Skip to main content

ஒருவர் சாவதும் ஒருவர் இருப்பதும்


ஜன்னல்கள் உட்பட முழுக்க அடைக்கப்பட்டு உள்ளே தாழிடப்பட்ட விடுதி அறையில், சில்லிடும் மழைபோல இறங்கும் டெல்லி குளிர் எனக்குப் புதியது. மாலை ஆகிவிட்டால் குளிரில் அசைவுகள் குறைந்துவிடுவதோடு தலையும் உறைந்துவிடுகிறது. குளிர், குளிராக மட்டும் இல்லை; குளிருடன் இனம்புரியாத பயமும் சேர்ந்து இந்த அறையில் இருக்கிறது. இந்தக் குளிரில் தாகம் தீராமல், தண்ணீரைத் தித்திப்புடன் அருந்துகிறேன். 

கட்டிலின் கீழே இறங்கினால் காலுக்கு எட்டும்படி செருப்பைப் போட்டிருக்கிறேன். அடிக்கடி சிறுநீர் கழித்துவிட்டு, கனத்த கம்பளியைக் கல் சுவர் போல மூடிப் படுத்திருக்கிறேன். வழக்கமாக விளக்கை அணைத்துவிட்டு இருளிலேயே தூங்கமுடியும் எனக்கு விளக்கை அணைக்க முடியாதிருந்தது. அறையில் இருக்கும் பயம் என்னைக் கவ்வாமல் இருக்க இந்த வெளிச்சத்தைத் துணைக்கு வைத்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன். அப்படியும் பாதி உறக்கம் தான் அதிகாலை வரை. என் அறை ஜன்னலுக்கு வெளியே கைநீட்டும் தூரத்தில் புழுதி படிந்து பகலிலும் இருண்டு தெரியும் சந்தின் மூலையில் இருக்கும் மின்கம்பத்தில் புறாவொன்று தலையை கழுத்துக்குள் செருகிக் கொண்டு உறங்க முயல்கிறது. ஜன்னலிலிருந்து அதைப் பார்க்கும் நான் அந்தப் புறாவுடன் அடையாளம் கண்டுகொண்டேன். அது கண்ணைச் சிமிட்டி என்னைப் பார்த்துத் திரும்ப கழுத்துக்குள் புதைந்துவிடும். அதன் கம்பளியை அது தன்னிறைவில் சம்பாதித்திருக்கிறது.  

நேற்றிரவு பத்து மணிக்கு மேல் அறைக்கு வெளியே கேட்ட அரவம் இன்றைக்கு பதினோறு மணிக்கு மேல் தொடங்கியது. விடுதியின் ரிசப்ஷனுக்கு காலிங் பெல்லை அழுத்தி, விடுதி அறையில் தங்கியிருப்பவர்கள் சத்தம்போட்டு இந்தியில் அழைக்கும் சத்தம். அவர்களுக்கு இப்போதுதான் இரவு தொடங்குகிறது. அவர்களைக் குளிர் இந்த அளவு தொந்தரவுபடுத்தவில்லை. அவர்கள் பழகியிருக்கவும் கூடும். லாட்ஜ் பையன்கள் படிகளில் ஓடும் சந்தடி, கதவை தடாலென்று திறக்கும் ஒலி, சின்னச்சின்னதான சர்ச்சைகள், ஆர்ப்பாட்டம் அத்தனையும் கதவுக்கு வெளியே எனக்கு வெறும் இரைச்சல்தான். நேற்று இந்தச் சந்தடி ஓய அரைமணி நேரம் ஆனது. இன்று காலையில் பார்க்கும்போதுதான் தெரிந்தது. காலிசெய்யப்பட்ட எதிர் அறையில் மது அருந்தியதற்கான எச்சங்கள். காலையில் இந்தச் சத்தம் குறித்துப் புகார் செய்யவேண்டுமென்று நினைத்தேன். அவர்களுக்குப் புரியவைக்க முடியாது. தங்கப் போகும் இரண்டு நாட்களுக்கு அந்தப் புகார் அவசியமும் அல்லவென்று தோன்றியது. 

இன்றைக்கு அந்தச் சந்தடி தொடங்கியபோதே ஏதோ சண்டை போல இருந்தது. நடுநடுவில் ரிசப்ஷனை அழைக்கும் காலிங்பெல் நான் இருந்த தளத்தையே அதிரவைத்துக் கொண்டிருந்தது. ஆட்கள் தடதடவென்று படியில் ஓடும் சத்தம். சில நிமிடங்களில் கட்டிலைத் தூக்கி உருட்டும் சப்தம். எனது தளத்திலோ மேல் தளத்திலோ உள்ள அறையில் வேறு ஏதோ அசம்பாவிதம் நடக்கவிருப்பது போன்று தெரிய எழுந்து அமர்ந்தேன். வேறு வழியில்லாமல் கம்பளியை உதறிவிட்டு, செருப்புக்குள் கால்களைச் செருகிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தேன். என் தளத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. 

மேல் தளத்திலிருந்துதான் சத்தம். படியேறினேன். குழல்விளக்கொளி வெள்ளையாக நிழலேயற்றுத் தெரியும் அறையிலிருந்து தான் சத்தம் வந்துகொண்டிருந்தது. இரண்டு பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மூன்று பேராகவும் இருக்கலாம். அங்கே பெண் ஒருத்தி இருக்கும் அரவம் இல்லாதது அந்தச் சங்கடத்திலும் ஒரு நிம்மதியை அளித்தது. எல்லா சந்தடிகளும் அங்கிருந்துதான் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் மூன்று படிகள் ஏறிக் கடந்தால் அந்த அறையில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ளலாம். ஆனால், அந்த மூன்று படிகளைக் கடந்து அந்த அறையில் நடந்திருக்கும் எதற்குச் சாட்சியாகப் போகிறேன் என்று எனக்குத் தோன்ற சில நிமிடம் நின்றுவிட்டு மறுபடியும் அறைக்குத் திரும்பிவிட்டேன். மொழி தெரியாமல், தனியாக வந்து சில நாட்களுக்குத் தங்கியிருக்கும் இந்த நகரத்தில் எந்த அசம்பாவிதத்தையும் தடுத்து நிறுத்தும் வல்லமையோ எந்த அசம்பாவிதத்துக்கும், சாட்சியாக இருக்கும் திறனோ எனக்கு இல்லை என்ற உணர்வுடன் அறையை உள்ளே பூட்டிக் கொண்டு படுத்தேன்.

மேல்தளத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தபின்னர் கட்டிலில் படுத்தபின்னர், கம்பளியிலிருந்து வெளியே காலை நீட்டிக் குளிருக்குக் காண்பித்தேன். எழுந்து முதல்முறையாக விளக்கை அணைத்தேன். அறையின் இருட்டைக் கண்ணைத் திறந்து பார்க்க முடிந்தது. சந்தடிகள் வெளியே குறையத் தொடங்கின. பயம் இப்போது அறையில் இல்லை. உறங்கத் தொடங்கினேன். 

அடுத்த நாள் ரிசப்ஷனில் இருந்த மேலாளரும் கிழவருமான சுஷில் குமாரிடம் என்ன சத்தம் என்று தக்கித் திக்கிக் கேட்டேன். அவர் கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் என்றார். 

நான் பார்த்தது, உணர்ந்தது அங்கே நடக்காமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் அந்தச் சம்பவம் உண்மை.

எல்லாரும் உறங்கும் அறைக்கு நடுவில் வெளிச்சத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கும் ஓர் அறை நமக்கெல்லாம் பரிச்சயமானதுதான். ஆனால், அந்த அறைக்கு நித்திரையையும் அமைதியையும் கொண்டுவருவதற்கு நம்மிடம் மொழி இருக்கிறதா. 

நட்ட நடுநிசியில் யாருக்கும் பகிரமுடியாமல் வெறும் ஓலமாக, சந்தடியாக துயரம் இப்படித்தான் கடக்கிறது. ஒரு துயரத்தின் அறை குழல்விளக்கின் வெள்ளை ஒளியில் உள்ளது. இன்னொரு துயரத்தின் அறை மஞ்சள் வெளிச்சம் கொண்டது. எதுவும் மாறாத அந்த அறையில் மிகத் தொலைவில் இருக்கும் என் அம்மா ஞாபகத்துக்கு வந்தாள். நகுலனின் ‘குரூரம்’ கவிதையும் ஞாபகத்துக்கு வந்தது. உண்மையிலேயே அது குரூரம் தான்.

ஒருவர் 

சாவதும்

ஒருவர்

இருப்பதும்

வெறும் சாவு

என்பதைவிட

இது

மிகவும் குரூரம்

இதைச் சொன்னதும்

சுசீலாதான்.

இதைச் சொன்னதும் சுசீலாதான் என்று சொல்லும்போது அந்தக் குரூரம் அந்தத் துயரம் சுரக்கத் தொடங்கிய இடத்தையும் நகுலன் காட்டிவிடுகிறார். 

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக