Skip to main content

தந்தையிடமிருந்து நாவலைப் பறித்த மார்க்வெஸ்


காப்ரியேல் கார்சியா மார்கவெஸின் சுயசரிதையான 'லிவிங் டு டெல் தி டேல்' -ல் அவரது அப்பாவுக்கும் அம்மாவுக்குமான காதல் கதையைப் படிக்கத் தொடங்கும்போதே, 'லவ் இன் தி டைம் ஆப் காலரா' கதையின் நாயகனும் நாயகியும் எனக்குத் தெரியத் தொடங்கிவிட்டார்கள்.

மார்க்வெஸின் பாட்டி அவரது 14 வயதில், ஒரு பள்ளி ஆசிரியருடன் ஏற்பட்ட உறவின் விளைவாகப் பெற்ற குழந்தைதான் மார்க்வெசின் தந்தையார். மார்க்வெசின் அம்மாவைப் பெற்றவர்கள் இந்தக் காரணத்தாலேயே அவரது தந்தையுடனான காதலைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.

'லவ் இன் தி டைம் ஆப் காலரா' நாவலின் கதாநாயகனும், தந்தை பெயரை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய நிலைமையில் இருப்பவன்தான். மார்க்வெஸ், தனது தந்தையைப் பெற்ற பாட்டி பற்றி மிகச் சுதந்திர மனம்படைத்த வெள்ளைப் பெண் என்று பெருமையுடன் கூறுகிறார். மூன்று ஆண்களுடன் குடும்பமாக வாழாமல் ஐந்து மகன்கள், இரண்டு மகள்களைப் பெற்றெடுத்தவர் என்றும் சொல்லிச் செல்கிறார். தந்தையின் காதல் களியாட்டங்களையும் மார்க்வெஸ் விட்டுவைக்கவில்லை. தந்தை வழிப் பாட்டியிடமிருந்தே மார்க்வெஸ் லஜ்ஜையற்ற நடையையும் கண்களையும் பெற்றிருக்க வேண்டும். 

தனது தாய்-தந்தை கதைக்கு ரோமியோ ஜூலியட் கதையின் காவியப் பரிமாணத்தை நாவலில் வழங்கியுள்ளார் மார்க்வெஸ். புனைவில் வரும் அதீதமான வாக்கியங்களை மார்க்வெஸின் அம்மாவும் பேசுகிறார். மார்க்வெஸின் தாய் தந்தைக்கிடையிலான காதலின் தாக்கத்தைக் குறைக்க மார்க்வெசின் அம்மாவை சிறிதுகாலம் வெளியூரில் தங்கவைக்க அவரது பெற்றோர்கள் முடிவுசெய்கின்றனர். அப்போது, அவசர சந்தர்ப்பத்தில் மார்க்வெசின் தந்தையைச் சந்திக்கும் லூயிசா, மரணம் மட்டுமே நம்மைப் பிரிக்க முடியும் என்கிறாள். மார்க்வெஸின் புனைவுகளில் இந்த அதீத உணர்வு கொண்ட வாக்கியங்கள் நம்மை சந்தேகிக்க வைப்பதில்லை என்பதுதான் ஆச்சரியம். ஒரு எதார்த்தத்தைப் பிரமாண்டமாக உருவாக்கிய பின்னரே அந்த உலகத்துக்குள் அவ்வப்போது அவரது கதாபாத்திரங்கள் இப்படி காவியத் தன்மையுடன் பேசுகின்றன. எனது மாணவப் பருவத்தில் கல்குதிரை சிறப்பிதழ் வழியாக மார்க்வெஸ் அறிமுகமானபோது, களங்கமற்ற எரிந்திரா குறுநாவலில் தபால்காரனை இப்படிப் பேசவைத்தே என்னை மயக்கினார் மார்க்வெஸ். எரிந்திராவின் புகழை எவ்வளவு பரப்புவாய் என்று கிழவி கேட்பதற்கு, பூவுலகின் மறுபக்கம் வரை பரப்ப இருக்கிறேன்தானே என்று அவன் சொல்லும்போது உலகம் மிகச் சிறியதாகத் தான் எனக்குப் பட்டது. ஆனால், 'யாரும் எழுதுவதில்லை கர்னலுக்கு' நாவலில் கர்னலின் மனைவி, சாப்பிடுவதற்கு அதுவரை என்ன செய்வது என்று கர்னலிடம் கேட்கும்போது, வெல்ல முடியாத உணர்ச்சியோடு மலத்தைத் தான் என்றும் தீவிரமாகச் சொல்கிறது கதாபாத்திரம். அத்தனை வெல்ல முடியாத எதார்த்தம் அதற்கு முன்னர் உருவாக்கப்பட்டு விடுகிறது. 

தன் அம்மா, அப்பாவின் காதல் கதையைத் திருமணம் வரை நிறைய விவரங்களுடன் சொல்கிறார். நாவலில் உள்ளதுபோலவே அபத்த, அருசி தருணங்களையும் உடனேயே வைக்கிறார். 1926-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி தனது பெற்றொருக்கு நடக்கும் திருமணத்தைப் பற்றி எழுதுபவர், திருமணம் திட்டமிட்ட நேரத்துக்கு நாற்பது நிமிடங்கள் தாமதமாக நடந்தது என்று குறிப்பிடுகிறார். ஏனெனில், மணப்பெண்ணான மார்க்வெஸின் தாய் திருமண நாள் என்பதை மறந்து உறங்கி, காலை எட்டு மணிக்கே தாமதமாக எழுகிறாள். அதனால் அந்தத் தாமதம் ஏற்படுகிறது. லவ் இன் தி டைம் ஆப் காலரா நாவலைப் போலவே அவர்களது முதல் இரவும் பெரும்பாய்க் கப்பலிலேயே கழிகிறது. கடல் பயண உபாதை காரணமாக அன்று வெறுமனே முதல் இரவைக் கழிக்க வேண்டியிருந்தது என்று எழுதுகிறார்.

மார்க்வெஸ், எழுத்தாளராகப் புகழ்பெற்ற பின்னர், அவரது தந்தையிடம் ஒரு செய்தித்தாள் நிறுவனம் நேர்காணல் நிகழ்த்துகிறது. தனது காதல் கதையை நாவலாக எழுதத் திட்டமிட்டிருந்ததாக, மார்க்வெசின் தந்தை அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். லவ் இன் த டைம் ஆப் காலரா நாவலை எழுதுவதற்கு முன்னர், தன் தந்தையிடம் வந்து, தந்தி அடிப்பது சார்ந்து அவர் காலத்தில் தந்தி அலுவலர்களிடையே புழங்கிய, ஒரு அலுவலகத்துடன் இன்னொரு அலுவலகத்தை இணைப்பதற்கான, ஒரு குழுக்குறிச் சொல்லைப் பற்றி மார்க்வெஸ் கேட்டபோது மார்க்வெசின் தந்தைக்குப் புரிந்துவிட்டது, தனது நாவல் பறிக்கப்பட்டு விட்டதென.

லவ் இன் தி டைம் ஆப் காலரா நாயகனும் தந்தி அலுவலகத்தில் பணிபுரிபவன்தான். தந்தி மூலமாகவே அவர்களது காதல் வீரியமடையும். 


Comments