Skip to main content

நிலவொளியில் ஆடும் நரி ரஸ்கின் பாண்ட் – 88

 



குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் அசோகமித்திரன் என்று வரையறுக்க இயலக்கூடிய இந்திய ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு இன்று 88 வது பிறந்த நாள். ஜிம் கார்பெட், கென்னத் ஆண்டர்சன் ஆகியோரோடு சேர்ந்து எனக்கு அறிமுகமான பெயர் ரஸ்கின் பாண்ட். கசப்போ, பிறழ்வோ, இருட்டோ, அதிதுயரமோ இல்லாத படைப்புகள் அவருடையது. அவர் வாழ்ந்து வரும், அவர் படைப்புகளில் இடம்பெறும் இமாலய மலைப் பிரதேசத்தின் மடியில் வீசும் இளம்வெயிலின் குணம் கொண்டவை அவரது சிறுகதைகள். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடம் உள்ள களங்கமின்மை, மென்சோகம், காதல், வன்புல்லாக ஆகாத காமம், நட்பு மற்றும் நல்லுணர்வின் மேல் மலைப்பிரதேசத்தின் இயற்கையும், சத்தும் படர்ந்திருக்கும் படைப்புகள் அவை. தீவிர இலக்கியத்துக்குள் அறிமுகமாக நினைக்கும் இளம் வயதினருக்கும் ஆங்கில வாசிப்பை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும் ரஸ்கின் பாண்டை நான் பரிந்துரைப்பேன். இப்போதும் அவரது கதைகளை அவ்வப்போது எடுத்து வாசிக்கிறேன்.

என் மகள் வினு பவித்ரா, பள்ளிக்குச் சென்று கதைகளை வாசிக்கத் தொடங்கிய பருவத்தில் அவளுக்கு நான் கொடுத்த புத்தகங்களில் அவள் முழுமையாகப் படித்து முடித்த புத்தகம் ரஸ்கின் பாண்டின் ‘The Blue Umbrella’. அவள் அந்த நாவலின் பின்பக்கத்தில் படித்தவுடன் ஏற்பட்ட மனப்பதிவையும் எழுதி வைத்திருந்தாள். ஒரு குழந்தை தனது வாழ்க்கையில் எவ்வழியில் சென்று தொலைந்து போனாலும், குழந்தைப் பருவத்தில் ஒரு நல்ல நினைவு இருந்தால் போதும் அதன் மூலம் அந்தக் குழந்தை மீண்டுவிட முடியும் என்று கரமசோவ் சகோதரர்கள் நாவலில் ஒரு வசனம் வரும். ரஸ்கின் பாண்ட் அப்படியான நல்ல நினைவுகளைக் குழந்தைகளுக்கு அளிக்கக் கூடியவர்.

மிசோராம், சிம்லா மலையடிவாரப் பகுதிகளில் வாழும் பையன்கள், சிறுமிகள், யுவதிகளின் நட்பு, விளையாட்டு, உறவுகளை ஒரு கனவு நிலக்காட்சியைப் போலக் காட்டித் தந்தவர். அவர் சித்தரித்த குழந்தைகள் மட்டுமே அறிந்த மலை நீரோடைகள் என் ஞாபகத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன.

நகுலனைப் போல ரஸ்கின் பாண்டும் திருமணமாகாதவர். அது படைப்புக்கு தனியான ஒரு ஒளியைத் தரும்போல. அந்த ஒளி ரஸ்கின் பாண்டில் உண்டு.

ரஸ்கின் பாண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘TIGER IN THE HOUSEசிறுகதையைத் திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்தேன். கதைசொல்லியின் தாத்தா வீட்டுக்குக் கொண்டுவந்து டிமோத்தி என்று பெயரிடப்பட்ட அந்தப் புலியில் எனது பிரவுனியை இனம்கண்டு கொண்டேன்.

டிமோத்தி இடம்மாறும் இடம் அபாரமானது. மாறுதல் நித்தியமான சுவாரசியத்தை வைத்திருக்கிறது. மாறுதல் துயரத்தையும் தான்.

எனக்கேயுரிய ஆசிரியர்கள் என்று நானாகச் சிறுவயதிலேயே தேடிக் கண்டுபிடித்த அசோகமித்திரனைப் போன்ற, சூடாமணியைப் போன்ற, வைக்கம் முகமது பஷீரைப் போன்ற, வண்ணநிலவனைப் போன்ற, கென்னத் ஆண்டர்சனைப் போன்ற ஆசிரியர் நீங்கள்.

உங்கள் கவிதையில் வரும் நரியைப் போலவே நிலவொளியில் எப்போதும் ஆடிக்கொண்டிருங்கள் பாண்ட். உங்களுக்கென்று ஆர்ஜிதமான இடம் அது.

இரவு வீடு திரும்பும் பாதையில்

பிரகாசமான நிலவொளியில்

ஆடும் நரியொன்றைக் கண்டேன்.

நின்று அதை வேடிக்கை பார்த்தேன்
பின்னர்

அந்த இரவு அதற்கே ஆர்ஜிதம்

என்றுணர்ந்து

குறுக்கு வழியைத் தேர்ந்தேன்.

சிலசமயங்களில்

வார்த்தைகள் உண்மையாய் ஒலிக்கும்போது

காலைப் பனிக்குள்

ஆடும் நரியைப் போல

நான்.  

Comments