Skip to main content

என் வாழ்வின் நடுவில் – ததௌஸ் ரோசவிச்

 


 இரண்டாம் உலகப்போர் வெடித்து 60 ஆண்டுகளாகிவிட்டது இப்போது.

நான் ஒரு கவிஞன். எனக்கு 77, 78 வயதாகிறது. ஒருநாள் கவிஞன் ஆவேன் என்ற அற்புதத்தில், பயணத்தைத் தொடங்கியபோது எனக்கு நம்பிக்கை கொள்ள முடிந்ததேயில்லை. துர்க்கனவுகள் மற்றும் ஆவிகளால் எழுப்பப்பட்டு இரவுகளில் எப்போதாவது விழிக்கும்போது “நான் கவிஞன் ஆகலாம்” என்ற எண்ணத்தால் பீடிக்கப்பட்டேன்…நான் ஆவிகளை இருட்டை மரணத்தை விரட்டுவேன்…நான் கவிதையின் வெளிச்சத்துக்குள் புகுவேன், கவிதையின் இசைக்கு, கவிதையின் நிசப்தத்துக்கு.

நான் இந்த வார்த்தைகளை எழுதும்போது, அம்மாவின் அமைதியான மனம்நிறைந்த கண்கள் என்மீதுள்ளன. மறுமையிலிருந்து அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், நான் நம்பாத மறுபக்கத்திலிலிருந்து. இவ்வுலகிலோ இன்னொரு போர் மூண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கப்புறம் இன்றுவரை தொடர்ந்து மூண்ட நூற்றுக்கணக்கான போர்களில் ஒன்று அது.

அரை நூற்றாண்டாக நான் கட்டியெழுப்ப முயன்ற உலகம் வீடுகள் மருத்துவமனைகள் மற்றும் ஆலயங்களின் கட்டிடக் குவியலுக்கிடையே நொறுங்கிவிழுந்துகொண்டிருக்கிறது…மனிதனும் கடவுளும் செத்துகொண்டிருக்கிறார்கள், மனிதனும் நம்பிக்கையும் செத்துக்கொண்டிருக்கிறது, மனிதனும் நேசமும்.

வாழ்வின் நடுப்பகுதியில்” என்ற கவிதையை வெகுகாலத்துக்கு முன்னர் 1955-ல் எழுதினேன்.

மரணத்துக்குப் பின் உலகின் முடிவுக்குப் பின்னர்

நான் வாழ்க்கையின் நடுவில் என்னை நானே கண்டு

என்னை நானே படைத்து

வாழ்க்கையை எழுப்புகிறேன்

மனிதர்கள் விலங்குகள் நிலப்பரப்புகள்

இது ஒரு மேசை என்று நான் சொன்னேன்

இது ஒரு மேசை

அந்த மேசையின் மேல் ஒரு ரொட்டி ஒரு கத்தி

கத்தி ரொட்டியை வெட்டுவதற்காக

ரொட்டி மக்களுக்கு உணவளிக்கிறது

மனிதன் நேசிக்கப்பட வேண்டியவன்

எது நேசிக்கப்படவேண்டியதென்று

நான் இரவும் பகலுமாகப் பயின்றேன்

மனிதன்தான் என்று நான் பதிலளித்தேன்.

ஒரு கவிஞன்! அவன் வயோதிகமடைந்துவிட்டான் மரணத்தின் வாயிற்படியில் நிற்கிறான் தலைகளைக் கொய்வதற்கானது கத்தியென்பது அவனுக்குப் புரியவில்லை மூக்குகளை காதுகளை வெட்டுவதற்கானதெனதென்று. கத்தி எதற்கானது? தலைகளை எடுப்பதற்கா…அதற்குமேலேயுள்ள இடம், தூரத்திலா? பக்கத்திலா? வேறு எதற்குத்தான் கத்தி? அந்நிய மொழிகளில் பேசும் நாக்குகளை வெட்டுவதற்கு மற்றும் கர்ப்பமுற்ற பெண்களின் வயிற்றைக் கிழித்துத் திறப்பதற்கு, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பை வெட்டியெடுப்பதற்கு விதைப்பையை பிடுங்குவதற்கு கண்களைத் தோண்டியெடுப்பதற்கு…தொலைக்காட்சியில் வேறெதை நம்மால் பார்க்கமுடியும்? செய்தித்தாள்களில்? வானொலிகளில்?

கத்தி எதற்காக

எதிரிகளின் தலைகளைக் கொய்வதற்காக

பெண்கள் குழந்தைகள் முதியவர்களின்

தலைகளை எடுப்பதற்காக

நான் இந்த வார்த்தைகளை எழுதும்போது, ஊமைச்செய்கை கொண்ட குருட்டு வார்த்தைகளை எழுதும்போது அம்மாவின் அமைதியான கண்கள் என்மீதுள்ளன. நமது இதயங்களையும் எண்ணங்களையும் ஊடுருவும் அன்னையரின் கண்கள்தான் நமது மனசாட்சி அவை நம்மை மதிப்பிடுகின்றன நேசிக்கவும் செய்கின்றன.

முழுமையான நேசம் மற்றும் படபடப்பு

அம்மாவின் கண்கள்.

அவளது மகன் தனது முதல் அடிகளை எடுத்துவைக்கும்போது அம்மா அவனைக் கவனிக்கிறாள்…அவன் தன்வழியைத் தேடும்போது, அந்த மகன் அவளைவிட்டுக் கிளம்பிச் செல்லும்போது அவள் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன

தங்கள் குழந்தைகளை குப்பைக் குழியில் எறிந்துவிட்டுப்போன அம்மாக்களை எனது வார்த்தைகள் அடையக்கூடும் அல்லது மருத்துவமனைகளில் பெற்றோரை மறந்துவிட்டுப்போன குழந்தைகளையோ முதியவர் இல்லங்களையோ இந்த வார்த்தைகள் சென்று சேரக்கூடும்.

என் அம்மா எப்போதோ ஒருமுறை என்னிடம் சொன்னதை நினைவுகூர்கிறேன். எனக்கு அப்போது ஐந்துவயது. அவளது வாழ்நாளில் ஒரேயொரு முறை சொன்னது அது. “நீங்கள் மிகவும் சேட்டை செய்கிறீர்கள்…நான் உங்களைவிட்டுச் சென்று விடுவேன்…நான் போனால் மீண்டும் திரும்பியே வரமாட்டேன்”…மூன்று சேட்டைக்காரப் பையன்கள்…என் வாழ்க்கை முழுக்க நாங்கள் மூன்றுபேரும் அப்போது உணர்ந்த அச்சம் மற்றும் இருள்கவிழ்ந்த விரக்தி எனக்கு ஞாபகத்தில் உள்ளது…

எனது இதயம் பிளந்து கசிந்தது எனக்கு ஞாபகத்தில் உள்ளது நான் வெறுமையிலும் இருட்டிலும் இருந்தேன்…அம்மா ஒரேயொருமுறைதான் சொன்னாள்

இன்றும் எனது கண்ணீரும் விரக்தியும் ஞாபகத்தில் உள்ளது…

ஆனால் அம்மா எங்களைவிட்டுப் போகவில்லை எங்களுடன் இருந்தால்

அவள் எங்களுடன் இருப்பாள்

இந்த வார்த்தைகளை எழுதும்போது…அம்மாவின் தேடியலையும் கண்கள் என்மீதுள்ளன

நான் தலையை உயர்த்தி கண்களைத் திறக்கிறேன்…எனது வழியைக் கண்டுபிடிக்க இயலாமல் சறுக்கி விழுகிறேன், எழுகிறேன், வெறுப்பின் விஷத்தால் நிரம்பிய வார்த்தைகள் வெடித்து கிழிக்கின்றன நேசத்தையும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் ….நான் வாயைத் திறந்து எதையோ சொலவதற்கு முயல்கிறேன் “மக்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்” போலந்து வாசிகள் மட்டுமல்ல ஜெர்மானியர்கள் மட்டுமல்ல செர்ப்கள் மட்டுமல்ல அல்பேனியர்கள் மட்டுமல்ல இத்தாலியர்கள் மட்டுமல்ல யூதர்கள் மட்டுமல்ல கிரேக்கர்கள் மட்டுமல்ல…மனிதர்கள் நேசிக்கப்பட்டே ஆகவேண்டும்…வெள்ளை கருப்பு சிவப்பு மஞ்சள் எனது பிச்சைக்காரத் தேம்புதல்கள் ருசியில்லாதவை என்று நான் அறிவேன்.

அத்துடன் எது லோகாயத விஷயங்களோ அதுவே உயிர்தரிக்கின்றன என்பதையும்…

என்ன?!

கேலிக்குரிய மகத்தான மேதை நோர்விட் சொன்னது:

லோகாயத விஷயங்களில் இரண்டு மட்டுமே இங்கே தங்கி உயிர்தரிக்கின்றன.

இரண்டு மட்டுமே : கவிதையும் நல்லுணர்வும்…வேறு எதுவும் அல்ல.

நீ ஒரு டான் குவிகாத்தே. இன்மைதான் உயிர்தரித்திருக்கிறது! கட்டக்கடைசியாக நமது மூளையை நாம் பயன்படுத்துவதற்குத் தொடங்காவிட்டால், விரிந்து அகன்றுகொண்டேயிருக்கும் இன்மையின்மீது கொஞ்சூண்டு பிடிப்பை வைத்திருக்காவிட்டால்…என்ன நடக்கும்? சொல்லுங்கள், கலக்கமாக நிற்காதீர்கள்! என்ன நடக்கப் போகிறது…நம்மால் நமக்கேயான ஒரு நரகத்தை இந்த பூமியில் உருவாக்கலாம்…அங்கே லூசிபர் தேவனைப் போலத் தெரிவான், வீழ்ந்த தேவன் அவன்…ஆனால் ஆன்மா இல்லாதவன் அல்ல …அவன் வெற்றுப்பெருமிதமடைபவன்தான்…ஆனாலும் இழந்த சொர்க்கத்திற்கான அடர்ந்த ஏக்கத்தாலும் இழப்புணர்வாலும் துயரத்தாலும் பீடிக்கப்பட்டவன்…

அங்கே அரசியல் ஆபாசமாகும், காதல் பரத்தையர் இலக்கியமாகும்…இசை வெற்றிரைச்சல் குழப்பமாகும், விளையாட்டு சோரமாகும், மதம் அறிவியல் ஆகும், அறிவியல் மதமாகும்.

 

Comments