பல ஆண்டுகளாக நான் எனது அம்மாவுக்கு மூன்று உறுதிமொழிகளைத் தொடர்ந்து கொடுத்துவந்திருக்கிறேன்: அவளை நான் க்ரகோவ் நகரத்துக்கு வரவழைத்து ஷாக்கபனாவுக்கும் மலைப்பகுதிகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வேன் என்று. ஆனால் அம்மாவுக்கு க்ரக்கோவைப் பார்க்கும் சந்தர்ப்பமே வரவில்லை. க்ரக்கோ மட்டுமில்லாமல் மலைகளையும் கடலையும் அவள் பார்க்கவேயில்லை. நான் எனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை. அம்மாவின் மரணம் நிகழ்ந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. க்ரகோவுக்கு அழைத்துவந்து சுகியன்னிஸ், புனித மேரியின் தேவாலயம், வாவல் கோட்டை, விஸ்துலா எதையும் நான் ஏன் அவளுக்குக் காட்டவேயில்லை.
ஆமாம். அவளது மகன் க்ரகோவில் வாழ்ந்துவந்தான்…’நம்பிக்கையளிக்கும்’ இளம்
கவிஞனாக…அவனது அம்மாவைப் பற்றி நிறைய கவிதைகளை எழுதியவன்… எல்லா அம்மாக்களைப்
பற்றியும் இன்னும் நிறைய கவிதைகளை எழுதியவன்…1947-ம் ஆண்டிலோ 1949-ம் ஆண்டிலோ அவன்
தனது அம்மாவை க்ரகோவுக்கு அழைத்து வரவேயில்லை. அவள் என்னிடம் வலியுறுத்தியதே
இல்லை. அதுகுறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதும் இல்லை.
அம்மா வார்சாவைப் பார்த்ததேயில்லை. அம்மா விமானத்தில் பறக்கவே இல்லை, கப்பலிலும் பயணிக்கவே இல்லை. நான் அம்மாவுடன் கஃபேவுக்கோ, உணவகத்துக்கோ, அலங்காரப் பூக்களை விற்பவரிடமோ, திரையரங்குக்கோ, ஆப்ராவுக்கோ அல்லது இசைக் கச்சேரிக்கோ சென்றதில்லை. நான் கவிஞனாக இருந்தேன்….நான் ‘ஒரு மூதாட்டியின் கதை’ கவிதையை எழுதினேன். ‘கடற்கரையில் நடைபோடும் முதிய குடியானவப் பெண்’ என்றொரு கவிதையை எழுதினேன். நான் என் அம்மாவைக் கடல்புறத்துக்கு அழைத்துச் சென்றதில்லை. நான் கடற்கரையில் அவளுடன் உட்காரவில்லை, அவளுக்காக நான் ஒரு கிளிஞ்சலையோ சிறு பொன்னம்பரையோ கூட கொண்டுவந்ததில்லை. எந்தவொன்றையும்….அவள் கடலைக் காணப் போவதேயில்லை. கடலைப் பார்க்கும்போது அவளது முகத்தையும் கண்களையும் சிரிப்பையும் நான் பார்க்கவே போவதில்லை….ஒரு கவிஞன்.
கவிஞன் என்பவன், புலம்பல்களை எழுதும்போது உலர்ந்த கண்ணுடன்
எழுதும் ஒருவனா? அப்போதுதான் அவனால் வடிவத்தைத் தெளிவாகப் பார்க்கமுடியுமா?
வடிவத்தின் கச்சிதத்தை உறுதிசெய்வதற்காக அவன் இதயத்தை முழுக்க பணயம் வைத்தே
ஆகவேண்டுமா? ஒரு கவிஞன் : இதயம் இல்லாத ஒரு மனிதனா? இப்போது ஒரு புத்தகத்
திருவிழாவில் பார்வையாளர்கள் முன்னால் தேம்பும்போது, கவித்துவ ஈடுபடுதல்கள்,
இலக்கிய ரீதியான பங்குப் பரிவர்த்தனை. மறுமை உலகில் அம்மா செடிகள் நிறைந்த
தோட்டங்களில் க்ரகோவிலிருந்து வாவல் வரை அலைந்து திரிகிறாள் என்று என்னை என்னால்
ஏமாற்றிக்கொள்ளக்கூட முடியாது. பழைய உரோம அங்கிகள், மேல்கோட்டுகள், செருப்புகள்
மற்றும் தொப்பிகளுடன் எமது அன்னையர் அனைவரும் உட்கார்வதற்கு ஒரு கடற்கரை, சொர்க்கத்தில் உண்டா…….? இப்போதும் நான் இதை எழுதும்போதும் பிச்சைக்காரத்தனமான
எனது புலம்பல்களை ‘திருத்தும்போதும’…. உலர்ந்த கண்ணுடனேயே இருக்கிறேன்.
Comments