Skip to main content

கடலைச் சிறுபடம் எடுக்கும் பாம்பு


நீயும் நானும் கோர்த்துக்கொண்ட போது

கடல் என் முன்னர்

முதல் முறையாகப் பூத்தது

என்பதால்

உன்னைப் பார்த்தபிறகு

கடலைப் பார்க்கும்போது

எனக்கு கடல் மட்டும் போதுவதில்லை

கண்ணே


கடலுக்கு அருகிலேயே 

தாவரங்கள் சிலிர்த்து ஆடும்

மலை வேண்டும்


மலையும் கடலும் சேர்ந்து

எனக்குச் சித்தித்துவிட்டால்

அதுமட்டும் போதாது கண்ணே


கடல்மட்டத்துக்கு மேலே எங்கோ சுனையில்

சுரந்த நன்னீர் 

வழிந்திறங்கி

விரிந்திருக்கும் நீர் நீலத்தில்

கரையும்போது 

நனைத்துச் செல்ல 

உன் பாதங்கள்

என் உடன்

வேண்டும்


டினோசாரைத் 

துடைத்தழித்த எரிமலைக் குழம்பில்

உருவான மலையாம்

நிலம் அதுவாம்

பவளப் பாறைகளாம்

அப்போது உஷ்ணத்தில் இருந்தவை

இப்போது உன்னுடன் தொட்டுப் பார்க்கும்போது

அவை நீர் போல நீர் போல மௌனமாய்ச் சில்லிடுமாம்


நீலம் ஏதோ ஒரு கதியில் பச்சையோடு முயங்கி

பொன்னென ஒளிர்ந்து மின்னும்

கடல் போதாது கண்ணே

உன் வயிறு போல அதில் குழைந்தேறும்

அலைவாய் புசிக்கும் மலை போதாது கண்ணே

பந்தத்தின் ரத்தவீச்சமே அற்ற

எலும்புகளெனத் தோன்றும்

பவளப்பாறைகளின் வசீகர எச்சங்கள் 

மட்டும் நாம் பொறுக்க அங்கே போதாது பெண்ணே



நீயும் நானும் அனைத்தையும் கோர்க்கும்போது

மலையிலிருந்து நழுவி 

இறங்கி

பெருங்கடலைப் பார்த்து 

மலைக்கும்போதில்

தோன்றிய துணையாக

தலைதூக்கி நம்மைப் பார்த்து

சிறுபடம் எடுக்க

ஒரு குட்டிப் பாம்பும் 

உடன் வேண்டும். 

Comments