Skip to main content

உத்தம உண்மை


இந்தக் காலையில் உணரும்

சத்தங்களுக்குப் பின்னால்

நிசப்தம் கனம் கொள்கிறது

நிசப்தத்தை ஒரு இடமாக

நிசப்தத்தை ஒரு நிலையாக

நிசப்தத்தை சிறுபுள்ளிகளாக

நானும் ப்ரவுனியும் கடக்கும்போது

தலையில் மட்டுமே உயிர் இருக்கும்

நோயுற்ற காகத்தை

இன்னும் அமைதி கலையாத

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின்

வாசல் புல்தரையில் பார்த்தேன்

பறக்கவோ நடக்கவோ முடியாத

அந்தக் காகத்தில்

எல்லாம் அடங்கிக் கொண்டிருக்கிறது

ஒரு பூனை வந்தால் போதும்

அது இறுதியைத் தொட்டுவிடும்.

இப்படித்தான்

என் அம்மா வாயைக் குவித்துக் கண்களை

இங்கே இருந்து விலக்கி

வெறித்துக் காத்திருந்தாள்

காகம் தன் கூர் அலகைத் தூக்கி

ஒரு கருப்புப் பொட்டலத்தைப் போல்

வானத்தைப் பார்த்துக் காத்திருக்கிறது

மரணம் ஒரு இடமா

மரணம் ஒரு நிலையா

மரணம் ஒரு புள்ளியா

தெரியவில்லை

அம்மா சந்தித்ததை

இந்தக் காகம் சந்திக்கப் போகிறது

அம்மா அன்றைக்குக் கிளம்பிச் சென்றாள்

காகமே

நீ புறப்படுவதற்காக

ஆள்புழக்கம் இல்லாத புல்தரையில் வந்து வீற்றிருக்கிறாய்

அம்மா சென்றதற்கு

நீ செல்வதற்கு

அடுத்து

நானும் வருவேன் காகமே.


Comments