Skip to main content

சபரியின் பாசுபதாஸ்திரம்


தெருவில் அதிகம் தென்படும் அந்த நாய்க்கு வீடு உண்டு வளர்ப்பவர்களும் உண்டு சிகப்பு கழுத்துப்பட்டை போட்டிருக்கும் அந்த நாய்க்கு நான் ரௌடி நாய் என்று பெயரிட்டிருக்கிறேன். எனது பிரௌனி, ஒரு நாள் விளையாட்டாக திறந்திருந்த வீட்டுக் கேட்டைத் தாண்டி சுதந்திரம் தேடிப் போனபோது, தாக்கப்பட்டு பின்னங்கால் தொடையைக் கிழித்த போது எனக்கு இந்த நாய் அறிமுகமானது. எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் தெருநாய்களையும் வயதான வீட்டுப் பணியாளர் பெண்களையும் தொடர்ந்து காயப்படுத்துவதால் அந்தப் பெயருக்கு அது நியாயம் செய்கிறது என்றே நீதீபதிகளாகிய உங்களிடமும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். எப்போதும் தந்திரத்தோடு அலையும் ஓநாயின் சூட்சுமக் கண்களோடு. அரிதாக உணவு கிடைத்து, நான்கு தெருநாய்கள் சேர்ந்துண்ணும் போது அதற்குப் பொறுக்காது. நடுவில் புகுந்து ஒரு நாயைத் தனியாகத் தள்ளி மூலையில் ஒதுக்கித் தாக்கிவிடும். 

நேற்று காலை ரௌடி நாயை நேருக்கு நேராக ஒரு கை பார்ப்பதென்று முடிவெடுத்தேன். எனது பிரௌனியின் காயம் ஆறி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அப்போதுதான் தெரிந்தது, எனக்குக் குறிபார்த்து கல்லெறியத் தெரியவில்லை.  கல்லுக்கு என் கைகளிலிருந்து கொடுக்க வேண்டிய விசையையும் கொடுக்க முடியவில்லை. நான் சின்ன வயதில் சரியாக இத்திறனைப் பழகியிருக்கவில்லை. ஆனால் ஐந்து தெருக்கள் வரை துரத்தி ரௌடி நாய்க்கு அச்சத்தைக் காண்பித்து விட்டேன் அன்று காலையில். மாலையில் இளம் நண்பரும் கவியுமான சபரி வீட்டுக்கு வந்தார். ரௌடி நாயின் கதையைப் புதிதாக அவரிடம் சொன்னேன். ரௌடி நாயை நான் பழிவாங்குவதற்கான நியாயத்தைச் சபரியும் ஒத்துக் கொண்டார்.

உங்களுக்கு குறிபார்த்துக் கல்லெறியத் தெரியுமாவென்று கேட்டேன். அவர் தான் விற்பன்னர் என்பதாகத் தலையை ஆட்டி எறிவேன் என்றார். நான் கருங்கற்களைப் பொறுக்கிக் கொண்டேன். சபரி துணையிருக்கிறார் என்ற நம்பிக்கையில் திரும்ப அந்தத் தெருவுக்குள் நுழைந்தோம். எங்களைப் பார்த்ததும் ரௌடி நாய் வழக்கம் போல இடைவெளி விட்டு நழுவத் தொடங்கியது. சபரி கையில் கற்களை எடுக்கவேயில்லை. விற்பன்னன், கடைசியில் தான் செயல்படுவான் என்று எனது நம்பிக்கை கூடியது. இரண்டு தெருக்கள் கடந்தோம். இப்படியே நாம் விரட்டிச் சென்றாலே நல்ல நடைப்பயிற்சி என்று சபரி சொல்லிச் சிரித்தார். ஆனால், நாயைத் துரத்தும் இரண்டு தெருத் திருப்பங்களில் நாங்கள் ஒரே குறியை ஒரே லட்சியத்தைத் துரத்தும் சிறுவர்களாகி விட்டோம். செர்ஜியோ லியோன் இயக்கிய புகழ்பெற்ற கவ்பாய் படத்தின் இசை ஒன்றை சபரிநாதன் முணுமுணுக்கத் தொடங்கினார்.  நாயின் மீது வன்மம் குறைந்து அதனைத் தொடர்வது சுவாரசியமானது. சபரி கையில் கல்லை எடுக்கவேயில்லை. எங்களுக்கும் ரௌடி நாய்க்கும் இடைவெளி குறையும்போது மட்டுமே சபரியின் கை தரையைத் தொடும்; அது அந்த ரௌடி நாய்க்கு பாசுபதாஸ்திரம் தான். T போலப் பிரியும் இரண்டு தெருக்களின் முனையில் பகலில் சென்றது போலவே வலதுபுறம் சென்றது ரௌடி நாய். அது கருந்துளை தெருபோல. பகலிலும் அங்கே போனபின்னர் மறைந்துவிட்டது. சபரியுடன் நானும் நுழைந்தேன். மறைவேயற்ற அந்தத் தெருவில் ரௌடியைக் காணவேயில்லை. வன்மம், நாய் இரண்டையும் மறந்துவிட்டோம் சபரியும் நானும். ஒரு கருப்பு நாய் எதிரே வந்தது. அது மாறுவேடம் போட்ட ரௌடி நாய் அல்ல. சபரி, கழுகுமலையில் நாயைக் கல்லெடுத்து நங்கென்று எறிந்து தாக்கும் சித்திரம் என்னிடம் அப்படியே இருக்கிறது. சபரி, குனிந்து கல்லை எடுக்கவில்லையே தவிர, அது பாசுபதாஸ்திரம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

Comments