Skip to main content

கண்டராதித்தன் மலை வீடு






எது நவீனம்; எது பழமை? இந்தக் கேள்வி தீவிரமாக ஆக்கிரமித்திருக்கும் நாட்கள் இவை. நவீனம், பழமை தொடர்பில் நான் திட்டவட்டமாகக் கொண்டிருந்த கருத்துகள் மீண்டும் குழம்பியிருக்கின்றன. இதன் அடிப்படையில் மீண்டும் எழுந்திருக்கும் கேள்விகள் அவை. சமீபத்தில் ஓவியர் கணபதி சுப்பிரமணியனிடம் ஒரு ஓவியமோ ஒரு சிற்பமோ அது நவீனம், அது பழையது என்று எப்படிக் கூறமுடியும்? மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னிதிக்கு அருகிலுள்ள கல்புடைப்பில் உள்ள மரமும் இலைகளும் என்னை ஒரு நவீன சிற்பம் போலவே ஈர்க்கின்றதே என்று கேட்டேன். எதுவெல்லாம் செம்மையாகவும் கண்களை மகிழ்விப்பதாகவும் இருக்கிறதோ அதுவெல்லாம் நவீனம் தான் என்றார் கணபதி சுப்பிரமணியன். எனக்கு அவரது பதில் ஒரு அமைதியைத் தந்தது. இந்தப் பின்னணியில் தான் கவிஞர் கண்டராதித்தனைப் பார்க்க விழுப்புரம் கண்டாச்சிபுரத்துக்கு நானும் சபரிநாதனும் கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தற்செயலாக ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்தேன்.    அந்தப் பாடலின் தொடக்கத்தில், கடற்கரையில் நிற்கும் மெலிந்த இலைகளற்ற ஒரு மரத்தைச் சுற்றி ஆணும் பெண்ணும் ஓடும் ஒளி நிழல் காட்சி வருகிறது. பின்னர் அவர்கள் சிவாஜியும் பத்மினியாகவும் ஆகின்றனர். துரத்தி விளையாடும் சுற்றில் யார் யாரைத் துரத்துகிறார்கள் என்ற மயக்கம் உருவாகிவிடுகிறது. கருப்பு-வெள்ளையில் இருந்தாலும் சிவாஜி நடுவயதைத் தாண்டிய உடல்தோற்றம் கொண்டவராகத் தெரிந்தாலும் சி. எஸ். ஜெயராமன், ஜானகியின் குரல் அந்தக் காட்சியையும் பாடலையும் அழகானதாக ஆக்குகிறது. அந்தப் பாடலின் காலமும் அது தரும் உணர்வும் பழையது அல்ல என்று தோன்றியது. அதைப் பழையது என்று சொல்வதற்கான வயது எனக்கு ஆகவே முடியாது. அதைப் புத்தம் புதிதாகப் பார்க்கத் தொடங்கினேன். அந்தப் பாடலில் ஆடப்படும் விளையாட்டு பழையது என்றால் நித்தியமான பழையது; புதியது என்றால் நித்தியமான புதியது என்று தாம்பரத்துக்கு வாடகைக் காரில் போய்க் கொண்டிருக்கும் போது சபரிநாதனிடம் பகிர்ந்துகொண்டேன். விளையாடி விளையாடி விழியாலே இசைபாடி.

 கண்டராதித்தனின் மூன்றாவது கவிதைத் தொகுதியான ‘திருச்சாழல்’ வெளியீட்டுக்குத் தான் முதல்முறையாக கண்டாச்சிபுரத்துக்குப் போனேன். அப்போது கண்டராதித்தனின் பால்ய நண்பரும் எழுத்தாளருமான காலபைரவன் நண்பர்களை எல்லாம் ஒரு குன்றுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். கண்டராதித்தனோடு சேர்ந்து அந்தக் குன்றுகளும் என்னை அழைத்தன. ஆனால் இந்த முறை கண்டராதித்தன், காலபைரவன், சபரிநாதன், வே. நி. சூர்யாவோடு நாங்கள் போனது இன்னொரு குன்றுப்பகுதி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால பாறை ஓவியங்கள் உள்ள கீழ்வாலைக்குப் போனோம்.
ஸ்ரீநேசனும் ராணிதிலக்கும் தங்கள் கவிதைகளில் பகிரும் குன்றுகள் அவை. ஸ்ரீநேசன், எங்களுடன் அப்போது அங்கே இல்லையென்றாலும் அவரது மலைகள் எங்களுடன் இருந்ததால் அவரும் எங்களுடன் இருப்பதாகத் தான் இருந்துகொண்டிருந்தது.

‘பொயட்ரி’ இதழில் அவர் எழுதிய கவிதை நாங்கள் ஏறிய பாறைகளில்  தென்படத் தொடங்கியது.

மலையில் எண்ணற்ற பாறைகள்
பாறைகளில் எண்ணற்ற குரங்குகள்
உலகில் எண்ணற்ற கவிதைகள்
எண்ணற்ற அக்குரங்குகளுள் ஒன்று
எண்ணற்ற பாறைகளில்
என் தலைமீது ஒரு வாய்ப்பாக வந்தமரும்போது
நானொரு கவிதையெழுதுபவனாகி விடுகிறேன்.
- ஸ்ரீ நேசன்

மாலை ஒளியில் குன்றுகள் செம்மஞ்சளில் குளித்துக் கொண்டிருந்தன. சட்டையையும் வேட்டியையும் கவ்விக் கவ்விச் சொந்தம் கொண்டாடின முட்செடிகள். ஏறத் தொடங்கினோம். சின்னச் சின்னக் குன்றுகள் தான். சுற்றி பாசனமில்லாமல் காய்ந்திருந்த வயல்கள். தூரத்தில் தெரியும் வீடுகள். வெவ்வேறு இடைவெளிகளில் வெவ்வேறு உருவங்களில் தம்மை வெளிப்படுத்தும் மலைகள். யானையின் கண்களைச் சுற்றியுள்ள கருஞ்சுருக்கங்களைப் போல மடிப்பு மடிப்பாகப் பாறைகளினூடாக வழிகள். முன்னும் பின்னும் ஆங்காங்கே கிடைக்கும் இடங்கள் வழியாக தண்ணீரைப் போல வழியும் ஒளி. தரையிலிருந்து ஒரு நூறு மீட்டர் உயரத்தில் உள்ள குன்றின் உச்சியில் அமர்ந்தோம். காட்டுவாகை மரத்தின் காய்கள் எல்லாம் மஞ்சளாக கிளுகிளுப்பை போல கொத்துக்கொத்தாக பக்கவாட்டில் அந்த மாலையை அசைத்துக் கொண்டிருந்தன. பின்னால் பாறைச் சரிவில் பறவையின் முகமும் அலகும் கொண்ட நான்கு மனிதர்கள் குதிரையுடன் ரத்தச் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களைப் பார்த்தோம். இடுப்பில் குறுவாளுடன் உள்ளவர்கள் அவர்கள். அந்த ஓவியங்களின் சிவப்பு பொழுதில் ஏறிக்கொண்டிருந்தது.
இறங்கி நடந்தோம். குன்றுகள் ஒருபுறம் கடினமாகவும் கரடுமுரடாகவும் கூர்மையாகவும் இன்னொருபுறம் மிருதுவாகவும் குழைவாகவும் நளினம் கொண்டும் தெரிகின்றன. உடலின் நெளிவுகளும் சுளிப்புகளும் குழைவும் காட்டி ஈர்ப்பதை ஒளிப்படங்களாக எடுத்துக் கொண்டேன்.

இன்னமும் தண்ணீர் வளமாகவும் தெளிவாகவும் உள்ள ஒரு கிணறைக் கடந்து இன்னொரு குன்றுக்கு ஏறினோம். முள்கம்பி வேலியிடப்பட்ட பாறைக்குள் போக இடமிருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஓவியங்களின் காலத்தில் தானும் இடம்பெற்றுவிட யாரோ சிவப்பு பெய்ண்டில் எழுதிய எழுத்துகள் இருக்கின்றன.
இந்தக் குன்றுகளைப் பார்த்த போதுதான் இங்கேயுள்ள பாறைகளை அது கொண்டிருக்கும் உஷ்ணத்தை கடினத்தை மிருதுவைப் பாதங்களாலும் கைகளாலும் தீண்டியபோதுதான் கண்டராதித்தனின் உலகம் பற்றிய சில புதிய குறிப்புகள் எனக்குக் கிடைக்கின்றன. சமகாலம் என்பதின் மீது பார்வையின்மை உள்ளவர் என்பது அவர் குறித்த அவர் கவிதைகள் குறித்த எனது கணிப்பாக உள்ளது. அது தொடர்பான விமர்சனமும் சேர்ந்ததுதான் அவர் மீதான எனது மதிப்பு. ஆனால் ஒரு பார்வையின்மை அம்சம் மூலம் அவர் தன் கவிதையில் சாதித்த பார்வைகளும் அழகுகளும் கொண்டதே அவரது தனித்துவம். இந்தக் குன்றுகளில் உள்ள கற்கள் சமகாலத்தில் இருந்து சமகாலத்தை எதிர்கொள்ளாதவையாக இருப்பதைப் போல் கண்டராதித்தனுடைய படைப்புகள் இருக்கின்றன. இந்தக் குன்றுகளிலுள்ள பாறைகள் நெறிக்குட்பட்டு எப்போது சமயமானதோ அங்கே கண்டராதித்தன் உறைந்திருக்கிறார். சமயம் உறைந்து கூர்மைப்படும் இடத்தில் காமமும் அடிப்படை விழைவுகளும் அங்கே முனைப்பு கொள்கின்றன. கண்டராதித்தனின் வீடு சிவன் கோயிலின் நிழல் விழும் பகுதியிலேயே உள்ளது. ஞாயிற்றுக்கிழமை பகலில் கண்டராதித்தனின் சாயல் கொண்டவர்களைத் தெருக்களில் பார்த்தேன். காலை நடையில் வடக்கிருந்து இறந்துபோனவர்களைப் பற்றிய பேச்சு தொடங்கியது. சந்திரகுப்த மௌரியர் தெற்கே வந்து வடக்கிருந்து இறந்துபோனதை சபரிநாதன் பகிர்ந்துகொண்டார்.   

சபரியுடன் கடந்த நான்காண்டுகளாகப் பழகி வருகிறேன். எப்போதும் தன்னைச் சுற்றி அரண்களோடு தன்னை வெளிப்படுத்தாமல் மூடியே இருக்கும் சபரியைத் தான் எனக்குத் தெரியும். அவரைக் கண்டராதித்தன் ஊரில் கண்டராதித்தன் வீட்டில் கீழ்வாலை குன்றுகளோடு பார்த்த போது அவர் தனது அரண்களைக் களைந்திருந்தார். வரலாற்றின் நெடிய போக்கை மாற்றங்களை எல்லாம் முன்னர் நிகழ்ந்தவை போலவே நாம் உணரும் தன்மையைச் சொல்லும் ‘கலிலியோவின் இரவு’-ஐ சபரிநாதன் நீள்கவிதை வடிவில் சாதித்திருந்தது பற்றி கண்டராதித்தனுக்கு வியப்பும் பாராட்டும் இருந்தது. கண்டராதித்தன் இப்போது எழுதத் திட்டமிட்டிருக்கும் நீள்கவிதைக்கு ‘கலிலியோவின் இரவு’ (கவிதையைப் படிக்க :  http://kanali.in/galileovin-iravu/) தூண்டுதலாக இருந்துள்ளதாகவும் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் சொன்னார். ஒரு நீள்கவிதை எழுதும்போது அதைத் தொடர்ச்சியாக தினசரி எழுதுவதுதான் தேவை, ஊக்கமோ உச்சமோ அற்ற தருணங்களிலும் அதைத் தொடர்ந்து முயற்சிப்பதே அவசியம் என்று பேசிக்கொண்டோம். ந. பிச்சமூர்த்தி, சி. மணி, நகுலன், கலாப்ரியா, பிரமிள், தேவதேவன், விக்ரமாதித்யன் எல்லாரும் குறுங்காவிய முயற்சிகளைச் செய்திருக்கின்றனர். டி. எஸ். எலியட்டின் பாழ்நிலம் பற்றி சபரிநாதன் குறிப்பிட்டார். வே. நி. சூர்யாவில் நகுலனின் மிதப்பும் மொழி மயங்கலும் இருப்பது குறித்து அவரிடம் கேட்டேன். அவர் வயதில் நான் எப்படி இருந்தேனோ அதே பேதமையுடன் இருக்கிறார். இலக்கு ஏதும் அறியாமல் விந்தையுடன் நாற்சந்தியில் நிற்கிறார். நான் தொடங்கிய நாகர்கோயிலிலிருந்துதான் அவரும் தொடங்கியுள்ளார். எல்லாம் அவருக்குக் கூடும்.

கீழ்வாலைக் குன்றுகளுக்குப் போய் வந்தபின்னர் தான், கோணங்கிக்கும் கண்டராதித்தனுக்கும் கோணங்கிக்கும் ஸ்ரீ நேசனுக்கும் கோணங்கிக்கும் காலபைரவனுக்கும் கோணங்கிக்கும் ராணிதிலக்குக்கும் உள்ள உறவின் உயிர்த்தன்மை என்னவென்று புரிந்தது. அவர்கள் எங்கே ஒன்றாக தங்கள் படைப்புணர்வுக்குத் தூண்டுதலைப் பகிர்கின்றனர் என்பது விளங்கத் தொடங்கியது. கழுகுமலையை இருப்பிடமாகக் கொண்ட சபரிநாதன், ஆங்கிலப் புத்தங்களையே சிறுவயதிலிருந்து படித்துவந்த தனக்கு கோணங்கிதான், தன் இருப்பிடத்தின் பின்னணி, முக்கியத்துவம், வரலாறு, அங்குள்ள பறவைகள், மரங்கள், உயிர்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாகச் சொன்னார்.

ராணிதிலக் மலைகளும் ஏரிகளும் சூழ்ந்த இந்த நிலப்பகுதியிலிருந்து வேலை காரணமாக மாறி, காவிரி ஆறு பாயும் தஞ்சைப் பகுதிக்குச் சென்றுவிட்டார். அவரது சமீபத்திய ‘ப்ளக் ப்ளக் ப்ளக்’ கவிதைகளில் இரண்டு நிலங்களும் புழங்குகின்றன. ஒரு சிறுவனும் பக்கிரியும் நிலங்களில் நீர்ப்பகுதிகளில் அலையும் வீடற்ற கவிதைகள் அவனுடையவை. அவனது நிலத்தில் மிகச் சன்னமாக காமம் அரும்பத் தொடங்கியுள்ளது. ஸ்ரீநேசனின் மலையில் புல் அளவு கூட காமம் கிடையாது. கண்டராதித்தனின் மலையே காமம் தான்.

சனிக்கிழமை இரவு உறங்கச் செல்லும்போது, கால பைரவனிடம் நினைவு இல்லாத ஒரு வீட்டில் எல்லாரும் உறங்கலாம் இன்று என்றேன். அது ஆடும் ரயில்போல பழைய கோயிலின் தேய்ந்த மிருதுவான கல்தளத்தைப் போல கருப்பை போல இருந்தது. மிதந்தபடி உறங்கினேன்.

அடுத்த நாள் அவரவர் நினைவுள்ள வீட்டில் உறங்கச் சென்றோம்.  

Comments