Skip to main content

சடலம் உண்மையை மட்டுமே பேசும்காவல் மரணங்கள், மோதல் சாவுகள், வரதட்சணைக் கொலைகள், பாலியல் குற்ற மரணங்கள்,  பள்ளிகள் மற்றும் பணியிட மரணங்களுக்குப் பின்னால் உள்ள எத்தனையோ புதிர்களைத் தீர்க்கக்கூடிய இடம் பிரேதப் பரிசோதனை அறை. பெருநகர அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைகளே பத்தோடு பதினொன்றாக செய்யப்படும் நிலையில் கிராம மருத்துவமனைகளில் ஒரு சந்தேகத்துக்குரிய மரணம் எப்படி தீர்க்கப்படும்? ஒரு கிராமத்தில் நிகழும் மரணத்துக்குப் பின்னால் உள்ள சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் உரிமை இங்கே மறுக்கப்படுகிறது என்கிறார் சட்டம் சார்ந்த சிறப்பு மருத்துவர்  டிகால்.  வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றியில் இணைத் தடயவயில் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இதுவரை 2000 சட்டம்சார்ந்த பிரேதப் பரிசோதனைகளைச் செய்துள்ளார். குற்றவியல் வழக்குகளில் நிபுணர் சாட்சியாக பங்கேற்று பல்வேறு வழக்குகளில் தீர்வுகளை அளிப்பவராகவும் இருக்கிறார். 2 ஜி வழக்கில் சர்ச்சைக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படும் சாதிக் பாட்சாவின் உடலைப் பரிசோதனை செய்தவர் இவர்தான். தமிழக அளவில் சர்ச்சிக்கப்பட்ட இளவரசன், ராம்குமார் ஆகியோரின் சடலங்களைப் பரிசோதித்தவரும் இவர்தான். இந்தியாவில்  தடயவியல் ஆய்வுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை முறைகளில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து இவர் விரிவாக அளித்த நேர்காணலின் முழுவடிவம் இது. 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்தது. பொதுப்பார்வையில் இன்றும் விலக்கமாகப் பார்க்கப்படும் பிரேதப் பரிசோதனை அறைக்குள் நுழைந்து அங்கே இயங்குபவர்களின் வேலையின் முக்கியத்துவத்தை விரிவாகத் தெரியப்படுத்திய முதல் இதழியல் முயற்சி இது.

தடயவியல் ஆய்வில் பிரேதப் பரிசோதனையின் பங்கு என்ன?

தடய அறிவியல் என்பது கடல். அதில் சிறிய பகுதி தடயவியல் மருத்துவம்.  ஒரு குற்றம் மனித உடல் சார்ந்த குற்றம் எனில் அதில் மருத்துவரின் அறிக்கை அவசியம்.

இந்தியாவின் தடயவியல் ஆய்வுத்துறை குற்றங்களைக் கண்டுபிடிக்கும் வண்ணம் சர்வதேசத் தரத்துடன் உள்ளதா?

தடய ஆய்வுத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சாதாரண கொலை, அடிதடி வழக்குகளுக்கு தடய ஆய்வுத்துறையின் உதவி தேவையில்லை. சென்னையில் அருமையான தடயவியல் ஆய்வு மையம் உள்ளது. இதுபோக ஒன்பது பிராந்திய மையங்கள் உள்ளன. திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களில் உள்ளன. ஆரம்பகட்ட ஆய்வு வசதிகள் எல்லாமே அங்கே உள்ளன. அடிப்படையான நஞ்சுப் பரிசோதனைகளை அங்கேயே செய்துவிடலாம். அங்கேயும் கண்டுபிடிக்கப்படாமல் போகும் வழக்குகள் தான் சென்னை ஆய்வகத்துக்கு வரும். mass spectrometry gas chromatography என்ற எந்திரம் கோடிக்கணக்கான விலையுள்ளது. சடலத்தின் உடலில் உள்ள எந்த விஷத்தையும் கண்டறியும் உயர்வகை எந்திரம் அது. ஆனால் எத்தனை வழக்குகளுக்கு அதைப் பயன்படுத்த முடியும்? அந்த அளவு சந்தேகத்துக்கிடமான வழக்குகள் மிகவும் அரிது.   

இந்தியாவில் இத்தனை வசதிகள் இருந்தும் நிறைய மரணங்கள் மர்மமாகவே இருப்பதற்கான காரணம் என்ன?

பிரேதப் பரிசோதனை மேஜையிலேயே நிறைய மரணங்களுக்கான காரணத்தை மருத்துவர் கண்டுபிடித்துவிடமுடியும். நமது நாட்டைப் பொருத்தவரை பிரேதப் பரிசோதனை நடைமுறையில் தான் நிறைய குளறுபடிகள் உள்ளன. தடயவியல் அறிவியல் திறன்கள் போதவில்லை என்று குற்றம் சொல்லவே முடியாது.

பிரேதப் பரிசோதனைக்கு சடலத்தை காவல்துறையினர் அளிக்கும்போதே அவர்கள் தரப்பில் மரணத்துக்குள்ளானவர் என்னென்ன காரணங்களால் இறந்திருக்கக் கூடும் என்ற தங்கள் விசாரணை விவரங்களைச் சான்றிதழாகக் கொடுத்துவிடுகிறார்கள். இந்த தரப்பினரின் அறிக்கையையே அரசு மருத்துவரும் கொடுத்துவிட்டால் அந்த வழக்கே முடிந்துவிடும். இந்தியாவைப் பொருத்தவரை எத்தனை வழக்குகளில் காவல்துறையினர் சொல்வதற்கு மாறாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது? சொல்லுங்கள். காவல் துறையின் வேண்டுகோளின்படியே பிரேதப் பரிசோதனை நடைமுறையே நடக்கிறது. அந்தச் சான்றிதழ் யாருக்குச் சார்பாக நடக்கும் என்று கருதுகிறீர்கள்.
அதனால்தான் சொல்கிறோம். புலனாய்வு செய்யும் போலீசும், அரசு மருத்துவரும் மட்டும் போதாது. சந்தேகப்படும் தரப்பு சார்பில் ஒரு நிபுணர் பிரேதப் பரிசோதனை அறையில் இருந்தால் மட்டுமே பிரச்சினை தீர்க்கப்படும்.

மேல்முறையீடு செய்வதால் சந்தேகம் தீர்க்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லையா?

எல்லாமே நடக்கும். அடுத்து தடயவியல் ஆய்வெல்லாம் சாத்தியம்தான். ஆனால் சடலத்தைப் பொருத்தவரை அன்றைக்கு சாயங்காலமே எரிக்கப்பட்டு விடுமே. அடுத்த நாள் காலை அழுகிப்போய்விடுமே. அதற்குப் பிறகு என்ன செய்வது.

அப்படியெனில் உண்மையாகவே பிரேதப் பரிசோதனை நடப்பதில்லை என்கிறீர்களா?

இது எல்லாருக்கும் தெரியும். மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை அறைக்கே பெரும்பாலும் போவதில்லை என்பது அதிகாரமட்டத்தில் உள்ள எல்லாருக்கும் தெரியும். எம்.டி படிக்கும் மாணவர்கள்தான் பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள். இவர்கள் கையெழுத்து மட்டுமே போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். சட்டத்தில் உள்ள பிரச்சினை அது. எம்.பி.பி.எஸ் படித்த யாரும் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்ற அனுமதி உள்ளது.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கே நடக்கிறது. வெட்டுக் காயத்தால் இறந்த உடல் தொடர்பான 302 பிரிவு வழக்கு அது. பிரேதப் பரிசோதனை செய்யவேண்டிய அசோசியேட் ப்ரொபசர் உள்ளேயே போகவில்லை. காவல்துறையினர் என்ன சொன்னார்களோ அதையே அறிக்கையாகக் கொடுத்துவிட்டார்கள். மரணத்துக்கான காரணம் ஆஸ்துமா என்பதாகவும், நுரையீரலைத் திறந்து பார்த்ததாகவும் அறிக்கை கொடுத்து விட்டார்கள். 

ஏன் பிரேதப் பரிசோதனை அறைக்கு மருத்துவர்கள் போவதில்லை?

மருத்துவர்கள் உள்ளே நுழையும் நிலையில் அந்த இடம் உள்ளதா. ஒரு மருத்துவர், பிரேதப் பரிசோதனை செய்யும்போது,  சடலத்திலிருந்து ஒரு மாதிரியை எடுக்கிறார். அதை யார் யார் முன்னிலையில் ஒரு உறையில் இட்டு சீல் வைக்கிறார் என்பதை முழுவதும் வீடியோபதிவு செய்யவேண்டும். அப்போது எந்த மருத்துவராவது தவறு செய்யமுடியுமா?

பிரேதப் பரிசோதனையில் நடக்கும் தவறுகளுக்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்? 

சமீபத்தில் என்னிடம் நிபுணர் ஆலோசனைக்காக ஒரு வழக்கு வந்துள்ளது. நெல்லூரில் நடந்த ஒரு மாணவியின் மரணவழக்கு அது. நான்கு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அந்த மாணவியே தன் கழுத்தை நெரித்துக் இறந்துவிட்டதாக அறிக்கை கொடுத்துள்ளனர். ஒருவர் தனது கழுத்தையே நெரித்துக் கொல்வதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு? 0.0001 சதவீத அளவே சாத்தியம் கொண்டது. அவர் தற்கொலை செய்வதற்கு வேறு வழியே கிடையாதா? தற்கொலைக்குச் சொல்லப்படும் காரணமும் மிகவும் அல்பமானது. ஆனால் இதுவரை அதை கொலை வழக்காகப் பதியவில்லை. அந்த மாணவியின் பெற்றோர் இது தற்கொலை என்று நம்ப மறுக்கின்றனர். சிபிஐ விசாரணை கேட்கின்றனர். ஆந்திர உயர்நீதிமன்றமோ எந்தக் காரணத்துக்காக சிபிஐ விசாரணை என்று கேட்கின்றனர். அதற்குத்தான் நிபுணரின் பரிந்துரைக்காக என்னிடம் வந்தனர்.
ஒருவர் கயிற்றில் தொங்கி தற்கொலை செய்தாலும் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துவிடும். அவரைக் கொலை செய்தாலும் அதை உடல் காட்டிக்கொடுத்து விடும். வெளியிலிருந்து கழுத்தை நெரிக்கும்போது, அனைத்து சதைகளும் அழுத்தப்பட்டு ரத்தக்கசிவு ஏற்படும். அதையே மருத்துவரும் தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். ஆனால் அது எப்படி தற்கொலை வழக்கானது. ஒருவரை கழுத்தை நெரித்துக் கொன்று தூக்கு மாட்டினால் அதை ஒரு பிரேதப் பரிசோதனை நிபுணர் பத்து நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும். இப்படித்தான் பெரும்பாலான வரதட்சிணை கொலைகளில் பெண்கள் தற்கொலை செய்ததாக வழக்கு முடிக்கப்படுகிறது.

சட்ட ரீதியான விசாரணையில் பிரேதப் பரிசோதனை செய்பவரின் இடம் எது?

பிரேதப் பரிசோதனை செய்பவர் ஒரு சந்தேகத்தை மட்டுமே எழுப்ப முடியும். அவர் ஒரு சாட்சி. அவ்வளவுதான்.  அதற்கு மேல் அவருக்கு வேறு உரிமை கிடையாது. இறப்புக்கு உடல்ரீதியான காரணங்கள் என்னென்ன என்று மட்டுமே கேட்பார்கள். 
    
நீதிமன்றத்தால் எந்த வழக்கிலும் குற்றத்திற்கு பின்னணியில் உள்ள உண்மையை நேரடியாக உணரமுடியாது. மருத்துவரின் பணி என்பது அந்த உண்மைக்கு நெருக்கமாக நீதிமன்றத்தைக் கொண்டு நிறுத்துவதுதான். ஒரு இருட்டுக்குள் தடவிச் செல்வதைப் போன்ற பாதை அது. உடலில் இருந்ததை  விஞ்ஞானப்பூர்வமாக உண்மையாகச் சொன்னால் போதும். ஆனால் அந்த உண்மையைச் சொல்லமுடியாத நிலையில் நடைமுறைகளில் பல ஓட்டைகளை விட்டுவைத்திருக்கிறார்கள்.

பிரேதப் பரிசோதனை மருத்துவரைப் பொருத்தவரை ஒரு குற்றம் நடந்த சூழலில் உள்ள நிகழ்தகவுகளை சாத்தியங்களை மருத்துவர் கூறலாம். நீதிபதி கேள்வி கேட்டால் அதற்கு மருத்துவர் பதில் கூறலாம். இந்தக் கோணத்தில் ஏன் பார்க்கவில்லை என்று அவர் கேட்கமுடியாது. இதுதான் சாட்சியின் பிரச்சினை ஆகும். 

புகார்தாரர் சார்பில் ஒரு நிபுணர் பங்குகொண்டால் என்னவகையான மாற்றங்கள் ஏற்படும்?

ஒரு மரணத்தில் சந்தேகம் வரும் வழக்கில் சந்தேகப்படும் புகார்தாரர் சார்பான மருத்துவரும் அவசியம். பிரேதப் பரிசோதனைக்கான படிவத்திலேயே புகார்தாரர் தன் சார்பில் மருத்துவர் வேண்டுமா என்று கேட்பதற்கான இடம் இருக்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைகளில் புகார்தாரர் தரப்பாக தனியார் மருத்துவர்களை நியமிக்கலாம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவர்களை அனுப்பலாம். வீடியோகிராபியும் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும்.

கழுத்தை நெரித்துக் கொன்ற சாதாரண கொலை வழக்காக இருக்கலாம். ஆனால் இப்போதைய நடைமுறைப்படி ஒரு மருத்துவரே பிரேதப்பரிசோதனை செய்யும் நிலையில் தன்னுடைய அறிக்கையை அவர் எத்தனை காலம் வேண்டுமானாலும் முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்க இயலும்.  ரசாயனப் பரிசோதனைக்குக் காத்திருப்பதாக காரணம் சொல்லலாம். அங்கே மாதிரிகள் குவிந்து கிடக்கும். ஒரு சாதாரண ஊழியரின் மூலம் அங்குள்ள சாம்பிள்களை மாற்றிவிடக் கூடிய நடைமுறையே இப்போது உள்ளது. மூன்று நாட்களுக்குள் ஒரு சோதனையை முடித்து அறிக்கை அனுப்பும் வகையில் அங்குள்ள உட்கட்டமைப்பையும் பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பிணவறைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறையை எப்படி மேம்படுத்தலாம்?

உடலின் ஒவ்வொரு அடுக்கை கத்தியால் வெட்டும்போது வேறு வேறு கையுறைகளை ஒருவர் அணியவேண்டும். ஆனால் அது நடைமுறையில் இல்லை. அழுக்குக் கையால் ஒரு மாதிரியை எடுத்தால் எப்படி துல்லியமான முடிவுக்கு வரமுடியும்.

மார்ச்சுவரி என்றால் உடைமாற்று அறை இருக்க வேண்டும். பல வருடங்களாக ஒரே உடைகளை எப்படி துவைத்துப் பயன்படுத்த முடியும். கையுறை, மேல் கோட் உட்பட ஒருமுறையே பயன்படுத்தும் வகையில் டிஸ்போசபிள் ஆக இருத்தல் அவசியம். எல்லாவற்றுக்கும் டிஸ்போசபிள் வேண்டும். ஷூவுக்கு ஒரு உறை வேண்டும். அதன் விலை மிஞ்சிப்போனால் ஒரு ரூபாய் வரும். அந்த வசதி கூட இப்போது கிடையாது. மாஸ்க் மற்றும் கண்ணாடி வேண்டும். மொத்தமாக டிஸ்போஸபிள் உடை மேலே வேண்டும்.

ஒரு அடிபட்ட காயத்தை சூரிய ஒளியில்தான் பார்க்கவேண்டும் என்று ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறை இருந்தது. இதை இன்னமும் நீதிமன்றத்தில் கேள்வியாகவே கேட்கிறார்கள். சூரிய ஒளியில் வெட்டுக்காயத்தைப் பார்த்தீர்களா என்று நீதிபதி கேட்பார். அக்காலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் பிரேதப்பரிசோதனை செய்யக்கூடாது என்ற சூழல் இருந்தது.

ஆனால் இன்றோ எல்லா பிரேதப் பரிசோதனைகளையும் மின்விளக்கு வெளிச்சத்தில் தான் செய்கிறோம். மின்விளக்கை ஆஃப் செய்துவிட்டால் முழு இருட்டாகும் நிலையில்தான் இன்றைய பிரேதப் பரிசோதனை அறைகள் இருக்கின்றன.

சாதாரண வீட்டின் சமையலறையிலேயே சிம்னி வசதி வேண்டும் என்கிற காலம் இது. ஆனால் பிரேதப் பரிசோதனை அறையில் சிம்னி கிடையாது. ஒரு இறந்த சடலத்தைத் திறக்கும்போது எத்தனை அழுக்குகள், கிருமிகள் வெளிவரும். அதை வெளியே இழுத்துத் தள்ள சிம்னி வேண்டாமா? அந்த வசதிகள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்கின்றன. ஆனால் நம்மூரில் தான்  கிடையாது.

 இந்திய மருத்துவமனைகளில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால் பிணவறையும் பிரேதப்பரிசோதனை அறையும் மட்டும் ஏன் அப்படியே இருக்கின்றன? 

ஒரு ஊழலான அமைப்பை சரிசெய்வதற்கு அனைத்து அங்கங்களிலும் மாற்றம் அவசியம். ஒரு பிணவறை நவீனமாவதை மருத்துவர் விரும்பமாட்டார். ஏனெனில் வீடியோ ஒளிப்பதிவுக் கருவி இருந்தால் எல்லா பிரேதப் பரிசோதனைகளிலும் அவர் பங்கேற்கவேண்டும். கத்தியை எடுத்து சடலத்தைக் கட்டாயமாக வெட்டிப்பார்க்க வேண்டும்.

ஆனால் இப்போது எந்த மருத்துவரும் சடலத்தைத் தொடுவதேயில்லை. ஸ்வீப்பர் என்று சொல்லப்படும் கீழ்நிலைப் பணியாளர்தான் கத்தியைக் கையாள்வார்கள். அவர்களும் முறையான கல்விப்பின்னணியோ, பயிற்சியோ இல்லாதவர்கள். எங்களைப் போன்றவர்கள் கற்றுக்கொடுப்பதையே பின்பற்றுவார்கள். அவர்களை மருத்துவர்கள் வழிநடத்தினால் கூடப் போதும். ஆனால் அதுகூட இங்கே நடப்பதில்லை. ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு இரண்டு வருடம் அட்டாப்சி பயிற்சி கொடுத்து அவர்களை இப்பணியில் நியமிக்கலாம். ஆனால் அதற்குக் கூட அரசு இதுவரை வழிவகை செய்யவில்லை. இதுபோன்ற மாற்றத்தை மருத்துவர்களும் விரும்பவில்லை. அரசுத் தரப்பிலோ கொடுக்கப்படும் நிதி எதையும் பிரேதப் பரிசோதனை முறையை மேம்படுத்துவதற்கு டீன்கள் ஒதுக்குவதேயில்லை. ஏனெனில் ஒதுக்கப்படும் நிதி குறைவு. ஒரு புதிய கத்திரிக்கோல் வாங்குவதற்கு  எத்தனை பார்மாலிட்டிஸ் நடக்கும் தெரியுமா?

மருத்துவர்கள் உள்ளேகூட போகாத ஒரு இடத்துக்கு  ஏன் நிதி ஒதுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். முறையாகப் பயிற்சி பெற்ற, சான்றிதழ் உள்ள ஒரு தொழில்நுட்பப் பணியாளரை பிரேதப் பரிசோதனை அறைப் பணியாளர் ஆக்கினால் அவர் முறையான உடைகள் இல்லாமல் பிரேதப் பரிசோதனை அறைக்குள் நுழைவதை விரும்பவேமாட்டார். அவர் செருப்புப் போடாமல் உள்ளே வருவாரா? ஒரு டிஸ்போசபிள் செட்டுக்கு மொத்தமாகவே 100 ரூபாய் 120 ரூபாய்தான் ஆகும்.

 தமிழ்நாட்டில் பிரேதப் பரிசோதனை வசதிகள் போதுமான அளவு உள்ளதா?

மூன்று படிநிலைகளில் பிரேதப் பரிசோதனை வசதிகள் செயல்படுகின்றன.  அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்ட மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. தாலுகா தலைமையக மருத்துவமனைகளிலும் பிரேதப் பரிசோதனை வசதி செயல்படுகிறது. தாலுகா அளவில் 500க்கும் மேற்பட்ட பிரேதப்பரிசோதனை மையங்கள் உள்ளன. மாவட்ட அளவில் 250க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவக்கல்லூரிகளில் 25க்கும் பிரேதப் பரிசோதனை மையங்கள் உள்ளன.

இதுபோக 25 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் அவர்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அனுமதி இல்லை. ஆனால் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மட்டும் பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பவர்கள் மீண்டும் அரசு மருத்துவமனைகளுக்குத் தான் வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்குப் பிரேதப் பரிசோதனை பயிற்சியே அளிக்கப்படுவதில்லை. அதற்குத்தான் நீதிபதி பி.என்.பிரகாஷ் சமீபத்தில் அருமையான ஒரு தீர்ப்பு கொடுத்திருக்கிறார். அடையாளம் தெரியாத சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பரிசோதிக்க அனுமதி கொடுக்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்குக் கூறியுள்ளார். அவர்களுக்கு நடைமுறை அறிவு பெற சடலங்கள் தேவை. அரசு மருத்துவமனை பிணவறைகள விட அருமையான தனியார் மருத்துவமனை உள்கட்டமைப்புடன் இருக்கும்.  அடையாளம் தெரியாத உடல்களை மூன்று நாட்கள் குளிர்பதனத்தில் வைக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகும் யாரும் கோராத நிலையில் தனியார் மருத்துவமனை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிறார். அடுத்து பிரேதப் பரிசோதனை செய்து, ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு சடலத்தை எரிக்க வேண்டும் என்கிறார்.

தமிழகத்தில் பிரேதப் பரிசோதனை சார்ந்த எம்.டி பட்டப்படிப்புக்கு தற்போதைக்கு ஐந்து இடங்கள் மட்டுமே உள்ளன. அந்த இடங்களையும் மேம்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல அதிக நிபுணர்கள் வந்தால்தான் இந்த ஆள்பற்றாக்குறையைத் தீர்க்கமுடியும்.

 பிரேதப் பரிசோதனையை ஒழுங்காகச் செய்ய ஒரு அரசு மருத்துவருக்கு இருக்கும் வேறு தடங்கல்கள் என்ன?

ஒரு மருத்துவரால் ஒரு நாளைக்கு ஆறு பிரேதப் பரிசோதனைகள் தான் செய்யமுடியும். ஆனால் 12க்கும் மேல் செய்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் சரியாகச் செய் என்று அவர்களை எப்படி நிர்ப்பந்திக்க முடியும். அவர்களிடம் வேலைத்தரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிரேதப் பரிசோதனைகளை அனுமதிக்க வேண்டும் என்று இதற்குத்தான் கூறுகிறேன். புகார்தாரர் தரப்பு மருத்துவரும் சேர்ந்து இருந்தால் எந்த அட்டூழியமும் நடப்பதற்கும் வாய்ப்பே இல்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பிரேதப்பரிசோதனைக்கு போதுமான மருத்துவர்கள் இருக்கிறார்களா?

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியை எடுத்துக் கொள்ளுங்கள். வருடத்துக்கு அங்கே 3 ஆயிரம் பிரேதப் பரிசோதனைகள் நடக்கின்றன. அங்கே 15 மருத்துவர்கள் இதற்கு வேலையில் இருக்க வேண்டும். ஆனால் இரண்டே இரண்டு தகுதி பெற்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் இரண்டு பேர் நான் க்வாலிபைடாக இருப்பார்கள். இத்தனை குறைவான மருத்துவர்கள் இருக்கும் போது அவர்களிடம் என்ன வேலைத்தரத்தை எதிர்பார்க்க முடியும். அவர்களால் எப்படி பொறுமையாக வேலை பார்க்கமுடியும். அறுத்து மூட்டைகட்டவே அவர்களுக்கு நேரம் போதாது.   ஒரு மணிக்கு ஒரு
பிரேதத்தை அவர்கள் பரிசோதனை செய்யவேண்டும். அவர்கள் வீட்டுக்குப் போகவேண்டாமா?

பிரேதப் பரிசோதனைகளைப் பொறுத்தவரை மாவட்ட மருத்துவமனை வரையே அனுமதிக்க வேண்டும். தாலுகா மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களை ஏன் செய்யச் சொல்ல வேண்டும்? அவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வார்களா? பிரேதப் பரிசோதனைகளை ஒழுங்காகச் செய்வார்களா? அந்த மருத்துவமனையில் ஒரே ஒருவர் தான் மருத்துவராக இருப்பார். அவரால் என்ன முடிவெடுக்க முடியும். அவர் காவல்துறையினருக்குச் சாதகமான அறிக்கையைத் தவிர வேறென்ன கொடுப்பார். காவல்துறையினர் ஒரு சடலத்தைக் கொண்டுவந்து தண்ணீரில் மூழ்கிக் கிடந்தது என்று சொன்னால் தண்ணீரில் விழுந்து செத்துவிட்டான்  என்று தனது அறிக்கையில் கொடுப்பார். கிராமத்தில் நடக்கும் குற்றங்களுக்கு நீதி கிடைக்க வேண்டாமா? நகரத்தில் நடப்பவற்றுக்கு மட்டும்தான் நீதி தேவையா?

ஒரு கிராமத்துப் பெண் புகுந்த வீட்டில் மர்மமான முறையில் இறக்கிறார். அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்கு சந்தேகத்தைத் தீர்ப்பது அரசின் கடமை இல்லையா. அவர்களுக்கு நம்பிக்கையான ஒரு மருத்துவர் பிரேதப் பரிசோதனையில் இருந்தால் குறைந்தபட்சம் உண்மையைத் தெரிந்த நிம்மதியாவது பெற்றோருக்கும் மிஞ்சும் இல்லையா.

இந்தியாவில் தற்போதைக்கு எந்த வகையான வழக்குகளுக்கு வீடியோ அனுமதிக்கப்படுகிறது..?

காவல் மரணங்கள் தொடர்பான வழக்குகளில் மட்டுமே வீடியோ அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மற்ற வழக்குகளில் வீடியோ பதிவு கிடையாது. அதேபோல சிறைக்கைதிகள் இறந்துபோனால் அந்தப் பிரேதப் பரிசோதனைக்கும் வீடியோ பதிவு இருக்கும்.
அரசு மருத்துவருக்கு பிரேதப் பரிசோதனைக்கு உதவித்தொகை உண்டா?
 ஒரு பிரேதப் பரிசோதனைக்கு ஐநூறு ரூபாய் கூட உதவித்தொகை அரசு மருத்துவர்களுக்குக் கிடையாது. சமீபகாலம் வரை ஒரு பிரேதப் பரிசோதனைக்கு 75 ரூபாய் கொடுத்தனர். இப்போதுதான் 150 ரூபாய் ஊதியக்கமிஷனால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடைநிலைப் பணியாளருக்கு ஒரு பிரேதத்துக்கு 12 ரூபாய் வரை கிடைக்கும்.

பிரேதப் பரிசோதனைக்கு ஒரு மருத்துவ மாணவர் எப்படி இங்கே தயாராகிறார்?

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவரைப் பொறுத்தவரை, இளநிலைக் கல்வி மாணவராக பத்து பிரேதப் பரிசோதனைகளை அந்த மாணவர் பார்த்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் பொய் சான்றிதழ் தான் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரையும் அதே நிலைதான். அங்கே தினசரி பிரேதப் பரிசோதனை நடக்கும். அதைப் பார்த்தமாதிரி சான்றிதழ் தருவார்கள். பிணவறை பக்கமே பெரும்பாலான மாணவர்கள் பார்க்கமாட்டார்கள். தனிப்பட்ட ஆர்வம் காரணமாகப் பயில்பவர்களைத் தவிர மற்றெல்லாரும் அனுபவம் வழியாக பாடம் கற்றுக்கொள்பவர்கள்தான். இப்போது நல்ல வீடியோ டூட்டோரியல்களும் கிடைக்கின்றன.

நீங்கள் அரசுப்பணியிலிருந்து ஏன் விலகினீர்கள்?

அரசு மருத்துவராக எனக்கு வேலைச்சுமை அதிகம். செக்குமாடு கணக்காக வேலை. அதற்கு சம்பளமும் குறைவு. நான் வெளியே போனபிறகு எனது அனுபவச் சான்றிதழைத் தருவதற்குக் கூட என்னை இழுத்தடிக்கிறார்கள். ரிலீவிங் ஆர்டர் கொடுப்பதற்கே ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. என்னைப் பொருத்தவரைக்கும் குடும்பம்தான் முக்கியம். என் பெண் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறாள். அவளுக்கு நான் பீஸ் கட்டணும். அரசு வேலை பார்த்துக்கொண்டு நான் எப்படி அவளுக்கு பீஸ் கட்டமுடியும்.

ஒரு பிரேதப் பரிசோதனை நிபுணராக மரணத்தை மரணமடைந்த ஒரு உடலை எப்படி விளக்குவீர்கள்?

பிரேதப் பரிசோதனை செய்பவனாக நான் என் தொழிலை புனிதமானதாகவே பார்க்கிறேன். எங்கள் துறையில் சொல்வார்கள். இறந்த உடலைப் பொருத்தவரை அது உண்மையை மட்டுமே பேசும். அது பேசும் மொழியை மட்டுமே மருத்துவர் தெரிந்திருக்க வேண்டும். அந்த மொழிதான் அறிவியல். இறந்த உடல் சொல்லும் அனைத்தையும் எனது அனுபவத்தையும் அறிவையும் வைத்துதான் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் கற்றது கைமண் அளவு என்பதே உண்மை. 

Comments