Skip to main content

பூனையைக் கொல்ல முடியாது


என் வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக என் ப்ரவுனியையும் என்னையும் கொல்வதற்கு நுழைந்த பைத்தியத்தின் பூனையை நான் கொல்லவே முடியாதென்று இன்று தெரிந்துகொண்டேன். முதலில் ப்ரவுனி தான் வீணாகப் பயப்படுகிறதென்று நினைத்தேன். ஆனால் பூனைக்குத் திடமான ஒரு குறி இருக்கிறது. என் வீடிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிழல்மறைவுகளில் அது நடமாடி, நான் இல்லாத வேளைகளில் என் வீட்டின் ஜன்னல் வழியாகத் தோன்றி என் ப்ரவுனியை அச்சுறுத்துகிறது.

உருவம் தெரியாத அரவம் போல, என் பைத்தியத்தின் பூனை, ப்ரவுனிக்குத் தன் நகர்வை உரைத்துக் கொண்டே இருக்கிறது அந்த அரவம் கேட்டதும் ப்ரவுனி காற்றில் மூக்கைத் தூக்கி மூச்சிரைத்தபடி வீடெங்கும் சிதறி அலைகிறது. தனியாக இருக்கும்போது, உருவத்தைக் காண்பிக்காத எத்தனையோ வஸ்துக்கள் இப்போது, வீட்டுக்குள் சரசரக்கத் தொடங்குகின்றன. மாத்திரைகள் பூச்சிகளாகிவிடுகின்றன. விழும் பொருட்களை, நாணயங்களை தரை விழுங்கிவிடுகிறது.  

இரவு பத்து மணி தொடங்கி நான்கு மணிவரை பைத்தியப் பூனையின் அரவம் வீட்டைச் சுற்றி தீவிரகதி கொள்கிறது. ஆலிஸின் செஷயரைப் போல ஜன்னலில் ப்ரவுனிக்கு மட்டும் தோற்றம் காட்டி மறையும் பூனையை இன்று அதிகாலை நான்கு மணிக்கு நானும் ப்ரவுனியும் சமையலறையில் சந்தித்தோம். சமையலறை ஜன்னல் வழியாக நுழைந்துவிட்ட பூனைக்கு எளிதாக அதே ஜன்னல் வழி வெளியேறத் தெரியவில்லை. அடுப்பு மேடையில் நின்று வெருவியபடி எங்களையும் வெருட்டியபடி யுத்தத்துக்குத் தயாரென்பது போல உடலைக் குவித்து நின்றிருந்தது.

ப்ரவுனி குரைத்தபடி பாய, விஸ்வரூபமெடுத்துப் பாய்ந்த பூனை முன்காலை வாளாக்கிச் சுழன்று தாக்கி மீண்டும் சமையலறை மேடையில் போய் அமர்ந்தது. நான் ஜன்னல்களை விரியத் திறந்தேன். ப்ரவுனியை பாதுகாப்பாக என் படுக்கையறையில் பூட்டிவைத்தேன். வீட்டின் வாசலைத் திறந்தேன் பைத்தியத்தின் பூனையை ஒரு உலோகக் கம்பியை எடுத்து விரட்டினேன். அதன் திருவாயைத் திறந்து சீறியபோது என் ஆயுதம் நடுங்கத் தொடங்கியது. நான் சிறுத்துப் போனேன். திருநெல்வேலியில் நாங்கள் வசித்தபோது, பூட்டப்பட்ட அரங்குவீட்டில் தன் சுய சொரூபத்தைக் காட்டிய குட்டிப்பூனை  என் ஞாபகத்துக்கு வந்தது. பூனைக்கு ஒன்பது வாழ்க்கைகள்; ஆமாம் பூனைக்கு ஒன்பது வாழ்க்கைகள். 

தனக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்காமல், அதை வைத்த ஏழைப் புலம்பெயர் தொழிலாளியையே, சிக்கவைத்துக் கொல்லும் அசோகமித்திரனின் கதைப்பூனை ஞாபகத்துக்கு வந்தது. தினசரி உறையூற்றி வைக்கும் தயிரைக் காப்பாற்றுவதற்காக பூனையிடம் உயிரை விடுகிறான் அவன். 

எல்லாரும் தூங்கும் அதிகாலையில் அமைதியையும் சமாதானத்தையும் வேண்டி, என் சமையலறைக்குள் நுழைந்த பைத்தியத்தின் பூனைக்காக ஜன்னல்களை எல்லாம் திறந்து வைத்தேன். என் வீட்டின் வாசல் கதவு பூனைக்காகத் திறந்திருக்கிறது. பூனைக்காக எல்லாம் திறந்திருக்கிறது. ஆனால் பூனை நகரவில்லை. அடுப்பு மேடையிலேயே ஒரு ஆள்போல உட்கார்ந்திருந்தது. சில நிமிடங்கள் கழித்து, அந்தப் பைத்தியத்தின் பூனைக்கு என் காலை உறக்கத்தின் மீது கருணை வந்திருக்கலாம். மெதுவாகத் திரும்பித் தான் வந்த ஜன்னல் கம்பிகளுக்குள்ளேயே சிரமப்பட்டு வெளியே சென்ற அரவத்தை படுக்கையறையிலிருந்து நாங்கள் கேட்டோம். 

Comments