Skip to main content

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றிகரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.   

இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந்து தொடங்கி பல நிறுவனங்கள் கொத்து கொத்தாக தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நடவடிக்கைகளும் இக்காலகட்டத்திலேயே தொடங்கியது.

தமிழகத்தில் 170 பேரை ஒரே நேரத்தில் முறையான எந்த முன் அறிவிப்பும் இன்றி விகடன் நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பாக வேலை நீக்கம் செய்தது. இந்த வேலை நீக்கத்தை எதிர்த்து தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவரும் குசுகுசுவென்று பேசிக்கொண்டதைத் தவிர பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. பெருந்தொற்று காலம் அல்லவா. மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் அமைப்பு விகடன் அலுவலகம் முன்னர் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒரு சிறு ஆறுதல்.

இந்தச் சூழலில் தமது வேலை நீக்கத்துக்கு எதிராக வேறு எவரும் போராட முன்வராத நிலையில், விகடன் இணையத்தளத்தில் பணியாற்றிய கவிஞர். பச்சோந்தி மட்டும், மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மையத்தின் உதவியுடன், தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் அளிக்க முன்வந்தார். நமது அரசு அமைப்புகளுக்கே உரிய தாமதங்கள், விகடன் மனிதவளத் துறையினரின் அன்பான அச்சுறுத்தல்கள், தொழிலாளர் நல ஆணையப் பேச்சுவார்த்தையில் தோல்வி ஆகியவற்றை மீறி, சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கை பச்சோந்தி தொடர்ந்த பின்னர், விகடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து ஓரளவு ஆறுதல் அளிக்கக்கூடிய இழப்பீட்டுப் பணத்தையும் தந்து வழக்கை முடித்துள்ளது. வேளச்சேரியில் வசிக்கும் சக குடியாக, நான் பச்சோந்தி அனுபவித்த துயரங்களை இந்த இரண்டு ஆண்டுகளும் பார்த்து வருகிறேன். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே என்று துவங்கும் தாயுமானவரின் பாடலை லட்சினை மொழியாக வைத்துள்ள ஒரு நிறுவனத்தின் குருட்டுக் குரூரத்தினால் ஏற்பட்ட விளைவு அது.

பச்சோந்தியுடன் வேலை நீக்கம் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் சேர்ந்து இந்த வழக்கை உறுதியுடன் போராடியிருந்தால் இந்திய அளவில் பத்திரிகையாளர்களுக்கான முக்கியமான வழக்காக இது மாறியிருக்கும். இழப்பீடும் கூடுதலாக கிடைத்திருக்கும்.  

சமூகம், சினிமா, அரசியல் என எல்லாத் துறைகளிலும் நடக்கும் அநியாயங்களைக் கண்டிப்பவர்கள், தமக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைக்காகப் போராடாமல் விகடன் தங்கள் மீது ஏவிய நடவடிக்கையை மௌனமாக ஏற்றுக்கொண்டது துரதிர்ஷ்டம்தான். சமூக ரீதியாகவும், பொருளாதார நிலையிலும் இழப்பதற்கு எதுவும் இல்லாத விளிம்பில் நிற்கும் பச்சோந்தி என்ற கணேசன் தான், விகடன் என்ற சர்வ வல்லமையுள்ள ஊடக நிறுவனத்தை எதிர்த்து தனக்கு எதிராக நடந்த அநீதிக்கு தாமதமாகவேனும் உரிய இழப்பீட்டைப் பெற்றிருக்கிறார். இழப்பதற்கு எதுவும் இல்லை, நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளைத் தவிர என்று மார்க்சும் ஏங்கல்ஸும் பாட்டாளிகளுக்குச் சொன்ன கூற்றுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

பச்சோந்தியின் இந்த வழக்கைச் சிறப்பாக நடத்தி இந்த வெற்றியைப் பெற்றுத்தந்த வழக்கறிஞர்கள் திரு.ரவி, திரு.இளங்கோ ஆகியோரின் தளராத போராட்டத்தால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் ஹசீப்பும் நன்றிக்குரியவர். 

நான் இதற்கு முன்னர் பணியாற்றிய இந்து தமிழ் திசை தினசரியிலும் இதேபோல, வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில் நண்பர் செல்லப்பா மட்டுமே உறுதியாக வழக்கை முன்னெடுத்துவருகிறார். இந்து தமிழ் திசை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கே தயாராக இல்லை.

பச்சோந்தியைப் போல செல்லப்பாவுக்கும் சீக்கிரம் நீதி கிடைக்க வேண்டும். 

Comments

Anonymous said…
சிறப்பு
Anonymous said…
மிக்க நன்றி ஷங்கர்
Anonymous said…
சாமானியர்களின் போராட்டம் பெரும்பாலும் நீர்த்துப் போகச் செய்கிறது, அந்த வகையில் போராடி வெற்றி பெற்ற திரு பச்சோந்தி என்கிற கணேசன் சண்முகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

துணிச்சலோடும், மன உறுதியுடனும் விடா முயற்சியுடனும் உறுதுணையாக இருந்த மதிப்புக்குரிய வழக்கறிஞர் திரு ரவி அவர்கள் மற்றும் இளங்கோ அவர்களுக்கும்
இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றி.
Anonymous said…
மிகச்சிறப்பாகப் பதிவிட்டுள்ளீர்கள் அண்ணா.
Anonymous said…
வாழ்த்துக்கள் கவிஞர் பச்சோந்தி.
வாழ்த்துகள் பச்சோந்தி அண்ணா