Skip to main content

Posts

இந்தக் கண்ணாடிகளைப் போல இருந்துவிடக் கூடாதா

எனக்குத் தெரியும் பழங்கள் எப்போது அழுகத்தொடங்குமென்று அன்புக்கு எப்போது மூச்சுமுட்டுமென்று உண்மை எந்த இறகால் கனக்குமென்று. 000 விபத்துக்குள்ளான நாட்களில் வந்து சேரும் தற்காலிக ஊன்றுகோல் அகாலப் பயணத்தில் ஒரு அறிமுகத் துணை என் பசியை நிரப்பவே வாய்ப்பில்லாத குழந்தையின் கைப்பிடி உணவு. அவர்கள் நடுவில் வருகிறார்கள் நடுவிலேயே போய்விடுகிறார்கள். முடியாத வெயிலில் நீரைப் போலத் தொனிக்கும் கொதிநீர் அவர்கள் நான் போக முடியாத கனவு ஊருக்குச் செல்லும் ரயில் நிற்பதாகக் கூறப்படும் இடம், ரயில், சிநேகிதம் அவர்கள் அவர்களுக்கு என் தோல்வியுற்ற அம்மாவின் சாயல் இருக்கிறது. அவர்கள் நிரம்புவதுமில்லை என்னை நிரப்புவதுமில்லை நடுவில் அவர்கள் இறங்க வேண்டியிருக்கிறது கொஞ்சம் போல துக்கத்துடன் நானும் அவர்களை வழியனுப்பத்தான் செய்கிறேன். அவர்கள் வந்து வந்து செல்லும் ரயில்களா நிலையங்கள் தானா? நான் ஒரு நினைவுமேயற்று இந்தக் கண்ணாடிகளைப் போல இருந்துவிடக் கூடாதா.  

தேவதச்சன் என்னும் மஞ்சள் புத்தகம்

      ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுபது எண்பது வருடங்களாகிவிட்ட ஒரு கலைவடிவத்தில் செயல்படுபவர்களையும் அவர்களது படைப்புகளையும் சேர்த்துப் பார்க்கும்போது ஒரு மரபைக் காணும் விழைவும் அந்தப் படைப்புகள் அந்த மரபின் தொடரிழையாகத் தெரியவருவதுமான விசேஷ அனுபவம் ஏற்படுகிறது. 30, 40 ஆண்டுகளுக்கு மேல் புத்தூக்கத்துடனும் நம்பிக்கையுடனும் நவீன கவிதை என்னும் ஊடகத்தில் செலவழித்த தேவதச்சனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது அதன் வெவ்வேறு பருவங்கள், மாறும் அழகுகள், தரையிரங்கிக் கனியும் கோலங்களைப் படிப்பது தண்ணீரில் அழுத்தும்போது ஏற்படும் மூச்சுமுட்டலையும் துக்கத்தையும் இறந்து பிறந்து இறந்து இறந்து எழும் துய்ப்பையும் தருவதாக இருந்தன. தேவதச்சனின் ஆரம்பகாலக் கவிதைகளிலிருந்து சமீபத்தில் எழுதிய இருபது முப்பது கவிதைகள் வரை வாசிக்க நேர்ந்தபோதுதான், புதுக்கவிதையிலும் புதுமைப்பித்தனின் ஒரு மரபு தொடர்வதன் தடயங்கள் கிடைத்தன. அறிவும் விமர்சனமும் அழகும் உணர்ச்சியும் இயல்பாய் சேரும் பாதை என்று அந்த தடத்தைத் தற்போது குறித்துக் கொள்ளலாமா? பிரமிள், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், கலாப்ரியா...

இன்னொரு வாசல்

ஷங்கர்ராமசுப்ரமணியன் குகையின் நீளம் கொண்ட புதிய அட்டைப்பெட்டியில் வீட்டுக்கு வரும் பூனைக்கு பால் கிண்ணத்தை வைத்தாள் எங்கள் பாப்பா அட்டைப் பெட்டிக்குள் புகுந்து பாலைக் குடித்தது பூனை உள்ளே இருப்பதாகவும் அதை வளர்க்கப் போவதாகவும் பாப்பா சொன்னாள் குனிந்துபார்த்தேன் காலியாக இருந்தது அட்டைப் பெட்டிக்கு இன்னொரு வாசல் உண்டு அத்துடன் அது பூனை வளர்ந்ததும் கூட நாளையும் வரும் என்றேன் அந்தக் கொழுத்த அழகிய பூனை இன்றும் வந்தது. 

இடையில் பிரிக்கும் நதி

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஞானக்கூத்தனின் மறைவுக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘இம்பர் உலகம்’கவிதைத் தொகுதி அவரது நீடித்த தரத்தையும் உள்ளடக்கத்தின் வளமையையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு வடிவத்தில் நீண்ட காலம் புழங்கியவர்கள் என்ற கவுரவம், பணிமூப்புத் தகுதி மட்டுமே கோராத புதுமையும் வளர்ச்சியும் கொண்டது ஞானக்கூத்தனின் கவிதை உலகம். இப்படித் தங்களையும் தங்கள் மொழியையும் உள்ளடக்கத்தையும் புதுப்பித்தபடி இளம் கவிஞர்களின் மொழியையும் பாதிப்பவர்கள் என்று ஞானக்கூத்தனையும் தேவதச்சனையும் சொல்ல முடியும். இம்பர் உலகம் என்றால் இந்த உலகம் என்று பொருள். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவர் ஞானக்கூத்தன். இத்தொகுதியில் வரும் ஏழாவது கவிதையான ‘குருதியின் குரல்’எதிர்வினைகளே எதிர்ப்புகளாக மயங்கித் தெரியும் இக்காலகட்டத்துக்குப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. நாயை, அதன் குரைப்பைப் பரிசீலனை செய்யும் கவிதை குருதியின் குரல். எனக்கு சமீபத்தில் நாய்களை, குறிப்பாக, தெருநாய்களைப் பார்க்கும் போது, நேசமும் அவற்றுடனான அடையாள உணர்ச்சியும் பெருகி வருகிறது. நாய்கள் மழையையும் கோடை யையும் வயோதிகத்...

ஹம்சா பரமஹம்சா

 ஷங்கர்ராமசுப்ரமணியன் ஞானிகள் என் இதயத்திடம் கிசுகிசுக்கின்றனர் பிரபஞ்சம் எனக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது சென்ற கோடைக் காலத்தை துயரத்தில் தொலைத்துவிட்டேன் இந்தக் கோடைக்காலம் அவிந்த இலைகளின் வீச்சமாக  மெல் ஈரக்காற்றாக பளிச்சென்று உதிர்த்து நிற்கும் மரங்களாக நினைவுகளின் கனமின்றி  என் புலன்களை நிரப்பிப் புதுப்பிக்கிறது தேவதச்சனுக்குக் கோவில்பட்டியில் கோடையை உரைக்கும் முதல் குயில் பெருங்குடி ரயில் நிலையத்தில் மனமொழிந்த ஒரு நொடித் துளைக்குள்  என்னிடம்  பாடியது ஹம்சா  பரமஹம்சா

துயரத்தைத் தவிர்ப்பது அல்ல; அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை

லிசா ஓ கெல்லி | தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் குடியேறிய தமிழ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் பால் கலாநிதி. நரம்பியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அறுவை சிகிச்சைப் பயிற்சி, ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருந்த அவருக்கு, 36 வயதில் அரிதான நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறியப்பட்ட பின்னரும் உடல் மோசமாகத் தளர்ந்துபோகும்வரை சிக்கலான அறுவைசிகிச்சைகளைச் செய்த அவர், சக்கர நாற்காலியில் இருந்தபடி தன் நினைவுக்குறிப்புகளை நூலாகவும் எழுதத் தொடங்கினார். மரணத்தை எப்படிப்பட்ட நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் அரிய உதாரணம் அந்த நூல். 37 வயதில் காலமான பால் கலாநிதியின் மனைவி லூசி கலாநிதியின் நேர்காணல் இது… பால் கலாநிதியினுடைய புத்தகத்தின் வெற்றி உங்களை ஆச்சரியமடைய வைத்ததா? நினைத்தே பார்க்கமுடியாத வரவேற்பு கிடைத்தது. அது முறைப்படி வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் இறக்கும் ...