Skip to main content

ஸ்ரீ நேசன் ஆட்டும் ஊஞ்சல்


ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவத்தில் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்திய கலைஞர்களின் படைப்புகளை என்னளவில் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களது மரபையும் சேர்த்துத் தொகுத்துக் கொள்வது அத்தியாவசியமான பணியாகவே தோன்றுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்துவத்தையும், அலாதிக் குணத்தையும் தக்க வைத்திருக்கும் ஸ்ரீநேசனின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் சேர்த்து வாசிக்கும்போது என்ன மரபில் அவர் கிளைத்திருக்கிறார் என்று மெல்லிசாகத் தெரிய வருகிறது. நகுலன், ஆனந்த், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி ஆகியோர் உருவாக்கிய சாரமான ஒரு கவிதை மரபின் தொடர்ச்சி என்று சொல்ல முடிகிறது.

நகுலனில், ஆனந்தில் காலம் ஒரு அரூபப் பொருளாக, தொட முடியாத ஒன்றாகத் தோற்றம் கொள்கிறது. வாசகனால் அதைக் கைக்குள் வைத்திருக்க முடியாது.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கிய கவிஞர்களில் ஒருவராக எழுதத் தொடங்கிய ஸ்ரீநேசன், காலத்தை இயற்கையாக, காலத்தை மலையாக, காலத்தை ஏரியாகத் தொட்டுக் கவிதைகளாக்கும் போது இங்குள்ள பிராந்தியம் மற்றும் ஊர்களின் சுவைகளை, மூலிகை மணங்களைக் கொண்டதாக மாறுகிறது. சென்னைப் பெண்ணின் தோற்றம் கொண்டவளாக ரேணுகா பரமேஸ்வரி அம்மன் எப்படி மாறுகிறாளோ அப்படி. தொன்மையாக கண்ணுக்குத் தோன்றாமல் வீற்றிருக்கும் காலத்தை இயற்கையாகவும் மலையாகவும் ஏரியாகவும் கடவுளாகவும் மாற்றித் தொடக்கூடிய, புரண்டு புணரக்கூடிய அனுபவமாக மாற்றும் தொழிலில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த தொகுப்பு ‘ஏரிக்கரையில் வசிப்பவன்’. ஸ்ரீநேசனின் இரண்டாவது தொகுதி அது. தமிழில் வெளிவந்த நவீன கவிதைத் தொகுப்புகளில் சிறந்த பத்து தொகுதிகளைத் தேர்ந்தால் ‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ அதில் ஒன்றாக இருக்கும். இந்தத் தொகுதியில் தான் தனியான தொனியையும் அடைகிறார்.

ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுதியின் முதல் கவிதையான ‘ஏரிக்கரை அம்மன்’-ல் அம்மன் காதலியாகவும், தாயாகவும், குழந்தையாகவும் மாறும் தனிப்பண்பாடு ஒன்று பிறக்கும்போதுதான், புதுக்கவிதை நவீன கவிதையாக உருமாற்றம் அடைகிறது.

‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ தொகுதிக்கு ஸ்ரீநேசனின் நண்பரும் கவிஞருமான ராணிதிலக் எழுதிய முன்னுரை முக்கியத்துவம் வாய்ந்தது. ராணிதிலக் சொல்வது போலவே, ஏரி மற்றும் மலையை நோக்கி ஸ்ரீநேசன் கவிதைகள் செல்லும்போது அவை பறக்கத் தொடங்குகின்றன. ஸ்ரீநேசனது சமீபத்திய தொகுதியான மூன்று பாட்டிகள் தொகுதியிலும் அவர் சற்று தரைமட்டத்தில் சஞ்சரித்தாலும் மலை மற்றும் ஏரியைப் பற்றிய கவிதைகளில் அந்தப் பறத்தல் அனுபவத்தைச் சாத்தியப்படுத்தவே செய்கிறார்.

‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ தொகுதியின் மூன்றாவது கவிதையான ‘நானும் நாயும்’ கவிதை, இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் ப்ரவுனியுடனான சம்பந்தம் உருவாக்கிய அனுபவத்தில் வேறொரு பொருளைத் தருகிறது.

இருந்த எல்லாரும் அகன்றனர்

நாங்கள் தனியானோம்

என்று சொல்லும்போதே நாம் நுழையும் அந்த உலகத்தில் ஒரு அமைதியை அமல்படுத்தி விடுகிறார் ஸ்ரீநேசன்.

எண்ணங்கள், சொற்கள், கருத்துகள் எல்லாவற்றையும் கவிதை சொல்லியும் நாயும் சேர்ந்து இல்லாமலாக்குகிறார்கள்.

ஸ்ரீநேசன் உருவாக்கிய பிரமாண்ட அமைதியில் நாய் திடீரென குரைக்கிறது, பின் அமைதியாகிறது. இதுவரை எழுதப்பட்ட எல்லா எழுத்துக்களும் கலைகின்றன. பின்னர் புதிய வரிகள் புலப்படுகின்றன.

ஒரு புள்ளியில் நாயும் கவிதை சொல்லியும் ஒரு சமத்துவப் புள்ளியை உணர்கின்றனர். நாயின் இடத்தில் ஸ்ரீநேசனின் இயற்கை, மலை, ஏரி, மலர் எல்லாரையும் எல்லாவற்றையும் வைக்கலாம்.

ஸ்ரீநேசன் தனது நாயை ஏரியின் கரையில் வைத்தார். நான் ‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்’ கவிதையில் கடலின் கரையில் வைத்தேன். ஸ்ரீநேசன் ஏரியின் பக்கத்தில் வைத்து சாதிக்க முடிந்த பிரமாண்டத்தை நான் கடலின் பக்கத்தில் வைத்துச் சாதிக்கவில்லை.

எனது கவிதையில் இருளுக்குள் கரையும் காகங்களை எழுதியிருக்கிறேன். அதற்கு முன்னரே மலையின் மீது அந்திக் கருக்கலில் இருளோடு இருளாய் மூழ்கும் பறவைகளின் அனுபவத்தை எழுதியிருக்கிறார்.

இன்னும் சற்று நேரத்தில்

எல்லாம் இருட்டில் மூழ்கப் போகிறது

அப்புறம் மாலையும் இருக்கப் போவதில்லை

தொடர்ந்து இருக்கப் போவது

என்றைக்குமான இருள் மட்டுமே

இனி நான் இருளாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே, இயற்கை வைத்திருக்கும் இருளுக்கும் மனிதன் உருவாக்க நினைக்கும் வெளிச்சத்துக்கும் இடையே எத்தனை இடைவெளி, எத்தனை நிசப்தம், எத்தனை தனிமை இதைத் தொடர்ந்து விசாரித்து, விஸ்தரித்துக் கொண்டே போய் உணரும், உணர்த்தும் பெருமூச்சு தான் ஸ்ரீநேசன்.

‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ தொகுதியில் கலவி, புணர்ச்சி, உடலுறவு என்ற தனி உடல்களின் அனுபவம் வேறொரு பேருருவாக மாற்றப்படுகிறது. அது இயற்கையெனும் பிரமாண்டத்துக்குள் நடக்கும் ரகசியமாக மாற்றிக் காட்டப்படுகிறது. அங்கு உடலின் வரம்புகள், உடலின் வரையறைகள் இல்லை. நத்தை சிங்கம் போல கர்ஜிக்கிறது.

அறிவு, அறிவின்மை, ஞானம், காலித்தன்மை, மனம், மனமின்மை, உடல், உடலின்மை தோன்றி மறைந்து வந்து வந்து போகும் உணர்வாக அனுபவமாக நிகழ்த்தப்படுகிறது.  


ஒரு மரங்கொத்தி

ஒரு மரத்திற்கும் அதன் இன்னொரு மரத்திற்கும்

ஒரே நேரத்தில் பறக்கிறது

ஒரு பெண்ணை

ஒரே நேரத்தில் இருவர்

இருவேறு இடங்களில் இருந்து சுகிக்கின்றனர்

இடையில் ஒரு தும்பி

அதன் மெல்லிய உள் சிறகுகளை

வினாடிக்கு இருபது முறை அடித்துக்கொண்டு நிற்கிறது.

 

இதில் மரங்கொத்தி, ஒரே நேரத்தில் இரண்டு உடல்களாகும் பெண், மெல்லிய உள் சிறகுகளை வினாடிக்கு இருபது முறை அடித்துக் கொண்டே அந்தரத்தில் நிற்கும் தும்பி எல்லாமே எதை உணர்த்துகின்றன?

‘வள்ளலார் தெரு’ கவிதையை அது எழுதப்பட்டு வெளியான காலத்தில் படித்தபோது அதனில் உள்ள ஆழமான இடங்கள் எனக்குத் தட்டுப்படவே இல்லை. வள்ளலார் தெருவுக்குள் நுழையும் குப்பைவண்டிக்கார முதியவர், மக்கும் குப்பைகளில் கலந்திருக்கும் மனசாட்சியை பிரித்துப் போடுகிறார். மக்காத குப்பைகளில் அதிகாரம் கலந்திருப்பதைப் பார்த்து பிரிக்கிறார். பிரமிள் மொழிபெயர்த்த மாக்ஸ் ஜேகப்பின் ரவீநன் தெருவில் வரும் தோட்டியை ஞாபகப்படுத்துகிறார். வள்ளலார் தெருவிலிருந்து பாரதிதாசன் தெருவுக்குள் குப்பை வண்டி நுழைகிறது. தமிழ் நவீன வரலாறு இந்தக் கவிதையில் சொல்லப்பட்டு விடுகிறது.

‘கடவுளின் தூளி’ கவிதை இந்த உலக உருவாக்கம் பற்றிச் சொல்லப்பட்ட சிறந்த ஆதிபுராணங்களில் ஒன்று. தான் படைத்த குழந்தையிடம் கடவுள் மாட்டிக் கொள்ளும் சிறந்த கதையை கவிதையாக ஸ்ரீநேசன் படைத்திருக்கிறார். சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே அந்தக் குழந்தையின் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது. கடவுள் ஆட்டிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீநேசனின் ‘மூன்று பாட்டிகள்’ கவிதைத் தொகுதியில் ஏகாந்தமாக, குழந்தையின் தொட்டிலை ஆட்டிக்கொண்டிருந்த அந்தக் கடவுள் அன்றாட மாயாஜாலத்தில் சற்று தூளியை ஆட்டுவதை நிறுத்தி மயக்கம் கொள்கிறார். நல்லது, கெட்டது, தர்ம, நியாய, அநியாயம், வாழ்வு, நோய், மரணம், வறுமையைப் பார்த்து ஆவேசம் கொள்கிறார்.

ஸ்ரீநேசன், அச்சம் கொள்ள வேண்டாம். நீ ஆட்ட வந்த இயற்கையின் தூளியை, பிரமாண்டத்தில் ஆட்டிக் கொண்டிரு. கபீர் உரைத்தது போல அதன் சேவகன் தான் நீ.


நனவு

நனவிலி

இரண்டு கம்பங்களுக்கிடையே

மனம் ஒரு ஊஞ்சலை இடுகிறது

 அங்குதான் எல்லா உயிர்களும்

எல்லா உலகங்களும் ஆடுகின்றன

அவற்றின் அலைவோ தீராதது

சூரியன் மற்றும் சந்திரனின்

போக்கும் வரவும் அங்கேதான்

லட்சக்கணக்கான யுகங்கள்

கடந்துபோகின்றன

ஊஞ்சல் ஆடுகிறது.

எல்லாம் ஆடுகின்றன!

வானமும் பூமியும் காற்றும் நீரும்கூட

மற்றும் பகவானும் அங்கேதான்

வடிவமெடுக்கிறான்

இந்தக் காட்சிதான் கபீரை

ஒரு சேவகனாக்கியது.   

(சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் www.thinaigal.com இணையத்தளத்தில் வெளியான கட்டுரை இது) 

Comments