Skip to main content

அம்மாவுடன் வரும் கனவுகள்



அது ஒரு துறவியர் மடம். காலத்தின் அடையாளம் எதுவும் இல்லை. ஆனால் அது நவீனமாகவும் இல்லை. அம்மா என்னைக் கொஞ்ச தூரம் பயணித்துத்தான் அங்கே அழைத்துச் செல்கிறாள். எனது வயது, எனது உருவம் எதையும் எனக்கு நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

நாங்கள் துறவியின் முன்னால் அமர்ந்திருக்கிறோம். அவர் பாறை போன்ற ஒரு அமைப்பில் அமர்ந்திருக்கிறார். எனது அம்மாவைப் பார்த்து, இந்த நிலையில் இவனை இங்கே ஏன் அழைத்து வந்தாய்? என்று காலைத் தூக்கி தரையில் அறைந்து கோபமாகப் பேசுகிறார். நாங்கள் சங்கடத்துடன் அங்கேயே அமர்ந்திருக்கிறோம்.

அடுத்த காட்சி. ஆனால்,  தொடர்ச்சி இல்லை. அதே மடத்தில் நானும் என் அம்மாவும் உறங்குகிறோம். நான் என் அம்மாவை நோக்கி காலை மடக்கிக் குவித்து அவளது கன்னங்களைப் பிடித்தபடி உறங்குகிறேன். அம்மாவின் பல் இல்லாத மென்மையான பஞ்சுத்தன்மையை இப்போதும் என் கைகளில் உணர்கிறேன்.

அடுத்த காட்சி. இப்போது அதே துறவியின் முன்னர் நானும் அம்மாவும் அமர்ந்திருக்கிறோம். எங்களை முதலில் பார்க்கும்போது மிகவும் கொந்தளிப்பாகப் பேசிய துறவி இப்போது சாந்தமாக இருந்தார்.

கனவு அல்லது கனவு குறித்த ஞாபகம் இங்கே முடிந்துபோகிறது.

000

அம்மா நேற்று எனது வங்கிக்கணக்கில் பத்தாயிரம் ரூபாய் பணத்தைப் போட்ட விவரம் என் மொபைலில் மதியம் தெரிந்தது. முந்தின நாள் தான் பாப்பாவுக்குப் பள்ளிக்கட்டணம் கட்டவேண்டுமென்றுச் சொல்லியிருந்தேன். நேற்றே பணத்தைப் போட்டுவிட்டாள். ஆனால் அந்த உரிமைக்குரியவனா நான் என்ற கேள்வியும் என் பின்னாலேயே துரத்திக் கொண்டிருக்கிறது. நான் அவளிடம் பத்து நாட்களுக்கு ஒருமுறையே பேசுகிறேன். வயதான நிலையில் இன்னும் படுத்திக் கொண்டிருக்கும் அப்பாவோடு அவள் போராடிக் கொண்டிருக்கிறாள். நான் அவள் நிறைவுகொள்ளத்தக்க வகையில் எதையும் செய்யாத பிள்ளையாகவே வளர்ந்து இந்த 45 வருடங்களைக் கடந்துவிட்டேன். ஊருக்குப் போய் ஆறு மாதங்களுக்கு மேலிருக்கும். போய் அப்பாவையும் அம்மாவையும் பார்த்து வருவதற்கு இயல்பான மனநிலையும் இல்லை. திருநெல்வேலி ஊரே, திருநெல்வேலியில் உள்ள என் வீட்டைப்போல மூச்சை முட்டும் அனுபவத்தைத் தருவதாகவே இருக்கிறது. 

ஒரு வேளை புரோட்டா சாப்பிடலாம் இப்போதைய ஆரோக்கிய நிலைக்கு; குறுக்குத்துறைக்குப் போகலாம். நெல்லையப்பர் கோயிலுக்குப் போய் பால்ய நினைவுகளை அசைபோடலாம். ஊரைப் போலவே என்னைப் போலவே அடைய முடியாத தாபத்தின் பாழில் இருக்கிறது தலை உடைந்த லிங்கம். நான் பார்க்கவே பல வருடங்களாக, அந்தப் பாழில் தான்  விருத்தி மிகக்குறைந்த  நிலையில் குடும்பம் நடத்தி வருகிறாள் சின்னஞ்சிறிய காந்திமதி. ஊர், சின்னவர்களைப் படிப்பித்து வெளியே தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கிறது. திரும்பிப் பார்க்காதே! இங்கே இருந்தால் ஒன்றுக்கும் உதவப்போவதில்லை என்று சொல்லிச் சொல்லி நெல்லையப்பரும் காந்திமதியும் சொல்லிச் சொல்லி அனுப்புகிறார்கள் போலும்! மதிய நேரத்தில் அதனால்தான், ஊரே உறங்குகிறது. ரதவீதி உறங்குகிறது. ரெகுவிலாஸ் உறங்குகிறது. தெற்குப் புதுத் தெருவின் அடையாளமான திருவள்ளுவர் உறங்குகிறார். வசதியானவர்கள் வீட்டின் அன்றைய அடையாளமான  எப்போதோ நடப்பட்ட போகன்வில்லாச் செடிகள் களைத்து உறங்குகின்றன.    

நெல்லையப்பர் கோயிலில் வந்து வந்து போகின்றன யானைகள். எனக்கு முதலில் நயினார் யானையைத் தான் தெரியும். பிறகு வந்த யானைகளின் பெயர் எனக்குத் தெரியவில்லை. பெயர் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இப்படியான துவந்தம் ஏற்படும் என்று நினைத்த உறவா எனக்கும் அம்மாவுக்குமான உறவு? ஆனால் அப்படித்தான் ஆகிவிட்டது. என் மகள் இப்போது தன் அம்மாவிடம் உயிராய் இருக்கிறாளோ அப்படித்தான் நானும் இருந்தேன். அதற்கும் மேலாகவே. 

அம்மாவுடனான முதல் ஞாபகம் இதுவாகத் தான் இருக்க வேண்டும். லெட்சுமி ஆச்சி வீடிருக்கும் வளவின் தெரு நடைப்படியில் மேல் படியில் உட்கார்ந்து இருக்கிறேன். அது எல்கேஜி அல்லது யூகேஜி கோடை விடுமுறை தினமாக இருக்கலாம். அம்மா மதுரைக்கு பெரியம்மா வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லியிருந்த நாளாக இருக்கும். கீழப்புதுத் தெருவின் முக்கால் நீளத்தைக் கடந்தால் வரும் வீட்டிலிருந்து வடக்கு முனையை என் அம்மாவின் உடல்தடம் தெரியுமாவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். 

எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அவள் தெரிவாள். நடுவில் உச்சினிமாகாளி ஆலயத்தைத் தாண்டிவிட்டால் இன்னும் துல்லியமாகத் தெரிவாள். எனது உற்ற ஸ்நேகிதி, கதைசொல்லி, அழகி எல்லாம் அவள்தான். அவள்தான். அவள்தான் என் பல ருசிகளைத் திறந்தவள்.  

ஒல்லியாக மூன்றரை மணி வெளியில் ஒரு கோடாகத் தெரியத் தொடங்கிவிட்டாள் அம்மா. நான் முதல்முறையாக படியிறங்கி தெருவில் அன்றுதான் ஓடியிருக்க வேண்டும். அந்தக் கோட்டை நோக்கி ஓடினேன். மாடத்தெரு அருகில் அவள் துல்லியமாகத் தெரியத்தொடங்கி விட்டாள். நான் இரண்டு நிமிடங்களில் ஓடி அவளது காலைக் கட்டிக்கொண்டேன். ஆச்சிகிட்ட சொல்லாம இப்படி வரலாமா? வரக்கூடாதுதான். உச்சினிமாகாளி எந்தத் தீங்கும் என்னை ஆட்கொள்வதற்கு முன்னால் உன்னைப்போல என்னைக் காப்பாற்றி விடுவாள் என்று நான் அவளிடம் சொல்லவில்லை. இதை எழுதும்போதுதான் தெரிகிறது. என் நினைவில் கீழப்புதுத்தெருவின் நடுமத்தியில் வீற்றிருக்கும் உச்சினிமாகாளிக்கு ஒரு இடம் இருக்கிறது.சின்ன சந்நிதி. ஆனால் அம்மன் பிரமாண்டமானவள். உஜ்ஜயினி மகாகாளி தான் மறுவி இப்படி அழைக்கப்படுகிறாள். 

இதைப் போல எத்தனை தினங்கள், எத்தனை ஊர்களில் அவளுக்காக காத்திருந்திருக்கிறேன். கடிகாரம் பார்க்கத் தெரிந்தபிறகு, நிமிட முள் நாலரைக்கு வரும் வரை மணிகண்டன் வீட்டுக் கதவிடுக்கு வழியாகப் பார்த்திருந்து விட்டு அம்பு போலத் தெருவில் இறங்கி தென்காசி கீழப்பாளையம் தெருவின் நுனிவரை அவள் பேருந்திலிருந்து இறங்கும் இடம்வரை எத்தனை நாள்கள் ஓடியிருக்கிறேன்?

அம்மாவுக்காகக் காத்திருக்கத் தொடங்கியதுதான் எல்லாக் காத்திருப்புக்குமான பயிற்சியின் ஆரம்பமாக இருந்திருக்க வேண்டும். அவள் என் பால்யத்தில் இருந்தும், இல்லாமலும் இருந்திருக்கிறாள். தங்கை பிறக்கும் வரை தென்காசி போகும் வரை அப்படித்தான், நான் அம்மாவுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. சில இரவுகள் பிறர் வீட்டின் திண்ணைகளில் கூடங்களில் அம்மாவின் சத்தத்தை எதிர்பார்த்துக் கொண்டே உறங்கிப் போன நாட்களும் எனக்கு இருந்திருக்கின்றன. 

அம்மா மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக இருந்ததால் அக்கம்பக்கத்தில் பிரசவம், கருக்கலைப்பு, திடீர் உடல் நலக்குறைவு எல்லாவற்றுக்கும் அவர்களை மதுரை ஆஸ்பத்திரி வரை கூட்டிச் செல்பவளாக இருந்தாள். முதியவர்களுக்கு நாடி பார்த்து மரணத்தின் சமீபம் குறித்து சொல்வதைப் பார்த்திருக்கிறேன். கருப்பு வெல்க்ரோ கைக்கடிகாரத்தைக் கழற்றி இடது கையில் வைத்துக்கொண்டு வலது கையால் நோயாளியின் கரம்பிடித்து கூர்மையாக அவள் கடிகாரத்தைப் பார்க்கும் முகம் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே ஆதரவில்லாமல் பிறரின் சகாயத்தை எதிர்பார்த்து வளர்ந்ததால் அவளும் எல்லாருக்கும் தன்னால் முடிந்த சகாயங்களைச் செய்பவளாகவே இருந்தாள். 

பிறந்து ஓரிரு மாதங்களில் தகப்பனைப் பறிகொடுத்தவள். ஏழ்மையான சூழலில் அக்காவுடன் சேர்ந்து வளர்ந்தவள். பள்ளி ஆயாவாக வேலை பார்த்து குழந்தைகளைக் காப்பாற்றிய தெய்வானை ஆச்சியின் கஷ்ட ஜீவனத்தில் பங்கெடுத்தவள். என் அம்மாவின் முகம் மணலின் நிறம் கொண்டது. அலை சலித்து கரையில் உருவாகும் சிவப்பு மணல் திட்டுகள் போல செம்மை சில திட்டுகளாக அவள் முகத்தில் படர்ந்திருக்கும். தெய்வானை ஆச்சி நிறைமாத கர்ப்பிணியாக என் அம்மாவைச் சூலுற்று இருந்தபோது, தண்ணீர் எடுக்கச் செல்லும்போது இன்னொரு பெண்ணின் குடம் வயிற்றில் பலமாகப் பட்டதால் என் அம்மாவுக்கு முகத்தில் அந்த சிவப்புத் திட்டுகள் பிறவியிலிருந்தே இருப்பதாக என் அம்மா சொல்லியிருக்கிறாள். 

என் அம்மா இதுபோன்று நிறைய கதைகளைச் சொல்லியிருக்கிறாள். அவை நாடகத் தருணங்களையும் உணர்ச்சிகரமான திருப்பங்களையும் கொண்டவையாகவும் இருக்கும். நிறைய கற்பனையும் சேர்ந்திருக்குமோ என்றும் வளர்ந்தபிறகு தோன்றியுள்ளது. அவள் தனது சிறுவயதிலிருந்து தன் மேல் விழுந்த பற்றாக்குறைகளையெல்லாம் பிறருக்கான சகாயங்களில் முன்நிற்பது வழியாகவும் சொல்லும் கதைகள் வழியாகவும் தான் நிறைத்திருக்க வேண்டும். 

ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்தக் கவிதையை முதல்முறையாகப் படித்தபோது அது எனது கல்லூரிப் பாடநூல் கவிதையாக இருந்ததாலா, எனது அந்தரங்க அனுபவமாக அப்படியே இருந்ததாலா தெரியவில்லை. அந்த வயதில் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அந்தக் கவிதை எனக்கு இப்போது மிகவும் பொருள்தரும் கவிதையாக உள்ளது. அம்மா சொல்வது பொய்கள் தான் என்ற உறுதிப்பாடு வந்திருக்கலாம். அல்லது அதுதான் அம்மாவின் அதிகபட்ச சாத்தியம் என்ற பரிவும் வந்திருக்கலாம். 

அம்மாவைக் கருப்பையிலிருந்து எப்படி பிரிக்க முடியாதோ அவளை பொய்களிலிருந்தும் பிரிக்கவே முடியாது என்று தோன்றுகிறது. கருப்பைக்கும் அவளுக்குமான தொடர்பு இருக்கும் வரைக்கும் அம்மாவுக்கும் பொய்களுக்குமான தொடர்பு இருந்துகொண்டே தான் இருக்கும். பொய் என்ற பதம் அம்மா சொல்பவற்றுக்கு நெருக்கமில்லாததாகத் தோன்றுகிறது. கற்பனை, ஆசை, நிராசை என்றெல்லாம் அதைச் சொல்லிப் பார்க்கலாம். பொய் என்ற வார்த்தையில் குற்றத்தொனி வந்துவிடுகிறது. ஆனால் சிறுபையனாக இருந்தபோது, அம்மா இப்படி அப்பட்டமாகப் பொய் சொல்கிறாளே என்று கூச்சப்பட்டிருக்கிறேன்.       

அம்மா பிறந்து 63 நாட்களில் அவளுடைய அப்பாவான ராமசாமியா பிள்ளை இறந்து போனாராம். அவர் நகைக்கடை வைத்திருந்தவர். ஒரு லயன் வீட்டுத்தொகுப்பே அவருக்கு சொந்தமாக இருந்திருக்கிறது. இரண்டாம் தாரமாக எனது ஆச்சியை மணந்தவர். ஆச்சி அப்போதே நூறு பவுன் நகை போட்டு வந்தவளாம். பெயர் தெய்வானை. நகைக்கடை வைத்திருந்தவர் படிப்படியாக இளைத்து பெட்டிக்கடை வைத்த நிலையில் எனது பெரியம்மாவும் அம்மாவும் பிறந்திருக்கின்றனர். என் அம்மா பிறந்தபின்னர் பெட்டிக்கடையில் ஒரு வாடிக்கையாளருக்கு வெற்றிலை கொடுத்த நிலையில் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாக அம்மா சொல்லியிருக்கிறாள். தாத்தா நிதியுதவி செய்த பள்ளி ஒன்றிலேயே பின்னாட்களில் ஆச்சி ஆயாவாக வேலை பார்க்க நேர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறாள். நானும் அம்மா சொன்னதைப் பதினைந்து வயதுவரை மற்றவர்களிடம் அப்படியே சொல்லியிருக்கிறேன். ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டேன். அம்மா சொன்னதற்கான ஆதாரத்தையும் நான் அதற்குப் பின்னர் தேடவில்லை. எனக்கு அவை தேவையுமில்லை. 

அம்மாவுக்கு அவளது துயர உலகத்தில் நான் மட்டுமே புதிதாகவும் நம்பிக்கையூட்டுபவனாகவும் இருந்திருக்க வேண்டும். திருநெல்வேலி ஒரு சிறுநகரம் என்பதால் அவ்வப்போது அறிமுகமாகும் புதிய உணவுப் பொருட்களைப் பற்றி கேள்விப்பட்டு எனக்கு அதைப்பற்றிய அறிமுக கதைகளுடன் வாங்கியும் தந்திருக்கிறாள். ஃபேண்டா நிறம் என்பதை அறிமுகம் செய்தவள் எனது அம்மாதான். வெஜ் பப்ஸ், மசாலா டீ, சமோசா, எக்லேர்ஸ் சாக்லேட், ட்ரூ நைஸ் பிஸ்கெட், தேங்காய் பன். அவள் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு பக்கத்தில் இருக்கும் காளிமார்க் பேக்கரிக்குக் கூட்டிப்போய் ஃபேண்டா கலர் குளிர்பானத்தை நாங்கள் சேர்ந்து குடிக்கும்போதுதான் அந்த ஆரஞ்சு நிறத்தின் பெயர் ஃபேண்டா என்று சொன்னாள். பேண்டா அறிமுகமாகி சில நாட்களிலேயே ஃபேண்டா நிறத்தில் பச்சையான கோடுகளுடன் கூடிய பெரிய வெள்ளைத் தாமரைகள் உடல் முழுவதும் தொங்குமாறு ஒரு மெல்லிய நைலக்ஸ் சாரியையும் அம்மா வாங்கியிருந்தாள். அந்த சேலையின் மென்மையும் அது தந்த கதகதப்பும் இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அந்தச் சேலைகட்டி உறவினர் மற்றும் தோழிகள் வீட்டுக்குப் போகும்போது இது என்ன கலர்டா என்று என்னைக் கேட்பாள். ஃபேண்டா என்பேன். சின்ன வயதிலேயே எவ்வளவு அழகாகத் தெரிந்துவைத்திருக்கிறான் பாருங்கள் என்று எல்லாரும் புகழ்வார்கள். இது அம்மா சொல்லிக் கொடுத்தது தானே என்று எனக்குக் கூச்சமாக இருக்கும். 

பள்ளிவயதிலிருந்தே தொடர்ந்த வறுமை காரணமாக இருக்கக்கூடும். எனக்கு ஞாபகம் தெரிந்த நாளிலிருந்து அம்மா அல்சர் காரணமாக அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாள். ரவை உப்புமா அவளுக்குப் பிடிக்கும். ஆனால் வயிற்று வலி வந்துவிடும். ஒரு நாள் என்ஜிஓ காலனி மாமா வீட்டுக்குப் போய்விட்டு மாலை ஏழு ஏழரை வாகில் நானும் அம்மாவும் டவுணுக்குப் பேருந்தேறினோம். அந்த இரவு எனக்கு ஞாபகமுள்ள இரவுகளில் ஒன்று. கிறிஸ்துமஸ் சமயம் அது. அந்த சமயத்தில் பாளையங்கோட்டை வரை கிறிஸ்தவ வீடுகளில் நட்சத்திர விளக்குகள் தொங்கவிட்டிருப்பார்கள். பேருந்திலிருந்து தூரத்தில் தான் வீடுகள் தெரியும். ஆனால் வாசலில் அழகழகான குரிசுகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இயேசு பிறந்த தொழுவம் வரை என் கண்களில் காட்சியாக ஒரு கனவு நிலப்பரப்பைப் போல விரிகிறது. அதையெல்லாம் நான் கற்பனை செய்து உருப்பெருக்கிக் கொண்டேனா? என்றும் இப்போது சொல்லத் தெரியவில்லை.

 அம்மா அன்று அந்த பேண்டா கலர் சேலைதான் அணிந்திருந்தாள். ரவை உப்புமா சாப்பிட்டிருந்தாள். திருநெல்வேலி ஜங்ஷன் நெருங்கும்போதே அம்மாவால் இருக்கவும் முடியவில்லை. நிற்கவும் முடியவில்லை. திக்குமுக்காட ஆரம்பித்திருந்தாள். தெப்பக்குளம் தாண்டி கோவில் வாசலில் நாங்கள் இறங்கவேண்டும். அம்மா பேருந்திலேயே மயங்கி விழுந்துவிட்டாள். ஐந்து நிமிஷம் நடக்கும் தொலைவில் வீடு உள்ளது. கூட்டம் கூடிவிட்டது. 

அம்மாவைப் பேருந்திலிருந்து இறக்கி கீழப்புது தெரு முக்கில் கூடியவர்கள் சோடாவை முகத்தில் விசிறி மயக்கம் தெளியச் செய்தார்கள். நான் அம்மாவுக்கு வயிற்றுவலி என்று சொன்னேன். எங்கள் வீட்டையும் அடையாளம் சொன்னேன். மிகவும் அநாதைத் தன்மையை உணர்ந்த இரவு அது. அவளது பேண்டா கலர் சேலை என்னிடம் சில விஷயங்களை வெளிரச் செய்த தினமாக அது இருக்க வேண்டும். முதல்முறையாக நான் தொலைந்து போனதை உணர்ந்த நாள் அது. நிம்மதியும் ஏகாந்தமும் எப்போதும் தலைகீழாகக் கவிழும் சாத்தியம் உள்ளதுதான் என்பதை கணம்தோறும் எனக்கு சொல்லித் தந்தது.

000 

பத்து பதினைந்து நாட்களுக்கு மேல் இருக்கலாம். ஒரு அழகிய கொழுத்த வெள்ளைப் பூனை வீட்டுக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்தது. பாப்பாவுக்கு அந்தப் பூனையை மிகவும் பிடித்துவிட்டது. அவள் அதை வளர்க்கப் போகிறேன் என்றாள். அது வளர்ந்த பூனை, வீட்டில் இருக்காது. வரும்போது வேண்டியதைக் கொடு என்றேன். உடலை ஈஷிக்கொள்ளும் பூனையையும் நாயையும் எனக்குப் பிடிக்காது. ஆனால் வீட்டு பால்கனியிலும் வாசலின் திரைச்சீலைக்குக் கீழேயும் அது படுத்துப் பழகத் தொடங்கி விட்டது. எனக்கு அந்தப் பூனை வருவது பிடிக்காவிட்டாலும், பாப்பாவுக்காக நானும் அது வரும்போதெல்லாம் நான் இருக்க நேர்ந்தால் உணவு கொடுக்கத் தொடங்கினேன்.  

நேற்று இரவு சாப்பாடு வேளையின் போது ஒரு பெரிய ஆள் கேவி அழுவது போல வாசலில் ஒரு சப்தம். படுக்கையறையில் படித்துக் கொண்டிருந்த நான் திடுக்கிட்டு எழுந்து வெளியே பார்த்தால் வெள்ளைப் பூனையும் ஒரு பழுப்புப் பூனையும் பால்கனியில் நின்று கொண்டிருந்தன. வயிற்றில் ஒரு கலவரம் எழுந்தது. மஞ்சள் பூனை தான் இந்த சப்தத்தை எழுப்பியதாக நினைத்தேன். அந்த பழுப்பு நிறப்பூனை மீது என் அடிவயிற்றில் கொலைவன்மம் கிளர்ந்தது. நான் இந்தப் பூனைகளின் அழுகுரலைக் கேட்டிருக்கிறேன். மோசமானது ஏதோ நிகழ்வதற்கான சகுனமாக அது என் நினைவில் பதிந்திருக்கிறது. அந்த ஆதிபயம் கோபமாக மாற அதைப் படிகளில் விரட்டிப் போய், பழைய செருப்பை எடுத்து இரண்டு பூனைகளும் நிற்கும் திசையில் எறிந்தேன்.  அங்கங்கு நின்று தனது கேவலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. வீட்டின் புழக்கடை தென்னைக்குக் கீழே நின்று திரும்ப இரண்டு கேவலால் உரையாடிக் கொண்டிருந்தது. செருப்பை வீசித் துரத்திக் கொண்டு போன நான், தேங்காய் நெத்து ஒன்று கிடக்க அதை எடுத்து கேவல் வரும் திசையில் வீசினேன். இரண்டும் காம்பவுண்ட் சுவருக்கு தாவிக் குதித்து பின் வீட்டுக்கிணற்றடியில் போய் கேவலைத் தொடர்ந்தன. 

பின்வீட்டுப் புழக்கடையில் எனக்கு உரிமை இல்லை என்பது போல் அவை நின்று என்னைத் தைரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்போதுதான் தெரிந்தது. எங்களிடம் பழகிப்போன அந்த வெள்ளைப்பூனை தான் வயிற்றைக் கிளறும் அந்த சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. 

பச்சிளம் குழந்தையின் கதறலையொத்த பெண்களின் கேவலை ஒத்த வயோதிகர்களின் ஓலத்தையொத்த கரைதலை இந்தப் பூனைகளுக்கு ஏன் படைத்தவன் கொடுத்தான்.

000   

திருமணத்திற்குப் பிறகும் எனது மகளுக்காக என் அம்மா கொண்டு வந்த, வீட்டிலிருந்த அவளது பழைய சேலைகளை தலையணைக்கு அருகில் வைத்து சில நாட்கள் தூங்கியிருக்கிறேன். இப்போது எங்கள் வீட்டில் அவளது சேலையை நான் தேடவேண்டும். 

திருமணத்திற்கு முன்னர் இரண்டு வருடங்கள் இருக்கலாம். சின்னம்மை வந்து திருநெல்வேலி வீட்டில் இருந்தபோது, அம்மையின் அச்சலாத்தி பொறுக்காமல் கண்ணாடியில் முகம் பார்த்து அம்மைக் கொப்புளங்களின் கோரம் உலுக்க, உடல் எரிச்சலும் தாளாமல் அம்மாவின் கால்களுக்கிடையே அமர்ந்து அழுதேன். அதுதான் அவளிடம் காட்டிய கடைசி நெருக்கம் என்று தோன்றுகிறது. 

Comments