Skip to main content

எல்லாம் அழுகையிலிருந்தே தொடங்குகின்றன கிம் கி டுக்பார்வையாளனின் உள்ளுறுப்புகளுக்குள்ளும் உணர முடியும் வன்முறை மூலமும் தியானமும் இருளும் கவித்துவமும் கொண்ட பாலுறவுக் காட்சிகள் மூலமும் எதைத் திரும்பத் திரும்ப கிம் கி டுக் வலியுறுத்தினார்?

தென் கொரியாவின் சமூக எதார்த்தம், பொருளாதார எதார்த்தம், ஆண்பெண் உறவுகளின் எதார்த்தம்தான் கிம் கி டுக்கின் களம். ஆனால், ஓர் உருவகக் கதை போல எதிரெதிர் குணங்கள் கதாபாத்திரங்களாக முரண்படுவது வழியாக, ஓர் அற்புத எதார்த்தத்தையும் உலகளாவிய குணாம்சத்தையும் உருவாக்கிவிடுபவர். கடந்த இருபது ஆண்டுகளில் தென் கொரியாவுக்கு வெளியே உலக சினிமாப் பார்வையாளர்களை வியக்கவைத்த சில சினிமா மேதைகளில் ஒருவர் கிம் கி டுக். கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உலக சினிமாப் பார்வையாளர்களின் மத்தியில் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமாகக் கொண்டாடப்பட்ட படைப்பாளியும் கூட. சமகால நகர்ப்புற வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளையும், அதன் காரணமாக உருவாகும் வன்முறையையும் குரூரங்களையும் எந்த ஜோடனையும் இல்லாமல் வெளிப்படுத்திய படங்கள் இவருடையவை. சினிமாவைப் பொறுத்தவரை 59 வயது என்பது விடைபெறுகிறவயதில்லை. 

மார்ட்டின் ஸ்கார்ஸஸி, டெரன்ஸ் மாலிக் தொடங்கி வெர்னர் ஹெர்சாக் வரை 70 வயதுக்கு மேலும் தங்களது உச்சபட்சப் படைப்புத்திறனை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் கலைஞர்கள்தான். ஆல்பிரட் ஹிட்ச்காக்கும், அகிரா குரசவாவும் 60 வயதுக்கு மேல் தங்கள் படைப்பு வாழ்வின் மூன்றாம் பருவத்துக்குள் நுழைந்து சினிமா ஊடகத்தின் மேல் தங்கள் ஆளுமையையும் முத்திரையையும் பதித்தவர்கள். 

'பேட் கை' திரைப்படம் வழியாகத்தான் தீவினையின் ஒட்டுமொத்த சொரூபமாக எனக்கு அறிமுகமானார் கிம் கி டுக். நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்ட ஒரு வேலைக்குப் போகும் இளம் பெண்ணை, பாலியல் விடுதித் தரகனும் ரவுடியுமான ஒருவன் கடத்திக் கொண்டுபோய் தனது கைதியைப் போல வைத்திருப்பதுதான் கதை. கடைசி வரை அவனது வன்முறை, பிடிப்பிலிருந்து மீள முடியாத அப்பெண்ணின் கதையைப் பார்த்து முடிக்கும்போது இந்த வாழ்க்கையிலும் இந்த உலகத்திலும் நீடித்துவரும் மீட்சியற்ற தன்மைக்கான எத்தனையோ உதாரணங்களை எத்தனையோ கதாபாத்திரங்களை அந்தப் படம் ஞாபகப்படுத்தும். ஒரு திரைப்படம் வழியாகக் கணநேர மீட்சியை, கணநேர விடுதலையை, கணநேர நிவாரணத்தைக் கோரிச் செல்பவர்களுக்கு கிம் கி டுக் எந்த நம்பிக்கையையும் வழங்குபவர் அல்ல. 

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த ஆஸ்திரிய ஓவியரான எகான் ஷீலேவின் ஓவியங்களில் வரும் காயமுற்ற மனிதர்களின் உடல்களைப் பார்த்துத் தாக்கமடைந்த இயக்குனர் கிம் கி டுக், சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் முறையாக ஓவியக் கல்வியைப் பெற்ற ஓவியர்; இரண்டாண்டுகள் கடற்படை வீரராக ராணுவத்தில் பணியாற்றியவரும் கூட. அவர் ஓவியர் என்பதாலேயே அவர் திரையில் சித்தரித்த வன்முறைகளையும் குரூரங்களையும் கவித்துவம், தீர்க்கம், அமைதி, வன்மையோடு நிகழ்த்திப் பார்வையாளரை அறைய முடிந்தது. 

பிறக்கும்போது சமமாகத்தானே அத்தனை குழந்தைகளும் பிறக்கின்றன. ஆனால், அவர்கள் வளரும்போது தோற்றம், செல்வப் பின்னணி, வர்க்கம் போன்ற பின்னணிகள் சூழந்து அவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். அப்படிப் பிரிக்கப்படுபவர்கள் எப்போதாவது இணைவதற்கு வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்காகவே 'பேட் கை' படத்தை எடுத்ததாகக் கூறுகிறார். சிவப்பு விளக்குப் பகுதியில் வளர்ந்த நாயகன் ஹாங்க் கியின் குணாம்சங்கள் தனக்கும் பிடித்தமானவையல்ல என்று கூறும் கிம் கி டுக், அவனது செயல்களுக்கு அடியில் குழந்தைப் பருவத்திலிருந்தேபெற்ற ஆழமான காயங்கள்தான் காரணம் என்கிறார். அவனைப் போன்ற மனிதர்களுக்கு வறிய சமூகப் பின்னணியில் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படவில்லை என்கிறார் கிம் கி டுக். தங்கள் மீது செலுத்தப்படும் வன்முறையிலிருந்து அவர்கள் தொடர்ந்து காப்பாற்றப்படாத நிலையில் வன்முறையாளர்களாக மாறுகிறார்கள் என்பதாகக் கூறும் கிம் கி டுக், சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்த ஒருவனிடம் காரணமே இல்லாமல் அடிபட்ட ஒரு சம்பவத்திலிருந்து உருவாக்கிய திரைப்படம் தான் 'பேட் கை'. இவரது இயக்கத்தில் வெளியான 'தி அய்ல்' திரைப்படமும் குரூரம், கொந்தளிப்பைக் கொண்ட படைப்புதான்.

கோபம், வன்முறை, குரூரம் போன்ற காயங்களைக் குணமூட்டும் மன்னிப்பு, சகிப்புத்தன்மை ஆகிய அம்சங்களை கிம் கி டுக் தனது 'ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்ட்டர்... அண்ட் ஸ்பிரிங்' படைப்பில் பரிசீலிக்கிறார். ஒரு ஜென் கவிதை, ஓவியம், கதை அனுபவத்தை வழங்கும் திரைப்படம் இது. எத்தனை ஆழமான காயமாக இருந்தாலும் அதை ஆற்ற முடியும் என்ற செய்தியோடு இத்திரைப்படம் மூலம் வருகிறார் கிம் கி டுக். தென்கொரியாவின் எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்த இயற்கைப் பின்னணியில் அமைந்திருக்கும் ஜூசன் பொய்கையின் நடுவில் இருக்கும் மிதக்கும் பவுத்த மடாலயத்தில் இருக்கும் குருவும் குட்டி சிஷ்யனும்தான் பிரதானக் கதாபாத்திரங்கள்.  அந்த மலையில் இருக்கும் தவளை, பாம்பு, மீனை அந்த சிஷ்யன் துன்புறுத்துவதைப் பார்க்கும் குரு அவனுக்குத் தண்டனை அளிக்கிறார். இம்சை என்றால் என்னவென்பது அவனுக்குச் சிறிய வயதிலேயே புரிந்தாலும் அந்த இம்சை தரும் உயிர்ப்பை விட முடியாத அந்தச் சிறுவன் இம்சையிலிருந்து தொடங்கிக் காதலின் உடைமையுணர்வில் அதனால் செய்யும் குற்றத்தின் நெடும்பாதையில் திரிந்து பயணித்து மீண்டும் வீடு திரும்பும் கதை இது.

வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம், வசந்த காலம் என மனிதர்கள் கடக்கும் உணர்ச்சிகளின் பருவங்களையும் அவற்றின் சுழற்சியையும் கிம் கி டுக் 'ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்ட்டர்... அண்ட் ஸ்பிரிங்' படத்திலிருந்து பரிசீலிக்கிறார். வன்முறை, அமைதி, மீண்டும் வன்முறை என்று இந்த உலகம், இந்த வாழ்க்கை சுழன்றுகொண்டேயிருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார் என்று தோன்றுகிறது.

கிம் கி டுக்கின் படைப்புகளில் ஓரளவு அமைதியும் கவித்துவமும் கிம் கி டுக்கின் ஓவியத்திறனின் மென்புறமும் கொண்ட திரைப்படமென்று 'த்ரீ அயர்ன்' படத்தைச் சொல்வேன். பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து அந்த வீட்டின் சொந்தக்காரர்கள் வாழும் வாழ்க்கையை சில நாட்கள் வாழ்வதில் காமுறும் டாய் சுக் என்ற வித்தியாசமான திருடனின் கதை அது. அவன் திருடுவது பொருட்களை அல்ல; அந்த வீட்டின் தற்காலிகமான வாழ்க்கையை. நாயகன் டாய் சுக், தற்செயலாகத் தன்னைப் போலவே தனிமையான பெண் சுன் ஹூவாவைச் சந்திக்கிறான். உரிமையாளர்கள் வெளியேறிய காலி வீடுகளைப் போல இருக்கும் நமது சுயங்கள் எல்லாமே இன்னொருவரின் வருகையால் நிரப்பப்படும்போதே நிறைவை உணர்கிறோம். அதேபோல, நாம் வாழாத வீடுகள், நாம் வாழ முடியாத வேறு நபர்களின் சுயங்கள் மேல் கொள்ளும் ஆசையும் மோகமும்தான் அனைத்து முரண்பாடுகளுக்கும் காரணமாகவும் உள்ளன.  கிம் கி டுக், தனி மனித உளவியலின் அம்சங்கள் மோதும் கதையாக உருவாக்கிய 'த்ரீ அயர்ன்' படத்தின் நீட்சியாக, சமீபத்தில் தென்கொரியாவிலிருந்து பாங்க் ஜோன் ஹூ இயக்கி ஆஸ்கர் விருதை வென்ற பேரசைட்-ஐப் பார்க்க முடியும். வேறு வேறு வர்க்கங்கள் மோதும் அரசியல் கதைக்களமாக 'த்ரீ அயர்ன்'-லிருந்து பேரசைட் விரிந்திருக்கிறது.

2018-ல் வெளியான ‘ஹியூமன், ஸ்பேஸ், டைம் அண்ட் ஹியூமன்’ திரைப்படத்திலும் மனிதாபிமானம், ஒழுக்கம் ஆகியவற்றின் எல்லை என்னவென்று கிம் கி டுக் நோவாவின் பேழை போன்ற ஒரு கதையை ஆகாயத்தில் தொங்கும் கப்பல் ஒன்றில் உருவாக்கிப் பரிசீலிக்கிறார். இதுவும் ஓர் உருவகக் கதையே. எல்லா இழப்புகளுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகும் நாயகி புத்துயிர்ப்பு என்று நினைக்கும் தருணத்தில் பெற்ற மகன் வழியாகவே மீண்டும் துன்பத்தின் மீளாப் பாதைக்கு இழுக்கப்படுகிறாள். வானத்தில் மிதக்கும் அந்தக் கப்பலில் துயராலான தோட்டம் பெருகி வளர்ந்துகொண்டே இருக்கிறது. 

கிம் கி டுக்கின் திரைப்படங்களில் வரும் பெண்கள், ஆண்களின் வன்முறைக்கு இலக்காக்கப்படுபவர்களே தவிர வன்முறையில் ஈடுபடுபவர்கள் அல்ல. ஆண்கள் தற்காலிகமாவது தங்களது வன்முறை என்னும் நோயிலிருந்து அமைதியையும் சமாதானத்தையும் குணப்படுத்தும் இயற்கையாக, தாய்மையாக பெண்களே இருக்கிறார்கள். கிம் கி டுக் திரைப்படத்தின் நாயகிகள் அன்னை மேரியை ஞாபகப்படுத்தும் சுமைதாங்கிச் சொரூபமாக இருக்கிறார்கள். பெண் தொடர்பில் கிம் கி டுக் மனதில் ஆழம்பெற்றுள்ள கிறிஸ்தவத் தொன்மங்களின் தாக்கம் அவரது 'பியெட்டா' திரைப்படத்தின் பெயர் வழியாகவே வெளிப்படுவது. அன்னை மரியாளின் மடியில் கிடக்கும் சிலுவைப்பாட்டுக்குப் பிறகான கிறிஸ்துவின் சிற்பம்தான் மைக்கேல் ஆஞ்சலோ செதுக்கிய பியெட்டா. 

பியெட்டாவின் கதாநாயகன் அம்பத்தூர் போன்ற தொழிற்பட்டறையில் சிறுகடை வைத்திருப்பவர்களிடம் அதிக வட்டிக் கடனை சித்திரவதை செய்து வசூலிப்பவன். பிறந்தவுடனேயே தாயால் கைவிடப்பட்ட அவனது முப்பது வயதில் தாயென்று சொல்லிக்கொண்டு ஒருத்தி வருகிறாள்.

அவளின் வருகையால் அவன் தற்காலிக அமைதியை

அடைகிறான். தனது உடலுறுப்பை அறுத்து அவளைச் சாப்பிடச் சொல்லி, அவள் சாப்பிட்டால்தான் தாய் என்று நம்புவேன் என்றும் அவளைத் துன்புறுத்துகிறான். அவளது யோனியைப் பிடித்து இங்கிருந்துதான் வந்தேன், இதற்குள் போக விரும்புகிறேன் என்கிறான். 

அந்தத் தாயிடம் ஒருகட்டத்தில் பணம் என்றால் என்ன என்று கேட்கிறான். தொடக்கமும் முடிவும் அதுதான் என்று ஆரம்பிக்கும் அந்த அன்னை தொடர்கிறாள். நேசம், கௌரவம், வன்முறை, கொந்தளிப்பு, வெறுப்பு, பேராசை, பழி, மரணம் என்று முடிக்கிறாள். அவள்தானே பணத்துக்கு இத்தனை முகங்கள் இருப்பதைச் சொல்ல முடியும்? அவள்தானே இத்தனை குணங்களுக்கும் இலக்காகுபவள்.

பெண்ணைத் தீராத வன்முறைக்குள் சிக்கியிருப்பவர்களாகவும், சுதந்திர விருப்பு இல்லாதவர்களாகவும் கிம் கி டுக் காண்பிப்பதாக 'பேட் கை' காலத்திலிருந்து பெண்ணியவாதிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தவண்ணமிருக்கின்றன. இந்த விமர்சனத்தை மறுக்கும் அவர், ஆண்களை விடப் பெண்களை உயர்ந்த உயிர்கள், ஆண்கள் எப்போதும் உறவுக்காகவும் சரணடைவதற்காகவும் பணியும் உயிர்கள் என்றே தான் கருதுவதாக நினைக்கிறார். அதே வேளையில் ஆசிய சமூகங்களில் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் பதற்றமும் வன்முறையும் ஏற்றத்தாழ்வும் இன்னமும் நீடித்தே வருகிறது என்கிறார்.

ஆணுக்குப் பெண் தேவையாக இருந்தாலும், இரண்டு பாலினத்தவருக்குமான முரண் என்பது தீர்க்க முடியாமேலேயே இருக்கிறது; அதுவே இங்கே வன்முறையாக அகத்திலும் புறத்திலும் வெளிப்படுகிறது என்கிறார் கிம் கி டுக். 

‘பேட் கை’ படம் தொடங்கி ‘ஹியூமன், ஸ்பேஸ், டைம் அண்ட் ஹியூமன்’ திரைப்படம் வரை ஆண்கள் அமைதியடையும் நிறைவடையும், கொஞ்சம்போல் சமாதானம் கொள்ளும் பேரியற்கையாகப் பெண்களே இருக்கின்றனர். ஒரு ஆண் எங்கே அமைதியைப் பெற்றானோ, எங்கே சமாதானத்தைப் பெற்றானோ, எங்கே ஆற்றலைப் பெற்றானோ அங்கேயேதான் அவன் தனது ஆதித் தொழிலான இம்சையையும் தொடங்குகிறான். இதுதான் உண்மையா என்று கேட்டால் இதுதான் இன்றுவரை உண்மை. இதுதான் எதார்த்தமா என்று கேட்டால் இதுதான் இன்றுவரையிலான உலகத்தின் எதார்த்தம்.

'ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்ட்டர்... அண்ட் ஸ்பிரிங்' திரைப்படத்தில் அந்தச் சிறுவன், மாபெரும் இயற்கையின் உருவமாக நிற்கும் மலையில் நின்றுதானே, தனது கல்வியை மீன், தவளை, பாம்பு என்று இம்சிப்பதிலிருந்து தொடங்குகிறான். நாமும் இப்படித்தானே தொடங்குகிறோம். அவனையும் சேர்த்து அவன் உருவாக்கும் நரகம் வேறெங்கும் இல்லை. இங்கேயே இங்கேயே உள்ளது. 

Comments