Skip to main content

முராகமியின் தவளை


‘சூப்பர் ப்ராக் சேவ்ஸ் டோக்கியோ' கதையின் முதல்வரியிலேயே ஆறடி உயரத்தில் இருக்கும் பிரமாண்ட தவளை, நாயகன் கடாகிரியைச் சந்தித்துவிடுகிறது. 

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கடாகிரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து விட்டதைத் தவிர அந்தத் தவளைக்கு கடாகிரியைச் சங்கடப்படுத்தும் வேறெந்த நோக்கமும் இல்லை. முராகமியின் கதை விலங்குகளைப் போலவே தவளையும் மிக மனிதாபிமானமும் நாகரிகமும் கொண்டது. அத்துடன் அதுவந்ததன் காரணம், ஒரு பெரிய லட்சியத்துக்காக கடாகிரியின் உதவியைக் கேட்டு. டோக்கியோவை நிலநடுக்கத்துக்கு உள்ளாக்க இருக்கும் மண்புழு ஒன்றின் திட்டத்தை நொறுக்கி டோக்கியோவையும் ஆயிரக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதுதான் அதன் லட்சியம். திரு. தவளை என்று தன்னைக் கூப்பிட வேண்டியதில்லை, தவளை என்றே அழைக்கலாம் என்று அடிக்கடி நினைவூட்டும் அந்த ஆறடித் தவளை, நீட்சே, டால்ஸ்டாய் போன்ற தத்துவ அறிஞர்கள், படைப்பாளிகளின் மொழிகளையும் சந்தர்ப்பத்துக்கேற்ப கடாகிரியிடமும் நம்மிடமும் பகிர்ந்துகொள்கிறது.

டோக்கியோவை அழிவுக்குள்ளாக்க இருக்கும் ராட்சச மண்புழுவை ஒழிப்பதால் கடாகிரிக்கோ, தவளைக்கோ எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதை அறிந்தே இருக்கிறது அந்த ஆறடித் தவளை. அவர்கள் டோக்கியோவைக் காப்பாற்றிய செய்தி கூட யாருக்கும் தெரியப் போவதில்லை, ஆனால், அந்த ரகசியப் பணியைச் செய்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தவளை. கடாகிரி, சிறுவயதிலிருந்து தனது குடும்பத்தினருக்காகச் செய்த பலன் கருதாத தியாகத்தையும், அவன் பணியாற்றும் அலுவலகத்துக்காகச் செய்யும் கடுமையான பணிகளையும் பார்த்துவிட்டுத் தான் அவனை இந்த மகத்தான பணிக்குத் தேர்ந்தெடுத்ததாகவும் சொல்கிறது. 

கடாகிரிக்கும் தவளைக்கும் மட்டுமே தெரிந்த வேறு யாருக்குமே தெரியாத தளத்தில் நடக்கும் யுத்தத்தில் மண்புழு வெல்லப்பட்டு நிலநடுக்கம் தடுக்கப்படுகிறது. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் சாவின் வாயிலிருந்து காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். யாருக்குமே தாங்கள் காப்பாற்றப்பட்டது தெரிந்திருக்கவில்லை; அதனால் என்ன நாம் நினைத்ததைச் சாதித்துவிட்டோம் என்று கடாகிரியிடம் திருப்தியுடன் பேசுகிறது தவளை.

கடைசியில் தவளையாக இருந்தும் தவளையல்லாதவர்களுக்கான உலகத்துக்காகத் தான் போராடுவது குறித்தப் புதிரைப் பற்றிப் பேசத் தொடங்குகிறது. கடாகிரிக்கு தவளை பேசுவது புரியவில்லை. எனக்குப் புரியவில்லை என்று கேட்கிறான் வாசகனைப் போன்றே.

“என்னாலும் புரிந்துகொள்ளத்தான் முடியவில்லை" என்று கண்களை மூடியபடி மேலே பேசத்தொடங்குகிறது தவளை. 

“அந்த உணர்வைத் தான் அடைகிறேன். உங்கள் கண்களால் பார்ப்பது உண்மையாக இருக்க வேண்டியதில்லை. மற்ற எல்லா வஸ்துக்களையும் விட எனது பகைவன் எனக்குள் உள்ள நான்தான். எனக்குள் எனதல்லாத எனது ஒன்று உள்ளது. எனது மூளை சேறாக ஆகிக்கொண்டிருக்கிறது. எஞ்சின் வருகிறது. ஆனால் திரு. கடாகிரி, நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று மிகவும் விரும்புகிறேன்" 

தவளையின் இறுதிப் பேச்சு இதுதான். அதற்குப் பிறகு தவளை தனது மூலாதாரத்துக்குத் திரும்புகிறது.

முராகமி, தன் கதைகளில் விலங்குகளை விடுவதன் மூலமாக, மனித கனத்திலிருந்து விடுபடுகிறார் என்று முன்பொரு முறை எழுதியிருந்தேன். தவளையிடமிருக்கும் தவளையின் கனத்தையும் முராகமி இந்தக் கதையில் விடுவிக்கப் பார்க்கிறார். 

எனக்குள் எனதல்லாத ஒன்றாக இருக்கும், என்னுடன் போராடும் ஒன்றுதான் இத்தனை சாகசங்களுக்குத் தூண்டுகிறதா? முராகமி.

Comments

shabda said…
நன்றி

Popular posts from this blog

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்

அருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை

உலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை. ஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன். எஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார். 000 ஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆ

நகுலனிடமிருந்து பிரிந்த இறகு

நவீன கவிதையில் நகுலனுக்குத் தொடர்ச்சி இருக்குமா? என்ற கேள்விக்குப் பதிலாக, நகுலனின் குணமுள்ள கவிதைகளுடன் வே. நி. சூர்யா ‘கரப்பானியம்’ தொகுப்பிலேயே தென்பட்டார். அந்த முதல் தொகுப்புக்குப் பிறகு எழுதிவரும் கவிதைகளில் நகுலனின் பழைய தத்துவப் பாலத்தை அ- தத்துவம், புனைவு, அதிலிருந்து பிறக்கும் தனி விசாரத்தால் கடந்து சுலபமாகப் போவதைப் பார்க்க முடிகிறது. தாயுமானவரும், பாரதியும் தப்பமுடியாத வேதாந்தச் சுமை கொண்ட மனிதனை, நவீனன் சந்திக்கும் இடம் தான் நகுலன். அதனால்தான், நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமாகத் தெரியும் மகனை அம்மா ஸ்பரிசித்துத் தடவும் தருணத்தை விவரிக்கும்போதும், ‘மறுபடியும் அந்தக் குரல் கேட்கிறது, நண்பா, அவள் எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்?’ என்று. அது அரதப்பழசான அறிவொன்று, திண்ணையிருட்டில் அமர்ந்து கேட்கும் கேள்வி. அந்தக் கேள்விக்கு முன்னால் உள்ளதுதான் கவிதை. அந்தக் கேள்வியைச் சந்தித்து, அதை தனது படைப்புகளில் உலவ விட்டு, பழையதையும் புதியதையும் விசாரித்து புதுக்கவிஞனுக்கே உரிய சுயமான புனைவுப் பிரதேசத்தை நகுலன் தனது படைப்புகள் வழியாக உருவாக்கியிருக்கிறார்.