Skip to main content

தைலசீன் என்னும் டாஸ்மானிய வேங்கை



டாஸ்மானிய வேங்கை என்று பொதுவாக அழைக்கப்படும்

 தைலசீன் 

 எலி பூனை நாய் புலி எனப் பல உருத்தோற்றங்களை

நம்மிடம் எழுப்பும் முயக்க உடலைக் கொண்டிருப்பதாலும்

அருகிப் போயிருக்கலாம்

கங்காரு போலக் குட்டியை

பையில் சுமக்கும் பாலூட்டி

முதுகின் கீழ்பகுதியில் தொடங்கும் புலியின் வரிகளைக் கொண்ட

இந்தப் புலி 

புலியைக் கொண்டிருக்காமல்

கழுதைப் புலியையே வடிவில் கொண்டிருக்கிறது 

டாஸ்மானிய வேங்கை என்று அழைக்கப்படும் 

தைலசீன்

மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டது

அதனால் மனிதர்களோடு இணைந்து 

வளர்ப்பு மிருகமாகவும் ஆகவில்லை

தைலசீன் இரவாடி

சில சமயங்களில் கங்காருக்களைப் போல

இரண்டு கால்களில்

தாவும் 

வேகமாக ஓடவேண்டிய நேரங்களில்

ஒத்துழைக்காத விறைப்பான உடல் என்பதாலேயே

குடியேறிய மக்களுக்கு எளிதான வேட்டைக்குரிய மிருகமானது

தைலசீன்

குகை மனிதர்களும் சாப்பிட்ட தடையங்கள்

பாறை ஓவியங்களில் தென்படுகின்றன

பலவீனமான தாடைகளைக் கொண்டதாக இருந்ததால்

குட்டிக் கங்காருகள் தீக்கோழிக் குஞ்சுகள் அணில் எலிகளே 

இதற்கு இரவுகளில் இரையாகுமாம்

ஆஸ்திரேலிய நிலப்பகுதிகளிலும் டாஸ்மானியாவிலும்

ஆங்காங்கே தென்படுவதாகக் கூறப்பட்டாலும்

தைலசீன்கள் அதிகம் உயிர்தரித்திருப்பதற்கான

வாய்ப்புகள் இல்லையென்றே கூறப்படுகிறது

நான் நேற்று பார்த்த ‘தி ஹன்டர்’ திரைப்படத்தின்

கடைசிக் காட்சியில் 

தன் குகையில் காத்திருக்கும்

வேட்டையாடியை 

ஓர் எட்டு வந்து பார்த்துவிட்டு

எந்தப் புகாரும் இல்லாமல்

பனிபூத்த குற்றுச்செடிகளிடையே

மெதுவாக நடந்து செல்கிறது தைலசீன்

துப்பாக்கியைத் தன்னை நோக்கி நீட்டும்

வேட்டைக்கார நாயகனைப் பார்த்து

அந்தக் கடைசி தைலசீன்

வேங்கை என்ற பெயரையும்

நீடித்திருந்த 12 மில்லியன் ஆண்டுகளையும் தவிர 

என்ன கீர்த்தி எனக்கு மிச்சம், சுட்டுவிடு

கழுத்தைத் திருப்பி

கண்களால் இரைந்து சொன்னது 

நானும் துப்பாக்கிக்குப் பின்னால் இருந்தேன்.

சட்டென்று துளைக்கப்பட்டு மரித்தது

சுட்டபிறகு 

அழும் வில்லியம் டீஃபோவைப் போன்றே

நானும் அந்த கட்டக் கடைசி

டாஸ்மானிய வேங்கைக்காக

அழுதேன். 

Comments