அம்மாவின்
பொறுமை சகிப்புத்தன்மை எதையும்
கொடையாக நான் பெறவில்லை
அவளது நுரையீரல் தொடங்கி
பலவீனமானதெல்லாம் எதுவோ
அதையே அவளின் பிள்ளையாக
நான் பெற்றிருக்கிறேன்
நினைவு பயின்ற நாள்முதலாய்
மருந்துகளுடனயே வாழ்ந்துவருபவள்
என்றாலும்
இந்த வயதிலும்
உளநலத்துக்கான
மாத்திரைகளை உட்கொள்ளவில்லை அவள்
தாதியாகப் பணியாற்றியதால்
அலோபதி மாத்திரைகளும் மருந்துகளும்
ஊசிகளும் ஆஸ்பத்திரியின் வாசனையும்
ஆதியிலேயே என் உடலுக்குப் பரிச்சயம்
மழைக்காலங்களிலும்
வியர்வை பெருகும் வேனல் நாட்களிலும்
மூச்சுவிடத் திணறி
என் நுரையீரல் அரற்றும்போதெல்லாம்
டெரிபிளினையும் டெக்கட்ரானையும் கலந்து
ஊசியாய் ஏற்றுவாள்
அப்போது குளிர்மேகங்கள்
மார்பில் இறுக்கத்தைத் தளர்த்தி
வேர்வையைப் பூக்கவைத்து உறங்கவைக்கும்
கூடவே பெயர் சொல்லி
சிட்ரிசின் மாத்திரையையும் தருவாள் அம்மா.
அவள் தந்த மாத்திரைகளையெல்லாம் விஞ்சி விழுங்கும்
மாத்திரைகளுக்கும்
அவளுக்கே புரியாத நோய்க்குறிகளுக்கும்
அனுபவம் கொண்டுவிட்டது
தற்போதைய எனது உடம்பு.
ஆனாலும் பொடியனின் உடலைக் கொண்ட
அந்த சிட்ரிசின் மாத்திரையில்
அம்மாவும்
அம்மாவுடன் நுரையீரலுக்குள் இறங்கும் குளிர்மேகங்களும்
நோய் நீங்கித் தளரும்
உறக்கமும் குடிகொண்டிருக்கின்றன.
(இந்தக் கவிதையைக் கிளர்த்திய கவிஞர் இசைக்கு)
Comments