Skip to main content

தாங்க முடியாத சுமைகொண்ட மெல்லிறகு


(பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளைஅது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் 'நான் பிறந்த க-வி-தைதொடரின் நோக்கம்.அத்துடன் கவிதை சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்ளவும் செய்வேன்குறுந்தொகையிலிருந்து இத்தொடரைத் தொடங்குகிறேன்.அம்ருதா மாத இதழில் மாதம்தோறும் வெளியாகும்.)

ஒரு அனுபவம் ஒரு உணர்வு சொல்லப்படும் வாய்ப்பை மொழியில் பெறும்போது இரட்டைத் தன்மையை அடைந்துவிடுகிறது. நிறைவு என்று சொல்லிவிடும்போதே நிறைவின்மையும் மகிழ்ச்சி என்று சொல்லும்போதே துக்கமும் மொழியில் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. பாற்கடலில் அமிர்தம் கடையும்போது வினையின் கனம் சேர்ந்து நஞ்சு இப்படித்தான் சேர்கிறது. மொழிதல் என்னும் அனுபவத்தில் அமிர்தத்தோடு நஞ்சு சேர்வது தவிர்க்க முடியாமல் தான் உள்ளது.

மொழி வெளிப்பாடு அடையும் இரட்டை நிலையை அதிகபட்சமாக கவிதை உணர்கிறது. இந்த இரட்டை நிலையை மொழி வழியாகக் கடக்கவும் கவிதையும் கவிஞனும் தொடர்ந்து முயன்று மொழிக்குச் சிறிது வெற்றியையும் தம்மில் மாபெரும் தோல்வியையும் அடைகிறார்கள்.  கெட்ட வார்த்தை என்று சொல்லப்படும் விலக்கப்பட்ட ஒரு வார்த்தையை ஒரு குழந்தை அறியும்போது ஏற்படும் கிளர்ச்சியை ஒத்தது தான் கவிஞனின் கிளர்ச்சியும். ஒரு அனுபவப் புள்ளியில் சந்தோஷமும் துக்கமும் சேர்ந்திருக்கும் உயிர்-வேதிக் கொந்தளிப்பை, களிப்பை அது தரும் புலன் உணர்வை,அவன் வெளியே பகிர்வதற்குத் துடிக்கிறான்.

கருணையோடு குரூரம் ஒட்டிக்கொண்டு இருப்பதை அவன் கண்கள் பார்க்கின்றன. அச்சத்தின் முகமூடி போட்டு ஆசை தன் அறையின் திரைச்சீலைக்குள் மறைந்திருப்பதை அவனும் புத்தரின் இடத்திலிருந்து பார்க்கிறான். உணர்வின் இரட்டை நிலையை மொழிக்கு அவன் கொண்டுவரப் பாடுபடுகிறான். அழகும் சிதிலமும் சேர்ந்திருக்கும் உணர்வை மௌனி ‘பாழ்பட்ட வசீகரம்’ என்கிறார். பாழும் வசீகரமும் பொது அர்த்தத்தில் எதிரெதிராகத் தோற்றம் தருபவை. ஆனால் ‘பாழ்பட்ட வசீகரம்’ என்று உரைக்கப்படும்போது, அது மொழிக்கு முன்னால் அடையும் உணர்வு நிலையத்துக்குச் செல்ல முயல்கிறது. ‘இருத்தலின் தாங்கமுடியாத இலகுத்தன்மை’ என்று இதைத்தான் மிலன் குந்தேரா மொழியாக்குகிறார். அத்தனை சுமைகொண்ட மெல்லிறகுதான் மொழிக்கு முன்னால் இருக்கும் நம் உணர்வு; மொழிக்கு முன்னால் இருக்கும் நம் மனம்.

பகலும் இரவும் மயங்கிச் சந்திக்கும்அந்தி வேளையில் உறக்கத்திலிருந்து விழித்தெழும் போது ஏற்படும் நிலை, நம் எல்லாருக்கும் பொதுவானது. எங்கே எப்பொழுதில் இருக்கிறோம் என்று சில நிமிடங்கள் தெரியாது. உடலிலும் அகத்திலும் ஒரு சில்லிடலுடன் எல்லாம் குழம்பி உறைந்து இருக்கும். ஆண்மையும் பெண்மையும் முயங்கிக் கலை துலங்கும் வேளை என்று குறிக்கப்படுகிறது. அப்போது நாம் உணரும் மூட்ட உணர்வும் அலாதித் தனிமையும் துக்கமானது மட்டும்தானா. அது அந்த நபரின் துக்கம் அல்ல.நிறைவுணர்வு என்று மட்டும் அதை மொழிபெயர்க்க முடியுமா. தாய் மடிக்கு அடுத்த நிலையில் உள்ள உறக்கத்தின் மடியிலிருந்து பிரிந்து தனி உயிராகிவிட்ட அந்த உயிர்படும் வேதனை உணர்வு, நீண்டு கொண்டேயிருக்க வேண்டுமென்ற ஆசையும் தோய்தலும் ரொங்குதலும் ஏற்படுவது எதனால்?

இருள் கவியப் போகிறது. நனவில் மீளப்போகிறோம். நாம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் பாடலின் ஆலாபனை முடியப்போகிறது. அதன் கனத்திலேயே நின்று நிலைத்துக் காணாமல் போக விரும்புகிறோம். மூச்சுமுட்டிச் சாகும் அந்தக் கணத்தை அந்தப் பயங்கர வசீகரத்தை நீட்டிக்க விரும்புகிறோம்.

000

பொதுவில் பேச முடியாததை, வெளிப்படுத்த முடியாததை 'உண்மை' என்று அப்போது கருதினேன். அந்த உண்மையைச் சொல்வதுதான் கவிதை என்றும் நினைத்திருந்தேன். அப்படித்தான் தொடங்கியது. அப்படிப்பட்ட ஒன்றைச் சொல்வதற்கான பரிதவிப்பில் இருந்த நிலையில் என் வயதுக்கு, எனது அந்நாட்களிலான துயரங்களுக்கு, ஒற்றைக்குள் அடக்கிவிட முடியாத எனது அனுபவ மூட்டங்களுக்கு, எனது காமத்துக்கு எனது பருவத்துக்கு மொழி உண்டு என்று காண்பித்தவர்களில் ஒருவர் நட்சத்திரன் செவ்விந்தியன். கிட்டத்தட்ட என் வயதுடையவர் அவர். 'வசந்தம் ‘ 91’ என்ற முதல் கவிதைத் தொகுதியை அவர் வெளியிட்டிருந்தார். அதிலிருந்து சில கவிதைகளை 1995-ம் ஆண்டு ஜனவரி மாத காலச்சுவடு இதழில் அவரது புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தார்கள். தலைமுடியை ஸ்டைலாகக் கோதுவது போல ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்கள். அவரது பெயரும், புகைப்படமும் கொடுத்த புதுமையும் ஈர்ப்புமோடு கவிதைகளைப் படித்தேன்.

அமுங்கின மாலை


மாலை வெய்யில் மங்கிக்கொண்டு போகிறது

என்னை இனிய சோகம் தழுவுகிறது

மனிதர்களைத் தொலைத்த வீதிகளில்

இன்றுதான் அறிமுகமான

பெண்களின் பின்னால் சைக்கிளில் செல்கிறேன்

புதர்கள் கப்பிய ஒற்றையடிப்பாதை

முன்னே சைக்கிள் சென்ற தடம் இருக்கிறது

பல ஆண்டுகளுக்கு முன்

நான் தொலைத்த நம்பிக்கையும் முனைப்பும்

மன அமுங்கலும் உருகலும்

இன்று பெற்றேன்

மனிதர்களை இழந்த மௌனமான

சாலையில்

ரயர், ஊரிக்கல்லில் எழுப்பும் ஒலி கேட்கிறது.

பகலும் இரவும் மயங்கும் பொழுதில் எழுதப்பட்ட கவிதைகளில் ஒன்று இது. ஈழப்போரின் தடையங்கள் இழப்புகளை உட்கொண்ட கவிதை இது. எதிர்காலம் குறித்த இலக்கற்று, போகப் போகும் பாதை என்று தெரியாமல்,யுத்தம் எதுவும் இல்லாத திருநெல்வேலியில் நாற்சாலைச் சந்திப்பில் நின்ற என்னையும் நான் அந்தக் கவிதையில் அடையாளம் கண்டேன். நட்சத்திரன் செவ்விந்தியனைப் படுத்தி எடுத்த துயர, சந்தோஷ மூட்டம் தான் என்னையும் படுத்திக் கொண்டிருக்கிறது என்று அடையாளம் கண்டேன். மேலே சொல்லப்பட்ட அந்தக் கவிதையின் இரண்டாம் வரியில் உள்ள ‘இனிய சோகம்’ என்ற சொல் சேர்க்கை தான் என்னிடம் பெரிய விடுபடுதல் உணர்வை உருவாக்கியது. மன எழுச்சி, மன விரிவு என்று அதைக் கூறலாம். ஆமாம், இனிய சோகம் என்ற பெயர் என்னிடமிருந்த உணர்வுக்கு நட்சத்திரன் செவ்விந்தியனால் கிடைத்தது. இனிய சோகம், இனிய சோகம் என்று சில நாட்கள் என்னுள் ஒன்று ஜெபித்துக் கொண்டே இருந்திருக்கும்.
திருநெல்வேலியில் வாழ்ந்து கொண்டு நான் நின்றுகொண்டிருக்கும் எனது அனுபவ மூலையை ஈழத்திலிருந்து எழுதிய ஒரு கவிஞன் காட்டித் தந்தான். பண்பாடு, பிராந்தியம், வயது, காலம் சார்ந்த பருவநிலை அடையாளங்கள் ஏதுமில்லாமல் ஒரு பொதுவான அந்நியனின் மொழியில் புதுக்கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.
நட்சத்திரன் செவ்விந்தியன் தனது வயதுக்கேயுரிய உற்சாகம், இழப்பு, துயரம், காமம், விடலைத்தனம், கடவுள் நம்பிக்கை, எதார்த்தத்தை அவர் வாழும் பிராந்தியத்தின் இயற்கை நிறங்களைக் கொண்டு தீட்டியிருந்தார். அவர் காலத்தில் சுமக்கும், பயன்படுத்தும் அனைத்தும் அவர் கவிதைகளின் இடுபொருள்களாகியிருப்பதை என்னால் இப்போது உணரமுடிகிறது. அந்தத் தன்மையும் நட்சத்திரன் செவ்விந்தியனை நோக்கி என்னை ஈர்த்திருக்க வேண்டும்.

நட்சத்திரன் செவ்விந்தியன் இப்போது உலகின் இன்னொரு மூலையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவர் ஈழத்தில் எதிர்கொண்ட ஒரு அந்தியை, திருநெல்வேலியிலும் அது இருக்கிறதென்று திறந்து, எனக்குக் காட்டி ஒரு வாழ்நாள் பரிசென அளித்துவிட்டு அவர், ஆஸ்திரேலியாவுக்குப் போய்விட்டார். அவர் கொடுத்த அமுங்கின மாலைக்குப் பதிலாக நான் ஒரு கவிதையை எழுதினேன். அதே மாலைதான். கிட்டத்தட்ட உடனடியாக எழுதப்பட்ட கவிதை அது. அது நட்சத்திரன் செவ்விந்தியனிடமிருந்து நான் பெற்றதற்கு செலுத்தப்பட்ட நன்றி அது. திருநெல்வேலியின் ஒரு அந்தியிலிருந்து ஒரு சிறுவன் தன் உலகத்தின் தடத்தைக் காட்டித் தந்தவனுக்குச் செலுத்திய நன்றி அது. அவன் தத்தித் தத்தித் தனது கவிதையில் தன் உலகத்தைப் பேசத் தொடங்கும் கவிதை இது. இன்னமும் நட்சத்திரன் செவ்விந்தியன் என்ற பெயர் என் குதிரைகளுக்கு ஆற்றல் அளிக்கும் பெயர்தான். அவர் தான் நான் என்று அப்போது தோன்றியது.

மரணித்த ஊர்


நண்பர்களுடன் பேசித்திரிந்த

இறந்த காலத்தின்

தடயங்களை

ரதவீதிகளில்

தேடிப் பார்க்கிறேன்

அதிசயமாய் வளர்ந்து

முலைபருத்த

என் இளவயது சிநேகிதகள்

அடையாளம் தெரியாமல்

கடந்து செல்கின்றனர்

வாகையடி முக்கில்

ஆட்டோவின் மேல் ஒரு சவப்பெட்டி

எதிரில் வரும் விசாரிப்பைத்

தவிர்க்கத் தலைகுனிந்து கடக்க

வேண்டியுள்ளது

சேருமிடம்

தெரியாமல் நடப்பதும்

அன்பளிப்புகளுக்கு ஆளற்றுப் போவதும்

வருத்தத்துக்குரியது.

(நட்சத்திரன் செவ்விந்தியனுக்கு)

Comments

JAFFNA FASHION said…
நன்றி சங்கர். நானும் இப்போது ஒரு blog தொடங்கியுள்ளேன். உங்களுக்கு முகநூல் இருக்கிறதா?
Dear chevvindhian

I am not in Facebook..☺️🙊.. you can write to me thru email. I am happy to hear from you... thank you
rashmy said…
நச்சத்திரன் நாங்கள் பார்த்து வியந்த கவி.. எங்கள் காலத்தின் கவி.. நல்லது ஷங்கர் ))