Skip to main content

க. நா. சு வரைந்த உயிர்க்கோடுகள்


 ‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று நகுலன் தனது ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்கமுடியக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில், க. நா.சுப்ரமண்யம் எழுதியிருக்கும் இந்த நூலில் 41 எழுத்தாளுமைகளைப் பற்றிய சிறு கட்டுரைகளின் முக்கியத்துவம் புலப்படுகிறது. க. நா.சுவால் அப்படி இருக்க முடிந்திருந்க்கிறது. அத்துடன் அவர்களைத் துல்லியமாக மதிப்பிடவும் முடிந்திருக்கிறது. தமிழில் கடந்த நூற்றாண்டில் நுண்கலை, இலக்கியத் துறைகளில் இயங்கியவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள போதிய கட்டுரைகளோ, வாழ்க்கை சரிதங்களோ போதுமானவை எழுதப்படயில்லை. தொ. மு. சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறும், பாலசரஸ்வதி குறித்து அவரது மருமகன் டக்ளஸ் நைட் எழுதி, தமிழில் பின்னர் மொழிபெயர்க்கப்பட்ட பாலசரஸ்வதி பற்றிய நூலும்தான் முழுமையானதாக உடனடியாக ஞாபகத்துக்கு வருவது. கு. அழகிரிசாமி முதல் பிரமிள் வரை சுந்தர ராமசாமி எழுதிய நனவோடை நூல்களும், சி . மோகன் எழுதிய நடைவழிக் குறிப்புகளும், நடைவழி நினைவுகளும் முக்கியமானவை. சின்னச் சின்னத் தனிக்கட்டுரைகள், அஞ்சலிக்குறிப்புகள் வழியாக அசோகமித்திரன் நிறைய எழுத்தாளுமைகளின் சித்திரங்களை உருவாக்கியுள்ளார். 

தன் சுயத்தின் கனத்தை ஏற்றாமல், அந்த ஆளுமைகளுடன் மேற்கொண்ட உறவின் வழியாக அவர்களது உயிர் சித்திரங்களை நமக்கு முன்னர் நிகழச் செய்திருக்கிறார் க. நா. சுப்ரமண்யம். ஒவ்வொரு எழுத்தாளுமைகளின் எழுத்து ரீதியான முக்கியத்துவம், சிறந்த படைப்புகள், குணநலன்கள், குறைநிறைகள், உறவு ஏற்பட்ட சூழல் இவைதான் ஒவ்வொரு கட்டுரையின் தன்மையாக உள்ளது. எந்த ஆளுமைகளும் மிகையாக ஏற்றப்படவோ தூற்றப்படவோ இல்லை. எல்லாரையும் குறிப்பிட்ட வார்படத்தில் தன் மொழியைக் கொண்டு, தன் தரப்பைக் கொண்டு நிரவும் வேலையையும் இந்தக் கட்டுரைகளில் க. நா. சு. புரியவில்லை. மனிதர்களை, அவர்தம் ஆளுமைகளை, அவர்களுக்கேயுரிய பலவீனங்களையும் அங்கீகரித்து அவர்களது மேன்மையையும் சிறப்பையும் ஞாபகமூட்டும் கட்டுரைகள் இவை.

இந்தியாவெங்கும், பிரான்ஸ் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் குறைந்த வசதிகளுடன் அலைந்த ஒரு எழுத்து வேதாந்தியின் குறிப்புகள் இவை. இப்படித்தான் அக்காலம் இருந்தது, இப்படித்தான் மனிதர்கள் இருந்தார்கள், அதை இப்படி எழுதுகிறேன் என்ற பட்டும்படாத மொழியில், த்வனியில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்தாளுமை குறித்துப் பேசும்போதும் அவரது சமூகப் பின்னணி, அவரைச் சந்தித்தபோதிருந்த, படைப்புகளில் உள்ள அரசியல் பின்னணி எல்லாவற்றையும் சின்னச் சின்னக் கீற்றல்களில் வெளிப்படுத்துகிறார். அக்காலகட்டத்தில் இருந்த பத்திரிகை சூழல், எழுத்தாளுமைகளின் குடும்ப, பொருளாதார, சமூகச் சூழல்கள் எல்லாமும் இடம்பெற்று விடுகின்றன. சங்கர் ராம் பற்றி எழுதும்போது 1920, 30 களில் உலகெங்கும் நகரங்களிலிருந்து கிராமத்துக்குச் சென்று வாழும் ஆர்வமும் இயக்கங்களும் இருந்ததைக் குறிப்பிடுகிறார். அந்தப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் என்று நட் ஹாம்சனின் ‘நிலவளம்’ நாவலைக் குறிப்பிடும்போது அந்தப் படைப்புக்கு வேறொரு பொருள் கிடைக்கிறது. திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் என்று அப்போதும் எழுத்தாளர்கள் குழுக்குழுவாக ஊர் பாசத்துடன் அப்போதும் இருந்திருக்கிறார்கள்.  

முதல் கட்டுரை ‘ராஜாஜியும் நானும்’. ராஜாஜியின் சிடுசிடுப்பான குணமும் மேட்டிமைத்தனமும் பதிவாகியுள்ளது. பாரதி தொடங்கி க. நா. சு. வரை எழுத்துக் கலைஞர்கள் மீது ராஜாஜி வெளிப்படையாகக் காட்டிய அசிரத்தையும் நமக்குத் தெரியவருகிறது.  அவரது படைப்புகள் சார்ந்து கடுமையான விமர்சனத்தையும் வைக்கும் க. நா. சு, இலக்கியத் தரம் என்பதைவிட பெரிய மனிதனாக இருப்பதற்கு சக்தி வேண்டுமென்றும், அத்தகைய மனிதர் ராஜாஜி என்றும் முத்தாய்ப்பு வைக்கிறார். கட்டுரையின் இறுதியில் ராஜாஜி பற்றிய மதிப்பு நம்மிடம் திரள்கிறது. புதுமைப்பித்தனுடனான உறவை ‘அமைதி தராத நட்பு’ என்று கூறிவிடுகிறார். அந்த மூன்று வார்த்தைகளில் எத்தனையோ மௌனம் உறைந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் எதிர்மறையான குணங்கள் அத்தனையையும் மீறி அவரது படைப்பு மேதமை மீது இருந்த வசீகரத்தை அந்தக் கட்டுரையில் தக்கவைத்துக் கொண்டு நம்மிடமும் அதைக் கடத்திவிடுகிறார். 

மௌனி பற்றிய கட்டுரையைப் படித்து முடிக்கும்போது, மௌனி கதை ஒன்றைப் படித்து முடித்தவுடன் ஏற்படும் அதே பெருமூச்சு வருகிறது. தமிழராக இருந்து கன்னடத்தில் எழுதிப் புகழ்பெற்ற மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் குறித்துப் பேசும்போது அவர் பேணிய பழமை பற்றிய சித்திரம் கிடைத்துவிடுகிறது. மந்திர தந்திரங்கள், யோக முறைகள், சாஸ்திரம், மரபிலக்கியம், சினிமா என பலதுறைகளில் ஆளுமையும் சாகச வாழ்க்கையும் கொண்டிருந்த ச. து. சு. யோகியார் குறித்த கட்டுரையில் க. நா. சுவுக்கு அவரது ஆளுமை இருந்த கிறுகிறுப்பு தெரிகிறது. மண்ணாசை நாவல் எழுதிய சங்கர் ராம் பற்றி எழுதும்போதும் குறிப்பிட்ட எழுத்தாளுமைகளின் சிறந்த படைப்புகள் கூட மறக்கடிக்கப்பட்டு விட்டதை எழுதும்போதும் தொடர்ந்து தமிழர்களின் துரதிர்ஷ்டம் என்று திரும்பத் திரும்ப எழுதுகிறார். 

வில்லியம் பாக்னர், சார்த்ர், ஆல்பெர் காம்யூ, மால்ரோ, அம்ருதா ப்ரீதம், ஆர்தர் கொய்ஸ்லர், ஸ்டீபன் ஸ்பெண்டர் என அவர் நெருங்கிப் பழகியிருக்கும் ஆளுமைகளைப் பார்க்கும்போது தகவல் தொடர்பு, பயண வசதிகள் இல்லாத ஒரு காலகட்டத்தில் க. நா. சுப்ரமண்யம் கொண்டிருந்த எழுத்து ரீதியான உத்வேகமும் லட்சியமும் மட்டுமே இத்தனை வகையான அனுபவங்களுக்குக் காரணங்களாகியுள்ளது என்று தோன்றுகிறது. தன்னலம் பாராமல், வசதியான சமூகப் பின்னணி கொடுக்கும் அனுகூலங்கள், எதிர்காலம், வாய்ப்புகளைத் துறந்து எழுத்து, பத்திரிகை, பதிப்புச் சூழல்களில் தங்கள் ஊனையும் உயிரையும் கரைத்துக் கொடுத்து ஒரு பண்பாட்டைப் போஷித்த தமிழ் ஆளுமைகளின் ஜீவித சித்திரங்கள் அடங்கிய நூல் இது.

க. நா. சு., அந்தந்த ஆளுமைகளுடன் ஏற்பட்ட உறவு, சூழல்கள் ஆகியவற்றை எழுதும்போது அது மிகையல்ல, பொய்யல்ல, சுயபிம்பத்தை ஏற்றிக் காட்டும் ஏமாற்றல்ல என்று மிகச் சாதாரணமாக உணரமுடிகிறது. அந்த நம்பகத்தன்மை கூட தீவிர எழுத்துச் சூழலில் தற்போது மறைந்துவிட்ட நிலையில் அந்தச் சாதாரணமும் அந்த நேர்மையும்தான் இந்தப் புத்தகத்தை அபூர்வமான ஒன்றாக்குகிறது.

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக