முகக்கவசம் இட்டு
மாறிப்போன எலிகளின்
நடுவே
ஒன்று
பூனை.
அச்சத்தில் முகம்கூம்பி
மாறிப்போன எலிகளின்
நடுவே
ஒன்று
பூனை.
எலிகளுக்கும் பூனைகளுக்கும்
பேதமே இல்லை
என்று
அந்தப் பூனை
ருத்திராட்சத்தை உருட்டிக் கொண்டே
சொன்னது
எலிக்குப் பூனை நண்பன்
புதுவேதம் உரைத்தது
நம்பி அருகில் போன
எலியை எடுத்து
வாயில் போட்டுச் சுவைத்து
பூனை
வயிற்றைத் தடவிக் கொண்டு
அன்னமே ப்ரம்மம் என்றது
பெருமூச்சு விட்டுக்கொண்டு
அடுத்த நிலையில்
பிராணனே ப்ரம்மம் என்றது
ஏப்பம் ஒன்றை விட்டு
கண்களைத் திறந்து பார்த்து
இன்னமும் சில எலிகள்
குரு குருவென்று
நின்று ஏமாறத் துடித்துக் கொண்டிருந்த
காட்சியைக் கண்டு
கண்களில் சிரிப்புடன்
முகக்கவசப் பூனை
ஆனந்தமே ப்ரம்மம் என்றது
தின்னப் போகும் எலிகளின்
காதில்
குனிந்து ஓதியது
கடமையே பிரம்மம் என்றும்
அதற்குக் கடமையே பாதை
என்றும் சொல்லி
தன் வாயில்
கடைசியாக
வழியைக் காட்டியது
கடைசியாக.
Comments