இந்தப் பூமியில், பொருளியல் சூத்திரங்களால் மட்டுமே செயல்படுவது போலத் தோன்றும் இந்த இடத்தில் தரிக்கும் மனிதர்களை ஈர்த்து இன்னொரு கோளத்தில் வைத்திருக்கும் மகத்தான ஆற்றல்களில் ஒன்று காதல். ஆனால், காதலின் ஈர்ப்பும் அதனால் காதலர்களுக்குக் கிடைக்கும் பறத்தலும் தற்காலிகமானதே; இந்த ஈர்ப்பு செயல்படும் உலகிலிருந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பார்த்த தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர் மௌனியின் கதாபாத்திரங்களோ தங்கள் காதல் நிறைவேறாத நிலையில் அதற்கு ஒரு அமரத்துவத்தை ஏற்படுத்துபவர்கள். காதலின் ஈர்ப்பால் பூமிக்கு மேல் தோன்றும் அந்த உலகத்தைத் தான் ஆகர்ஷணக் கோளம் என்று சுந்தர ராமசாமி, மௌனியின் பிரபஞ்சத்தை அழைக்கிறார்.
மீரான் மைதீன் எழுதியுள்ள ‘ஒரு காதல் கதை’ குறுநாவலின் நாயகியான ஷீலா, தன் காதல் வாழ்க்கையில் வெற்றிகண்டவள். காதல் இன்னமும் கசிந்து கொண்டிருக்கும் திருமண வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. பணிவாழ்க்கையிலிருந்தும் கல்லூரி முதல்வராக ஓய்வுபெற்று 60 வயதிலும் வசீகரத்துடன் இருப்பவள். நாகர்கோவிலிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலில் பேரக்குழந்தைகளைப் பார்க்கச் செல்லும் போது, தனது வெற்றிக்கதையின் விடுபடல்கள், துயர எச்சங்கள், மௌனங்களை கதைசொல்லியுடன் பகிர்ந்துகொள்வது தான் இந்தக் கதை. காதலுக்கு முன்னர் இஸ்லாமியப் பெண்ணாக இருந்த அவளது பெயர் வஷீலா. காதலுக்குப் பின்னர் இந்துப் பெண்ணாகத் தோற்றமளிக்கும் அவளது இப்போதைய பெயர் ஷீலா. வஷீலாவுக்கும் ஷீலாவுக்கும் இடையிலான பயணத்தை நிசப்தத்தை நெடுங்கதை வடிவத்தில் எழிலுடன் சொல்லியிருக்கிறார் மீரான் மைதீன். மதம் மாறிக் காதலிப்பது அந்தரங்க உரிமை என்ற நிலையிலிருந்து அரசின் கண்காணிப்புக்குள்ளாகியிருக்கும் சமூக அரசியல் சூழலில் இந்தக் காதல் கதை மேலும் பொருத்தமானது.
ஒரு கதைசொல்லி, ரூமியின் தாக்கம் கொண்ட சூபி காதலன், நன்றாக கதைகேட்பவன் என்று எல்லாம் கலந்த ரொமாண்டிக் கதாபாத்திரமாக, பொன்மொழிகளை அடிக்கடி உதிர்ப்பவராக, ஆனால் வாசகர்களும் ஏற்றுக்கொள்ளும் படியாக கதைசொல்லி இருக்கிறார். கோட்டார் சந்திப்பில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஷீலாவுடனான உரையாடல் தொடங்கும்வரை, காதலில் உள்ள உலகம் மறக்கும் தன்மையின் மீது கவனம் குவித்துப் பேசி நம்மில் ஒரு மேடையை நிறுவுகிறார் கதைசொல்லி. சின்னச் சின்னக் காதல் கதைகள் மீனியேச்சர் சித்திரங்கள் போல இடம்பெறுகின்றன. அந்தக் கதைகள் வெவ்வேறு நாடுகளில் நடப்பவை. நிச்சயமற்ற பொழுதுகளில் நல்ல காட்சியோ மோசமான காட்சியோ அவற்றை நினைவாக கடக்கத்தான் வேண்டியிருக்கும் ரயிலில் இந்தக் கதை நடப்பதால் மொழியில் பயணத்தின் லயமும் கவித்துவமும் நுட்பமான கவனிப்புகளும் சேர்ந்துவிடுகிறது.
ஷீலாவும் இந்துப் பையனான மணிகண்டன் மீது காதல் ஏற்பட்டதற்கான காரணமென்னவென்று தனது அறுபது வயதில் விசாரிக்கத் தொடங்குகிறார். அவனது உருவம், கண்கள் ஆகியவற்றை சிலாகித்தாலும் ஏன் உயிருக்கு உயிராக நேசித்த பெற்றோரைக் கடந்து அவனைக் கைப்பிடிக்கும் பந்தம் ஏற்பட்டது என்பதை அவரால் விளக்கிச் சொல்லவே முடியவில்லை. திருமணமான பிறகு தாயின் மரணம் செய்தியாகவே ஷீலாவுக்குத் தெரியவருகிறது. தந்தை பேசமுடியாமல் மரணப்படுக்கையில் இருக்கும் சில மாதங்களில் மட்டுமே அவரை உடனிருந்து பராமரிக்கும் குறைந்தபட்ச ஆறுதலைப் பெறுகிறார் ஷீலா. இன்னொரு மதம், இன்னொரு கலாசாரப் பின்னணியிலிருந்து வந்ததால் எந்தவிதமான அசௌகரியத்தையும் ஷீலா அனுபவிக்கக்கூடாது என்று மணிகண்டனின் பெற்றோர்களால் அத்தனை பிரியத்துடன் நடத்தப்பட்டும் ஷீலாவுக்கு, தன் பெற்றோரைக் கைவிட்ட குற்றவுணர்வு இருக்கிறது. மீண்டும் ராசியாகிவிட்ட தம்பி குடும்பத்தின் உறவு, பேரக் குழந்தைகளின் பிரியத்தால் அதை அவள் நிரவுவதற்கு முயல்கிறாள். ஆனால், அவள் கதையில் நிரவ இயலாத பள்ளங்களைத் தான் சக இருதயனாக ஓர் இரவு மட்டுமே தன்னுடன் பயணிக்கும் ஒரு வழிப்போக்கனிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறாள்.
ரயிலிலிருந்து கதைசொல்லியைப் போலவே நாமும் இறங்கி ஷீலாவைப் பிரிந்துவிடுகிறோம். இன்னொரு மதம், இன்னொரு கலாசாரப் பின்னணியிலிருந்து வேறொரு வாழ்க்கைக்கு வேறொரு பின்னணிக்கு காதல் காரணமாகத் துணிகரமாகக் கடந்து சென்ற வஷீலா, ஷீலாவாக மாறியபின்னர் பெற்றது என்ன? இழந்தது என்ன?
சந்தோஷங்களும் அச்சங்களும் பிரிவுகளும் நிறைவேற்றங்களும் கோயில்பட்டி, திண்டுக்கல், விருத்தாசலம் எனக் கடந்த காட்சிகள் மட்டுமா. நினைவுகள் மட்டுமா.
மணிகண்டன் என்ற ஆணிடம் தனது வாழ்க்கையின் திருப்பத்துக்கு ஒப்புக்கொடுத்த ஷீலா குறித்து ஏற்படும் விந்தையின் அளவு, தன் கதையைச் சொல்வதற்கு அவள் அந்த இரவில், ரயிலில் தேர்ந்தெடுக்கும் கதைசொல்லி தொடர்பானதிலும் எழுகிறது.
மௌனி, இந்தக் கதையைப் படித்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்- தனது பிரபஞ்சத்தில் உள்ள கதையாக ஷீலாவின் கதை இல்லையென்றாலும், ஷீலாவின் துக்கத்தோடு அவர் அடையாளம் கண்டேயிருப்பார்.
Comments