மூடிய ஒற்றை நிலைக்கதவுக்குப் பின்னால்
அம்மா விசும்பிக் கொண்டிருக்க
அப்பாவின் உறுமல் உயர்ந்தபடியிருந்த
மத்தியான வேளை.
வழக்கம்தானே இது
என்று ஆறுதல் சொல்வதைப் போல
அசந்தர்ப்பத்தில்
வந்து
சிமெண்ட் முற்றத்தில்
என் முகத்தைப் பார்த்தபடி
இறுக்கமாய் அமர்ந்திருந்தாள் அத்தை.
வீட்டுக்கு காய்கறி வாங்கிப்போகும்
உரச்சாக்குப் பையிலிருந்து
துழாவி
பேரிக்காயை எடுத்துக் கொடுத்தாள்.
அன்று எனக்கு முதல்முதலாக அறிமுகமான
பேரிக்காயைக் கடித்தபோது
மிகக் கசப்பாகவும்
அந்த மத்தியானத்தின் கனத்தை
அதிகரிப்பதாகவும் இருந்தது.
நானும் அத்தையும்
அந்த வீட்டின் திண்ணையில்
ஒன்றாகத்தான்
அமர்ந்திருந்தோம்.
அத்தை எப்போது கிளம்பிச் சென்றாள்?
எனக்கு ஞாபகத்தில் இல்லை.
அன்றிலிருந்து பேரிக்காயை
பார்க்கும்போதெல்லாம்
எனக்கு உடம்பெங்கும் பரவுகிறது
அந்தக் கசப்பு.
Comments