Skip to main content

யவனிகா ஸ்ரீராம் - உலகின் எந்த மூலையிலிருந்தும் இனம்காணக்கூடிய குடியானவனின் கவிதைக்குரல்

 


சமீபத்தில் கனடாவிலிருந்து சென்னைக்கு வந்திருந்த நண்பர் ஒருவரின் மகளைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு பேரும் வளர்ப்பு நாயை வைத்திருப்பவர்கள் என்பதால் முதல் சந்திப்பிலேயே எங்கள் பரிச்சயம் திடம் கொண்டுவிட்டது. அவருக்கு எனது வளர்ப்பு நாய் ப்ரவுனியின் புகைப்படத்தை செல்போனில் காட்டினேன்.

அவர் தனது செல்போனைத் திறந்து, கனடாவில் உள்ள தனது இல்லத்தில் தற்போது அது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை நேரடியாகக் காட்டினார். அந்த நாய்க்குட்டி, கனடாவில் உள்ள ஒரு அழகிய வீட்டின் அறையில் மெதுவாக நடைபோட்டு ஜன்னலில் ஏறி சட்டகத்தில் முன்கால்களை வைத்து யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு நின்றது. எனது நண்பரின் மகள், தன் வரவுக்காக அது காத்திருப்பதாகச் சொன்னார். கனடாவில் உள்ள ஒரு வீட்டில் இருக்கும் நாயின் பகல் பொழுதை இந்தியாவில் எனது நேரத்திலிருந்து, ஒரு அடிகூட தொலைவு மாறாமல் நெருங்கிப் பார்ப்பது எனக்கு மிகுந்த அதிசய உணர்ச்சியை அளித்தது. நான் நெருங்கும் போது அதன் மீது அணு அளவும் தாக்கம் ஏற்படாமல், அதன் உள்ளடக்கத்தில், அதன் அனுபவத்தில் எந்தப் பண்பு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், என்னால் தூர தொலைவிலிருந்து, எனது அன்பைப் பார்க்க முடியும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கும் காலத்தில், நான் வாழ்வது, எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

இந்த நூற்றாண்டில் ஒரு தசாப்தம் முன்புகூட இந்த மாற்றத்தை நாம் கண்டிருக்கவில்லை. இன்னொரு சாத்தியமும் இந்தப் புள்ளியிலேயே இருக்கிறது. தூர தொலைவிலிருந்து எனது அன்பை நான் பார்க்க முடிந்த அதே சாத்தியத்தில், அதன் மீது ஒரு உயிர் ஆயுதத்தையும் நான் ஏவிவிட முடியும்.

ஒரு உயிரின் மீது, ஒரு தொல்குடி சமூகத்தின் மீது நிழல்படக் கருவியை வைப்பதற்கும், அவர்களைப் பற்றி கவிதை எழுதுவதற்கும், அவர்கள் மீது உயிர் ஆயுதத்தை ஏவுவதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

எனது நண்பன் தளவாய் சுந்தரம் இப்படித்தான், சென்னையில் வானகரத்தில் இருக்கும் தனது அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தென்கோடியில் இருக்கும் தனது கிராமமான ஊரல்வாய் மொழி கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு அதிகாலையில் சொட்டு நீர் எந்திரத்தை, செல்பேசி ரிமோட்டின் வழியாக உசுப்பித் தண்ணீர் பாய்ச்சுகிறான். அவனது செல்பேசிக் கருவி வழியாக மல்லிகை மொட்டுகள் திறக்கின்றன.

ஊடகங்களின் பண்பு மாறும்போது, வால்டர் பெஞ்சமின் உரைப்பது போல சமூக மதிப்பீடுகளும் சமூக அறங்களும் மாறிவிடுகின்றன. பாலியல் நடத்தைகள், அரசியல் நடத்தைகள், வர்க்க நடத்தைகள் எல்லாவற்றிலும் மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன. ஊடகங்களின் பண்பு மாறிவிட்டதென்பதையும் சமூகப் பொருளாதார உறவுகளில் அது தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவந்து விட்டதென்பதையும் உணராத நிலையில் தான் இங்கே பெரும் தோல்வியை முற்போக்கு இயக்கங்கள் சந்தித்திருக்கின்றன. ஒரு திரை, ஒரு அச்சடித்த படம் வழியாக நாம் பார்த்த எதார்த்தமும் நாம் வாழ்ந்த உலகமும் இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான திரைகள், டிஜிட்டல் உருவங்கள், ஆயிரக்கணக்கான எதார்த்தங்களுக்குள் நாம் தன்னியல்பாகப் புழங்கத் தொடங்கிவிட்டோம்.

இரண்டாயிரத்துக்குப் பின்னால் மாறிய இப்படியான உலகின் நடத்தைகளைப் புரிந்துகொள்வதில் தமிழ்ப் புனைவு தோல்வியையும் திகைப்பையும் கண்டுள்ளது. வரலாற்றிலும் புராணிகங்களிலும் இறந்து போன அமைப்புகளின் மீதான காமம் ஊதுபத்திப் புகையாகச் சவமணத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களின் பண்பு மாற்றத்தையும் விழுமியங்களில் ஏற்பட்ட மாற்றத்தையும் சமூக நடத்தைகளின் மேல் ஏற்பட்டிருக்கும் தாறுமாறான மாறுதல்களையும் அதன் திரவ வடிவில் கையகப்படுத்தியிருப்பது தமிழ் நவீன கவிதைகள் தான்.

ஒரு தனி நிலம், ஒரு தனி சமூகம், ஒரு தனிப் பண்பாடு, ஒரு தனி எதார்த்தம், ஒரு தனி உடல் என்பது இப்போதைய உலகில் சாத்தியமில்லை. எண்ணற்ற நிலங்களை, எண்ணற்ற சமூகங்களை, எண்ணற்ற பண்பாடுகளை, எண்ணற்ற தேச, இனக் கூறுகளை ஒரு உடல் பிரதிபலிக்கிறது. குறுக்கும் நெடுக்குமாகப் பாயும் நினைவுகள் போல, எதார்த்தங்கள் தோன்றிப் பிரதிபலிக்கும் சுயங்களாக வாழும் சாத்தியத்தை நமது உடல் பெற்றிருக்கிறது. இனி தேசத்துக்கும் உடலுக்கும் இறையாண்மை என்பது அருவமாகக் கூட இல்லை. அதனால்தான் இனம், சமயம், சாதி, தேசிய அடையாளங்கள் தங்களது இறுதி யுத்தத்தை மீண்டும் நம் உடல்களின் மீது உக்கிரமாகத் தொடங்கியுள்ளன.    

அப்படியாகப் பெருகிய எதார்த்தங்கள் அளிக்கும் கரைச்சலை, ஒரு உடலுக்குள் பல்வேறு சுயங்கள் நெருக்கியடித்துத் திணறி வெளிவிடும் கூட்டுப் பெருமூச்சை முழுமையாகப் பிரதிபலித்தவன் யவனிகா ஸ்ரீ ராம். நமது அந்தரங்க நிலத்தில் வர்க்க உறவுகளும், வர்க்க நடத்தைகளும் எவ்வாறு முளைக்கின்றன என்பதைத் தீராமல் பார்த்துக் கொண்டிருப்பவன் யவனிகா ஸ்ரீராம். அவனுக்கு இயற்கை சார்ந்த விந்தையோ, புதிரோ, விடுபடுதலோ, பறத்தலோ இல்லை. ஒரு மாபெரும் எந்திரத்தின் உறுப்புகளை முழுமையாக விசாரித்து அறிய முயலும் போராட்டமும், முரண்பாடும், திகைப்பும், களைப்பும், விரக்தியும் தெரிகிறது.         

யவனிகா ஸ்ரீராம் குறித்த எனது முந்தைய அவதானங்களில் அவன் மரபேதும் அற்றவன் என்ற எண்ணமே எனக்கிருந்தது. அதற்கு அவன் பயன்படுத்தும் அபுனைவு மற்றும் அந்நியத்தன்மை தொனிக்கும் மொழி.

சமூக கடப்பாடுடைய கவிதை இயக்க மரபின் தொடர்ச்சி என்று இப்போது எனக்குத் தெரிகிறது. கமிட்டட் பொயட்ரி என்றும் கவிஞர் பிரம்மராஜன் ஆத்மாநாமை வகுப்பதன் வழியாகப் பார்த்தால் யவனிகா ஸ்ரீராமுக்கு ஒரு மரபு இங்கே இருப்பது புகைமூட்டமாகத் தெரிகிறது. தனிக்குரலாக இல்லாமல் ஒரு பொதுக்குரலை ஆத்மாநாமில் முதலில் நவீன கவிதையில் கேட்கிறோம்.

ஆத்மாநாம், மலைச்சாமி, சமயவேல் ஆகிய முன்னோடிக் கவிஞர்கள் தத்தமது ஆளுமை, நிலப்பிராந்தியம், அகப்பிராந்தியத்தின் சாயல்களோடு சமூகப் பொதுநிலையின் அபிலாஷைகள், ஏக்கங்கள், கனவுகள், துயர, மகிழ்ச்சிகளை வெளிப்படுத்த முயன்றவர்கள். அவர்களின் முழுமைகண்ட தொடர்ச்சி என்று யவனிகா ஸ்ரீராமை வகுத்துக் கொள்கிறேன். சிறுநகரக் குடியானவனின் கலவையான சுயங்களின் குரலாக, அதே நேரத்தில் உலகின் வேறு வேறு பிராந்தியங்களை, வாழ்க்கைகளைப் பிரதிபலிக்கும் பெருந்தன்மையை அடைகிறது. யவனிகா ஸ்ரீராம் என்னும் பெருநிகழ்வு உருவான மரபு இது.

ஒரு நடுத்தர வர்க்க அறிவுசீவியின் இயல்புகொண்ட குரல் ஆத்மாநாமுடையது;

ஒரு உலகளாவிய தன்மை கொண்ட குரல் அது.

 

ஆத்மாநாமின் கவிதையிலிருந்து இப்படித் தொடங்குகிறது நன்றி நவிலல் ஆக…

 

இந்தச் செருப்பைப் போல்

எத்தனை பேர் தேய்கிறார்களோ

இந்தக் கைக்குட்டையைப் போல்

எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்தச் சட்டையைப் போல்

எத்தனை பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்களுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு

 

இந்தத் தொனியில், இதன் பொருளில் உலகில் எந்த மூலையில் உள்ளவனும், உள்ளவளும் தன்னை இனம்காண முடியும். அவன் உலத்திலிருந்து விடுபட்டுச் செல்கிறான். அவன் முதுகு ஆசுவாசமாய் நமக்குத் தெரிகிறது.

லட்சியார்த்தம் கொண்ட புரட்சிக் காரனாக வாழும் ஆசைக்கும், நேர்ந்துவிட்ட மத்தியதர வர்க்க குடும்பஸ்தனின் வாழ்க்கைக்கும் இடையே, வீட்டுக்கும் அறைக்கும் நடுவே, விடுதலைக்கும் கட்டுப்பெட்டித்தனத்துக்கும் இடையே அல்லலுறும் பொதுக்குரல் சமயவேலிடம் ஒலிக்கிறது. அந்த இரண்டுக்கும் இடையிலான தன்மை சமயவேலின் ஒட்டுமொத்த ஆளுமைக்குள்ளேயே திடம்கொண்டு விட்டது. வீட்டின் ஜன்னல் திறப்பு வழி பார்த்து ஒட்டுமொத்த உலகத்தின் இயக்கத்தை, அதன் கதையைச் சொல்ல முயற்சிக்கும் பார்வை அது…

 

கூரை முகட்டுப் பட்சிகளின் கரைதல்களுடன்

இமைகளைப் பிரித்து வாழ்த்து சொல்லும்

இளங்காலை

 

ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லவே பிரியும்

நேற்றின் அயர்வுகள்

 

வாசலைத் தாண்டி

உப்புக்காரனின் குரலோடு

ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது

 

குளிக்க சாப்பிட வேலைக்கென

கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை

இன்றும் நேசிப்பேன்.

 

மலைச்சாமியிடமும் அவரைத் தொடரும் யவனிகாவிடமும் இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கிய இடர்பாடெல்லாம் இல்லை. வீடு வெளி , உடல் மனம் என்ற இரட்டைகளை நொறுக்கிவிடுகிறான் யவனிகா. அவனுக்கு எல்லாமே வெளியாகவும் உடலாகவுமே தெரிகிறது.

அனைத்துக் கருத்தியல்கள், தத்துவங்களின் முடிவுக்குப் பிறகும், அதன் ரத்த வீச்சங்களுக்கும் இடையே விடியும் இந்தப் பூமியில் இறங்கிப் பாடுகிறது மலைச்சாமியின் கவிதை…

 

இப்பொழுது விடிந்துவிடும்

பறவைகளின் நுணுக்கமான கூவல்களும்

இரத்த வீச்சமும் என்னை எழுப்பின

உயிர்ப்பான மழுங்கடிக்கப்படாத

மரங்களின் மேல் விடிவு ஒளிர்கிறது

நூற்றாண்டுகளின் புழுக்கம்

என் பாட்டனைப் பாட்டியைத்

தந்தையைத் தாயைக் கொன்றது

வெள்ளிகள் சரியும் அபாந்திரமான

வானத்தின்கீழ்

அவர்களின் பிணங்கள்

எனக்குக் கதைசொல்லின

ராஜா செத்தான்

அன்றும் பின்னொரு நாளும்

பட்டத்து யானை பிச்சையெடுத்தது

அன்பு திருடப்பட்டது

தாழிகளிலிருந்து மீண்டெழுந்துவந்த

எலும்புக்கூடுகளால்

கடவுள் கொலைசெய்யப்பட்டான்

நான் வெகுநாட்களாய்த் திளைத்திருந்த

கற்பனைகளிலிருந்து தரையிறங்கியபொழுது

பனிவிலகிய ஆஸ்பத்திரியின்

கட்டிடங்கள் விடியலில் துலங்கின

உண்மையாகவே மிக உண்மையாகவே

கடைவீதியில் தொலைத்த என் தோழனை

இன்று கண்டுபிடித்தேன்.

 

மலைச்சாமியிடமும் சமயவேலிடமும் இருந்த நம்பிக்கை, யவனிகாவிடம் ஆரம்பத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டு விட்டது… அவன் இந்த உலகம் பிரமாண்டமான ஒரு பொய்யில் ஆரம்பித்துவிட்டதென்று சொல்லியே தொடங்குகிறான்…தத்துவத்தின் மதிப்பிழப்பு, செலாவணியின்மை, மரணத்தில்தான் இந்த விலைச்சீட்டு ஒட்டப்படுகிறது.

நம் மொழிக்கிடங்கின்

சர்வ வல்லமையிலிருந்து

இன்னும் எடுத்துப் பிரகடனப்படுத்த

முடியவில்லை

ஒரு பேருண்மையின் வாசகத்தை

கால்களால் அளந்து கொண்டிருக்கும்

வெளிகள் யாவற்றிற்குமாக

விளிம்புகளின் மரண ஓலம் கேட்கிறது

கூடு நோக்கி இழுத்துப் போகும்

ஒரு தானியத்தைக் கைவிட்டுச் சிதறுகின்றன

எறும்புகள்

பறவைகளின் அனைத்து உல்லாசத்திற்குமான

கீதங்கள் மாத்திரை குறைந்து நெருடுகின்றன

தாவரங்களின் ஒவ்வொரு துளிர்ப்பும்

கண்காணிக்கப்படுகிறது.

வர்ஷிக்கும் மழையின் துளிகள்

ஒவ்வொன்றும் பேரம் பேசப்படுகிறது.

உலகத்தின் கொண்டையில் விலைச்சீட்டு

பண்டங்களுக்கு ஆகாத

அச்சடித்த நாணயங்கள்

பூமியில் வீசப்பட்டு கிடக்கின்றன

சிலநேரம் இரு இமைகளுக்கு மத்தியில்

காரணங்கள் ஏதும் வேண்டியதில்லை

பிரமாண்டமான ஒரு பொய்யில்

ஆரம்பித்துவிட்டது இந்த உலகம்.

 

மேற்சொன்ன மூன்று கவிதைகளும் ஆச்சரியகரமாக உலகின் காதைகளாக இருக்கின்றன. இது தற்செயலா என்ன?

பொதுக்குரலாக இருந்தாலும் ஆத்மாநாமிடம் அறிவுநிலையின்  குரல் தொனிக்கிறது.  மலைச்சாமி, சமயவேலிடம் தொடரும்போது அதில் நமது  பிராந்தியம் கொஞ்சம் இறங்குகிறது. வஸ்துக்களின் ஓசை கேட்கத் தொடங்குகிறது.

அறிவு, வரலாறு, தத்துவம் மட்டுமல்ல நினைவைக் கூடப் பிரதானமாகச் சந்தேகிக்கும் கலைவடிவங்களில் ஒன்றாக கவிதையே இருக்கிறது. ஏனெனில் அறிவுமரபுகள் இந்த உலகில் ஏற்படுத்திய அத்தனை அபாயங்களையும் பார்த்த உயிர் அது. அதனால்தான், பெருந்தொற்று தொடங்கிய நாட்களில் திடீரென்று அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அரசும் வெகுமக்களின் மனசாட்சிகளும் கைவிட்ட போது, ஊருக்குத் திரும்ப முயன்ற அத்தொழிலாளர்களோடு தன்னை இனம்கண்டு கொள்கிறது கவிதை. கங்கையில் சடலங்கள் மிதக்கும்போது தன்னை இனம்கண்டு கொள்கிறது கவிதை. அறிவின் நீருற்று என்று சொல்லப்படக்கூடிய இடத்தில் ரத்தவேட்டை தொடங்கும் போது அதனுடன் இனம்காண்கிறது கவிதை. இளங்கோ கிருஷ்ணனும் கண்டராதித்தனும் அதைக் கலையனுபவம் வாய்ந்த படைப்புகளாக்கியிருக்கின்றனர்.  

இதுவரை அறிவுகள், அறிவியல்கள் கண்டவை எல்லாவற்றின் பழந்தூசிகளும் தன்மேல் குந்துவதற்கு அனுமதிக்காமல் இருப்பதால் தான், மாபெரும் காவியங்கள் படைக்கப்பட்ட பின்னரும் இன்னும் ஒரு சின்னஞ்சிறிய கவிதையின் திறப்புக்காக, ஒரு கவிஞனின் தொடுதலுக்காக, இந்த உலகம் தனது விந்தையையும் ரகசியத்தையும் திறக்கக் காத்திருக்கிறது. இதுவரையிலான அறிவு, அறிவியல், தத்துவம், உளவியல், அரசியல், கோட்பாடுகள், ஆன்மிகம், வரலாறு எல்லாம் சேர்ந்து வென்றதற்கும் வெல்ல முடியாததற்கும் இடையே கவிதை, ஒரு இறகு போன்று அள்ளவோ கொள்ளவோ முடியாமல் தன் ஏகாந்தத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. நீட்சே சொன்னது போல அறிவின் விஷக்கொடுக்கு, தனக்கெதிராகவே திரும்பி பேரிடர்கள், உற்பாதங்கள், சர்வாதிகாரத்தின் துயர நாட்களுக்குள் நாம் நுழைந்துவிட்ட வேளை இது.

அறிவின் ஊற்று என்று மொழிபெயர்க்கக்கூடிய கியானவாபி மசூதியை முன்வைத்து மீண்டும் தேசத்தை மறுபடி மறுபடி ரத்தக்களறியாக்கும் முகாந்திரம் தொடங்கியிருக்கிறது. அயோத்தியில் தொடங்கி காசி, மதுரா, குதுப்மினார், தாஜ்மகால் வரை நமது மாபெரும் ஞானமரபின் பல்வேறு குழாய் தொகுதிகளில் ஒன்றான நீரூற்றுக் குழாய் ஒன்றில் இப்படித்தான் நினைவுகள், பழைய நிணங்களை மோதிக் குதறி ரத்தத்தை வற்றாமல் பெருக்கிக் கொண்டிருக்கிறது.  

தமிழிலும் பிற வாழ்க்கைகள், பிற பார்வைகள், பிற உயிர்நிலைகள் மீதான வெறுப்பின் மேல் கலை, பண்பாட்டு இயக்கம் ஒன்று வெற்றிகரமாக ஏகபோகத்துடன் செயல்படத் தொடங்கியுள்ள காலம் இது.

மாற்றங்கள் எதற்கும் முகம்கொடுக்காத மனோவைதீகமும் தீண்டாமையும்தான் அதன் கருவறையும் பாசறையும்.  

பொய் செய்திகளின் மேலேயே கட்டப்பட்டிருக்கும் இந்திய ஆட்சி நிர்வாகத்தின் கீழ், கலை பண்பாட்டு இயக்கங்களும் அதன் பார்வைகளும்  அந்தப் பொய்களின் நீட்சியாக வெற்றிபெறுவது ஆச்சரியத்துக்குரியதல்ல. வரலாறு, தத்துவம், மரபு என எதன் முகமூடியை அது அணிந்திருந்தாலும் அதன் அடிப்படை இயக்கமும் ஆற்றலும் வெறுப்பின் பாற்பட்டது, வெறுப்பின் பாற்பட்டது, அதைத் தவிர வேறொன்றுமில்லை.

அறிவின் நம்பிக்கையில் எழுந்து அறிவின் பயனின்மையைப் பாடுகிறான் யவனிகாகருத்தியல் நம்பிக்கையுடன் மேலே போய்,கருத்தியலின் தோல்வியைப் பாடுகிறான் யவனிகாகோட்பாட்டின் பாட்டையில் பயணித்து கோட்பாட்டின் வியர்த்தத்தை எழுதுகிறான் யவனிகா;உடலின் விடுதலையில் தற்காலிகமாகச் சுகித்து உடலின் எல்லைக்குள் துக்கித்துப் பகிர்கிறான் யவனிகா.

000

யவனிகாவின் கவிதைகளில் ஒன்றில் அத்வைதி என்று நகுலனைக் குறிப்பிடுகிறான். லக்ஷ்மி மணிவண்ணன் தனக்கு உவக்காத  உயிர்களை, கருத்துகளை எல்லாம் கிறிஸ்தவம் என்கிறார். எனது வளர்ப்பு நாய்க்கு ப்ரவுனி என்று பெயர் இருப்பதால் அதையும் கிறிஸ்துவன் என்று சொல்லிவிடுவார்.

அது குறித்த ஒரு தெளிவை மட்டும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் எழுதத் தொடங்கிய எல்லா எழுத்தாளர்களையும் போல, அத்வைதப் பார்வையால், அது உருவாக்கிய அணுகுமுறையால் தாக்கம் பெற்றவர்களில் ஒருவர் நகுலன். ஆனால் நகுலன் அத்வைதி அல்ல.

அவர் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு உலகங்களை அல்ல; பல்வேறு உலகங்களை தன் படைப்புகளில் எழுப்ப முயன்றவர். இன்னொரு உயிரின் இடையீட்டை, இயற்கையின் இடையீட்டை, நட்பின் இடையீட்டை, காதலியின் வருகை, பிரிவை, பூனை, பாம்பு, மரம், செடி, இலைகளின் சஞ்சாரத்தை பூதாகரமாக தன் படைப்புகளில் எழுப்பியவர்.

நகுலன் அத்வைதி அல்ல என்று மட்டும் நான் சொல்லவில்லை; படைக்கும், சிருஷ்டிக்கும் வல்லமையுள்ள எதுவும் அத்வைதி அல்ல; பெண் அத்வைதி அல்ல; கவிஞன் அத்வைதி அல்ல.

ஆனால் அத்வைத அணுகுமுறையும், அது மேலோங்கிய வாழ்க்கைப் பார்வை, அதுவே ஆட்சி, சமூக நிர்வாக முறையாக மாறி, இந்தியாவில் அது உருவாக்கிய அநீதி, ஏற்றத்தாழ்வு, மேன்மை, கீழ்மைகள் என்ற அனுபவங்களின் அடிப்படையில்  யவனிகாவுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

இன்னொரு உயிரை இன்னொரு உலகை இன்னொரு இருப்பை எங்கோ ஒரு புள்ளியில் நாம் மறுக்கும்போதுதான், பார்க்காமல் ஆகும்போதுதான் அந்த உயிரை சாக்கடைப் பாதாளத்திலும், நகரத்தின் ஓரத்திலும் வாழ்வதற்கு நமது மனசாட்சியின் ஒத்துழைப்புடன் அனுமதிக்கிறோம். அது மாயையாகக் கற்பிதம் செய்யப்பட்டுவிடுகிறது. அவர்களை கீழேயும், நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக மேல் வரிசையிலும் அவர்களது ரத்தத்தை அவர்களுக்குப் புலனாகாமலேயே பருகிக் கொண்டே, அதில் கிடைக்கும் ஆற்றலின் மீது அமர்ந்திருக்க முடிகிறது. பிற அறிவுக்கு, பிறவற்றின் ஞானத்துக்கு நாம் களங்கத்தையும் தீண்டாமையையும் கற்பித்து விடுகிறோம். போர்ஹேயின் மணல் புத்தகம் சிறுகதையில் அந்த ரகசியப் புத்தகம் மும்பையின் சேரிப்பகுதி ஒன்றில் கிடைப்பது தற்செயல் அல்ல.

ஒட்டுமொத்த தேசமே பார்க்க ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஊர்திரும்பும் தொழிலாளர்கள் அதனால்தான் கண்ணுக்குத் தெரியாமல் ஆக்கப்படுகின்றனர். குஜராத்தில் தொடங்கி கங்கை வரை சடலங்கள் அங்கே தான் மிதக்கத் தொடங்குகின்றன.யவனிகாவின் அருமையான கவிதைகளில் ஒன்றான ‘சொல்வது நமது ஆனந்த்’ கவிதையில் பேசும் ஆனந்தைப் போல, அனைத்தையும் விளக்க இயல்பவர்களாகவே பெரும்பாலான இன்றைய புனைகதையாளர்கள் தெரிகிறார்கள். இந்தக் கவிதையில் வரும் ஆனந்துக்கு நாவல் எழுதும் திட்டம் எதுவும் இல்லை என்பது ஆறுதல். வெளியே உள்ள ஆனந்த்கள், நாவல் திட்டங்களை வைத்திருப்பவர்கள்.

ஆனந்த் சொல்கிறார்

தான் ஒரு வர்த்தக காலனியில் குடியிருப்பதாகவும்

அதன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகவர்களே

குறிப்பிட்ட சமூக நிறுவன எல்லைகளை

பாதுகாத்துக் கொண்டிருப்பதாகவும்

ஒருவனது தேசம் என்பதே

கற்பிதம் எனச்சொல்லும் அவர்

ஒரு இறக்குமதி கார் வைத்திருக்கிறார்

காலனியில் இளம்பெண்கள்

இலவசமாகக் கிடைப்பதாகக் கூறுமவர்

தான் ஒரு சக்கரை நோயாளி எனவும்

தனியார் கம்பெனி ஒன்றில் முப்பதாயிரம்

சம்பளம் பெறுவதாகவும்

அவ்வப்போது நட்சத்திர விடுதிகளில்

கேளிக்கைக்கிடையே பலகோடி பேரத்தில்

ஈடுபடும்போது தன்னால் எதையும்

அனுபவிக்க முடியவில்லை எனவும்

அங்கலாய்த்துக் கொள்கிறார்

கோட் சூட்டோடு வாசனைத் திரவியம் பூசி

வரவேற்பறைப் பெண்களிடம் தன்னால்

பாலியல் குறும்பு மட்டுமே பண்ண முடிகிறது

என உதட்டைப் பிதுக்கும் ஆனந்திற்குச் சுமார்

நாற்பத்தைந்து வயதிருக்கலாம்

ஆண்டவன் எல்லாவற்றையும் அளந்துதான்

வைத்திருக்கிறான் எனத் தத்துவம் சொல்லும்

ஆனந்த் தன்னை ஒரு அமெரிக்கன் என்றே

குறிப்பிட விரும்புகிறார்

ஏழ்மையும் படிப்பறிவுமற்ற ஒரு காலனியில்

வர்த்தகக் குறியீட்டு எண்

அடிக்கடி சரிவது இயல்பானதுதான்

எப்படியும் மக்கள் உயிரோடிருக்கும் வரை

உற்பத்திக்கும் உடலுக்கும் வாங்குதிறனுக்கும்

புதிய குழந்தைகள் பெரியவர்களாகும் வரை

ஒரு காலனி என்பது

இயல்பூக்கமற்ற மந்தைகளின் நோய்த் தொகுதிதான்

எனப்பெருமூச்சு விடும் அவர்

கடவுளும்கூட ஒரு அமெரிக்கர்தானே

எனச்சொல்லி அட்டகாசமாகச் சிரிக்கிறார்.

 

யவனிகாவின் வரையறையில் சொன்னால் இந்தியாவில் இன்று இருக்கும் முழுமையான அத்வைதிகள் என்றால் இரண்டுபேரைத்தான் சொல்லமுடியும். இரண்டு பேரும் எதையும் படைக்காதவர்கள். அதனால்தான் அவர்கள் சென்ற இடமெல்லாம் பிரமிள் உரைப்பது போல பிணமாகத் தொடர்கிறது.

000

யவனிகாவுக்கும் எனது அம்மாவுக்கு ஏழு வயதே வித்தியாசம். ஆனால், யவனிகா எனது சமகாலத்தில் கவிதை எழுதத் தொடங்கியவன்.

கக்கத்தில் சிறுவியாபாரிகள் அன்று பயன்படுத்திய லெதர் பேக்கை வைத்துக் கொண்டு மலேசியாவிலிருந்து சென்னை வந்திறங்கிய பளபளப்புடன் பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் சிகரெட் பாக்கெட்டுடன் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானன் பதிப்பகத்தில் பார்த்த அவனது உருவம் அப்படியே எனக்கு ஞாபகத்தில் உள்ளது. அப்போது எனக்கு அவன் என் வயதை விட 16 வயது மூத்தவன் என்று எனக்குத் தெரியாது. அப்போது ஒருமையில் அழைக்கத் தொடங்கிய பழக்கம் இன்றும் மாறவில்லை. அது அந்தரங்கமும் ஆத்மார்த்தமும் சேர்ந்தது.

அவனது சிறந்த கவிதைகளில் ஒன்றான ஆறுமுகா காபி ஒர்க்ஸில் தொலைத்தது போல, சென்னையில் அந்த லெதர் பேக்கையும் வியாபாரி என்ற அடையாளத்தையும் கவிதைக்காக யவனிகா தொலைத்தான். திருவல்லிக்கேணி வீதிகளில் பீடிகளைப் பாவித்தபடி அலைந்திருக்கிறோம். ஞானக்கூத்தன் மொட்டை வெயில் நாளொன்றில், எங்களைப் பரிதாபப்பட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு காபி தந்திருக்கிறார். யவனிகா ஸ்ரீராம், பீடிகளை இன்னமும் அறிவுரைகள் எதையும் கேட்காமல் குடித்துக் கொண்டேயிருக்கிறான்.

எனது மனைவியானவள், என் காதலியாக இருந்தபோது அவளை யவனிகா பார்த்திருக்கிறான். அவனது நடுவயதில் அவனை தனது நேசத்தால் கௌரவப்படுத்தி, இரண்டு பெண்களுக்கிடையே அல்லல்படும் துயரத்தையும் கொடுத்து, அவன் ஊரிலிருந்து தப்பிவந்து சென்னையில் ஒளிந்துவாழ்ந்த போதும், கண்டுபிடித்து அவனைத் துரத்திக் காதலித்த அந்த அருமையான மனுஷியையும் நான் பார்த்திருக்கிறேன். நான் அவனைப் பார்த்தபோது, நான் இப்போது கடக்கும் பருவத்தில் அவன் இருந்தான். இரண்டு பேரின் நினைவிலும் எங்களது இளவயது முகங்கள் சேர்ந்திருக்கிறது. தளவாய், லக்ஷ்மி மணிவண்ணனுக்கு அடுத்து யவனிகாவுடனான நெருக்கம் நீண்டது. லக்ஷ்மி மணிவண்ணனின் யௌவனம் என்னிடம் தான் உள்ளது.

அந்தப் பிரியமும் கனத்த நினைவுகளும் கொண்ட ஒரு நண்பனை, சமகாலக் கவிஞனை, அவனது படைப்புகளை மதிப்பிட்டுக் கௌரவிக்கும் நிகழ்வில் பங்கேற்பதை ஆசிர்வாதமாகவே நினைக்கிறேன்.

யவனிகா, நீ பார்த்த அதே பையன்தான் நான். உன்னைப் பணிந்து சொல்கிறேன். வாழ்க நீ பல்லாண்டு, பல்லாண்டு.

(ஆயல் விருதுகள் விழாவில் கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்குப் படிக்கப்பட்ட கட்டுரை இது)

 

Comments

அற்புதமான மதிப்பீடும் நினைவுக்குறிப்பும். கவிஞர் மலைச்சாமியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன், அவர் தொகுப்புகள் எதுவும் பதிப்பிலில்லையா சார்? விற்பனைத்தளத்தில் கிடைக்கவில்லை.
அன்புள்ள விஜயகுமார். மிக்க நன்றி. மலைச்சாமியின் முதல் தொகுப்பு 'ஒதுங்கிய தெருவிலும் ஒரு சோடியம் விளக்கு'. தொடர்ந்து அதிகமாக எழுதவில்லை. உயிர்மை பதிப்பகத்தில் அவர் அத்தொகுப்புக்குப் பிறகு எழுதிய கவிதைகளையும் சேர்த்து 'விலக்கப்பட்ட திருடன்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். மனுஷ்ய புத்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டுப் பாருங்கள். கூகுளில் தேடினால் புத்தகத்தின் அட்டை கிடைக்கிறது.
Anonymous said…
அருமை
நன்றி சார். https://www.noolulagam.com/ ல் கிடைக்கிறது.
vazhkaipriya said…
அருமையான கட்டுரை. யவனிகா வின் கவிதைகள் சிலவற்றை முகநூலில் வாசிக்க நேர்ந்தது.அவைகள் ஏதோ சில காரணங்களால் என்னை ஈர்த்தது. அவர் நடுநிசியில் தான் தன் கவிதைகளை முகநூலில் பதிவேற்றுவார். அவைகளை வாசிப்பதற்காக பல நாட்கள் கண்விழித்து காத்திருப்பேன். கவிதைகளின் இடதுசாரி அரசியல் வளர்ந்து வரும் சந்தைகளில் மனிதர்கள் முக அடையாளம் தொலைவதை அவதானிக்கும் அவரது கவிதைகள். விளையாட்டாக அவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பார்க்க வேண்டும் என்ற பேராசை என்னை பேய் போல் பிடித்தாட்டியது. அவர் அனுமதியுடன் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அவராகவே தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த கவிதைகளுடன் தன் விருப்பப்படி சில கவிதைகளை தேர்ந்தெடுத்து ஐம்பது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பி வைத்தேன். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான சவாலாக இருந்தது. அவரது பாலிபோனிக் ஸ்டைல் இடையிலான ஆழ் மௌனங்கள் இவைகளை உள் வாங்கிக் கொள்வதில் ஏற்படும் அசதி.... அது ஒரு அழகான உணர்வு. இலயிப்பின் போதம் இயக்கிய நாட்கள். ஆறுமுகா காப்பி வொர்க்ஸ் கூட இந்த பட்டியலில் உள்ளது. இந்த கட்டுரை அந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வந்து விட்டதோடு மகிழ்ச்சியாகவும் உணரச் செய்தது. நன்றியும் அன்பும் ������
vazhkaipriya said…
அருமையான கட்டுரை. யவனிகா வின் கவிதைகள் சிலவற்றை முகநூலில் வாசிக்க நேர்ந்தது.அவைகள் ஏதோ சில காரணங்களால் என்னை ஈர்த்தது. அவர் நடுநிசியில் தான் தன் கவிதைகளை முகநூலில் பதிவேற்றுவார். அவைகளை வாசிப்பதற்காக பல நாட்கள் கண்விழித்து காத்திருப்பேன். கவிதைகளின் இடதுசாரி அரசியல் வளர்ந்து வரும் சந்தைகளில் மனிதர்கள் முக அடையாளம் தொலைவதை அவதானிக்கும் அவரது கவிதைகள். விளையாட்டாக அவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பார்க்க வேண்டும் என்ற பேராசை என்னை பேய் போல் பிடித்தாட்டியது. அவர் அனுமதியுடன் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அவராகவே தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த கவிதைகளுடன் தன் விருப்பப்படி சில கவிதைகளை தேர்ந்தெடுத்து ஐம்பது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பி வைத்தேன். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான சவாலாக இருந்தது. அவரது பாலிபோனிக் ஸ்டைல் இடையிலான ஆழ் மௌனங்கள் இவைகளை உள் வாங்கிக் கொள்வதில் ஏற்படும் அசதி.... அது ஒரு அழகான உணர்வு. இலயிப்பின் போதம் இயக்கிய நாட்கள். ஆறுமுகா காப்பி வொர்க்ஸ் கூட இந்த பட்டியலில் உள்ளது. இந்த கட்டுரை அந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வந்து விட்டதோடு மகிழ்ச்சியாகவும் உணரச் செய்தது. நன்றியும் அன்பும் ������