கழிப்பறை ஜன்னல் கண்ணாடியில்
ஆடும் எலுமிச்சை இலைகளின் நிழல்கள்
தம் வெவ்வேறு சாயல்களை
எனக்குக் காண்பித்து விடுகின்றன
உறக்கமின்மை
என்னுள் செலுத்தும் நரகங்களை
இறுதிச் சாமத்தின் முடிவில்
சிறுநீராய்ப் பிரித்து
எல்லா வலிகளோடும் சேர்த்துக் கொஞ்சம்
இறக்குகிறேன்
வெளியே ஆடும் இலைகள்தான்
காற்றில் கலந்திருக்கும் மீயொலிகளை
என்னிடம் பெயர்க்கின்றன போல
குழந்தையின்
அழுகுரல்
நாகஸ்வரம் ஒருசேரக்
கேட்கத் தொடங்குகின்றன
கற்பகமே உனையன்றி
துணை யாரம்மா
நீயே கதி எனப்போற்றும்
என்னைக் கண்பாரம்மா
நினைவில் எழுந்த பாடலின் மடியில்
உறங்கத் தொடங்குகிறேன்
இன்னும் எந்த ஒலியும்
இறங்காத பூமியில்
அம்மா
அம்மா
அம்மா.
Comments