நன்றி - விகடன் |
திருநெல்வேலியின்
கதையை நெல்லையப்பர் கோயில் எதிரே அல்வா விற்ற இருட்டுக்கடை அதிபரின் தற்கொலையிலிருந்து
ஏன் விசாரிக்கக் கூடாது. கடந்த சில தசாப்தங்களில் திருநெல்வேலியின் அடையாளமாக தனது
அல்வாக் கடையை மாற்றிய ஹரிசிங், ஏன் பெருந்தொற்றுக்குப் பயந்து மருத்துவமனையில் தற்கொலை
செய்துகொள்ள வேண்டும்.
நெல்லையப்பர்
– காந்திமதி சமேதர் இந்த மரணத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டார்களா? மணி புரோட்டா கடை
இருந்த இடத்துக்கு மேல் போஸ் மார்க்கெட்டுக்குக் காவலன் போல வீற்றிருக்கும் சங்கிலிப்
பூதத்தானுக்குத் தெரிந்திருக்கிறதா?
சதுரமாக
வெட்டப்பட்ட பச்சை வாழை இலையில் சுடச்சுட அல்வாவை எடுத்து, வாயில் போடும் தருணத்தில்
அனைத்து வயதினரும் துக்கத்தை மறந்து சுவைக்க வைத்த அந்த ஹரிசிங்குக்கு தற்கொலை செய்யும்
அளவுக்கு இந்தக் கரோனா கொடுத்த பயம் என்ன? கோயில் நிழல், தேர்நிழல், கோயிலுக்குப் பாத்தியப்பட்ட
கட்டிடத்தின் நிழல் எல்லாம் மௌனியின் சிறுகதைகளில் வரும் அந்தியைப் போல ஒரு கனவாக ஹரிசிங்குக்கு
மறைந்து மாயமாகிவிட்டதா.
என் ஞாபகத்தில்
ஹரிசிங் தகர டப்பாக்களுக்கு இடையே அப்படியே வெள்ளை சட்டையுடன் அமர்ந்திருக்கிறார் திருநெல்வேலி
டவுணின் அடையாளமாக.
விஸ்தாரமான
கோயில், மதிப்பு கொண்ட சிற்பங்கள், ஆகிருதியான மூல லிங்கம், ஆனாலும் தலையில் ஒச்சம்.
ஏனோ கோயில் எப்போதும் விருத்தியையே காணவில்லை. காந்திமதியும் சின்னவள். 13 வயது பெண்
போன்றவள். புதுமைப்பித்தனின் செல்லம்மா, காந்திமதியின் பிரதிதான் போல. காலையும் மாலையும்
வாயுலிங்கம் சன்னிதி மூலையிலிருந்து இந்தப் பக்கம் காந்திமதி அம்மன் சன்னிதிக்கு இடப்புறம்
உள்ள வசந்த மண்டபத்தின் மூலை உள்தெப்பக்குளம் வரைக்கும், பாழ்தான் கிறக்கி ஆட்டுகிறது
காலம் காலமாய் இந்தக் கோயிலை.
அந்தப்
பாழில் வேறெதுவோ சிருஷ்டி கொள்கிறது.
அந்தப்
பாழும், விருத்தியின்மையும் ஹரிசிங்க்கையும் தீண்டிவிட்டது போல, போதும் இனிப்பென்று.
உரமும்
மிளகாய்வத்தலும் சின்ன உள்ளியும் சேர்ந்து மணக்கும் கூலக்கடை பஜாரில் ஆபிரகாம் புரோட்டா
கடை களையிழந்துவிட்டது. மிளகாய் வத்தல் கடைவைத்திருந்த தோப்பில் முகமது மீரான் கிளம்பிப்
போய்விட்டார்.
சைவ சித்தாந்த
நூல் பதிப்புக் கழகத்தின் புத்தகங்களை வெளியிட்ட ஹிலால் பிரஸ் சாதிக் இறந்த பிறகு,
அவர் அச்சகத்துக்குச் செல்லும் மரப்படிகளில் கால்வைக்க மனம் வரவில்லை. ஹிலால் பிரஸ்சிலிருந்து
தான் தானே பதிப்பித்த ‘சாய்வு நாற்காலி’ நாவலை வாங்கிக் கொண்டு தோப்பில் இறங்கிச் சென்றார்.
ஹிலால் பிரஸ்சின் கட்டிடத்தில் இயங்கிய ஆரெம்கேவி ஜவுளிக்கடை உரிமையாளர் விஸ்வநாதனும்
அகாலத்தில் விபத்தில் மரணமடைந்துவிட்டார்.
காந்திமதி
அம்மன் சன்னிதி மண்டபத்தில் உள்ள திருக்குளத்தில் தான் நான் முதல் முலைக்காம்பைப் பார்த்தேன்.
கருத்து மெலிந்து கூம்பி ஒருகணமே வெளிப்பட்ட நடுவயதைத் தாண்டியவளின் முலை.
காந்திமதிக்கும்
நெல்லையப்பருக்கும் தனித்தனி ஆலயங்கள். இருவரையும் இணைக்கும் நீள்மண்டபம்.
காந்திமதியை
நெல்லையப்பர் நெருங்கத் தாண்டி வரவேண்டும்.
பிரகாரத்
தூண் ஒன்றில் கையில் குறுங்கத்தியுடன் குரங்கு ஒன்று வாயில் இளிப்புடன் தனிச்சிற்பமாக
இருக்கிறது.
நான் பள்ளியில் படித்தபோது, என் அப்பாவைக் குத்திக் கொல்வதற்காக இந்தக் குரங்கைப் போல வெவ்வேறு இடங்களில் கற்பனைகளில் ஒளிந்து காத்திருந்தேன்.
கையில்
கத்தியை வைத்திருக்கும் குரங்கு ஏன் அப்படி இளிக்கிறது. வாயில் சாப்பாடு பொதிபோல உள்ளது.
அது திருநெல்வேலி
குரங்கு. அப்படித்தான் இருக்கும்போல.
பிரபஞ்சனின்
சுமதி, ஜானகிராமனின் யமுனா, வண்ணதாசனின் தனு என என்னுடைய காதலிகளை எல்லாம் பறித்துக்
கொண்டு கோபுர உச்சிக்குச் சென்றது இந்தக் குரங்குதான்.
ஹரிசிங்கின்
இருட்டுக் கடை அல்வா பதத்தை தன் சிறுகதைகளில் வெற்றிகரமாகக் கையாண்டு தமிழகம் முழுவதும்
பரப்பியவர் வண்ணதாசன்.
போஸ் மார்க்கெட்
முடிவில் உள்ள காவல் நிலையத்தில் போய், கதை நாயகிகளைக் கத்தியோடு கடத்திச் செல்லும்
சிற்பக் குரங்கைப் பற்றிப் புகார் சொன்னால் அங்குள்ள இன்ஸ்பெக்டரோ என்னை நம்ப மறுக்கிறார்.
கோட்டி முத்திடுச்சி என்று இன்ஸ்பெக்டரின் காதில் சொல்லும் ஏட்டின் பெயர் சொ. விருத்தாசலம்.
அந்தக்
காவல் நிலையத்தின் எதிரே வெகு நாட்களாக இருந்த மூத்திரப் பிரையில் வைத்துதான் ஜி. நாகராஜன்,
கஞ்சாவை எடுத்து காவல் நிலையத்தைப் பார்த்துக்கொண்டே உருட்டிப் பற்றவைப்பார் சிகரெட்டை.
நெல்லையப்பரைச்
சுற்றும் பிரகாரத்தில் அறுபத்து மூவர் சன்னிதியின் முடிவில் மூலையில் ராவணனுக்கு பிரமாண்ட
சிலை இருக்கிறது. கூடுதல் இருட்டுடன் படியேறும் உயரத்தில் வீற்றிருக்கும் ராவணனின்
தலையைத் திருகினால் ஒரு குகை திறக்கும் என்ற கதை எங்கள் வரை நிலவியது.
கல் யாழிகள்
எல்லாவற்றின் வாயிலும் கையை விட்டிருக்கிறோம் யாளிகள் விழுங்கவில்லை இன்னும். நல்லா
வுடுங்க. எதுவுமே விழுங்காது என்று பகபகவென்று சிரிக்கிறார் புதுமைப்பித்தன்.
ஆனால்
புதுமைப்பித்தனை கபாடபுரம் விழுங்கிவிட்டது.
Comments