச் சுற்றிலும் காடு
மலைகள்
தாமரைகள்.
Comments