எனது காகம்
இல்லை
உங்கள் காகம் இல்லை
காகம் ஒன்று
தனது இறகுகளை விரித்து வானத்தில்
தரையில் வாகனத்தில் போகும்
என்னைக் கடந்தபோது
அதன் கருத்த இறகுகள் கிழியத் தொடங்கியிருப்பதைப்
பார்த்துக் குறித்துக் கொண்டேன்
அந்தக் காகம்
ஒரு நாள் சாலையில்
கடந்துசெல்லும் போது
துப்பாக்கிக்குக் கைகளைத் தூக்குவதைப் போல
சிறகை வேறுவிதமாய் விரித்து
இருபரிமாணமுற்று
காகிதம் போலக் கிடக்கும்
நானும் அதைப்போலக் காலடியில் புழுதியாய்
கடக்கப் படுவேன்.
அதற்கு நடுவில் தான்
குனிந்து கீழே பார்த்தேன்
இந்தக் காகத்தைப் பறக்கவும்
என்னை இயங்கவும் செய்யும் விசை எது?
இங்கே
அதன் இறக்கைகளை ரிப்பேர் செய்வதற்கும்
ஒட்டித் தைப்பதற்கும்
தையல்காரன் உண்டா.
Comments