Skip to main content

தங்கப்பூண் போட்டிருந்தாலும் பொய் பொய்தான்

அன்றாட எதார்த்தமே புனைவின் இதழ் இதழான அடுக்குகளையும் மாய உருவையும் கொள்ளும்போது, கற்பனை மற்றும் சிருஷ்டித்துவம் தனது விதைகளை இழந்து மலட்டுத்தனம் கொள்கிறது. நம் கால சமூக அரசியலின் உருவகம் இதுதான்.

சோழரின் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவப்போகிறார்கள்; திருவாவடுதுறை ஆதீனம் தயாரித்துக் கொடுத்து, மவுண்ட்பேட்டன் அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாக நேருவுக்கு அளித்த செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவப்போகிறார்கள்; நேருவுக்கு அளித்த செங்கோலின் மாதிரி ஒன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்படுகிறது; குருமூர்த்தியும் பத்மா சுப்ரமணியனும் சொன்னார்கள்; மோடி கேட்டார்.

ரமேஷ் பிரேதன், தஞ்சைப் பெரியகோயில் கட்டப்படுவதற்கு முன்னால் பாம்பாகப் பிறந்த ஒரு பெண் பல்வேறு பிறவிகளை எடுக்கும் கதையாக எழுதிய ‘நல்லபாம்பு நீல அணங்கின் கதை’யை விட மிக சுவாரசியமான மேஜிக்கல் ரியலிசக் கதையை நம் தமிழ்மக்கள் கடந்த சில நாட்களாக நுகர்ந்துவருகிறோம்.

சோழனின் செங்கோல் நமதுடலின் எல்லா துளைகளிலும் செய்தியாக இறங்கிக் கொண்டிருக்கிறது.

புராணிகங்களின் மீது நம்பிக்கையிழந்து அறிவியலிலும் கணிதத்திலும் தொழில்நுட்பத்திலும் மீட்சிதேடி இந்த உலகின் மறுகோடி வரை சென்று பயணித்துக் கொடிநாட்டியும் வேட்கை தீராமல், கசப்பு தீராமல், பழி குறையாமல் இன்னும் அதிகாரம், இன்னும் வளங்கள், இன்னும் செல்வம், இன்னும் அநீதி வேண்டும் வேண்டுமென்று மீண்டும் மோடியின் ஆட்சித்துவத்தில் புராணிகங்களுக்கும் பொய்களுக்கும்,  திரும்பியிருக்கிறார்கள், தமிழ் பிராமணர்கள்.

ராஜாஜியும் கல்கியும் சினிமா சோழர்களும் மீண்டும் மீண்டும் உதவுகிறார்கள்.  

ராஜாஜியின் பேரனும் வரலாற்றாசிரியருமான ராஜ்மோகன் காந்தி, நேருவுக்கு ராஜாஜி ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் திருவாவடுதுறை செங்கோல் நிகழ்வு குறித்த செய்தி தனக்குப் புதியது என்கிறார்.

நேருவின் வீட்டில் ஆகஸ்ட் 14 அன்று மாலையில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பிரதிநிதிகள் பிரத்யேக நிகழ்வாக இதை அளித்திருக்கும் வாய்ப்புகளே உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

‘நல்லபாம்பு நீல அணங்கின் கதை’ நாவலில் ஒரு இடத்தில் சோழனின் அழிந்த சாம்ராஜ்யத்தின் இடிபாடுகளில் பிறந்த ராஜநாகம்தான் சிவலிங்கம் என்ற குறிப்பு ஞாபகத்துக்கு வருகிறது.

பாம்பு விரைக்கும்போது கோல் ஆகிறது. அதிகாரம் விரைக்கும்போது கொஞ்ச நேரம் கோலாகத் தெரிகிறது. அந்தஸ்து விரைக்கும்போது அது கோலாக நிற்கிறது.

எத்தனை மருந்துகள் இட்டாலும் வரலாற்றின் ஆறாத நிணம் வழியும்  விஷ மனங்களால், விஷக்கரங்களால் நெசவு செய்யப்பட்டிருக்கும் கதைதான் இந்தச் செங்கோல். மாற்றத்தில் மறைந்துபோன சதுர்வேதி மங்கலங்கள் குறித்த நினைவு ரத்தப்படுக்கையாக செங்கோலைத் தாங்கி விரிந்திருக்கிறது.

இன்னும் எத்தனை பொய்கள்?

தொலைந்த ஏதொவொன்றைத் தேடும் பாதாளக் கரண்டியாக இந்தச் செங்கோலை எடுத்திருக்கிறார்கள். கிடைக்காது. கிடைக்காது. 

Comments

Ranjani basu said…
ஆழமான சொற்கள்..
கசக்கும் உண்மை.. நேர்மையான பதிவு