Skip to main content

அறியப்படாத ஒரு வாழ்க்கையின் கதை

 


ஆனந்தின் ‘நான் காணாமல் போகும் கதை’- யை மீண்டும் மீண்டும்  படிக்கும்போதும் அனுபவம், புரிதலை வேறு வேறு பக்கங்களிலிருந்து திறக்கும் படைப்பாகும்.

இந்தக் கதையில் வரும் சொல்லிக்கு பிரதேச ரீதியான மொழி ரீதியான பண்பாட்டு ரீதியான பால் ரீதியான சில அடையாளங்களைச் சொல்ல முடியும். என்றாலும், இதுவரை நான் படித்த புனைவுகளில் பார்த்த பாத்திரங்கள் கொள்ளும் ரூபத்தை ஆளுமையை ஒப்பிடும்போது இந்தக் கதையில் வரும் சொல்லிக்கு நபர்த்தன்மைகள் மிகவும் குறைவு. புலப்படும் அந்தச் சொல்லியின் உடல், ஆளுமை அம்சங்களைக் கொஞ்சமாகக் குறைத்தால் போதும்; அந்த நபர் நானாகவும் நீங்களாகவும் பிரதிபலித்துவிடுவார்.

பகலும் இரவும் சதா; ஒளியும் இருளும் சதா; கனவும் நனவும் சதாவென பேதமில்லாத வாழ்வு அவனுடையது. நனவிலிருந்து கனவுக்கு; மெய்யிலிருந்து மெய்சாராத இடத்துக்கு; வெளித்தெரிவதிலிருந்து தெரியாத இடத்துக்குஅறியப்பட்ட சம்பவங்களிலிருந்து அறியப்படாததின் சம்பவமின்மையை நோக்கி அவனது போக்கும் வரத்தும் நிகழ்கிறது.  கிடைமட்ட, தரைத்தளப் புழக்கத்திலிருந்து செங்குத்து அனுபவங்களைத் தரும் மலைகளுக்குத் தொடர்ந்து பயணித்தபடி அவன் இருக்கிறான். அன்றாடம் என்னும் தரைத்தளத்தில் பயணித்து அவ்வப்போது சில தற்கணங்கள் முழுமையாக அவனுக்கு உணர்வதற்குக் கிடைக்கின்றன. அலுவலக வளாகத்திலிருக்கும் நாகலிங்க மரத்தின் கீழே பறத்தலைப் பயில்கிறான். இப்படித்தான் அவன் காணாமல் போகும் அனுபவம் தொடங்குகிறது. கணநேரப் பறத்தல்களில் நபர் என்ற சட்டையைக் கழற்றும் அனுபவம், ‘நான்’ காணாமல் போகும் அனுபவம் அவனுக்குப் படிப்படியாகச் சாத்தியமாகத் தொடங்குகிறது. பிறகு பறத்தல் நிலைப்படுகிறது. இருத்தலும் பறத்தலும் ஒரு புள்ளியில் ஒன்றாகி இடமும் உயிர்த்திருப்பும், ஒரு புள்ளியில் குவிந்து அவன் ஒளிமலராகும் சாத்தியம் கடைசியாக நிகழ்கிறது.

இப்படியெல்லாம் சொல்லும்போது, அசாதாரணமாகவும் அற்புதமாகவும் இந்திரஜால நிகராகவும் தோன்றலாம். ஆனால், இந்த நாவல் அசாத்தியத்தில் அல்ல, சாத்திய தருணங்களில், மெய்மையில் நிலைகொண்டுள்ளது. அது அதிகம் புலப்படாத, ஆனால் அதுவே மிக இயற்கையான மெய்நிலை.  

இந்த அனுபவத்துக்குச் சென்ற சொல்லியின் முந்தைய நிலை இது. அவன் கண்கள் போல மனமும், நகுலன் சொல்வதைப் போலக் கண்ணாடியாகும் மாயமும் இனிமையான ருசியைக் கொண்ட மரணமும் நிகழ்கிறது. காண்பதும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல. புறம் அகமாகும் இடம் அது. மனமும் நபரும் அங்கே அனேகமாக இல்லை. அப்போது எல்லாமும் துல்லியமாகத் துலக்கமாகத் தெரியவும் கேட்கவும் தொடங்குகிறது. அப்போது நபர் மறைந்து மெய்தாண்டி வாழும் ஓர் உயிர், சுற்றிச் சகலத்தையும் அரவணைத்து அதுவாக ஆகிக் கொள்கிறது. அப்போது நாகலிங்க மரம் மரமாக அதன் ஒட்டுமொத்த கூந்தலையும் கிளைகள் வேர்கள் என்று பிரியாத உயிர்த்தன்மையுடன் தன் பிரகிருதியை அவனுக்குக் காண்பிக்கிறது. காகம் தன் மொத்த சொரூபத்தையும் அவன் முன்னர் நிகழ்த்துகிறது. அந்த அனுபவத்தில் அவன் மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தையே உரைக்கிறான். ஆனால், அதைச் சொல்வதற்கும் அதைக் கண்டுபிடிப்பதற்கும்  எத்தனை காலம் ஆகியிருக்கிறது என்று வாசிப்பவனுக்குத் தோன்றுகிறது.  

‘காகம் மிகவும் அழகானதொரு கறுப்பு நிறப் பறவை’.

இந்த முடிவுக்கு இந்த உண்மைக்கும் இந்தத் தெளிவுக்கு இந்தப் பிரதிபலிப்புக்கு வருவதற்குத்தான் நமக்கு எத்தனை தடைகள், தடைச்சுவர்கள்.

000

மலைப்பயணங்கள் மட்டுமின்றி இந்த நாவலின் ஒவ்வொரு தருணத்தையும் மெய்நிகர் அனுபவமாக வாசகனுக்கும் ஆக்கி அழைத்துச் செல்லும் பிரயாசையை ஆனந்த் மேற்கொள்கிறார். கடல், கனவு வெளிகள் என எல்லா வழிகளிலும் அவருடன் பயணிக்கிறோம். 

ஆனந்த் தனது துவக்க காலப் படைப்பான ‘இரண்டு சிகரங்களின் கீழே’ குறுநாவலிலிருந்து மலைகள், மலையில் நடப்பது குறித்த குறிப்புகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். அவரை நினைவுகூரக்கூடிய ஒட்டுமொத்தப் படிமம் என்றே நான் மலையைச் சொல்வேன். ஆனந்த் எழுதியதும் தமிழின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றுமாகிய ‘முதல் அம்பு’ கவிதையிலும் அந்த முதல் அம்பு மலையுச்சியில் தான் கிடக்கிறது. 

நான் முதல் அம்பு

பன்னெடுங்காலமாய்

இந்த மலையுச்சியில்

கிடக்கிறேன்

யார்மீதும் விரோதமற்ற

ஒருவன் வந்து

தன்வில் கொண்டு

என்னை

வெளியில் செலுத்துவானென.

அம்பு என்பதற்கு நாம் உருவகம் செய்திருக்கும் பயன் ரீதியான அர்த்தத்தை மறுக்கும் ஓர் அம்பு மலையுச்சியில் கிடக்கிறது. யார் மீதும் விரோதமற்ற ஒருவன் வில்லோடு வந்து தன்னை வெளியில் செலுத்த அந்த அம்பு காத்திருக்கிறது. 

மலைக்குக் கீழே தரைத்தளத்தில் சமூகத் தளத்தில் அம்புக்கு இதுவரை நாம் கொடுத்திருக்கும் அர்த்தமும் வன்மமும் கொண்ட அம்பு இல்லை அது. 

மலையுச்சியில் கிடக்கும் அந்த அம்பு முதல் அம்பு என்பதுதான் இன்னும் ஆச்சரியமானது. முதல் அம்பு பிறந்ததற்கான நியாயமும் அதற்குப் பிறகு வந்த அம்புகளுக்குமான அர்த்தமும் நியாயமும் வேறு என்று சொல்கிறது அந்தக் குறிப்பு.

அம்பின் அர்த்தமே விரோதமும் வன்மமும் என்ற புரிதலை மிக அமைதியாக இந்த முதல் அம்பு மறுக்கிறது. 

ஏறப்போகும் எல்லா அர்த்தச் சுமைகளையும் அர்த்தங்களினால் ஏற்படப் போகும் ரத்தச்சுமைகளையும் போதத்துடன் விடுவித்துக் கொண்டு விரோதமற்ற ஒரு வில்லாளி தன் நாணில் ஏற்றுவதற்காகக் காத்திருக்கும் முதல் அம்பு அது.     

அந்த முதல் அம்புதான் ‘நான் காணாமல் போகும் கதை’யிலும் மனித அடையாளத்துடன் மலையேறிக் கொண்டிருக்கிறது. அந்த முதல் அம்புதான், இந்த நாவலின் இறுதியில் ஒளிமலராக வடிவெடுக்கிறது. 

‘நான் காணாமல் போகும் கதை’யிலும் மலை யாத்திரை பல உண்டு. கருப்பைவழி போலத் தென்படும் இருட்குகைப் பயணத்தில் தொடங்கி கழுகுக்கு பயந்து ஒளியும் கனவுப் பயணம், வழி தொலையும் பயணம் என பல பயணங்கள்.

காலத்துக்குச் சாட்சியாக, ஆனால் காலத்துடனேயே  நின்றுகொண்டிருக்காமல் சற்றே முகம் திருப்பி  நிற்கும் மலைகளை, குன்றுகளை அதிலிருக்கும் கற்களை வெவ்வேறான அதன் வடிவங்களை நோக்கி நம்மை நெருங்கிப் போகவைக்கிறார் ஆனந்த். 

மலைகள் ஒரு அபரிமிதமான வாழ்வை வைத்திருக்கின்றன; உங்களுக்குப் புலப்படாத உயிர்ப்பை வைத்திருக்கின்றன; உங்களுக்குத் தெரியாத ஒரு விசுவாசத்தை வைத்திருக்கின்றன என்று மலைகளைக் கொண்டு ஆனந்த் சொல்வதாகத் தான் நான் புரிந்துகொள்கிறேன். கடந்தது; கடப்பது; கடக்கும் என்ற நம்பிக்கை அது. 

கோடிக்கணக்கான ஆண்டுகளாக குன்று உருவான பின்னர், வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுத் தெரியும் அதன் உள் கருங்கல் பகுதியில் இருக்கும் குளிர்ச்சியைத் தொட்டுக் காண்பித்து ஆனந்த் பரிச்சயப்படுத்துகிறார். இந்தக் கருங்கல்லை இதன் வாழ்வை யாரும் இதுவரைப் பார்க்கவில்லை. ஆமாம், இது புத்தம் புதியது. பளிச்சென்று நம்மை அதன் சருமம் பார்க்கிறது. அதனுள் ஓடும் நீரோட்டமும் ரேகைகளும் அகங்களும் உயிர்களும் எவ்வளவு? 

அதைத் தொட்டுத் தடவும் போது நமக்கு எங்கே குளிர்கிறது? எதற்குக் குளிர்கிறது? 

அது நபருக்கு மட்டுமா குளிர்கிறது? அதை நபர் மட்டுமா அறிகிறது? 

அதேபோல நாவலின் இறுதியிலும் படிகள் முடிவடையாத கோபுரத்தில் தெரியும் ஆளுயர ஜன்னல்கள் ஒவ்வொன்றாகத் தோன்றும் காட்சிகளும் ஆனந்தின் பயணக் குறிப்புகள் தான். உச்சத்திலிருந்து அங்கே பார்க்கப்படும் காட்சியில் அந்தப் பெருவெளியில் அவன் நிரந்தரமாக இல்லாமல் ஆகிறான். 

நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமான உயிர் ஒன்று, உனக்கும் எனக்கும் வேறு வேறாகத் தெரியும் உயிர்களுக்கும் அப்பால் வசிப்பதன் தடையங்களை அதன் மூச்சை உணரவைப்பதுதான் ஆனந்த் தொடர்ந்து செய்யும் முயற்சி.  நபர்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த ஓருயிரை அடையாளப்படுத்தும் தருணங்களின் தொகுப்புதான் ‘நான் காணாமல் போகும் கதை’. 

நமது அன்றாட வாழ்க்கையில் அதிகம் பரிச்சயமாகாத அந்த உயிரை, பரிச்சயமாகாத ஒரு உயிர் வாழ்க்கையை அடையாளம் காண்பதற்கான ஒருவழியாக இயற்கை இருக்கிறது. அந்த உயிருடன் முயங்கி இன்னொரு குடித்தனத்தை ஆரம்பிப்பதற்கு கண்ணுக்குத் தெரியும் வழிவகைகளில் ஒன்றுதான் இயற்கை. அதற்குத்தான் ஒரு நபர் வெளியேயும் உள்ளேயும் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. இயற்கைதானே எனலாம். ஆனால், மிகத் தொலைவுக்கு நாம் வந்துவிட்டால் நெடுங்காலம் மறந்து இருந்துவிட்டால் நம் வீட்டையும் இயற்கையைப் போலத் தேடி அலையத் தானே வேண்டும். 

‘நான் காணாமல் போகும் கதை’யிலும் கதைசொல்லி உள்ளேயும் வெளியேயும் அலைகிறான். பக்கவாட்டிலும் கிடைமட்டத்திலும் திரிகிறான். உடல், மலை என்னும் புலப்படும் நிலத்தில் புலப்படும் எதார்த்தத்தின் வழியாகவே நடந்துதான் அதிகம் புலப்படாத அந்தத் தீவை அடைகிறான்.

கிறிஸ்து ஒளியும் சத்தியமும் என்கிறார். ரூமி அதை நேசம் நேசம் என்கிறார். லாவோட்சு அதைக் காலியிடம் என்கிறார். நம்மையும் சேர்த்துக் கொண்ட இயற்கை என்று ஆனந்த் சொல்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. அறம், பாவம் என்ற அருங்கயிற்றால் கட்டப்படாத, ஆசிர்வாதம்-சாபம், அற்புதம் - விபரீதம் என்ற இருவேறாக இல்லாத இயற்கைதான் ஆனந்த் காட்டும் மலைகள் ஆகி நம்முன்னர் தெரிகின்றன.

ஆனந்த் அறிந்து அமர்ந்து இடமாகவும் இருப்பாகவும் ஆனதின் தடையங்கள் என்றே இந்த நாவலைச் சொல்வேன். 

இந்த நாவலைப் பற்றி எழுதும் சந்தர்ப்பம் எனது அலைச்சல்களைப் பற்றி நான் தொகுத்துக் கொள்வதற்கான உதவியும் கூட. எனது பிறந்த நாளன்று ஆனந்த் எனக்கு அளித்திருக்கும் பரிசு இது.

(நான் காணாமல் போகும் கதை நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை)

Comments